யமராஜர் பெற்ற சாபம்
சாந்திப்பிரியா 
மகாபாரத கதாநாயகர்கள்

மகாபாரத யுத்தத்தில் முக்கியப் பங்கு கொண்ட விதுரர் என்பவர்  திருதராஷ்டிரா மற்றும் மகராஜா பாண்டுவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். முன்னொரு காலத்தில் விஜித்திரவீர்யா  என்ற மன்னன் தனக்கு வாரிசு இல்லாமலேயே உயிர் இழந்தான். அவரது மாபெரும் ராஜ்யத்தை ஆள தகுதியான ராஜ குழந்தை இல்லை என்பதினால் அவரது மனைவிகளான அம்பிகா மற்றும் அம்பாலிகா என்பவர்களுக்கு தமது யோகா சக்தியினால் குழந்தைப் பேறு தருமாறு சத்யவதி வியாசரிடம் வேண்டிக் கொண்டாள்.

 விதுரர் 

முதலில் வியாசரிடம் சென்ற அம்பிகா அவருடைய கோபமான முகத்தைக் கண்டு நடுங்கி விட்டு கண்களை மூடிக் கொண்டாள் என்பதனால் அவளுக்கு குழந்தைப் பேறு தந்த வியாச முனிவர் அந்தக் குழந்தையை குருடராக -பிறவியிலேயே குருடரான திருதராஷ்டகராக- பிறக்க வைத்தார். அடுத்து அம்பாலிகா பயத்தினால் கண்களை மூடிக் கொள்ளவில்லை என்றாலும் பேய் அறைந்ததுபோல இருக்க அவள் உடல் ரத்தமற்ற உடலைப் போல தெரிந்தது. ஆகவே அவளுக்குப் பிறந்த குழந்தையை சக்தி அற்றவராக – பாண்டுவாக- பிறக்க வைத்தார். ஆகவே இரண்டு குழந்தைகளுமே ராஜ்யத்தை ஆளத் தகுதி இல்லாமல் இருக்க சத்யவதி நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு வியாசரிடம் மீண்டும் அவர்களுக்கு நல்ல குழந்தையைத் தருமாறு வேண்டிக் கொண்டாள். ஆனால் அம்பிகாவும், அம்பாலிகாவும் மீண்டும் வியாசரிடம் செல்ல பயந்து கொண்டு தமது வேலைக்காரியை அவரிடம் அனுப்ப அவர் அவளுக்கு கொடுத்தக் குழந்தையே விதுரராக கீழ் ஜாதியில் பிறக்க நேரிட்டது. தர்மத்தின் மறு உருவமாகவே விதுரர் இப்படியாக ஒரு பிறப்பை எடுத்து நூறு ஆண்டுகள் பூமியில் வாழ வேண்டியதாயிற்று. அந்த விதுரர் யார்? அவர் ஏன் பூமியில் இப்படி ஒரு கீழ்த்தரமான பிறவியை எடுக்க வேண்டி இருந்தது? கீழே உள்ள கதை அதற்கு விடை தருகின்றது.

விதுரர் பூர்வ ஜென்மத்தில் யமராஜராக இருந்தார். அப்போது மாண்டவ்ய முனிவர் ஒரு வனத்தில் தனது குடிலுக்கு வெளியில் மௌன விரதம் பூண்டு தவத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அதே இடத்தில் பல காலம் தவத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒருமுறை அரச சேவகர்கள் சில திருடர்களைத் துரத்திக் கொண்டு அந்த வழியாக ஓடி வந்து கொண்டிருந்தனர். அந்த திருடர்கள் அரண்மனையில் இருந்து நகைகளை திருடிக் கொண்டு ஓடி வந்து கொண்டு இருந்தார்கள். அரசனின் அரண்மனையில் இருந்து நகைகளை திருடிக் கொண்டு ஓடிய திருடர்கள் தம்மை துரத்தி வந்த அரண்மனை சேவகர்களிடம் இருந்து தப்பிக்க அந்த நகைகளை மாண்டவ்ய முனிவர் குடிலில் போட்டு விட்டு அருகில் இருந்த ஒரு புதரில் புகுந்துதப்பி ஓடி விட்டனர். அந்த திருடர்களை துரத்திக் கொண்டு வந்த அரண்மனை சேவகர்கள் அவர்கள் எப்படித் தப்பிச் சென்றனர் என்றும் அவர்கள் தப்பிச் சென்ற வழியையும் தெரியாமல் விழித்தார்கள்.

