கிருஷ்ணகிரி ஸ்ரீ காட்டு வீர 
ஆஞ்சனேயர் ஆலயம்
சாந்திப்பிரியா
தமிழ்நாட்டில் உள்ள கிஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடம். இங்கு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் நிறைய உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தருமபுரியுடன் இணைந்து இருந்தபோது அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் இருந்தது. கிருஷ்ண தேவராயர் ஆட்சியில்தான் ஹனுமான் பக்தி இயக்கம் பெரிய அளவில் இருந்தது. அவருடைய ஆட்சியில் தான் மலைகள் மீது இருந்த பாறைகளிலும், வேறு பெரிய பாறைகளிலும் கடவுளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டனவாம். முக்கியமாக ஹனுமாரின் சிற்பங்கள் பெரிய அளவில் செதுக்கப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட நேரத்தில் உருவானதே தேவ சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ காட்டு வீர ஆஞ்சநேயர் ஆலயம்.
இந்த ஆலயம் சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையிலான சாலையில் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ளது. முன்னர் தேவசமுத்திரத்தில் அந்த ஆலயம் இல்லை. அந்த இடத்தில்  பெரிய விளை நிலமே இருந்தது. அருகில் சிறிய மலை. அந்த விளை நிலங்கள் திரு வெங்கட்ராம செட்டியார் என்பவருக்கு சொந்தமானது. அந்த நிலத்தில் இருந்த ஒரு பாறை மீது ஹனுமாரின் சிற்பம் செதுக்கப்பட்டு இருந்தது. அந்த வழியே சென்று கொண்டு இருந்தவர்கள் அங்கு நின்றுவிட்டு அந்த சிலையை வணங்கிச் சென்றார்கள். அதன் எதிர்புறத்தில் இருந்த சிறிய மலைக் குன்றின் மீது வளர்ந்து கொண்டே இருந்த நந்தியின் சிலையும், நாகங்களின் சிலைகளும் செதுக்கப்பட்ட பாறைகளும் இருந்தன.

