-சாந்திப்பிரியா-
பச்சையம்மன் 

திருவண்ணாமலையில் புறநகர் பகுதியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். பல இடங்களில் உள்ள முக்கியமாக முருகனும் வள்ளி தேவியும் உள்ள ஆலயங்களிலும் பார்வதி தேவி பச்சையம்மனாக வழிபடப்படுகிறார். அது போலவேதான் இந்த ஆலயத்திலும் பார்வதி தேவியை பச்சையம்மனாக வழிபடுகிறார்கள். அவளது சிலை சுதை ஓவிய வடிவில் அமைந்துள்ளது. சுதை ஓவியம் என்பது சுண்ணாம்புக் கலவையை காரைப்பூச்சு போல சுவர் மீது பூசி  அதன் மீது ஓவியம் வரைவதைக்  குறிக்கும்.  சுதை சிற்பங்கள் எனப்படும் சுண்ணாம்புக் காரை பூச்சு மீது உருவாக்கப்பட்ட ஆலய சிற்பங்கள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்துள்ளது. அந்தக் கலவையைக் கொண்டு வண்ண ஓவியம் வரைவது எளிதல்ல. அவற்றின்  நிறம் காலப்போக்கில் சற்று மங்கலாகுமே தவிர சிற்பங்கள் எளிதில் பழுதடைவது  இல்லை.

இந்த ஆலயத்தைக் குறித்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. முன் காலத்தில் இது அந்த கிராமத்துக்கு காவலாக இருந்த கிராம தேவதை வழிபாட்டுத் தலமாக அமைந்து இருந்தது என்றும்,  இன்னொரு கருத்தின்படி இது  கிராமத்தில் பார்வதி தேவிக்கு அங்கு தவத்தில் இருந்த முனிவர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் தற்போது உள்ள ஆலய வளாகம்  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்  அமைக்கப்பட்ட ஆலயம் அல்ல. அப்போது அது  திறந்த வெளியில் இருந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை.  தற்போது உள்ள ஆலய வளாகம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கட்டப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். எது எப்படியோ,  இந்த ஆலயத்தின் வரலாறு  சுவையானது.

