

– சாந்திப்பிரியா –
வாரிவனேஸ்வரர் எனும் ஒரு புகழ்பெற்ற ஆலயம் இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டு இருந்துள்ள ஆலயம் ஆகும். உள்நாட்டு யுத்தத்தினால் சற்றே சேதம் அடைந்து இருந்தாலும் அந்த ஆலயம் அந்த காலத்தில் மகத்தானதாக கருதப்பட்டு வந்திருந்தது. அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சக்தி வாய்ந்த சுயம்பு லிங்கம் என்பதாகக் கூறுகிறார்கள். போர்த்துகீசியர்களும், டட்ச் (பறங்கியர் எனப்பட்டவர்கள்) நாட்டவர்களும் ஸ்ரீலங்காவில் வந்து இறங்கியபோது அங்கிருந்த இந்துக்களின் பல ஆலயங்களை நாசப்படுத்தி அழித்து உள்ளார்கள். ஆனால் பின்னர் அவற்றில் பலவும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே வாரி வனம் எனும் பகுதியில் உள்ள வாரிவனேஸ்வரர் எனும் சிவபெருமான் ஆலயமும் ஆகும். சோழ மன்னர்கள் காலத்தை சேர்ந்த இந்த ஆலயத்தைக் குறித்து தக்ஷிண கைலாசம் எனும் புராணத்திலும் குறிப்பு உள்ளனவாம்.
நைமிசாரண்யா வனத்தில் வாழ்ந்திருந்த முனிவர்களுள் சூதக முனிவரே தலைசிறந்தவர். அவரே புராணங்கள் பலவற்றையும் முனிவர்களுக்கு எடுத்துரைத்தவராக கருதப்படுபவர். இப்படியான நிலையில் நைமிசாரண்யா வனத்தில் என்றும்போல அன்றும் வந்து கூடி இருந்த ரிஷி முனிவர்கள் சூதக முனிவர்கள் வந்ததும் அவரை எதிர்கொண்டு வரவேற்று அவருக்கு உரிய மரியாதையுடன் கலந்த உபசாரங்களைச் செய்தனர். பிறகு ஒரு வேண்டுகோளையும் அவர் முன் வைத்தனர். ‘மாபெரும் முனிவரே, சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர். கயிலை, காசி, காஞ்சி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களை குறித்து விளக்கமான கதைகளை எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். அந்த தலங்களைப் போன்ற போல சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டுகிறோம்’ என்று கேட்டார்கள். அதைக் கேட்ட சூதக முனிவர் அவர்களுக்கு ஸ்ரீ லங்கா எனும் பகுதியில் இருந்த வாரிவனேஸ்வரர் சிவாலயத்தின் கதையைக் கூறத் துவங்கினார். அவர் கூறியதாக கூறப்படும் அந்த தலத்தின் சுருக்கமே இதுவாகும்.
”வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் அமிர்தபாஷணி சமேத சந்திரசேகர வாரிவன நாத சிவபெருமான் இருந்தவாறு அருள் பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தில் வந்து விருபாக்கன் எனும் சோழ மன்னன் வழிபாட்டு வந்தார். விருபாக்கன் பெரும் சிவா பக்தர். அந்த ஆலயம் உள்ள இடம் அனைத்துமே நீர் நிலைகள் பலவும் நிறைந்த இடமாக இருந்ததினால் அந்த வனத்துக்கு வாரி வனம் என்று பெயர் வந்துள்ளது. (வாரி என்றால் நீர், வெள்ளம், கடல், நீர் நிலை மற்றும் மடை போன்ற பல அர்த்தங்கள் உண்டு).