ஆகவே வேறு வழி இன்றி அந்த இடத்தில் மௌன விரதம் பூண்டு தவத்தில் இருந்த முனிவரிடம் சென்று அவர் தவத்தைக் கலைத்து அந்தத் திருடர்கள் எந்தப் பக்கமாக ஓடினார்கள் என்று திரும்பத் கேட்டனர். முனிவரோ மௌன விரதத்தில் இருந்தார். சேவகர்கள் என்ன செய்தும்  அவரது தவமும் கலையவில்லை, மௌனமும் கலையவில்லை. ஆகவே அவர்கள் ஓடியது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் மௌன விரதம் பூண்டு தவத்தில் இருந்ததினால் பதில் எதுவும் கூற முடியாமல் மௌனமாக இருக்க அரச சேவகர்களோ அவரும் திருடர்களுக்கு அந்த முனிவரும் உடந்தையாக இருக்கிறார் என்று தவறாக நினைத்து விட்டனர். கோபமாக அவருடைய ஆசிரமத்தில் நுழைந்து திருடர்களைத் தேடிய பொழுது திருடர்கள் அங்கு மறைவான இடத்தில் போட்டு வைத்து இருந்த நகைகளைக் கண்டு பிடிக்க முனிவரும் திருடர்களுக்கு உதவி உள்ளார் எனத் தவறாக நினைத்து மௌன விரதத்தில் இருந்த அவரை கூர்மையான ஒரு மரத்தின் கட்டை மீது ஏற்றி தெரு முனையில் வைத்து விட்டுச் சென்று விட்டனர்.

அவர்கள் அவரை மெல்ல மெல்லக் கொல்லும் கழுகு மரத்தில் ஏற்றியதைப் போல அந்த கூர்மையான நுனியைக் கொண்ட கட்டையில் சொருகியதினால் அவரால் அதில் இருந்து தப்பிக்கவும் முடியவில்லை. அதில் அமர்த்தப்பட்ட முனிவரின் தியானம் கலைந்தது. உடல் வேதனைப்பட்டாலும் வலியால் துடித்தாலும் தமது தவ வலிமையினால் அவற்றைப் பொறுத்துக் கொண்ட மாண்டவ்ய முனிவர் தன்னை வேண்டும் என்றே யமராஜன் கொடுமைப் படுத்தி விட்டதாகக் கருதி தன் உடலில் புகுந்துள்ள கட்டையுடன் இரத்தம் சொட்டச் சொட்ட அவரிடம் நேரில் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டார்.

யமராஜரும் மாண்டவ முனிவர் முன் பிறவியில் தம் இள வயதில் சிறு சிறு பிராணிகளை ஊசிகளால் குத்தி கொன்றதினால்தான் இந்த ஜன்மத்தில் அவருக்கு அதற்கேற்ப தண்டனை தந்ததாகக் கூற முனிவர் கோபமடைந்தார். பூர்வ ஜென்மத்தில் சிறு வயதில் அறியாமையினால் செய்த பிழைக்கு இந்த ஜென்மத்தில் அவருடைய முதுமையையும், வயதையும் கூடப் பார்க்காமல் கொடுமையாக தண்டித்ததற்கு கண்டனம் தெரிவித்து, யமராஜர் தம் கடமையை நீதிப்படி செய்யவில்லை என்று கூறினார். உடனடியாக அப்படி நியாயமற்ற செயலை செய்த யமராஜர் கடுமையான மனவேதனை அடையும் வகையில் கீழ் குலத்தில் பிறவி எடுக்க வேண்டும் என சாபமிட்டதினால்தான் அவர் விதுரராகப் பிறக்க வேண்டி இருந்தது. அவர் எடுத்த அந்தப் பிறவியில் பல முறை மீண்டும் மீண்டும் அவர் உதாசீனப்படுத்தப்பட்டு,எந்த வித நியாயமும் இல்லாத முடிவுகளை எடுத்து வந்த தம் சந்ததியினரால் குற்றம் சுமத்தப்பட்டு மன வேதனை அடைய வேண்டி இருந்தது. தன் கடைசி கால கட்டம் வரை அவர் மன நிம்மதி இன்றி மெல்ல மெல்ல மடிந்தாராம். அவர் மரணத்துடன் யமதர்மராஜரின் முந்தைய சாபமும் முடிவுற்றது.