‘இந்த பிரபஞ்சம் உருவாகியபோது சிவபெருமானுடன் இணைந்து தானும் அல்லவா இந்த பிரபஞ்சத்தைப் படைத்ததில் முக்கிய பங்கு வகித்திருக்க, தான் இல்லாமல் பரப்பிரும்மம் எப்படி உருவாயிற்று? சிவசக்தியல்லவா பரப்பிரும்மம் என்பது.  அப்படி இருக்கையில் அனைவருமே சிவபெருமானை மட்டுமே பரப்பிரும்மன் என வணங்கி வழிபடுகிறார்களே, தனக்கு தர வேண்டிய உரிய மரியாதையை  தரவில்லையே, ஆகவே சிவபெருமானின் இடதுபுறத்தில் தானும் ஐக்கியமாகி விட்டால் அதன் பின் அவருடன் தன்னையும் சேர்த்து மரியாதை தருவார்கள்’ என்ற எண்ணம் எழுந்தது.  இதன் பின்னணிக் காரணமும் பிருங்கி முனிவரே என்பது ஒரு செவி வழிக் கதையாக உள்ளது.
அந்தக் கதை என்ன? ஒருமுறை பிருங்கி முனிவர் கைலாயத்துக்கு சென்று இருந்தபோது அங்கு சிவபெருமான் பார்வதியுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.  அதைக் கண்ட பிருங்கி முனிவர் அவர்கள் முன் சென்று சிவபெருமானை மட்டும் வணங்கி விட்டுச் சென்று விட்டார். பார்வதியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதைக் கண்ட பார்வதி கோபம் அடைந்து அந்த முனிவர் தனக்கு அவமரியாதை செய்து விட்டதாக கருதி, சிவபெருமானிடம் தனது மனக்குறையைக் கூறி, தானும் சிவனில் ஒரு பாதி என்பதினால் தனக்கும் சிவபெருமானுக்கு கிடைக்கும் மரியாதையில் சம பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமானின் உடலில் தானும் ஒரு பாதியாக வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சிவபெருமானோ அதை ஏற்கவில்லை என்பதினால் தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள  பார்வதி தேவி பூலோகத்துக்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் துவங்கினாள். பல காலம் காஞ்சீபுரத்தில் தங்கி இருந்தவாறு தவம் செய்து கொண்டு இருந்தபோது சிவபெருமான் கைலாயத்தில் இருந்து திருவண்ணாமலையில் வந்து தங்கி உள்ளதைக் கேள்விப்பட்டு  அங்கேயே சென்று அவரை வழிபட்டு அவரிடம் இருந்து வரத்தைப் பெற வேண்டும் என முடிவு செய்து கொண்டாள். அவரிடம் இருந்து அந்த வரத்தைப் பெற்று விட்டால் சிவசக்தி என்று தன்னையும் சேர்த்து அழைப்பார்கள், தன்னையும் அவருடன் சேர்த்து பூஜிப்பார்கள் என்ற ஆவலில்  திருவண்ணாமலைக்குக் சென்று தவம் இருக்க முடிவு அங்கு கிளம்பிச் சென்றாள்.
ஆரணியில் இருந்து சுமார் பத்து கிலோ தொலைவில் உள்ள வாழைப்பந்தல் எனும் இடத்தை அடைந்தவள் அங்கு மலை மீது சிவபெருமான் இருப்பதை அறிந்து கொண்டு அதன் அடிவாரத்திலேயே அமர்ந்திருந்தபடி தவமிருக்கத் துவங்கினாள். கைலாயத்தில் இருந்து பர்வத மலை வழியே தனது பாதத்தை வைத்து இறங்கிய சிவபெருமான் அதன் பின்னரே திருவண்ணாமலைக்கு சென்றார் என்பது ஐதீகம். இப்படியாக பூலோகத்துக்கு வந்திருந்த பார்வதி தேவி தங்கி இருந்து தவம் இருந்த இடமே பச்சையம்மன் ஆலயம் உள்ள இடமாகும்.

வாழைப்பந்தலை வந்தடைந்தவள் தான் தவம் இருக்க உள்ள இடம் கைலாயத்தைப் போலவே குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு வாழை இலைகளினால் ஆன பந்தல் ஒன்றை அமைத்தாள். அதன் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருக்க ஆரம்பித்தாள். தவத்தில் சிவபெருமானை ஆராதிக்க மணலால் செய்த ஒரு சிவலிங்கத்தை உருவாக்க நினைத்தவள் நதியோ அல்லது குளமோ உள்ளதா என நீர் நிலையைத் தேடினாள். எங்கும் நீர் கிடைக்கவில்லை. ஆகவே தனது மகன்களான வினாயகர் மற்றும் முருகனை அழைத்து எங்கிருந்தாவது நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். நேரம் ஓடியது, ஆனால்  அவர்கள் வந்தபாடில்லை. ஆகவே தவத்தை துவக்க வேண்டிய நேரம் கடந்து விடக் கூடாது என்பதற்காக பூமாதேவியிடம் தனக்குத் தேவையான நீரைத் தருமாறு அவளை தட்டி எழுப்ப தன்னிடம் இருந்த தந்தத்தினால் பூமியை தட்ட அவள் தட்டிய இடத்திலிருந்தே பெரிய நீரூற்று எழும்பியது.  அதில் இருந்த நீரைக் கொண்டு மணலினால் ஆன சிவலிங்கத்தை அமைக்கத் துவங்கியபோது அவளுடைய மகன்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களும் தம்முடன்  இரண்டு நதிகளின் தேவதைகளை அழைத்து வந்திருந்ததினால் அதைக் கண்டு மகிழ்ந்து போன பார்வதி அந்த இரண்டு தேவதைகளையும் தனக்கு பூமா தேவி தந்திருந்த நீர் நிலையுடன் கலந்து விடுமாறு கூற அவர்களும் தனது நதிகளுடன் அதில் சென்று மறைய அந்த இடத்தில் மூன்று நீர் நிலைகள் கலந்த நீர் நிலை உருவாயிற்று. அதையே மூன்று நதிகளின் சங்கமம் எனப்படும் முக்கூடல் என்ற நீர் நிலையாக கூறலானார்கள்.

