சாந்திப்பிரியா
வாடிய முகத்தோடு திரும்பி வந்த அக்னிபகவானைக் கண்ட வாயு பகவான் இன்னும் உக்ரஹத்தோடு அந்த உருவத்தின் அருகில் சென்று ‘நீ யார்’ என்று கேட்டார். அவருக்கும் அது ஒரு உருவம் போலவும் ஜ்யோதி வடிவமாகவும் தெரிந்ததே ஒழிய அவரால் அதன் அடையாளத்தைக் காண முடியவில்லை. அந்த உருவம் நிதானமாகக் கூறிற்று ‘ என்னைத் தெரியவில்லையா…சரி முதலில் நீ யார் , உன் சக்தி என்ன என்று கூறு. நான் யார் என்பதை பின்னால் கூறுகிறேன்’. கர்வம் கொண்ட வாயு கூறினார் ‘என்னை வாயு தேவன் என்பார்கள்….நான் அனைத்தையும் ஒரு நொடியில் தூக்கி போட்டு விடுவேன்’. ஜ்யோதிப் பிரவாகம் அமைதியாகக் கூறிற்று ‘அப்படியா , சரி இந்த சிறு மலரை தூக்கி அடி பார்போம் !’ எனக் கேட்டு விட்டு ஒரு மலரை அதன் முன் போட ‘அடடா….இந்த சிறு மலரை தூக்கி எறிய என்னை சோதிக்கும் உன்னை கண்டு பரிதாபப்படுகிறேன்’ என அகங்காரமாகக் கூறிவிட்டு அதை தூக்கி எறிய முயன்றார். எத்தனை பிரயாசப்பட்டும் அந்த மலரை அந்த இடத்தில் இருந்து அசைக்கக் கூட முடியவில்லை. தன் முழு சக்தியை உபயோகித்தும் அதை தூக்கிப் போட முடியாமல் போனவர் ‘சரி இது யார் என்று பார்த்து விடலாம்’ என எண்ணியவாறு தலைப் பகுதிக்குப் பதிலாக அதன் கால் பகுதியை நோக்கிச் சென்றார். ஆனால் அந்த உருவத்தின் கால் பகுதியும் தென்படவே இல்லை. நீண்டு கொண்டே சென்றது.தன் முழு சக்தியையும் உபயோகித்தும் அதை அதை அசைக்க முடியாமல் போனவர் வந்த சுவடு தெரியாமல் அவமானத்தோடு ‘ எது என்ன புது பிரச்சனை….நம்மை மீறிய சக்தியா இது..’ என எண்ணிக் கொண்டே திரும்பிச் சென்றார்.
அனைவருக்கும் கவலை வந்துவிட்டது. இது என்னடா ….நாம் நம்முடைய சக்தியை பெருமையாக பேசிக் கொண்டு இருக்கையில் நமக்கு சவால் விடும் விதமாக எதோ ஒன்று வந்து வந்துவிட்டதே என வருந்தியவாறு இந்திரனைப் பார்க்க , இந்திரனுக்கு மனதில் எதை ஒரு சந்தேகம் வந்து விட்டது. ‘சரி நானே சென்று பார்க்கின்றேன்’ எனக் கூறிவிட்டு அந்த ஜ்யோதி வடிவ ரூபத்தின் அருகில் சென்றார். முதலில் அந்த உருவை விழுந்து வணங்கினார்.
வணங்கியப் பின் எழுந்தவர் கண் முன் ஜ்யோதி வடிவம் இல்லை. பராசக்தியே தன் இதயத்தில் பிரும்மா, விஷ்ணு, சிவன் மற்றும் பிற தேவர்கள் சூழ அங்கே காட்சி தந்தாள். மற்றவர்கள் கண்களுக்கு அவள் புலப்படவில்லை. அந்த பராசக்தி கூறினாள் ‘ இந்திரனே….நான்தான் இந்த பிரபஞ்சத்தை…ஏன் உன்னையும், இங்கு நிற்கும் அனைத்து தேவர்களையுமே படைத்தவள்…நானே பரபிரும்மம் எனப்படுபவள்….அறியாமை…ஆத்திரம் …மமதை போன்றவை கண்களை மறைக்கும். ஆகவேதான் என்னால் படைக்கப்பட்டவர்கள் என் முன்னாலேயே வந்து தமது ஜம்பத்தைக் காட்ட முயலலாமா?. நீங்கள் அனைவரும் ஒவ்வொரு காரணத்துக்காக படைக்கப்பட்டு உள்ளீர்கள். அதை மறந்துவிட்டு இப்படி கூத்தாடுவது நல்லதா?’ எனக் கருணையோடு கேட்க அவள் கால்களில் மீண்டும் வீழ்ந்து இந்திரன் வணங்கி அவளிடம் அனைவர் சார்பாகவும் மன்னிப்புக் கேட்க அந்த பரப்பிரும்ம வடிவிலான பராசக்தி அனைவருக்கும் காட்சி தர இந்திரனைத் தொடர்ந்து அனைவரும் அவளை விழுந்து வணங்கி தமது செய்கைக்காக மன்னிப்புக் கேட்டார்கள். அது முதல் பராசக்தியின் பரபிரும்ம உருவை முதலில் புரிந்து கொண்ட இந்திரனை இந்திர லோக தலைவனாக்கி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை தந்தாள் என்று உபநிஷத்துக்களில் மேன்மையான கேனோபதேஷத்தில் ஒரு செய்தி உள்ளது. ஆகா பராசக்தி கர்வத்தை அடக்க சற்று அவமானப்படுத்தினாலும், அடுத்த நிமிடம் தனது அருளையும் கருணையும் அவர்கள் மீது பொழிவாள் என்று அது மேலும் கூறுகின்றது.
தேவிபாகவதம் பராசக்தியை இப்படியாக வர்ணிக்கின்றது:
- தேவியே இந்த பிரபஞ்சத்தின் எல்லை இல்லா நிலையில் உள்ளவள்
- அவர் கண்களாக சந்திர சூரியர்கள் உள்ளனர்
- அவள் காதுகளாக இந்த வானுலகம் இருக்க
- வேதங்கள் அவள் வார்த்தைகளாக உள்ளன
- ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடைப் பகுதி அவளது தொப்பிள் பாகம் போன்றது
- இந்திரனும் தேவர்களும் அவளுடையக் கைகள் மலைகள் அவளது எலும்புகளாக இருக்க நதிகள் அவளது உடலின் நரம்புகள்
- சவாலைப் போன்ற அக்னி அவளது முகம்
- இரவும் பகலும் அவளது இறக்கைகள்
- அவளது தலை முடியோ இந்த உலகின் மரங்கள்
- அவள் நெற்றிப் பகுதி மகரலோகம்