ஆலயம் எழுந்த வரலாறு

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நெல் விளைந்த விளை நிலத்தில் இருந்த ஹனுமாரை மக்கள் வணங்கிச் செல்வதைப் பார்த்தார் செட்டியார். அவர்கள் அந்த ஆஞ்சேநேயர் சக்தி வாய்ந்தவர் என்று நம்புவதையும் பார்த்தார். ஆகவே அவர்கள் அந்த ஆஞ்சனேயரை முறைப்படி வணங்கிச் செல்ல ஒரு ஆலயம் தேவை என்பதை உணர்ந்தார். அந்த ஆஞ்சனேயரை ஒரு ஆலயத்தில் வைத்து பூஜிக்க தமது விளை நிலத்தில் இருந்து எத்தனை அளவு நிலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு ஆலயம் அமைக்குமாறு உள்ளூர் மக்களிடம் கூறினார். அந்த ஆலயத்தை அமைக்க ஒரு குழு நியமிக்கப்பட்டு அவர்கள் மக்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று ஆலயத்தை அமைத்தார்கள். நிலமோ இனாமாக கிடைத்து விட்டது. பிறகு என்ன ?. ஆலயம் விரைவாக எழுந்தது. மூலவருக்கு சன்னதி அமைக்கப்பட்டது. ஆலயத்தை சுற்றி சுவரும் எழுப்பப்பட்டது. ஆஞ்சனேயர் சன்னதிக்கு அடுத்து மகாலஷ்மி தாயாருக்கும் சன்னதி அமைந்தது. அவை இரண்டுமே ஆலயத்தில் கட்டப்பட்ட பெரிய மண்டபத்தில்தான் அமைக்கப்பட்டது.
ஆஞ்சனேயர் பெரிய பாறையில் ஒரு மரத்தின் கீழ் வலது பக்கம்  திரும்பி நின்றபடி மேல் நோக்கிப்  பார்த்தபடி அற்புதமான காட்சியில் தரிசனம் தருகிறார். அதைக் காணவே கண்கள் கோடி வேண்டும். அவர் மேற்புறம் பார்த்தபடி நின்றுள்ள பகுதியில்  பொன்மலை எனப்படும் சிறிய மலைக் குன்றின் மீது பெருமாள் கோவிலும் உள்ளது. ஆகவே ஹனுமான் அந்த பெருமாளை துதித்தபடி நின்று கொண்டு உள்ளதாக நம்புகிறார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள ஆஞ்சனேயர் சிற்பத்தை வடிவமைத்தது யார் என்பது தெரியவில்லை என்றாலும் அது குறித்து ஒரு நம்பிக்கைக் கதை உள்ளது. கிருஷ்ண தேவராயர் காலத்தில் மாத்வ  பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் பல இடங்களுக்கும் சென்று எங்கெல்லாம் பாறைகள் இருந்ததோ அங்கெல்லாம் தம்மால் முடிந்த அளவு ஆஞ்சனேயர் சிலைகளை வடிவமைக்க வைத்து வந்தாராம். அப்போது வைஷ்ணவர்கள் வைஷ்ணவ இயக்கத்தை பரப்ப இந்த முறையைக் கையாண்டு வந்தார்கள். அப்படி அவர் செய்து வந்த தொண்டில் உருவானதுதான் இந்த ஆஞ்சனேயர் சிலையும் என்றே நம்புகிறார்கள். அதற்குக் காரணம் அவர்உருவாக்கிய ஹனுமார் சிலைகள் அனைத்திலும் ஹனுமாரின் வலது பக்கம் திரும்பி நின்றபடியும்  முகம் மேல் நோக்கி பார்த்தபடியும்  இருக்கும். அவருடைய வால் மேலே தூக்கி நின்றபடி இருக்க வாலில் ஒரு சிறிய மணியும் கட்டப்பட்டு இருக்கும். அதுவே அவர் வடிவமைத்த ஆஞ்சநேயர் சிலைகளின் தனிச் சிறப்பு. அநேகமாக பெங்களூரில் உள்ள பல ஆலயங்களிலும், முக்கியமாக தூண்களில் காணப்படும் ஆஞ்சநேயர் சிலைகளில் அந்தக் காட்சியைக் காணலாம். அவரை கல் ஆஞ்சநேயர் என்று அழைத்து சில ஆலயங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மலை மீது காணப்படும் நாகங்களின் சிலைகள்
மற்றும் பெருமாள் குடில்
மூலவர் உள்ள பெரிய மண்டபத்தின் வெளியில் ஒரு மாடத்தில் யோகா நரசிம்மர் சன்னதி உள்ளது. ஆலயத்தின் மேற்கு வட பகுதியில் வெங்கட்ரமண ஸ்வாமிகளின் சன்னதியும், அதற்கு எதிர் சன்னதியில் கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. அதைத் தவிர ராமர் பாதங்கள் உள்ள ஒரு சன்னதியும் அவற்றின் எதிரில் உள்ளன. ஹனுமார் எப்போதுமே வனப் பகுதிகளை அதிகம் விரும்புபவர். அன்று இருந்த இயற்கையான வனப் பகுதியில் அவர் குடி கொண்டு இருந்ததில் என்ன வியப்பு? ஆலயம் மிகப் பெரிய அளவில் வளாகத்தைக் கொண்டு உள்ளது. பக்தர்கள் ஆயாசமாக வந்து தங்கவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் கூட அங்கு நல்ல முறையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஆலயத்துக்கு வருபவர்கள் அப்படி இயற்கை உபாதைகளினால் அவதிப்பட்டு எந்த பிரச்சனைகளுமே இல்லாமல் மன நிம்மதியுடம் திரும்பிச் செல்லவே அந்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளார்கள்.

