பிராமராம்பிகா தேவி
சாந்திப்பிரியா

 
பிராமராம்பிகா தேவி என்பவள் பதினெட்டு சக்திகளில் ஒரு அவதாரம் . அவள் பார்வதி தேவியின் ரூபம். பகவான் சிவபெருமானை மலிகார்ஜுன ஆலயத்தில் மணந்து கொண்டவள். அந்த தேவியைப்  பற்றிய கதைகள்  பலவும் உண்டு. ஆனால் அவற்றில் சில கதைகள் சுவையானவை. அவள் தேனி உருவெடுத்து  அருணாசுரன்  எனும் அசுரனை அழித்த அவதாரம் அதில் ஒன்று. பிரும்மாவை வேண்டி தனக்கு நான்கு கால் கைகள், அல்லது மனித மற்றும் விலங்குகளினால் மரணம் நேரக் கூடாது என்ற வரம் பெற்று இருந்த அருணாசுரன்  பூஉலகிலும் தேவலோகத்திலும்  அனைவரையும் துன்புறுத்தி வந்தபோது அவர்கள் பார்வதியிடம் சென்று முறை இட்டார்கள். ஆகவே அவள் ஆறு கால்களைக் கொண்ட ஒரு தேனியின் உருவெடுத்து அவனைக் கொத்தியே கொன்றாள். அதன் பின் அவள் சாந்தம் அடைந்து கர்நாடகத்தின் கடீல் எனும் பகுதியில் உள்ள ஆலயத்தில் வந்து கடீல் பரமேஸ்வரியாக அமர்ந்தாள் என்பது ஒரு கதை.
 பிராமராம்பிகா
இன்னொரு கதையின்படி அவள் ஒரு சாபத்தின் காரணமாக வேறு ஒரு அவதாரத்தில் இருந்தாள்.  அப்போது பார்வதியின் அழகைக் கண்டு மயங்கிய சிவபெருமான் அவளை ஒரே ஒரு முறை சந்தித்தாராம். சாப விமோசனம் பெற்றவுடன் அவளை மீண்டும் மணக்க விரும்பினார்.  தன்னை அந்த அவதாரத்தில் ஒரே ஒரு  முறை சந்தித்த சிவன் மீது  அந்த ரூபத்தில் இருந்த பார்வதி ஆசைக் கொண்டு அவரை மணக்க விரும்ப அவரும் அப்போது அவளை சுற்றிக் கொண்டு இருந்த தேனியைக் காட்டி அதை தொடர்ந்து வந்தால் தான் உள்ள இடத்தைக் காணலாம் எனக் கூறி விட்டு மறைந்தாராம். அந்த தேனியை அனுப்பி வைத்து இருந்ததே சிவபெருமான்தான். முதலின் தன்னை சந்தித்த சிவபெருமானை அடையாளம் கண்டு கொள்ளா முடியாமல் இருந்த  பார்வதிக்கும் பிறகுதான் புரிந்தது தான் சாப விமோசனம் அடையும் காலம் வந்து விட்டது என்பது. ஆகவே அவள் அந்த தேனியின் பின்னால்  தொடர்ந்து சென்று ஸ்ரீசைலத்தில் இருந்த மல்லிகார்ஜுன ஆலயம் உள்ள இடத்தை அடைந்தாளாம். அங்கு அவள் பிராமராம்பிகா என்ற பெயரில் மல்லிகார்ஜுன ஸ்வாமியை மீண்டும் மணந்து கொண்டாள். பிராமராம்பா என்றால் தேனி என்று அர்த்தமாம். ஆகவே தேனியைத் தொடர்ந்து சென்று தன்னுடைய நாயகரை மீண்டும் அடைந்த பார்வதிக்கு பிராமராம்பிகா என்றப பெயர் அங்கு ஏற்பட்டது. மல்லி வனப் பகுதியில் சிவபெருமான் அவளை மணம் புரிந்து கொண்டதினால் அவருக்கும் மல்லிகார்ஜுனா என்ற பெயர் ஏற்பட்டதாம். இங்கு பிராமராம்பிகா ஆறு கால்களைக் கொண்ட தேனியைப்  போல் அல்லாமல் எட்டுக் கைகளுடன் காட்சி தருகிறாள்.
 
பிராமராம்பிகா மற்றும் மல்லிகார்ஜுனன் என்ற அந்த இருவருக்கும் ஒரு முனிவரின்  வேண்டுகோளை ஏற்று கர்நாடகத்திலேயே உள்ள குல்பர்கா எனும் மாவட்டத்தை சேர்ந்த சின்னமல்லி எனும் கிராமத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் வந்து திருமணம் செய்து கொள்வதாகவும் அப்போது மல்லிகார்ஜுனருக்கு சீதனம் கொடுத்து பார்வதியான பிராமராம்பிகா அவரை மணப்பதாகவும் ஐதீகம் உள்ளது.  அந்த சடங்கில் ஊரில் உள்ள அனைத்து மக்களும் ஜாதிபேதம் இன்றி கலந்து கொள்கிறார்களாம். அது மட்டும் அல்ல இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அங்கு வரும் மல்லிகார்ஜுனருக்கு காலணி ஒன்றைக் காணிக்கையாகத் தருகிறார்கள்.  இந்த சடங்கு எதற்காக  என்றால் அத்தனை தொலைவு நடந்து வந்துள்ள மல்லிகார்ஜுனருக்கு கால்களுக்கு இதமாக இருக்க காலணியை காணிக்கையாகக் கொடுக்கின்றார்களாம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாத்தாத்தின் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை ஆண்டாண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்கு ஆரம்பிக்கப்பட்டதின் காரணமோ இல்லை காலமோ யாருக்கும் சரியாகத் தெரியவில்லை என்றாலும் அது குறித்து கிராமிய வாய் மொழிக் கதையாக மட்டும் சிலர் கூறுவார்கள். குல்பர்காவில் இருந்து இந்த கிராம ஆலயம்  55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மல்லிகார்ஜுனர் ஆலயம் பதினோராம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள்.
புனிதக் காலணியுடன் பக்தர்கள் 
படம் நன்றி : Indian Express dated 16-01-2012 
ஸ்வாமிராயா எனும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த சிலரும், என்னும் சில காலணித் தொழிலாளர்களும் அந்த ஐந்து நாட்களும் கடுமையான விரதம் இருந்து இந்த காலணியைத் தயாரிப்பார்களாம். எந்த விதமான நோய் நொடி அற்ற மாடு முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டு இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்டு அந்த மாட்டின் தோலால் ஆன காலணி தயாரிக்கப்பட்டதும் அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பக்தி சிரத்தையுடன் அதை சமர்பித்ததும், அதற்கு முந்தைய வருடம் அங்கு வைக்கப்பட்டு உள்ள செருப்பை எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு முன்னர் சீதனம் பேசி முடிக்கப்பட்ட மல்லிகார்ஜுனரை பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக அங்கு வருவார்களாம். காலணி கொடுக்கப்பட்டு முடிந்தவுடன் குறிப்பிட்ட ஒரு இடத்தில் அதைப் போட்டு விடுவார்கள். வெயிலிலும் மழையிலும் நனைந்து அது தானாகவே நெய்ந்து பூமியில் புதைந்து விடும். இந்த கதைக்கு ஆதாரபூர்வமான புராண வரலாறுகளோ இல்லை செய்திக் குறிப்புக்களோ இல்லை. அனைத்துமே வாய்மொழிக் கதையாகவே உள்ளது.