பல ஆலயங்களிலும் நாம் சப்த அல்லது அஷ்ட கன்னிகைகள் அதாவது ஏழு அல்லது எட்டு எனும் அளவில் தெய்வ கன்னிகளின் சிலைகள் இருப்பதைப் பார்த்து இருக்கலாம். ஆலயங்களில் சென்று அங்குள்ள தெய்வங்களை துதித்தப் பின் அங்குள்ள தெய்வ கன்னிகைகளையும் துதித்துவிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணம் அசுரர்களையும், அரக்கர்களையும் அழிப்பதற்கு அவர்களுடன் நடைபெற்ற யுத்தங்களில் தமக்கு உதவுவதற்கு சிவன், பார்வதி, விஷ்ணு போன்ற கடவுட்களே அந்த தேவதைகளை படைத்துள்ளனர் என்று நம்பப்படுவதே. இன்னும் சிலர் அவர்களை பிரும்ம தேவரே படைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்த தேவதைகளை ஆராதிக்க த்யான ஸ்லோகங்கள் உள்ளன. ஆகவே அவர்களை ஆராதித்துத் துதித்தால் நமக்குள்ள எதிரிகள் ஓடி விடுவார்கள். தீமைகள் அண்டாது. பயம் விலகும் என்பது பரவலான நம்பிக்கை.
சப்த கன்னிகைகள் யார்? அந்த கன்னிகைகளை பற்றி தேவி மகாத்மியம், லிங்க புராணம், மத்சைய புராணம், வராக புராணம் போன்ற புராணங்களில் குறிப்புகள் உள்ளன. வராஹ புராணத்தின்படி சப்த கன்னிகைகள் ஏழு பெண் தெய்வங்கள் அல்ல, அவர்கள் அஷ்ட கன்னிகா எனப்படும் எட்டு தெய்வங்கள் என்பதாக தெரிவிக்கின்றது. பொதுவாக உள்ள ஏழு கன்னிகைகள் சாமுண்ட, இந்திராணி, வைசாலி அல்லது வராஹி, வைஷ்ணவி, கெளமாரி, மகேஸ்வரி மற்றும் பிரம்மி என்பவர்களே. எட்டாவது சப்த கன்னி யார் என்றால் அது மஹாலஷ்மி என்று சிலரும், யோகிஸ்வரி என்று சிலரும் கூறுகின்றார்கள். கடகமாலா வழிபாட்டு ஐதீகத்தின்படி ஸ்ரீ வித்யாவின் திரிபுரா நகரின் எட்டு வாயில்களையும், அதாவது நான்கு நுழை வாயில் மற்றும் நான்கு மூலைகளையும் இந்த எட்டு கன்னிகைகளும் காவல் காப்பதாக கூறப்பட்டு உள்ளது. சப்த அல்லது அஷ்ட கன்னிகைகள் யோகினி தேவதைகளின் குழுவில் உள்ளவர்கள் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள். சப்த கன்னிகைகள் தோன்றியது எப்படி? அது குறித்து கூறப்படும் கதைகள் இவை.
சூரபத்மனை அழிக்க அதிசக்தி வாய்ந்த குழந்தையை பிறப்பிக்க நினைத்த சிவபெருமானின் மூன்றாம் கண்ணில் இருந்து தெறித்த கனலில் இருந்து ஆறு பெண் தெய்வங்கள் வெளிவந்தன. அதற்கு முன்னர்தான் சிவபெருமானின் விந்து விழுந்த தடாகத்தில் இருந்து ஆறு குழந்தைகளும் வெளியாயின. அவர்களை அப்போது அங்கு வந்த ஆறு கன்னிகைகள் கவனித்துக் கொண்டனர். அதைக் கண்ட பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக இணைத்து ஒரே குழந்தையாக- முருகனாக – ஆக்கினாள். அந்த ஆறு குழந்தைகளையும் கவனித்துக் கொண்ட கன்னிகைகளை ஏழு குழுவான நட்ஷத்திரக் கூட்டமாக மாற்றினாள். அவர்களை நட்ஷத்திரங்களாக மாற்றிய பின் அவர்களை ஆசிர்வதித்த பார்வதி தேவி அவர்கள் பிற்காலத்தில் சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான் செய்ய உள்ள யுத்தத்தில் அவருக்கு துணையாகப் இருந்து போரில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை நட்ஷத்திரங்களாக மாற்றியதாக அவர்களிடம் கூறினாள். ஆகவே ஏழு கன்னிகைகளாக பார்வதியினால் ஏற்படுத்தப்பட்டவர்களே சப்தகன்னிகைகள் என்கின்றார்கள்.