விருபாக்கன் எனும் அந்த சோழ மன்னன் ஆண்டு வந்திருந்த காலத்திலே அவன் திருவாஞ்சியபதி என்ற நகரில் வசித்து வந்திருந்தான். அவன் பெருமளவிலான தான தர்மங்களை அந்தணர்களுக்கு அளித்து வந்தான். அந்தணர்களை பெரிதும் மதித்து வந்தான். பெரும் சிவ பக்தன் என்பதினால் சிவன் ஆலயத்துக்கு சென்று வழிபடாமல் உணவு அருந்திய நாளே கிடையாது எனும் அளவில் சிவபக்தனாக இருந்தவன். அவனது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் ஒரு அந்தணர் வேடம் பூண்டு யாசகம் வேண்டி அரண்மனைக்குச் சென்று மன்னனை தரிசித்தார்.
அந்த அந்தணனைக் கண்டதும் அரசன் அவரை எழுந்து நின்று வரவேற்று அவரை முறைப்படி வணங்கி நமஸ்கரித்தான். அதன் காரணம் அந்த மன்னன் அந்தணர்களை தெய்வமாகவே மதித்தவன். அந்தணர்களே தெய்வீகத்தின் முதல் படியாக உள்ளவர்கள் எனக் கருதி வாழ்ந்தவன். அதனால்தான் அந்தணர்கள் அந்த மன்னனிடம் நேரடியாக சென்று யாசகம் கேட்பார்கள். மன்னனை நியாயமான காரியத்துக்காக சந்திக்கச் செல்லும் அந்தணர்களை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை எனும் அளவு அந்தணர்கள் போற்றப்பட்டு வந்திருந்தார்கள். ஒருவிதத்தில் பார்த்தால் அவனது ராஜ்ய பரிபாலனத்தில் அந்தணர்கள் ஒரு குறையும் இல்லாமல் நலமாகவே வாழ்ந்து வந்தார்கள். நாடும் செழிப்புடன் இருந்தது.
அந்த நிலையில் தன்னிடம் வந்து யாசகம் கேட்ட அந்தணரிடம் அவருக்கு என்ன வேண்டும் என பணிவுடன் அரசன் கேட்க, அந்த அந்தணரும் கூறினார் ‘மன்னா நான் ஒரு அநாதை, ஆதரவற்று உள்ளேன். தங்க வீடும் இல்லை, உண்ண நல்ல உணவும் இல்லை. நாட்டில் அடித்த புயலினால் வீடும் வாசலும் இழந்து, என் மனைவியும், குழந்தைகளும் கதியற்றுப் போய் அங்காங்கே சென்று கொண்டே இருந்தவாறு எங்கெல்லாம் சத்திரங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் தங்கி, தானம் கிடைக்கும் உணவை உண்டு கொண்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு வயதாகி விட்டதினால் வேறு வேலை செய்தும் பிழைக்க வழி இன்றி இருக்கிறேன். ஆகவே எனக்கு ஒரு வீடும், நல்ல வருமானம் கிடைக்கும் வழியையும் தந்து காக்க வேண்டும். இல்லை என்றால் உன்னுடைய இந்த நாட்டில் பட்டினியால் வாடும் நாங்கள் அனாதையாகவே மரணம் அடைந்து விடுவோம். உனக்கும் பிராமணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விடும் ‘.
அதைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டார். ஒரு பிராமணர் தன்னுடைய நாட்டில் பட்டினியால் மரணம் அடைந்தால், அதனால் தனக்கு பிராமணனைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டு பெரும் பாவம் வந்து சேர்ந்து பல ஜென்மங்களுக்கு தன்னை வாட்டி வதைக்கும் என பயந்தான். மேலும் கருணை உள்ளம் படைத்த அந்த மன்னன் சற்றும் யோசனை செய்யவில்லை. உடனே தயங்காமல் தான் தங்கி இருந்த அரண்மனை,விளை நிலங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் அந்த பிராமணனுக்கு தானமாகக் கொடுத்து விட்டு அரசைத் துறந்து மனைவியுடன் வேறு இடம் சென்று வசிக்க முடிவு செய்தார். ஒன்றுமே இல்லாதவனை யார்தான் அரசனாக ஏற்றுக் கொள்வார்? அனைத்தையும் துறந்துவிட்ட விருபாக்கனின் நிலையைக் கேள்விப்பட்ட அண்டை மானில மன்னன் அடுத்த நாளே அந்த நாட்டை கைப்பற்றிக் கொள்ள விருபாகனும் தனது மனைவியுடன் காங்கேசன்துறையின் கடற்கரையை அடைந்து அங்கு இருந்த படகோட்டியிடம் தன் நிலையைக் கூறி தன்னை அந்த கடற்கரையின் அடுத்த கரையில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டு அவன் படகில் ஏறிச் சென்றார். இவை அனைத்துமே சிவபெருமானின் நாடகத்தின் ஒரு அங்கமாகவே இருந்தன. அவர் தன மீது உண்மையிலேயே எந்த அளவு பக்தியை விருபாகன் கொண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளவே இத்தனை கஷ்டங்களையும் அவருக்குத் தந்திருந்தார். யாழ்ப்பாணத்தை அடைந்த விருபாகனும் தனது மனைவியுடன் அதன் அருகில் இருந்த கொடிக்கிராமம் எனும் இடத்துக்குப் போய் அங்கிருந்த வனத்தில் தங்கினார். நல்ல வேலையாக அந்த மன்னனுக்கு குழந்தைகள் இல்லை என்பதினால் அவரால் எளிதில் முடிவெடுத்து செல்ல முடிந்தது.
மன்னன் கையில் அதிக காசும் (பணம்) இல்லை. அந்த காலங்களில் எவருமே அதிக பணத்தை வைத்திருக்க மாட்டார்கள். பெரும்பாலான வர்த்தகங்கள் பண்டம் மாற்றிக் கொள்ளும் முறையிலேயே அமைந்து இருந்தது. தம்மிடம் உள்ள பொருட்களை பிறருக்கு தந்து தனக்கு தேவையான பணம் அல்லது பொருளைப் பெற்றுக் கொள்வார்கள்.
இந்த நிலையில் திடீர் என தள்ளப்பட்டு விட்ட விருபாக்கனும் வாழ்க்கைக்கு என்ன செய்யலாம் என யோசனை செய்தவாறு வனத்தில் தங்கி இருந்தபோது, அங்கு பல பசுக்கள் ஏகாந்தமாக சுற்றித் திரிவதைக் கண்டான். அவன் பிறப்பால் வியாபார வம்சத்தை சேர்ந்தவனாக இருந்திருந்ததினால் பசுக்களை வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்யலாம் என முடிவு செய்தான். அவனது மனைவியும் அவனுக்கு உதவ முன் வந்தாள். அவர்கள் வனத்தில் இருந்த சில பசுக்களை பிடித்து வந்து அங்கேயே சிறு குடிசை அமைத்துக் கொண்டு வாழத் துவங்கினார்கள். அந்த பசுக்களின் பாலைக் கறந்து அருகில் இருந்த ஊர்களில் சென்று விற்று விட்டு தமது வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். இப்படியாக சில நாட்கள் வாழ்க்கை தொடர்ந்து கொண்டு இருந்தபோது, ஒருநாள் பாலைக் குடத்தில் எடுத்துக் கொண்டு பக்கத்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தபோது அவன் கால் தடுக்கி விழ பால் குடம் கீழே விழுந்து உடைந்தது. இப்படியாக அதே இடத்தின் வழியே அவன் செல்லும்போதெல்லாம் அதே இடத்தில் அவன் கால் தடுக்கி விழுந்து பால் குடம் உடைந்து கொண்டே இருக்க அவனுக்கு சந்தேகம் வந்தது. இந்த குறிப்பிட்ட இடத்திலேயேசில தினங்களாக நாம் ஏன் தினமும் தடுக்கி விழுகிறோம் என யோசனை செய்தவனுக்கு காரணம் புரியவில்லை.
