வள்ளி மலைப்  பொங்கி தேவி
சாந்திப்பிரியா
வள்ளி தேவி எனும் பொங்கி தேவி  

ஸ்ரீ வள்ளிதேவி சில அவதாரங்களை எடுத்து இருக்கின்றாள். அதில் ஒரு அவதாரமாக அவள் காத்தாயி எனும் பெயரில் சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயம் ஒன்றில் அமர்ந்து இருக்கின்றாள். அப்படிப்பட்ட அந்த வள்ளி தேவி அவதரித்த இடமாக வேலூரில் உள்ள வள்ளி தேவியின் ஆலயத்தையும் கூறுகிறார்கள்.  முருகனின் முதல் மனைவியானவளே வள்ளி தேவி.  அவள் வேடர் குலத்தில் பிறந்து முருகனை மணக்க வேண்டி இருந்தது. அவர்களுடைய  பூர்வ ஜென்மத்தில் வள்ளியும் தெய்வானையும்  மகா விஷ்ணுவின் மகள்கள் ஆவார்கள்.  அவர்கள் தங்களுக்கு அழகானவரும், கோபமே இல்லாத கணவன் வேண்டும் என எண்ணி அதற்காக தபம் இருக்க, முருகப் பெருமான் அவர்கள் முன் தோன்றி அவர்களை தான் பூமியில் வந்து மணப்பதாக உறுதி கூறினார். அவர் கூறியபடியே வள்ளி வேத்தா எனும் வேடரின் மகளாகப் பிறந்தாள். தெய்வானை  இந்தரனுக்கு  மகள்களாகப் பிறந்த பின் அவர்களை அவர் மணந்து கொண்டார். பன்னிரண்டு வருடம் வள்ளியும் முருகனும் லீலைகள் பல புரிந்து திருமணம் செய்து கொண்டனர். வேலூருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியையே  வள்ளி தேவி  அவதரித்த வள்ளிமலை எனக் கூறுகிறார்கள்.

வள்ளி மலை என்பது வட ஆற்காட்டு மாவட்டத்தில்  உள்ள வாலாஜாவில் உள்ளது.  அங்கு உள்ள முருகன் ஆலயத்தில் அவர் வள்ளி- தெய்வானையுடன்  அமர்ந்துள்ளார். அந்த ஆலயத்தின் பின்புறம் உள்ளது சரவணப் பொய்கை என்ற நீர் நிலை (குளம்). அந்த மலையின்  உச்சியில் மற்றும் ஒரு  முருகன் ஆலயம் உள்ளது.  ஒரே ஒரு கல்லில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் எனில் 444 படிகள் ஏற வேண்டும். அந்தப் படிக்கட்டுகளின் சில இடங்களில் பக்தர்கள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக தங்கும் இடம் உள்ளது.

வள்ளி தேவி  முருகனுக்கு நீர் கொடுத்த மற்றும் அவள் குளித்த குளம் 

வள்ளி மலையின் மகத்துவத்தை எடுத்துக் கூறும் விதத்தில் ஒரு கதை உள்ளது.  வள்ளி மலையின் மகத்துவத்தைப் பற்றிக் கேட்டறிந்த காலம் சென்று விட்ட ஆன்மீகச் செம்மல் திரு கிருபானந்தவாரியார், திரு அருணாசலம், மற்றும் திரு அப்பாதுரை போன்றவர்கள் வள்ளியின் ஆலயம் இருந்த  அந்தப் பகுதியை புதுப்பிக்கும் நோக்கத்தில் அந்த இடத்தை ஒருமுறை ஆய்வு செய்து கொண்டு இருந்தார்கள்.  அப்போது அங்கு  இருந்த ஒரு பாறையின் நடுவில் இருந்து புகை மண்டலம் போல எதோ வெளி வந்து கொண்டு இருந்தது.  ஆகவே அந்த மூவருமே சேர்ந்து அந்தாப் பாறையை சற்று அகற்ற  உள்ளே இருந்து இன்னும் அதிக  புகை மண்டலம் வெளி வந்தது.  உள்ளே செல்ல சிறு படிக்கட்டுக்களைப் போன்ற பாதையும் இருந்ததைக் கண்டப் பின் , சரி உள்ளே சென்று பார்க்கலாம் என எண்ணி  உள்ளே சென்று பார்த்தவர்கள் பிரமித்தார்கள். பூமியின் பல அடிகள்  ஆழத்தில் காட்சி தந்த இடத்தில்  பல ரிஷிகளும், முனிவர்களும் யோக நிலையில் கண்களை மூடியபடி அமர்ந்து இருந்தனர். அதைக் கண்ட அவர்கள் பயந்து போய் வெளியில் ஓடி வந்து விட்டார்கள். வெளியில் வந்தவர்கள் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள். மயக்கம் தெளிந்து எழுந்ததும், அந்த இடமே பல ரிஷி முனிவர்கள் அமைதியாக தவத்தில் உள்ள இடம் என்று கருதி, அந்த பாறையை அப்படியே மீண்டும் அதே இடத்தில் வைத்து அதை மூடினார்கள். அதன் பின் அந்தப் பாறை இருந்த இடத்தை மட்டும் புதுப்பிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். மேலும், அந்தப் பாறை எந்த இடத்தில் உள்ளது என்பதையோ, தாம் பார்த்த அனைத்து சம்பவங்களையோ  அவர்கள் யாரிடமும் கூறவில்லை. அதை புனித ரகசியமாகவே வைத்து இருந்தார்கள்.  அதற்குப் பிறகு  அந்த செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் அங்கு சென்று எத்தனை  தேடியும், அந்த பாறை எங்குள்ளது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.   அந்த மலையைக் குறித்து மேலும் பல கதைகள் உலவுகின்றன. இந்த மலையில்  பல சித்தர்கள் தவம் இருந்து இருக்கின்றனர். இதை சக்தி பீடம் என்று கூடக் கூறலாம். அதற்குக் காரணம் அந்த  இடம்தான் வள்ளி தேவி  அமர்ந்து இருந்து தவம் புரிந்த ஒரு இடமாக உள்ளது என்ற நம்பிக்கையே.