இன்னொரு கதையின்படி கார்த்திகேயர் (முருகன்) பிறந்ததும் அவரைக் கொன்று விடுமாறு கூறி ஏழு பெண் தெய்வங்களை இந்திரன் அனுப்பினார். ஆனால் அந்த குழந்தையின் அருகில் வந்த அந்த கன்னிகைகளின் மார்பில் இருந்து பால் சுரக்கத் துவங்கி வெளியில் வழிய அவர்கள் குழந்தை மீது தம்மை அறியாமலேயே பாசம் செலுத்த துவங்கி தாம் கொல்ல வந்த அந்த குழந்தைக்கு பாலூட்டி வளர்த்து அவரை பாதுகாத்தனர். அவர்களே பின்னர் முருகன் புரிந்த போரில் அவருக்கு துணை இருந்த ஏழு கன்னிகைகள் என்கின்றார்கள்.
மூன்றாம் கதையின்படி காஷ்யப முனிவருக்கு ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யகாசா எனும் இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவரான ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் விஷ்ணு பகவானின் பக்தன். நடைபெற்ற சில நிகழ்ச்சிகளினால் நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான் ஹிரண்யகசிபுவைக் கொல்ல வேண்டி இருந்தது. அதற்கு சில காலத்துக்குப் பிறகு பக்த பிரஹலாதன் துறந்து சன்யாசம் மேற்கொண்டு சென்று விட அவர்கள் வம்சத்தை சேர்ந்த அந்தகாசுரன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். முதலில் அவன் ஒழுக்க சீலனாக இருந்து பல கடவுட்களிடம் இருந்து அறிய வரங்களை பெற்றிருந்தான். அந்த வரத்தின் விளைவாக அவன் யுத்தத்தில் அடிபட்டு அவனது உடலில் இருந்து ரத்தம் வெளிவந்தால், பூமியில் விழும் ஒவ்வொரு துளி ரத்தமும் அவனைப் போலவே அதிபலசாலி அசுரனாக உருவெடுக்கும் என்பது விதியாயிற்று. ஆகவே தலைகனம் கொண்டு அலைந்தவன் ஒருமுறை பார்வதி தேவியையே கவர்ந்து செல்ல முயற்சி செய்தான். அவனால் தேவர்கள் கடும் துயரங்களுக்கு உள்ளானார்கள். ஆகவே அவனை இனியும் விட்டு வைத்தால் அது தவறு என்பதை உணர்ந்து கொண்ட சிவபெருமான் அவனுடன் யுத்தம் செய்து அவனை அழிக்கச் சென்றபோது தனது மூன்றாவது கண்ணில் இருந்து பயங்கரமான ஏழு பெண் தெய்வங்களை படைத்தார். அவர்களுக்கு தலைமை ஏற்க யோகீஸ்வரி எனும் தேவதையையும் படைத்தார். அவர்கள் அனைவரும் பைரவக் கடவுளின் தலைமையில் யுத்தபூமிக்கு சென்று தமது கடமையை செய்யுமாறு கூறினார். அவர்கள் வேலை அந்த அசுரனின் உடலில் இருந்து வெளியேறும் ஒரு சொட்டு ரத்தமும் பூமியில் விழாமல் இருக்க வைக்க வைத்து அதை அவர்கள் குடித்து விடவேண்டும் என்பதே. அந்த சப்த கன்னிகைகளும், யோகீஸ்வரியுடன் ஒன்றிணைந்து அந்த அசுரனின் உடலில் இருந்து வெளிவந்த அத்தனை ரத்தத்தையும் ஆகாயத்திலேயே பிடித்து அருந்தி விட்டார்கள். அதனால் அந்த அசுரனை சிவபெருமான் எளிதில் வென்றார். இப்படியாகவே சப்த கன்னிகைகளை எட்டு கன்னிகைகள் அதாவது அஷ்ட கன்னிகைகள் எனவும் அழைத்தார்கள்.
யுத்தம் முடிந்ததும் அவர்கள் வந்த வேலை முடிந்து விட்டதாகக் கூறிய சிவபெருமான் தான் தொடர்ந்த யுத்தம் முடிந்து விட்டதினால் இனி அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்று விடவேண்டும் எனக் கட்டளை இட்டார். கடவுள் பைரவர் தனது அவதாரம் தோன்றக் காரணமான சிவபெருமானின் உடலில் சென்று ஐக்கியமாகி மறைந்து விட்டார். ஆனால் சிவபெருமானின் மூன்றாம் கண்ணின் பொறியில் இருந்து வெளி வந்ததினால் அந்த அஷ்ட கன்னிகைகள் சென்று தங்க இடம் இல்லை என்பதினால், அவர்கள் பார்வதி தேவியிடம் சென்று அடைக்கலம் ஆக அவளும் அவர்களை அப்போது ஸும்பா மற்றும் நிஷும்பா எனும் அரக்கனுடன் சண்டையில் இருந்த சாமுண்டா எனும் காளிதேவிக்கு யுத்தத்தில் துணை இருக்க அனுப்பினாள். யுத்தம் முடிந்து திரும்பிய கன்னிகைகளை தான் வசிக்கும் ஸ்ரீ வித்யாவின் நான்கு மூலைகளையும், நான்கு வாயில்களையும் பாதுகாக்கும் பணியில் அமர்த்திவிட பார்வதி தேவிக்காகவே சேவகம் செய்தபடி தங்க இடமும் அந்த கன்னி தேவதைகளுக்கு கிடைத்தது.
