தெரிந்த ஆலயம்….அறிந்திடாத ஆலய செய்திகள்  
மயிலை ஆதிகேசவப் 
பெருமாள் ஆலயம்
சாந்திப்பிரியா 
சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்ற மயிலையில் பல புராதான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கபாலீஸ்வரர் ஆலயமும் ஆதிகேசவர் ஆலயமும் ஆகும்.  அந்த ஆலய தெப்பக் குளங்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஒரு காலத்தில் அந்த இரண்டு குளங்களிலும் நீர் நிரம்பி வழிந்தது. மக்கள் நீராடுவார்கள். ஆலய விழாக் காலங்களில் அங்கு நடக்கும் தெப்ப உற்சவங்கள் சிறப்பாக இருக்கும்.
தற்போது மயிலாப்பூர்  என்று அழைக்கப்படும்   பகுதியின் அந்த காலப் பெயர் மயூரபுரி  என்று இருந்தது. காரணம் இங்கு மயில்கள் நிறைய இருந்தன. அது மயூரங்கள் (மயில்கள்) நிறைந்து இருந்தப் பகுதி என்பதினால்  மயூரபுரி என்ற  பெயர் பெற்று இருந்தது. இங்கு சிவன், பார்வதி, லஷ்மி மற்றும் விஷ்ணு என்ற நான்கு பேரும் பல்வேறு காரணங்களினால் சபா விமோசனம் அடைந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மணந்து கொண்டு அங்கு ஆலயங்களில் குடி அமர்ந்தார்கள், பிருகு முனிவர், பேயாழ்வார் போன்றவர்கள் அனுக்கிரகம் பெற்ற இடம் போன்ற பல காரணங்களினால்  என்பதினால் இந்த மயிலை பகுதி விசேஷமானது.

அதில்  ஒரு ஆலயமே ஆதிகேசவப் பெருமாள். ஆதிகேசவர் ஆலயம் 500 முதல் 1000 வருடப் பழமையானது என்கிறார்கள். அங்கு ஆலய மூலவர்களுடன் வணங்கப்படும் ஒரு ஆழ்வாரின்  பெயர் பெரியாழ்வார் என்பது.  அவரும் மயிலையில்தான் பிறந்தவர் என்பதினால் இந்த ஆலயத்தின் சிறப்புக் கூடுகின்றது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் சித்ரை புஷ்கரணி என்ற நீர் நிலை இருந்தது.  அதுவே காலப் போக்கில் பெயர் மாறி சித்திரக் குளம் என ஆயிற்று.

 படம் நன்றி : www.divyadesam .com
இந்த ஆலயத்து புராணக் கதைகள்  சில உண்டு. ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்த இடத்தில் பிருகு முனிவர் தேவர்களையும் ரிஷி முனிவர்களையும்  துன்புறுத்தி வந்த அசுரர்களின் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு யாகம் ஒன்றை செய்து வந்தார். அவருடன்  வேறு பல முனிவர்களும் யாகத்தில் கலந்து கொண்டார்கள். யாகம் நடந்து முடிந்தால்தான்  பிருகு முனிவரை  ஒன்றும் செய்ய முடியாது என்பதினால்  அந்த யாகம் நடந்து கொண்டு இருந்தபோது சில அசுரர்கள் அங்கு வந்து யாகத்தை நடக்க விடாமல் தடுத்து அங்கு கூடி இருந்த முனிவர்களை விரட்டி அடித்தார்கள். பிருகு முனிவரும் தப்பி ஓட வேண்டி இருந்தது.

அங்கிருந்து தப்பி ஓடிய ரிஷி முனிவர்கள் பிருகு முனிவர் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி நடந்தவற்றை அவரிடம் எடுத்து உரைத்தார்கள். விஷ்ணுவும் அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு, அங்கு மீண்டும் சென்று யாகம் செய்யுமாறும் தானே அங்கு வந்து அவர்களைக் பாதுகாத்து அசுரர்களை அழிப்பதாக உறுதிக் கூற மீண்டும் பிருகு முனிவரும் மற்றவர்களும் இன்று சித்திரக் குளம் உள்ள அதே பகுதியில் வந்து யாகத்தை மீண்டும் துவக்கினார்கள் . மீண்டும் யாகம் துவக்கப்பட்டதை அறிந்த அசுரர்கள் கேசி என்ற அசுரனின் தலைமையில் அங்கு வந்து யாகத்தை தடுக்க முயல, யாக குண்டத்தில் இருந்து தனது மனைவியுடன் வெளிவந்த ஆதியும் அந்தமுமாக இருந்த விஷ்ணுவானவர் அந்த அசுரர்களை வதம் செய்தார்.   அந்த அசுரர்களின் தலைவனான கேசி எனும் அசுரனை கொன்று சவமாக்கியதால் (சவமாக்கியதால்) கேசி+சவம் என்ற பெயருடன் அவர் ஆதி கேசவப் பெருமாளாக அங்கேயே குடி அமர வேண்டும் என  பிருகு  முனிவர் விஷ்ணுவிடம்  வேண்டிக் கொள்ள  இன்னும் சில காலத்தில் ஒரு சாப விமோசனம் பெறுவதற்காக லக்ஷ்மி  பிருகு முனிவரின் மகளாகப் அங்கு வந்துப் பிறந்து  இருக்கும்போது  தானும் அங்கு வந்து அவளை மீண்டும் மணந்து  கொண்டு  அங்கேயே அந்த  முனிவரின் விருப்பத்தின்படி கோவில் கொள்வதாக வாக்கு தந்தார்.