புராணக் கதையின்படி அங்கு முருகன் வந்து வள்ளியிடம் தனக்கு தினையும் , தேனும் தருமாறு கேட்டாராம். அதை  உண்டதும்  அவருக்கு விக்கல் எடுக்க தனக்கு சூரிய  ஓளியே படாத நீர் ஊற்றில் இருந்துத் தண்ணீர் கொண்டு வந்துத் தருமாறு அவளிடம் அவர் கேட்டார் . ஆகவே அங்கிருந்த குளத்தில் இருந்து  வள்ளி தண்ணீரை தனது கைகளில் எடுத்துத் தந்தாளாம்.  ஆகவேதான் வள்ளி தேவியின் கைபட்ட அந்தக் குளம் புனிதமானது மட்டும் அல்ல, கங்கையைப் போல என்றுமே வற்றாதக்  குளம் என்கிறார்கள் . இளம் பெண்கள் அங்கு வந்து தங்களுடைய தலை  மீது அந்த குளத்து நீரைத் தெளித்துக் கொண்டு தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என வள்ளி தேவியிடம்  வேண்டிக் கொண்டு செல்வார்கள் என்று சில பனை ஓலைகளில் எழுதப்பட்டு உள்ள செய்திகள் மூலம் தெரிய வந்தது.

 மலை மீது உள்ள  இரண்டு முருகன் ஆலயங்கள் 

அந்த மலையின் மகிமை இன்னும் பல உண்டு. அந்த மலை  உச்சியில் உள்ள குளத்தில்  வள்ளி தான்  குளிக்கும்போது தனக்கு தேவையான மஞ்சளை அரைத்துக் கொண்ட  பாறை ஒன்று அங்கு உள்ளது.  அந்த மலைப் பகுதியில் உள்ள வள்ளி மலை  ஸ்வாமிகளின் ஆசிரமம் பக்கத்தில்தான் முருகன் தன்னை ஒரு  மரமாக மாற்றி நின்று  கொண்ட இடமும் உள்ளது என்கிறார்கள். பட்டுப் போய் இருந்த அந்தப் புனித மரத்தை அடையாளம் கண்டு கொண்ட வள்ளி மலை ஸ்வாமிகள் அதை எடுத்து விட்டு அங்கு ஒரு  தண்ணீர் குளத்தைக் கட்டினார்.  வள்ளிக்கு, வள்ளி மலையே  விளையாட்டு மைதானமாக இருந்து  உள்ளது. அங்குதான் அவள் முருகனுடன் ஆடிப் பாடி, கண்ணா மூச்சி ஆட்டம் ஆடி விளையாடி உள்ளார் என்று வல்லை மலை ஸ்வாமிகள் மூலம் அறிந்தார்கள். அந்த வள்ளி மலையை  சுற்றி உள்ள இயற்கைக் காட்சிகள், குகைகள்,  பசுமைத் நிலங்கள், நீருற்றுக்கள் என பலவும் அந்த வள்ளி மலைக்கு அழகூட்டுகின்றன.  வள்ளி மலை முழுவதிலுமே வள்ளி தேவி  பொங்கி எழும் மகிழ்ச்சியுடன் சுற்றித் திரிந்து கொண்டு இருந்து வந்ததினால் அவளை பொங்கி மலை அம்மா என்றும் அழைக்கின்றார்கள்.  வள்ளி மலையில்தான்  முருகனின் மனம் கவர்ந்த   வள்ளி தேவி மனித உருவில் பிறந்தாள் என நம்பப்படுவதினால்  மனித உருவில் பிறந்து மாயமாகி விட்ட அவளுடைய ஆத்மா அங்கு சுற்றிக் கொண்டு உள்ளது  என்றும் அங்கு வரும் பக்தர்களின் இதயங்களுக்கு ஆறுதல் தருகிறது என்கிறார்கள்.

