பஞ்ச பாண்டவர்கள் 
கட்டிய ஆலயங்கள்
சாந்திப்பிரியா
 படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது  கிளிக் செய்யவும்

மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மனதில் அமைதி இல்லை. நமது சந்ததியினரை அனியாயமாக கொன்று விட்டோமோ என்ற எண்ணம் தலைத் தூக்க மனதில் அமைதி இல்லாமல் தவித்தார்கள். அதனால் ராஜ்யத்தை தம்மால் திறமையாக ஆள முடியாது என்பதினால் தமது சந்ததியினரான பரிஷித் மன்னரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு குருஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் தமது சந்ததியினரை கொன்ற பிரும்மஹத்தி தோஷம் என்ற பாபத்தைக் களைய சிவபெருமானையும் விஷ்ணுவையும் துதித்து பாப விமோசனம் பெற பாண்டவ சகோதரர்கள் ஐந்து  பேரும் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார்கள்.

பஞ்ச பாண்டவர்களும் சேர்ந்து அமைத்த ஆலயம்  

முதலில் அவர்கள் இன்றைய உத்திராஞ்சல் என்ற மாநிலத்தில் உள்ள கர்வால் என்ற இமயமலைப் பகுதியை அடைந்தார்கள். அங்கு அவர்கள் சென்று இமயமலை அடிவாரத்தில் சிவபெருமானை காணச் சென்றார்கள்.  ஆனால் அவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமானோ தன்னை ஒரு மாடு உருவில் மாற்றிக் கொண்டு அங்கிருந்த மாடுகள் கூட்டத்தில் தன்னை மறைத்துக் கொண்டார். ஆனால் சிவபெருமானினால்  தனது பக்தர்களை ஏமாற்ற முடியவில்லை. பாண்டவர்களில் பீமன் மாடுகளுடன் மாடாக அலைந்து கொண்டு இருந்த சிவபெருமானை அடையாளம் கண்டு கொண்டு விட்டான். ஆகவே அவன் ஓடிச்சென்று அந்த  மாட்டை பிடித்துக் கொண்டு வணங்க முயன்றபோது அந்த மாடு திமிறிக் கொண்டு ஓட அதன் பின்புறப்  பகுதி மட்டுமே பீமனின் கைகளில் கிடைத்தது.  ஆனால் வலிமை மிக்க பீமனின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்க முடியாமல் போக மாடு மீண்டும் மீண்டும் திமிறிக் கொண்டு ஓட  மாட்டின் உடல் பல பாகங்களாகப் பிளந்து கர்வாலின் பல பகுதிகளில் விழுந்தன. மாட்டின் கை, கால்கள் பகுதி துங்கநாத்திலும், முகம் ருத்ரநாத்திலும், பின் பகுதி கேதார்நாத்திலும் பிற பகுதி கல்பேஷ்வர் மற்றும் மத்யமகேஷ்வர் போன்ற பகுதிகளிலும் விழுந்தன. ஆகவே பாண்டவர்கள் அந்த ஐந்து இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்களை அமைத்து அவரை பூஜித்து வணங்கியப் பின் தென் பகுதிக்கு விஷ்ணுவின் ஆலயங்களை அமைக்க பயணித்தார்கள்.

யுதிஷ்டர் அமைத்த ஆலயம்

தென் இந்தியப் பகுதிக்கு வந்தவர்கள் பம்பா நதிக் கரையை அடைந்தார்கள். அங்கிருந்த காட்டில் தங்கி இளைப்பாறிக் கொண்டு இருந்தபோது ஒரு அசிரியின் குரல் அங்கு கேட்டது. அது மகாபாரத யுத்தத்தில் யுதிஷ்டர் அஸ்வத்தாமா இறந்து விட்டதாகப் ஒரு பொய்யைக் கூறி துரோணரை  ஏமாற்றிக் கொன்றதற்கான  பாவத்தை களைவதற்காக அந்த பகுதியில் விஷ்ணுவிற்கு ஒரு ஆலயத்தை யுதிஷ்டிரர் அமைக்க வேண்டும் எனவும் அந்த ஆலயத்தை அமைத்து அங்கு விஷ்ணுவை  வழிபடுமாறு கூறி விட்டு மறைந்தது. அதற்கான இடத்தை தேடி அலைந்தபடி  செங்கன்னூர் அருகில் இருந்த ஒரு  இடத்தைக் அடைய மீண்டும் ஆசிரி  அவர்களுக்கு எந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பதைக் கூறியது.  ஆகவே  செங்கன்னூரின் அருகில் விஷ்ணுவிற்கு ஒரு ஆலயத்தை அமைத்தார்கள். அந்த ஆலயத்தை யுதிஷ்த்ரரின் பெயரான தர்மபுத்ரா ஆலயம் என்றும் கூறுகிறார்கள் .