ஆகவே அந்த பாதையை தவிர்த்துவிட்டு சற்று தள்ளி நடந்து செல்லலாம் என நினைத்தவன் அந்த பாதையை சுற்றிலும் செடி கொடிகளாக படர்ந்து இருந்ததைக் கண்டான். அந்த ஒரு இடத்தில் ஒருவர் மட்டுமே நடக்கும் வகையில் மண் பாதை இருந்தது என்பதினால் அந்த இடத்தை சுற்றி இருந்த செடி கொடிகளை அகற்றிவிட்டு வேறு பாதையை அங்கு அமைத்துக் கொள்ளலாம் என எண்ணிக் அந்த இடத்தை சுற்றி வளர்ந்திருந்த செடிகொடிகளை அகற்றத் துவங்கியவன் ஆச்சர்யம் அடையும் வகையில் அவனை தடுக்கி விழச் செய்து கொண்டு இருந்தது அங்கிருந்த சிறு சிவலிங்கமே என்பதைக் கண்டவன் அப்படியே பயந்து போய் மூர்ச்சையாகி விழுந்தான். சற்று நேரம் பொறுத்து கண் விழித்து எழுந்தவன் முன்னாள் சிவபெருமான் அவனுக்கு லிங்க உருவாய் காட்சி தந்தார். பக்தியினால் சூழப்பட்ட விருபாக்கன் அங்கேயே அமர்ந்து கொண்டு சிவனைக் குறித்து தோத்திரப் பாடல்களைப் பாடலானான்.
மறுநாள் முதல் அவன் பசுவின் பாலைக் கறந்ததும் முதலில் அந்த இடத்துக்கு வந்து அந்த இடத்தில் இருந்த சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தப் பின்னரே பாலை விற்பனைக்கு எடுத்துச் செல்வான். இப்படியாக சில நாட்கள் கழிந்தபோது மீண்டும் சிவபெருமான் அவரை சோதிக்க எண்ணினார். அவன் மூலம் தான் அங்கு குடியிருப்பதை உலகிற்கு எடுத்துரைத்து, விருபாக்கனின் பக்தியையும் வெளிப்படுத்திக் காட்ட நினைத்தார். ஆகவே ஒருநாள் அந்த வனப்பிரதேசம் முழுவதிலும் பெரும் மழையை பொழிய வைத்து தண்ணீரால் மூழ்கடித்து வைத்து வெள்ளக் காடாக்கினார். என்றும் போல மறுநாளும் பாலைக் கறந்தப் பின்னர் அந்த சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்ய வெளியில் வந்த விருபாக்கன் வெள்ளக்காடாக காட்சி அளித்த அந்த இடத்துக்கு எப்படிப் போவது என தெரியாமல் மனம் தத்தளித்துக் குழம்பினார். ஆனால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யாமல் கறந்த பாலை எடுத்துக் கொண்டு விற்பனைக்கு செல்லவும் மனம் இல்லாமல் அப்படியே பால் குடத்துடன் வீட்டு வாயிலில் அமர்ந்து கொண்டார்.
இரவு முடிந்து பகல் வந்தும் வெள்ளமும் வற்றவில்லை. விருபாக்கனும் இடத்தை விட்டு நகரவில்லை. இப்படியாக உணவின்றி, உறக்கமும் இன்றி மூன்று நாட்களை விருபாக்கன் அப்படியே கழித்தார். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யாமல் வியாபாரத்துக்கு செல்ல மாட்டேன் என முடிவு செய்தவனின் அவனது பக்தியைக் கண்டு மனம் மகிழ்ந்துபோன சிவபெருமான் உடனடியாக பைரவரை அழைத்துக் கூறினார் ‘பைரவா, இனியும் தாமதிக்காமல் நீ உடனே இங்குள்ள தண்ணீரை வற்ற வைத்து எனது பக்தன் எனக்கு பால் அபிஷேகம் செய்யும் நிலைக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்’. அதைக் கேட்ட பைரவரும் உடனடியாக தனது வலக்கரத்தில் இருந்த ஒரு சூலத்தை அந்த வெள்ளக்காடாக இருந்த பகுதியில் தூக்கி எறிய அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பகுதியை முழுக அடித்திருந்த தண்ணீர் முற்றிலும் வற்றி மீண்டும் அந்த இடம் பழைய நிலைக்கு வந்தது.