ஆலயத்தின் மகிமை

இந்த ஆலயம் அமைக்கப்பட்டவுடன் சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் இருந்த எலுமிச்சம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் தினமும் நடந்தே இந்த ஆலயத்துக்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கிச் செல்வாராம்.  அத்தனை சக்தி வாய்ந்தவராம் இங்குள்ள ஹனுமான்.  1996 ஆம் ஆண்டு இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்த ஒரு சித்தர் இந்த ஆலய மகிமை பற்றி இப்படியாகக் கூறினாராம். ” இந்த ஆலயம் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் தலம். அதற்குக் காரணம் சிவனின் பிரதிநிதியாக உருண்டைப் பாறை மீது ஆலயத்தை நோக்கியபடி நந்தி இருக்க , விஷ்ணுவின் பிரதிநிதியாக ஹனுமார் உள்ளார். அந்த நந்தியும் வளர்ந்து கொண்டே வருகின்றது. ஆகவே இங்கு வந்து எவர் ஒருவர் முழு தேங்காயை காணிக்கையாகக் கொடுத்து வேண்டுதல் செய்கிறார்களோ அவர்களுடைய கோரிக்கைகள் 3 நாட்கள், அல்லது 3 வாரங்கள் அல்லது நிச்சயமாக 3 மாதங்களில் நிறைவேறும்”.
அதற்கேற்ப அந்த ஆலயத்தில் மண்டபத்தில் தேங்காய் காணிக்கை செலுத்தும் வசதி வைக்கப்பட்டு உள்ளது. தத்தம் வேண்டுகோளுடன் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் ஒரு முழு தேங்காயை ஒரு சிவப்பு நிற துணியில் முடித்து வைத்து அதை ஒரு பையில் வைத்து அங்கு குறிப்பிட்டுள்ள இடத்தில் கட்டிவிட்டுச் செல்கிறார்கள். எனக்கு இன்ன காரியம் நடைபெற வேண்டும் என வேண்டிக் கொண்டு அதற்கேற்ப அவர்களுடைய பிராத்தனை நிறைவேறியதும் அங்கு வந்து அந்த தேங்காயை எடுத்து அர்ச்சனை செய்துவிட்டு அந்த தேங்காயை பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு செல்கிறார்கள். அங்கு உள்ள கவுண்டரில் அனைத்து சாமான்களும் கிடைக்கின்றன. அந்த தேங்காய் பை மீது வேண்டுதலை செய்ய வந்துள்ள பக்தருக்கு தரப்படும் எண்ணை குறிப்பிட்டு வைப்பார்கள். ஆகவே வேண்டுகோள் நிறைவேறியதும் அங்கு வந்து தாம் கட்டி வைத்துள்ள பையை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும். ஆகவே அங்கு உள்ள மண்டபத்தில் சிவப்புத் துணியில் கட்டப்பட்டு உள்ள நூற்றுக் கணக்கான தேங்கைகளைக் காணலாம். அதைப் பார்க்கவே ஆச்சர்யமாக உள்ளது.
இந்த ஆலயத்தில் பவுர்ணமி மற்றும் அம்மாவாசை தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவதினால் அந்த நாட்களில் அங்கு கட்டுக் கடங்காத கூட்டம் உள்ளது. அதற்க்கு இன்னொரு காரணம் அந்த தினங்களில் அங்கு வந்து வேண்டிக் கொண்டு தேங்காயைக் கட்டுவதினால் வேண்டிய காரியம் நிச்சயமாக நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையே.

இந்த ஆலயத்துக்கு செல்லும் வழி

நீங்கள் தேசிய நெடும்சாலை என்ன NH 7 ழில் பெங்களூரில் இருந்து சென்னை சென்றால் கிருஷ்ணகிரிக்கு அருகில் ஒரு மேம்பாலம் வரும். அதன் கீழ் வழியே சென்று இடதுபுறம் திரும்பினால் சென்னை செல்லும் பாதை உள்ளது.  அதில் திரும்பாமல் மேம்பாலத்தில் U வளைவு எடுத்து மீண்டும் பெங்களுர் செல்லும் பாதையில் செல்லவும்.   U வளைவு எடுக்க வேண்டியதின்  காரணம் பெங்களூரில் இருந்து வரும்போது ஆலயம் உள்ள பகுதி வலது பக்கத்தில் வரும். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றால்  அதே சாலையில் தேவ சமுத்திரம் என்ற ஊர் வரும். அங்கு இடது புறம் திரும்பி அரை கிலோமீட்டர் சென்றால் அந்த ஆலயத்தைக் காணலாம்.
நீங்கள் சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்தால் அதே கிருஷ்ண கிரிமேம்பாலம் வழியாகவே வருவீர்கள். அதாவது சென்னையில் இருந்து வந்து அந்த மேம்பாலம் கீழ வழியே வலது புறம் திரும்புவீர்கள். அப்படி திரும்பியதும் அதே சாலையில் தொடர்ந்து சென்றால்  தேவ சமுத்திரம் என்ற ஊர் வரும்.  அங்கு இடது புறம் திரும்பி அரை கிலோமீட்டர் சென்றால் அந்த ஆலயத்தைக் காணலாம். உங்களுக்கு சிறிது குழப்பமாக இருந்தால் அந்த கிருஷ்ணகிரி மேம்பாலத்திக் கடந்தப் பின் யாரையாவது தேவ சமுத்திரம் அல்லது ஆஞ்சனேயர் ஆலயம் பற்றி விசாரித்தால் அவர்கள் வழி காட்டுவார்கள்.

ஆலயம் உள்ள இடத்தைப்  (தரைப்படம் ) பார்க்க
கீழுள்ள  லிங்க்  என்பதின் மீது  கிளிக் செய்யவும் 
 
LINK