சிவபெருமான் பார்வதிக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் காலம் கனிந்து வந்தபோதுதான் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமானின் தரிசனத்திற்காக  கேதார்னாத்துக்கு வந்தார்கள். அங்கு வந்து சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வழிபட்டபடி அவரைத்  தேடிக் கொண்டு இருந்தார்கள். பாண்டவர்கள் சிவபெருமானைத் தேடிக் கொண்டு அங்கு வந்தபோது அவர்களால் கண்டு பிடிக்க முடிகிறதா என்று அவர்களை சோதனை செய்து பார்க்க  விரும்பிய சிவபெருமான் ஒரு மாடாக உருமாறி திரிந்து வந்தார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் சிவபெருமான் அங்கு வந்து தங்கி இருப்பது உண்டு என்றும் உண்மையான பக்தி கொண்டு அவரைத் தேடி அலைந்தால் அவரைக் கண்டு பிடிக்க முடியும் பிடிக்கலாம் என்பதையும்  கிருஷ்ணர் மூலம் ஏற்கனவே அறிந்து இருந்தார்கள் என்பதினால் உண்மையான பக்தி கொண்டு சிவபெருமானை வழிபாட்டு வந்த பாண்டவ சகோதரர்களினால் சிவபெருமானே அந்த மாட்டின் உருவில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. ஆகவே அவர்கள் அந்த மாட்டை வணங்கியபடி அதன் அருகில் சென்றார்கள்.

மாட்டு உருவத்தில் இருந்த சிவபெருமான் அவர்கள் தாம் அருகில் வருவதைக் கண்டவுடன் வேண்டும் என்றே அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணியதைப் போல ஓடத் துவங்கினார். ஆனால் பாண்டவ சகோதரர்கள் அந்த மாடே சிவபெருமான் என்பதை புரிந்து கொண்டு அதைப் பிடிக்க ஓடினார்கள்.  அதன் பின்னால் ஓடிச் சென்ற பீமனோ கஷ்டப்பட்டு அந்த மாட்டை பிடித்துக் கொள்ள முயல, அந்த மாடும் பீமனிடம் இருந்து விடுபட்டு  திமிறிக் கொண்டு ஓடத் துவங்கியது. பீமன் மாட்டுடன் போராடி அதன் உருவில் இருந்த சிவபெருமானை அங்கேயே தடுத்து நிறுத்த முயன்றான்.

பீமன் பரம பராக்கிரமசாலி என்பதினால் அந்தப் போராட்டத்தில் மாட்டின் உடல் கிழிந்தது.  பீமன் இழுத்த இழுப்பில் அதன் உடல் பிய்ந்து விழுந்தது. இப்படியாக அந்த மாட்டின் உடல்   கேதார்னாத் அருகில் இருந்த ஐந்து இடங்களில் சென்று  விழுந்தன. அவை விழுந்த இடங்கள் பார்வதி சிவபெருமானை லிங்க உருவில் கட்டிப் பிடித்தவை ஆகும். மாட்டின் உடல் பகுதிகள் அதே சிவலிங்கங்கள் மீது அவை விழ பார்வதி முன்னர் வேண்டிக் கொண்டபடி அங்கிருந்த சிவலிங்கங்களில் சிவபெருமான் குடி கொண்டார்.  இப்படியாக அந்த ஐந்து இடங்களில் இருந்த சிவலிங்கங்களே கேதார் பஞ்சலிங்க ஆலயங்களாகின. பார்வதி சிவபெருமானைக் கட்டித் தழுவியவை  அந்த ