தெரிந்த ஆலயம்…பலருக்கும் அறிந்திடாத வரலாறு – 24
சென்னை திருவான்மியூர்
மருதீஸ்வரர்  ஆலயம்
சாந்திப்பிரியா
 

சென்னையில் உள்ள திருவான்மியூர் எனும் இடத்தில் உள்ளது மற்றுமொரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம். அதை மருதீஸ்வரர் ஆலயம் எனக் கூறுகிறார்கள். மூலவர் பால்வண்ணனாதர்  எனும் பெயரைப் பெற்ற  ஒன்றரை அடி உயரமான சிவன். வடிவம் சிவ லிங்கம். இந்த ஆலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இந்த இடத்தில்தான் சிவ பெருமான்  வாதாபிக்குச் சென்று திரும்பிய அகஸ்திய முனிவரின் வயிற்றுக்  கோளாறுக்கும்  சூரியன் மற்றும் சந்திரனுக்கு அவர்களது  குருபத்தினி தோஷத்துக்கும் குணப்படுத்தியதான ஐதீகம்  உள்ளது. மேலும் மருதீஸ்வரர்  இங்குதான் அகஸ்தியருக்கு மூலிகை வைத்தியம் பற்றி கற்றுக் கொடுத்தாராம். ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் இந்த ஆலயத்தில் அகஸ்தியர், சூரியன் மற்றும் சந்திரன் வந்து சிவ பெருமானை பூஜிக்கின்றனர் என்பது ஒரு நம்பிக்கை.  ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்  தானாகவே தோன்றி உள்ளது. அது வெள்ளை நிறத்தில் தலையில் சிறு குழி  உள்ள நிலையில் காட்சி தருகின்றது. அதன் காரணம் என்ன என்றால், தினமும் காமதேனுப் பசு அங்கு வந்து சிவ லிங்கத்தின் மீது தனது மடியில் இருந்து பாலை சுரந்துவிட்டுச் சென்றதினால்தான் பள்ளம் ஏற்பட்டுள்ளது என புராணக் கதை கூறுகின்றது. ஆலயத்தில் நவகிரஹா நாயகர்களான சந்திரனும் சூரியனாருமே  சிவபெருமானை வணங்கும் கோலத்துடன் இருப்பதினால் நவகிரகங்களுக்கு சன்னதி இங்கு இல்லை.

ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது எனவும் கல் வெட்டுகள் மூலம் செய்திகள் கிடைத்துள்ளனவாம். ஆலயத்துக்குள் 108 சிவ லிங்கங்களும்  ஐந்து பூதங்களையும் குறிக்கும் வகையில் ஐந்து பெரிய சிவ லிங்கங்களும் உள்ளன.  இந்த ஆலயத்தின் விசேஷம் பற்றி கூறப்படும் கதைகள் என்ன எனில்,  இந்த ஆலயத்தில் வால்மீகி முனிவர் வந்து தவத்தில் இருந்துள்ளார்,  மார்கண்டேயர் வந்து பூஜை செய்து உள்ளார், திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் போன்றவர்களும் இங்கு வந்து வணங்கி உள்ளனர், இந்திரனும் இங்கு வந்து சிவனை வணங்கி ஒரு சாபத்தின் விமோசனம் பெற்றார் , பாரத்துவாச முனிவர் வந்துள்ளார், ஹனுமான் இங்குள்ள ஒரு சிவ லிங்கத்திற்குப் பூஜை செய்துள்ளார் போன்றவை அடங்கும்.

ஆலய விருஷம் வன்னி மரம். ஒரு காலத்தில் ஆலயத்தை சுற்றி ஐந்து குளங்கள் இருந்தன என்றும் அவற்றில் ஒன்றைத் தவற மற்ற  அனைத்தும்  அழிந்து விட்டன எனவும் கூறுகிறார்கள்.