சாந்திப்பிரியா                                                        –  16

விக்ரமாதித்தியன் ஆலயம் 
மன்னன் விக்கிரமாதித்தியன் ஆட்சியில் இருந்தபோது அவர்  தவறாது ஹரிசித்தி ஆலயத்துக்கு வந்து பூஜைகளை செய்வாராம். விக்ரமாதித்தனின் 32 பதுமைகளுடன் கூடிய சிம்மாசன ஆலயம் ஹரிசித்தி ஆலயத்தில் இருந்து பத்து மீட்டர் தள்ளி உள்ளது. அந்த காலத்திலேயே மனிதராக வாழ்ந்து வந்திருந்த ஒரு மன்னனுக்கு ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததை வியப்புடன் பார்த்தோம். ஆனால் அவர் மனிதரல்ல விக்ரமாதித்தியன் மனித உருவில் வந்த ஒரு தேவ கணம் என்பதாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டு உள்ளது என்கிறார்கள். விக்ரமாதித்தியன் தேவலோக அதிபதியான இந்திரனின் மகனான கந்தர்வசேனனின் மகன் ஆவாராம். அவர் தனது ஐந்தாவது வயதிலேயே பன்னிரண்டு ஆண்டுகள் தவம் இருந்துள்ளார். அவருடைய வம்சத்தினர் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்ற வரத்துடன் பூமியில் வந்துள்ளார்.
விக்ரமாதித்தியன் இரண்டு கதைகளுடன் சம்மந்தப்பட்டவர். ‘விக்ரம் மற்றும் வேதாளம்’ எனும்  கதைகள் பிரபலமானவை. அது போலவே அவர் அமர்ந்த முப்பத்தி இரண்டு தங்கப் பதுமைகளைக் கொண்ட சிம்மாசனமும் பெரும் புகழ் பெற்ற கதையை பின்னணியாகக் கொண்டவை. விக்ரமாதித்தியன் நேர்மையான ஆட்சியை தந்தவர். இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டுதான் அவர் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பதுண்டாம். அது மட்டும் அல்ல குற்றங்களையும் அதில் அமர்ந்து கொண்டுதான் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவாராம். உஜ்ஜயினியில் சனி பகவானுக்கு ஆலயம் எழுப்பியவர் மற்றும் தமது அரச சபையில் காளிதாசனையும் சேர்த்து ஒன்பது நவரத்தினங்கள் எனப்படும் கவிஞர்களை வைத்திருந்தவர்.

அவர் பூமிக்கு வந்தபோது அவருக்கு இந்த சிம்மாசனத்தை இந்திரன் கொடுத்தாராம். அதில் இருந்த தங்கப் பதுமைகள் தேவ லோகத்தில் இருந்த அப்சரஸ்கள். ஒருமுறை அவர்கள் பார்வதியின் சாபத்தைப் பெற்றுக் கொண்டு பூமிக்கு வந்து அந்த சிம்மாசனத்தில் தங்கப் பதுமைகளாக அமர்ந்து கொள்ள வேண்டி இருந்தது. அவர்களுக்கு சாப விமோசனம் விக்ரமாதித்தியன் பரம்பரையில் வரும் போஜராஜன் எனும் மன்னன் மூலமே கிடைக்கும் என்பது விதியாக இருந்தது.

இந்த நிலையில் போஜராஜன் அரியணை ஏறிய பின்னர் அவர் ஒரு இடத்தில் புதைந்து இருந்த அந்த சிம்மாசனத்தை கண்டெடுத்து அதை தனது அரச சபைக்கு எடுத்துச் சென்று அதில் அமர முயற்சி செய்தபோது அந்த தங்கப் பதுமைகள் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டு விட்டு சாப விமோசனம் பெற்று தேவலோகத்துக்குச் சென்று விட்டன.

அந்த சிம்மாசனமே இந்த ஆலயத்தில் உள்ள சிம்மாசனம் என்கிறார்கள். இங்குள்ளது அதன் மாதிரி சிம்மாசனமே என்றும், ஆனால் பண்டையக் காலத்தில்  வனப்பிரதேசமாக இருந்த இந்த ஆலயம் உள்ள இடத்தின் அடியில்தான் போஜராஜ மன்னனினால் அந்த சிம்மாசனம் கண்டு பிடிக்கப்பட்டது என்றும், அதுவே இந்த ஆலயம் அமைந்ததின் பின்னணி என்று கூறுகிறார்கள். இதை விக்ரமாதித்தனும் முப்பத்தி இரண்டு பதுமைகளும் என்கின்ற ஆலயமாக கருதி வழிபடுகிறார்கள்.