 

இப்படி இருக்கையில் ஒரு முறை ஒரு சாபத்தினால் விஷ்ணு லஷ்மியை பிரிந்து வாழ வேண்டி இருந்தது. லஷ்மி பிருகு முனிவருக்கு மகளாகப் பிறந்து அவளை மணக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.  அப்போது பிருகு முனிவர் மயூரபுரி என்ற இடத்தில் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவத்தில் இருந்தார்.  பிருகு முனிவர் குடிலுக்கு அருகில் இருந்த குளத்தில் ஒரு மலர் மீது சிறு குழந்தை வடிவில் லக்ஷ்மி வந்து மிதந்தாள். அங்கு வந்த பிருகு முனிவர் அந்த சிறு குழந்தையை எடுத்து வந்து அதற்கு பார்கவி என்றப்  பெயரை சூட்டி வளர்த்தார். அதே நேரத்தில்  ஒரு முறை  பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள சிவபெருமான் பல இடங்களில் சுற்றி அலைந்து பிச்சை பெற்றுக் கொண்டு அலைந்து  வந்தார். அப்போது இந்த மயிலை பகுதிக்கு  வந்த சிவபெருமானைக்  கண்டதும் பிருகு முனிவராக இருந்த லஷ்மி தேவி அவருக்கு பிச்சை போட சிவபெருமானின் தோஷமும் அங்கேயே விலகியது. லஷ்மியும் தனது சுய உருவத்தை பெற்றாள். அதே நேரத்தில் விஷ்ணுவும் லஷ்மியை தேடி அலைந்தவாறு அங்கு வந்தார். லஷ்மியைக் கண்டார். அனைவரையும் ஒரு சேரக் கண்ட பிருகு முனிவர் அங்கேயே தனது மகளாக வளர்ந்த லஷ்மியை ஒரு தந்தையாக இருந்து விஷ்ணுவிற்கு மணம்  செய்துத் தர விஷ்ணுவும், லஷ்மியும் அங்கு கேசவப் பெருமாள் மற்றும் பார்கவி தேவியாக குடி கொண்டார்கள்.  சிவபெருமானும் அங்கிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு இடத்தில் ஒரு கற்பக மரத்தடியில் தன்னுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன்  மயில் உருவில் தவம் இருந்துகொண்டு இருந்த பார்வதியை மணந்து கொண்டு கபாலீஸ்வரர் ஆலயத்தில் குடி கொண்டது  தனிக் கதை.

லஷ்மி தேவியானவள் பார்கவி, மற்றும் மயூரவல்லி தாயார் போன்ற பெயரையும் கொண்டு ஆதிகேசவர் ஆலயத்தில்  வலப்புறத்தில் தனிச் சன்னதியில் அமர்ந்து இருக்கிறாள். வெள்ளிக்கிழமை தோறும் காலையில்  ஸ்ரீ சூக்த வேத மந்திரத்துடன் வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆகவே அந்த நேரத்தில் தாயாரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும்.  லஷ்மி தேவியே மீண்டும் விஷ்ணுவை இங்கு மணந்து கொண்டதினால் திருமண தோஷம் நீங்க இங்கு வேண்டுதல் செய்வது நிச்சயப் பலனைத் தருமாம். மேலும் விஷ்ணுவின் ஆயுதமான ஒரு வாள் இங்குள்ள தீர்த்தத்தில் பேயாழ்வாராகப் பிறந்தார்.   அப்படியாக அங்கு பிறந்தவரான பேயாழ்வாருக்கு இந்த ஆலயத்தில் லஷ்மி தேவி  ஒரு குருவாக இருந்து  உபதேசம் செய்வதினால் இந்த ஆலயத்திற்கு  வந்து கல்வியில்  சிறந்து விளங்க வேண்டும் என பிராதிப்பதும் நடைமுறைப் பழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்காக இங்கு வரும்  பக்தர்கள், மயூரவல்லி தாயாருக்கு வில்வ அர்ச்சனை செய்து, 2 சிறிய மணிகளை அவளது பாதத்தில் வைத்து பூஜித்து பின்பு, சன்னதி கதவில் கட்டி வழிபடுகின்றனர். இந்த மணிகள் தம்மை அங்கு வந்து வைத்துள்ள பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை அவர்களின் குரலாக ஒலித்தவண்ணமே  இருந்து கொண்டு  தாயாரிடம் பிரார்த்தனை செய்வதாக ஐதீகம் உள்ளது. அவரவர் கோரிக்கைகள் நிறைவேறியப் பின்னர் பக்தர்கள் அங்கு வந்து  மீண்டும் இரண்டு மணிகளைக் கட்டி நேர்த்திக் கடன்களை  நிறைவேற்றுகின்றனர்.

 இந்த ஆலயம் பற்றிய மேலும் சில சிறப்புச் செய்திகள்  இவை:

(1) சந்திர பாகவான்  இங்கு வந்து இங்குள்ள புனிதக் குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றாராம்.
(2) அப்போது இந்த குளத்தில் அனைத்து இடங்களிலும் இருந்த புனித நதிகளின் நீரும் வந்து சங்கமிக்க விஷ்ணு பகவான் ஏற்பாடு செய்தாராம். ஆகவே இங்குள்ள தீர்த்தக் குளமும் மிகப் புனிதமானது.
(3) ராவணனை வதம் செய்து சீதையை மீட்டுக் கொண்டு அயோத்திப் பட்டினத்திற்கு திரும்பிச் சென்ற ராமபிரான் இங்கு வந்து ஆதிகேசவப் பெருமாளை வணங்கிச் சென்றாராம்.

ஆலய விலாசம்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
கேசவ பெருமாள் சன்னதித் தெரு
மயிலாப்பூர்
சென்னை-600 004 
+91-44-24643873