வள்ளித் திருமணத்திற்கு உதவிய யானை  மற்றும் விநாயகரின் உருவச் சிலைப் பதித்த பாறை ஒன்று அங்கு உள்ளது. இயற்கையிலேயே விநாயகரைப்  போலவே அமைந்து உள்ள அந்தப் பாறையை கநேஷகிரி என்கிறார்கள்.  இருபதாம் நூற்றாண்டின்  முதல் காலத்தில் தென் இந்தியா முழுவதும் வள்ளி மலை  மகாத்மியம் பற்றியும் துறவி அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழையும் பரப்பி வந்த வள்ளி மலை  ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் அங்குதான் பல காலம் வாழ்ந்திருந்து  1950 ஆம் ஆண்டு இறுதியில்   சமாதி அடைநதார்.

ஒருநாள் வள்ளி மலை  ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் மலை  மீது நடந்து கொண்டுச் சென்று இருந்த பொழுது அவர் பாடிக் கொண்டே சென்று கொண்டு இருந்த சிறுமியான வள்ளி தேவியை சிறு பெண்ணின் வடிவில் காண நேரிட்டதாம். அந்த இடத்தில் ஒருப் பெண்ணா என ஆச்சர்யத்துடன் அவளை நோக்கி   ” குழந்தை, நீ யார்?” என அவர் கேட்க அவளோ ” நான் யார் எனறு தெரிவது முக்கியம் அல்ல. ஆனால் என் பாடல்களைக்  கேட்டால் உன் மனதில் மகிழ்ச்சி ஏற்படவில்லையா ?” என புன்னகை செய்தபடி திருப்பிக் கேட்டாள். சில சனமே…..அவள் அவருக்கு வள்ளி தேவியாகக் காட்சி தந்துவிட்டு அங்கிருந்து மறைந்தாள்.  அப்போதுதான் அவருக்குப் புரிந்தது அவள் பார்த்தப் பெண்  முருகனின் மனைவியான வள்ளித் தேவியே என்பது.  ஆகா…..வாழ்வில் ஆனந்தம் அடைந்தேன் என்ற மகிழ்ச்சியில்  அவளை தரிசித்த  மகிழ்ச்சியில் அது முதல் வள்ளி மலை ஸ்வாமிகள் அற்புதமான பாடல்களை  இராக தாளங்களுடன் பாடத் துவங்கினார். அங்கேயே ஒரு பாறையில் அவளை  ஸ்தாபனம் செய்தார். அது போலவே ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகளுக்கு வள்ளியைத் தவிர  முருகப் பெருமானையும்  நேரடியாக சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. ஸ்வாமிகளுக்கு வள்ளி மீது அளவு கடந்த பக்தி உண்டு.  வள்ளியை திருப்புகழ் பாடல்கள் மூலமே புகழ்ந்து பாட வேண்டும் எனவும் அப்பொழுதுதான் அவள் சமயம் கிடைக்கும் பொழுது முருகனிடம் நமது தேவைகளை அவள் எடுத்துக் கூறுவாள் என்று தமது பக்தர்களிடம் கூறுவார்.  ஸ்ரீ வள்ளி தேவி அனைவருக்கும் உதவி செய்பவள் என்றும், முருகன் மட்டுமே புருஷ அவதாரம் எனவும் மற்றவர்கள் அனைவரும் அவருக்கு துணைவிகள் என்றும் கூறி வந்தார்.
அம்மா சித்தாடி காத்தாயி எனும் வள்ளி தேவியே, எங்கள் குலத்தை நீதான் ரஷிக்க வேண்டும். எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீயே எங்களுக்கு துணை நின்று எங்களைக் காத்தருள வேண்டும். நீ எங்களுடன் இருந்தால் எங்களை யார், என்ன செய்ய முடியும்?