ராஜா விக்ரமாதித்தியனின் ஆலயத்தில்
அவருடைய சிலை. அவருடைய சிம்மாசனத்தில்
காணப்படுவது மனித உருவில் வந்த
தேவலோக அப்சரஸ்கள்


விக்ரமாதித்தியன்ஆலயத்தில் வேதாள மகராஜ்


விக்ரமாதித்தியன் ஆலயத்தில்
ஒன்பது நவகிரஹ தேவர்கள்


விக்ரமாதித்தியன் வழிபட்ட காமாட்ஷி தேவி


விக்ரமாதித்தியன் ஆலயத்தில் ஒன்பது
அரசவை கவிஞர்கள் மற்றும் தன்வந்தரி தேவர்

 பிரஹஸ்பதி பகவான் ஆலயம்
அங்கிருந்துக் கிளம்பி நாங்கள் சென்றது உஜ்ஜயினியில் இருந்த பிரஹஸ்பதி எனும் குரு பகவானின் ஆலயம் ஆகும். இந்தியாவில் தேவர்களுக்கு தலைவராக  குரு பகவான் உள்ள ஒரே தனி ஆலயம் இது மட்டுமே. இது கட்டப்பட்டு உள்ள காலமும் தெரியவில்லை.  மிகக் குறுகலான ஒரு சந்தில் உள்ள  இந்த ஆலயம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இங்குள்ள பிரஹஸ்பதி (லிங்க உருவில் உள்ளவர்) ஸ்வயம்புவாக எழுந்தருளியாவர் என்றும் கூறுகிறார்கள்.  அது மட்டும் அல்ல தேவகணமான  பிரஹஸ்பதி மனித உருவிலே இங்கு வந்து தங்கி தவம் செய்தார் என்று  கூறுகிறார்கள்.  அதனால்தான் அவருடைய தேவ  உருவிலான சிலை இங்கு மட்டுமே உள்ளது. இது போல உலகில் வேறு எங்குமே பிரஹஸ்பதியின் தேவ உருவச் சிலைக் கிடையாது.
உஜ்ஜயினி முழுவதுமே  பிரசித்தி பெற்ற ஆலயங்கள் ஜன நெருக்கமான  இடங்களில் அமைந்துள்ளதின் காரணம் அந்த காலத்தில் இருந்துள்ள ஆலயங்களை இடமாற்றம் செய்யாமல் அதே இடங்களில் தொடர்ந்து பாதுகாத்து வந்தபடி  அவற்றில் வழிபாடுகளை செய்து வருகிறார்கள். அவற்றைக் காலம் காலமாக சில குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக, வம்சாவளியினராக நிர்வாகித்து பூஜைகளை செய்து  வருகிறார்கள். அதனால்தான் அந்த ஆலயங்களை கட்டிட மாறுதல்களுக்கு உள்ளாக்காமல் அவை முன்னர் எப்படி இருந்தனவோ அதே போன்று இன்றும் வைத்து உள்ளார்கள். இங்கு வந்து வழிபடுவதின் மூலம் அனைத்து கிரகங்களின் தோஷங்களும் விலகுமாம். அதற்குக் காரணம் இந்த ஆலயத்தில் மற்ற அனைத்து கிரகங்களும் அவருக்கு அடிமைகளாகவே உள்ளனவாம். இந்த ஆலயத்தின் அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இது 1000-2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்துள்ள ஆலயம், விக்கிரமாதித்திய  காலத்தில் இருந்துள்ளது   என்று மட்டும் கூறுகிறார்கள்.
 பிரஹஸ்பதி ஆலய முகப்பு 
 பிரஹஸ்பதி ஆலய முகப்பு – இன்னொரு தோற்றம் 
 
லிங்கேஸ்வரராக  பிரஹஸ்பதி
 
 ஆலயத்தில் பிரஹஸ்பதியின்  உருவம் 
  ஆலயத்தில் பிரஹஸ்பதியின்  
இன்னொரு உருவம்
  பிரஹஸ்பதி மகாதேவர்  காலடியில் ஒரு மன்னன்  
 பிரஹஸ்பதி  ஆலயத்தில்  
காணப்படும் செய்திக் குறிப்பு 
……….தொடரும்