ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -29

ஆந்திரா கொண்டக்காடு

ஆஞ்சனேயர் ஆலயம்


சாந்திப்பிரியா

 ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா பகுதியில் உள்ள பெரிய நகரமான நிசாமாபாத் எனும் இடத்தில் இருந்து கரீம் நகருக்குச் சென்று அங்கிருந்து செல்லும் ஜகிட்கார் எனும் இடத்துக்குச் செல்லும் பஸ்ஸில் ஏறி கொண்டக்காடு என்ற ஊருக்குச் சென்றால் ஒரு அற்புதமான ஆஞ்சனேயர் ஆலயத்தை மலைப் பகுதியில் காணலாம் . அந்த ஆஞ்சனேயர் ஆலயத்தின் பெயர் கொண்டக்காடு ஆஞ்சனேயச்வாமி ஆலயம் என்பது. மலைகளுக்கு நடுவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள ஆலயத்தில் உள்ள ஆஞ்சனேயர் ஸ்வயம்பு மூர்த்தி. அந்த ஆலயம் மலைப் பகுதியில் உள்ளதால் சரியான சாலை வசதி அற்ற அந்த கிராமத்துக்கு மாட்டு வண்டியில்தான் செல்ல முடியும். வேறு வசதிகள் இல்லை. ஆலயம் உள்ள மலைப் பகுதியில் ஐந்து குளங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு குளங்கள் என்றுமே வற்றியது கிடையாதாம். அந்த மூர்த்தியை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணங்கி வந்தாலும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னால்தான் அதற்கு ஆலயம் அமைக்கப்பட்டதாம். அந்த ஆஞ்சினேய மூர்த்தி இருந்த இடத்தை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் அந்த மலைகளில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த ஆட்டு இடையர்கள் கண்டு பிடித்தனராம். அந்த ஆலயம் வந்த வரலாறு இது.

ரகுபதி ராவுடு என்ற மன்னன் அந்தப் பகுதியை ஆண்டு வந்தார். அவருடைய மனைவி ஆஞ்சினேய பக்தை. அவர்களுக்கு வெகு நாட்களாகக் குழந்தை பிறக்கவில்லை. ஆகவே அவள் ஆஞ்சினேயரை வேண்டி வந்தாள். ஒரு நாள் அவள் கனவில் ஆஞ்சினேயர் தோன்றி தான் காட்டு மலைப் பகுதியில் ஒரு இடத்தில் புதைந்து உள்ளதாகக் கூறி தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைக்குமாறு கூறினாராம். மன்னனும் அரசியும் ஆட்டு இடையர்கள் மூலம் அந்த இடத்தைக் கண்டு பிடித்து ஆலயம் அமைக்க அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததாம்.

அந்த ஆலயத்துக்கு வந்து சித்தபிரமை பிடித்தவர்கள் குணமடையவும் , வாழ்கையில் ஏற்படும் தடங்கல்கள் விலக வேண்டும் எனவும், குழந்தை வரம் வேண்டும் எனவும் வேண்டிக் கொள்வார்களாம். தினமும் பல ஆயிரம் பக்தர்கள் அங்கு செல்கிறார்கள். விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த ஆலயத்துக்கு செல்கிறார்களாம். ஆலயத்தில் உள்ள ஆஞ்சினேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்கிறார்கள்.