திடீர் என ஒரு மாயையைப் போல வெள்ளம் வடிந்ததைக் கண்ட விருபாக்கன் பெரும் மகிழ்ச்சி அடைந்து பால் குடத்தை எடுத்துக் கொண்டு போய் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின் விற்பனைக்கு எடுத்துச் சென்றார். நடந்த அனைத்துமே ஒரு கனவு போல அமைந்து இருந்தது. அவர் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ததுமே அவர் முன் சிவபெருமான் நந்தி மீது ஏறி வந்து காட்சி தந்து அவனுடைய ராஜ்யத்துக்கு சென்று மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்கலாம் என்றும், அந்த அண்டை மானில மன்னன் உருவில் தான்தான் வந்து நாட்டை எடுத்துக் கொண்டதாகவும் கூற அதை விருபாக்கன் ஏற்கவில்லை. மாறாக தான் அங்கேயே மன அமைதியுடன் இருப்பதினால் வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருந்து கொண்டு அவருக்கு பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்க சிவபெருமானும் அவன் கேட்ட அருளை தந்தார். அதனால் விருபாக்கனும் சிவபெருமான் தனக்கு காட்சி தந்த அதே ரூபத்தில் அங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றும், தான் அங்கேயே இருந்தவாறு அவருக்கு தினமும் பால் அபிஷேகம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் மீண்டும் வரம் கேட்க அவரும் அவனுக்கு அவர் கேட்ட வரத்தை தந்து அருளினார். அடுத்த கணம் சிவபெருமானும் அந்த இடத்திலேயே வாரிவனேஸ்வரராக பெரிய லிங்க உருவெடுத்து அமர்ந்தார்.
பல காலம் விருபாக்கனும் தனது மனைவியுடன் அங்கேயே தங்கி இருந்து கொண்டு வாரி வனத்தில் இருந்த அந்த சிவலிங்கத்தை வாரிவனேஸ்வரராக கருதி பூஜித்தவாறு இருந்தான். அதன் பின் அவர் சிவலோகப் பிராப்தி பெற்று கைலாயத்துக்கு சென்றார்”. இப்படியாக சூதக முனிவர் அந்த ஆலயத்தின் கதையை முனிவர்களுக்குக் கூறினார்.
அன்று அந்த இடத்தில் அந்த மன்னன் விருபாக்கன் கட்டிய சிறு ஆலயமே பின்னர் வந்த சோழ மன்னர்களினால் பெரும் ஆலயமாக எழுப்பப்பட்டது. அப்படி எழுந்த ஆலயமே வாரி+வனம் + ஆலயம் என்பது வாரிவனநாதர் ஆலயம் என்பதாயிற்று. அதுவே இன்றைய ஸ்ரீலங்கா நாட்டின் யாழ் பகுதியில் உள்ள சாவக்கச்சேரி எனும் இடத்தில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த ஆலயம் ஆகும்.
பறங்கியர் எனும் டட்ச் ஆட்சியின்போது இந்துக்களின் ஆலயங்கள் இடிக்கப்பட்டபோது இந்த ஆலயமும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. ஆகவே பக்தர்கள் அந்த ஆலயத்தில் இருந்த லிங்கத்தையும், அம்பிகையையும் அழிவில் இருந்துக் காப்பாற்ற ஆலயத்தில் இருந்து இரவோடு இரவாக அவற்றை எடுத்து அந்த ஆலயத்தில் இருந்த கிணற்றில் போட்டு ஒளித்து வைத்து விட்டனர். ஆனால் அதன் பின் ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர் காலத்தில் ஐந்து அடி நீளமான அமிர்தபாலகால பூசணி எனும் பெயர்க் கொண்ட தேவியும், சிவலிங்கமும், மேலும் சில தெய்வ சிலைகளும் கிணற்றில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு ஆலயமும் கட்டப்பட்டது. இந்த ஆலயத்துக்கு 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடந்துள்ளது.