பீமன் அமைத்த ஆலயம்  

திருச்செங்கண்ணூர்  ஆலயத்தில் இருந்து சில மைல்கள் தள்ளி  பீமனினால்  ஒரு ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது.  திருபுலியூரில் உள்ள அந்த ஆலயத்தில் உள்ளவர்  மாயப்பிரான் எனும் பெயரில் விஷ்ணு பகவான். பீமன் இந்த ஆலயத்தைக் கட்டி விஷ்ணுவை வணங்கித்  துதித்து விட்டுச் சென்றப் பின்  இந்த ஆலயத்தில்  விஷ்ணுவை சப்தரிஷிகள் வணங்கித் துதித்ததாக கதை உண்டு.  சிபிச் சக்ரவர்த்தியின் மகன் ஆண்டு வந்த காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட அதை நீக்குவதற்காக சப்தரிஷிகளுக்கும்  தானங்கள் செய்ய வேண்டும் எனவும் அதனால் பஞ்சம் விலகும் எனவும் நம்பி அந்த மன்னன் பல வழிகளை கடைபிடித்தான். ஆனால் அந்த ரிஷிகள் அவன் கொடுத்த தானங்களை வாங்க மறுத்து விட்டார்கள். ஆகவே கோபமுற்று அவர்களை கொல்ல நினைத்த மன்னன் அவர்கள் மீது  யாகம் செய்து வரவழைத்த ஒரு பிசாசை ஏவினான். ஆனால் அந்த பிசாசை மாயப்பிரான் இந்திரனை அனுப்பிக் கொன்று விட ரிஷிகள் உயிர் தப்பினார்கள். அவர்கள் அங்கேயே விஷ்ணுவை வணங்கி முக்தி அடைந்தார்களாம். பீமன் அந்த ஆலயத்தை அமைத்தப் பின்னரே அந்த பூமியில்  பஞ்சம் வந்ததினாலும், சப்தரிஷிகளுக்கும் தொல்லை எற்பட்டதினாலும் சுமார் 200 ஆண்டுகள் அந்த ஆலயத்திற்கு எவரும் செல்லாமல் பாழடைந்து கிடந்தது. ஆனால் அதை பின்னர் மீண்டும் புனர்நிர்மாணித்தார்கள். இன்று இந்த ஆலயம் வைணவர்களின் திவ்ய தேசங்களில் புகழ் மிக்க ஒரு ஆலயமாக உள்ளது.

அர்ஜுனன்  அமைத்த அரண்முலா ஆலயம்

பீமன் மற்றும் யுதிஷ்டிரர் கட்டிய ஆலயங்கள் உள்ள அதே பகுதியில் அர்ஜுனன் கட்டிய அரண்முலா ஆலயமும் உள்ளது. தனக்கு கீதோபதேசம் செய்து மகாபாரத யுத்தத்தில் வழி காட்டிய விஷ்ணுவின் அவதாரமான அதே கண்ணனுக்கு – தேரோட்டிய பார்த்தசாரதிக்கு – அர்ஜுனனும் ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டு தனது சந்ததியினரைக் கொன்ற பாவத்தை களைந்து கொண்டாராம். இங்குள்ள ஆலயத்தில் காட்சி தரும் கண்ணனின் கையில் ஒரு சக்கரம் உள்ளது. அது குறித்து ஒரு சுவையான கதை உள்ளது. மகாபாரத யுத்தத்தின்போது பீஷ்மரைக் கொல்ல அர்ஜுனன் தயங்கி நின்றபோது கிருஷ்ணர் தனது கையில் இருந்த சக்ராயுதத்தை எடுக்க பீஷ்மரும் சரண் அடைந்தாராம். சரண் அடைந்தவரைக் கொல்வது பாவம் என்பதினால் கிருஷ்ணரை அர்ஜுனன் தடுத்து நிறுத்திய போது கிருஷ்ணர் தன்னுடைய கையில் சக்ராயுதத்தோடு நின்ற கோலத்தை மனதிலே கொண்டு அந்த சிலையை அப்படி வடிவமைத்தாராம். இந்த ஆலயத்தில் கிருஷ்ணரின் தலையில் உள்ள கிரீடமும் விசேஷமான உலோகத்தில் ஆனதாம்.
ஒரு புராணக் கதையின்படி அந்த கிரீடத்தை தயார் செய்து கொண்டு இருந்தபோது ஒரு குறிப்பிட்ட உலோகம் தனித் தன்மையுடன் முகம் பார்க்கும் கண்ணாடிப் போல பளபளத்ததாம். அந்த உலோகத்தின் தன்மை என்ன என்பதை யாராலும் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. அது போல அங்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லையாம். ஆனால் ஒரு மூதாட்டியின் கனவில் அந்த உலோகத்தின் தன்மையை தெய்வமே வந்து கூறியதாகவும் அது ஒரு குறிப்பிட்ட வம்சத்தினரிடம் பரம ரகசியமாக இன்றுவரை வைக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த ஒரு குடும்பத்தினர் மட்டுமே அந்த உலோகத்தில் கண்ணாடியை செய்து வருவதாகவும் அரண்முலா கண்ணாடி என்ற அது புகழ் பெற்றது என்றும் கூறுகிறார்கள். (அது குறித்து மேலும் தகவல் பெறவும், கண்ணாடியை வாங்கவும் http ://www .aranmulametalmirror.com என்ற தளத்துக்கு செல்லவும் ) . இந்த ஆலயத்துக்கு பக்கத்தில் உள்ள நதியில் நடைபெறும் படகுப் போட்டி பிரசித்தமானது.

 நகுலன் அமைத்த திருவாமுன்தூர் ஆலயம்

திருவாமுன்தூர் ஆலயம்  கோட்டயத்தின் அருகில் உள்ள செங்கநூறில்  பாண்டவ சகோதர்களில்  ஒருவரான நகுலன் அமைத்த ஆலயம் உள்ளது.  இங்குள்ள ஆலய மூர்த்தியை பாம்பனையப்பன் என்று கூறுகிறார்கள்.  அதற்குக் காரணம் இந்த ஆலயத்தை சுற்றி பாம்பன் நதி ஓடுவதினால் பம்பா நதியில் குடிகொண்டு உள்ளவர் என்ற அர்த்தத்தில் அப்படியாகக் கூறுகிறார்கள். இங்குள்ள மூலவர் விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான கமலநாதன் என்று அழைக்கப்படுகின்றார். அவர் நின்ற நிலையில் காட்சி தருகின்றார்.  இந்த ஆலயம் திருவாங்கூர் மகரஜாக்களின் காலத்தில் மீண்டும் புனரமைகப்பட்டுள்ளது.  ஒரு கதையின்படி ஏதோ ஒரு காரணத்தினால் நாரத முனிவர் சாபத்துக்கு உள்ளாகி, அந்த பாவத்தை தொலைத்து சாப விமோசனம் பெறுவதற்காக இங்கு வந்து கமலனாதரான ஸ்ரீமான் நாராயணனை வழிபட்டார். அப்போது நாரத முனிவருக்கு ஞானோபதேசம் செய்த ஸ்ரீமான் நாராயணன், சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டி தன்னை வணங்குபவர்கள் என்ன விதி முறையைக் கையாள வேண்டும் என்ற  விளக்கத்தையும் தந்தாராம். 

சகாதேவன்  அமைத்த திருக்கோட்டித்தானம் ஆலயம் 

கோட்டயம் மற்றும் சென்கனூருக்கு இடையில் உள்ளது சகாதேவன் அமைத்த திருக்கோட்டித்தானம் ஆலயம். இந்த ஆலயம் மகவிஷ்ணுவிற்காக அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தைப் பற்றி கூறப்படும் ஒரு கதை என்ன என்றால், கோட்டை மதிலைப் போல இந்த ஆலயத்தை சுற்றிக் கட்டப்பட்டு உள்ள சுவர்களை பூதங்கள் ஒரே நாளில் சகாதேவனுக்காக கட்டிக் கொடுத்தன. என்பதே. மேலும் சன்னதிக்கு உள்ளே உள்ள சுவர்களில் சிவ தாண்டவ சித்திரங்கள்  காணப்படுகின்றன.  இந்த ஆலயம் பற்றி மேலும் ஒரு விசேஷம் என்ன என்றால் ஆலயம் அமைக்கப்பட்டவுடன் சிவபெருமான்  அந்த ஆலயத்தின் வடகிழக்கில்  ஜோதி  சொரூபமாய் வந்து நின்றார். அப்போது அவரை சுற்றி இருந்த  ஒளி வெள்ளத்தினால் அங்கிருந்த ஆலயத்து வளாகத்தை   கண்களால் பார்க்கவே முடியாமல் போக தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று அது குறித்துக் கூற விஷ்ணுவும், பிரும்மாவும் சிவபெருமானிடம் சென்று அவரிடம் ஒளி வெள்ளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ள தன்னை சுற்றி இருந்த  ஜோதியை  சிவன் குறைத்துக் கொண்டாராம். அதனால்தான் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் தீப விழாவில் சிவனைப் போற்றி விளக்குகள் ஏற்றப்படுகின்றதாம். இந்த ஆலயம் பற்றிய முழுக் கட்டுரை ** தனியாக வெளிவர உள்ளது.