வாமன புராணத்தில் காணப்படும் இன்னொரு கதை இது. ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரமான போர் மூண்டது. ரத்தபிக்ஷா என்ற அசுரன் 21870 தேர்கள் மற்றும் 65610 குதிரைகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படையினரை கொண்டு வந்து யுத்தம் செய்தான். அதைக் கண்டு கோபமுற்ற கௌசிக்கி, காளி மற்றும் மகேஸ்வரி எனும் மூன்று தெய்வங்களும் உலகமே பயத்தினால் உறைந்ததோ எனக் கருதும் அளவுக்கு இடியோசைப் போல பயங்கர கர்ஜனை செய்தனர். அப்போது மகேஸ்வரியின் வாயில் இருந்து அன்னத்தில் அமர்ந்தபடி ப்ரஹ்மி வெளிவர அவளைத் தொடர்ந்து மூன்று கண்களைக் கொண்டு காளை மீது அமர்ந்து வந்த ஒரு பெண் தெய்வம், மயிலில் அமர்ந்து கொண்டு கௌமாரி, கருடனில் அமர்ந்து கொண்டு வைஷாலி, பன்றித் தலையைக் கொண்ட நாகத்தின் மீது அமர்ந்து வந்த பயங்கரமான வராஹி, நரசிம்மை மற்றும் சாமுண்டி என ஏழு கன்னிகைகள் வெளி வந்தனர். அவர்களே எட்டு அஷ்ட கன்னி தேவதைகள் எனப்பட்டவர்கள். அவர்கள் தேவர்களுக்கு உதவுவதற்காக யுத்தத்தில் பங்கேற்றார்கள். ஆனால் பின்னர் உள்ள செய்திகளில் அந்த தேவதைகளைப் பற்றி கூறப்படும் குறிப்புக்கள் வேறாக இருந்தன.
வராக புராணத்தின்படி அந்த எட்டு கன்னிகைகளும் எட்டு குணங்களை பிரதிபலிப்பவர்கள் என்பதாகும். யோகீஸ்வரி ஆசையையும், மஹேஸ்வரி கோபத்தையும், வைஷ்ணவி கடமையையும், ப்ரஹ்மி கர்வத்தையும், கௌமாரி போலிக் தன்மையையும், இந்திராணி குற்றம் குறை சொல்பவர்களையும், சாமுண்டா தீயவற்றையும், வராஹி பொறாமையையும் அடக்கி ஆள்கிறார்கள் என்று கூறுவதின் மூலம் எடுத்துக் காட்டிய தத்துவம் என்ன என்றால் அந்த அஷ்ட அல்லது சப்த கன்னிகைகள் அவர்களை வணங்கித் துதிப்பவர்களிடம் உள்ள தீய குணங்களை அழித்து அவர்களை நல் வழியில் செல்ல வழி வகுக்கின்றார்கள் என்பது ஆகும்.
எது உண்மையோ நமக்குத் தெரியவில்லை, ஆனால் ஏழு அல்லது எட்டு கன்னிகைகளின் சிலைகள் பல ஆலயங்களில், முக்கியமாக தேவி ஆலயங்களில் சாந்தமான ரூபங்களில் ஒரே இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டு உள்ளன. நம்பிக்கையின்படி அந்த தேவிகள் ஆலயங்களில் உள்ள அந்தந்த கடவுட்களுக்கு துணைப் புரியவே அங்கு ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்கள் எனக் கருதுகிறார்கள். ஆனால் போரில் யுத்த தேவதைகளாக அந்த கன்னிகைகள் கலந்து கொண்ட போது இருந்த அவர்களின் உருவங்கள் சாந்தமான தோற்றத்தில் ஆலயங்களில் உள்ள தோற்றத்துடன் வேறுபட்டு உள்ளன. சப்த கன்னிகைகள் வரிசைகிரமம் ப்ராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டா என்பது ஆகும். அவை என்ன ?
- பயங்கரமான நரி ஒன்றின் மீது அமர்ந்துகொண்டு பத்து கைகளுடன் காட்சி தரும் சாமுண்டா என்பவள் மனிதத் தலைகளைக் (கபாலம்) கொண்ட மாலையை அணிந்து கொண்டு கையில் டமாரம் மற்றும் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருக்கின்றாள்.