அந்த நீரைக் கொண்டு சிவலிங்கத்தை அமைத்து தவமிருக்கத் துவங்கியதும் அவளது தவத்தைக் கலைக்க அங்கிருந்த ராக்ஷசன் ஒருவன் முயற்சி செய்தான். ஆகவே அதனால் துன்பமுற்ற  பார்வதி தேவி சிவபெருமானிடம் அவன் தொல்லையைக் குறித்து முறையிட, சிவபெருமானும், தன்னுடன் விஷ்ணு பகவானையும் அழைத்து வந்து அந்த ராக்ஷசனை அழித்து அவளது தவம் இடையூறு இல்லாமல் தொடர அங்கேயே வாமுனி மற்றும் செம்முனி எனும் இரு முனிவர்களாக உருவெடுத்து அவளுக்கு காவலுக்கு  நின்றார்கள். அதனால்தான் அந்த முனிவர்களுக்கும் அந்த ஆலயத்தில் சிலைகள் உள்ளன. அவர்களைத் தவிர பல முனிவர்களும், ரிஷிகளும் பார்வதியின் தவத்துக்கு காவலாக இருந்தவாறு அங்கேயே தவம் இருந்தார்களாம். அவர்களது சிலைகளும் ஆலயத்தில் காணப்படுகின்றன.

வாழைப் பந்தலில் பச்சை நிறத்து சூழ்நிலையில் அவள் தவம் இருந்தப் பின் திருவண்ணாமலைக்கு சென்று சிவனுடன் ஐக்கியமாகி சிவனின் ஒரு பாதியாகி, சிவசக்தியானாள். அதனால்தான் வாழைப் பந்தலில் தவமிருந்த பார்வதிக்கு அங்கேயே ஆலயம் அமைந்தது. பச்சை நிற சூழ்நிலையில் இருந்தவாறு தவமிருந்த பார்வதியை பச்சையம்மன் என்ற பெயரில் வணங்கலானார்கள். அங்கிருந்துதான் வேறு பல இடங்களுக்கும் பார்வதி தேவியானவள் பச்சையம்மனாக  சென்றாள். பார்வதி தேவியானவள் பச்சையம்மன் என்ற முதல் அவதாரம் எடுத்தது இங்குதான் என்பது ஐதீகம். ஆகவேதான் எங்கெல்லாம் பச்சையம்மனாக பார்வதி தேவி வழிபடப்பட்டாலும், பச்சையம்மனின் மூல ஆலயம் திருவண்ணாமலையில் உள்ள பச்சையம்மனின் ஆலயமே ஆகும்.

பச்சையம்மன் ஆலயத்தின் சன்னதியில் பக்தர்களுக்கு பச்சை நிறத்திலான குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. பச்சையம்மன் அமைத்த சிவலிங்கத்தைப் பிடிக்க அவள் பயன்படுத்திய  தண்ணீரைத் தந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் சுமார் நான்கு அடி உயரமான சிவலிங்கம் அமைந்துள்ளது. அதுவே அங்குள்ள குளத்தின் நீர் என்கிறார்கள். கோயிலின் நுழைவாயிலில் சண்டனும் முண்டனும் இருக்க அங்குள்ள பிற சிலைகள் வாமுனி, செம்முனி, ஜடாமுனி மற்றும் பிற முனிவர்களின் உருவங்களாகும். அவர்கள் அனைவரும் அங்கு அமர்ந்தபடி காட்சி தருகின்றனர். கோவிலினுள் துவார கணபதியும், தேவேந்திரனும் நம்மை வரவேற்கின்றனர். ஆலய வளாகத்தை சுற்றி பல காவல் தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பச்சையம்மனை தரிசனம் செய்த பின்னரே மலை மீது ஏறிச் சென்று பர்வத மலை மீது குடி கொண்டுள்ள சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்பதும் ஐதீகம் ஆகும்.