- எருமைக் கடா வாகனத்தில் அமர்ந்து கொண்டு உள்ள வாராஹிக்கு மனித உடலும், பன்றியின் தலையும் உள்ளது. வஜ்ராயுதம், வாள் போன்றவற்றை கைகளில் ஏந்தியவள்.
- கருமை நிறத்தவளான இந்திராணியும் கையில் அங்குசம், மற்றும் கதையை ஏந்திக் கொண்டு யானை மீது அமர்ந்துகொண்டு வருபவள். அவளுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் ஆறு கைகள் உள்ளனவாம்.
- வெண்மை நிறமான வைஷாலி அல்லது வைஷ்ணவி எனப்படுபவள் கருடன் மீது அமர்ந்து கொண்டு தனது கைகளில் சங்கு மற்றும் சக்ராயுதத்தை வைத்துக் கொண்டு காணப்படுகிறாள்.
- மகேஸ்வரி அல்லது ருத்ரேஸ்வரி எனப்படுபவள் வெளுத்து காணப்படுபவள். ஆறு கைகளையும், மூன்று கண்களையும் கொண்டவள். அவளும் கைகளில் டமாரம் மற்றும் திரிசூலத்தை வைத்துக் கொண்டு இருக்கின்றாள்.
- அடுத்தவளான ப்ராஹ்மி என்பவள் மஞ்சள் நிறத்தவள். அன்னப் பறவை மீது அமர்ந்து வருபவள், அபய முத்திரை காட்டுபவள். நான்கு தலை மற்றும் நான்கு கைகளும் உள்ளவள்.
- அடுத்து வருபவள் கௌமாரி அல்லது கார்த்திகேயினி என்பவள் ஆவாள். ஆறு தலைகளைக் கொண்டவள். பதிமூன்று கண்களைக் கொண்டவள். ஒரு முகத்தில் மூன்று கண்கள், மற்றதில் இரண்டு கண்கள். கையில் பல ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு உள்ளவள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருவாள்.
நாட்டில் சப்த கன்னிகைகளுக்கு பல ஆலயங்கள் உள்ளன. சமீபத்தில் பெங்களூரில் நான் ஒரு சப்த கன்னிகை ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அதன் வரலாற்றுப் பின்னணி சுவையானது. மஹாபாரதப் போர் நடந்து கொண்டு இருந்த கட்டத்தில் யுதிஷ்டர் பல இடங்களுக்கும் சென்றவாறு இருந்தார். அப்போது அவர் குதிரை மீது அமர்ந்து கொண்டு இந்த ஆலயம் உள்ள இடத்தை அடைந்தபோது அவருடைய குதிரை கண் பார்வையை இழந்து விட்டதாம். என்ன செய்வது எனது தெரியாமல் திகைத்து நின்றபோது ஆகாயத்தில் இருந்து ஆசிரி ஒன்று அவரை அங்கேயே சப்த கன்னிகைகளை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறும், அப்படி செய்தால் குதிரை மீண்டும் பார்வையைப் பெறும் என்றும் கூறியது. அவரும் அங்கேயே தவத்தில் இருக்க அதனால் மகிழ்ச்சி அடைந்த சப்த கன்னிகைகள் அவர் முன் காட்சி தந்து குதிரைக்கு கண் பார்வையை மீட்டுத் தந்தார்களாம். அவரும் அவர்களின் நினைவாக அங்கு சிறிய வழிபாட்டுத் தலத்தை அமைத்து வழிபட்டப் பின் சென்று விட்டார். பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர் அந்த கிராமத்தினர் அங்கு பூமியில் புதைந்து இருந்த சிலையை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து வழிபட்டார்களாம். நாளடைவில் அங்கு வந்து வழிபட்டவர்களது கோரிக்கைகள் நிறைவேற துவங்கியதினால் மீண்டும் கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு சற்றே பெரிய ஆலயத்தை அமைத்து உள்ளார்கள்.
சப்த கன்னிகைகளுக்கு மேல்மருவத்தூர் ஆலயத்தில் விசேஷ வழிபாடு உள்ளது. சப்த தேவதைகள் யுத்த தேவதைகள் என்பதினால் அவர்களுடைய படத்தை வீடுகளில் பூஜை அறையில் வைத்து ஆராதிப்பது இல்லை. அதற்கு சில நியமங்கள் தேவை என்பதினால் அவற்றை செய்வதில்லை. சாதனங்களை செய்பவர்கள் அவர்களை வீடுகளில் வைத்து ஆராதிப்பார்கள். ஆனால் மற்றவர்கள் சப்த கன்னிகைகளுடைய தியான மந்திரம் கூறலாம் என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள்.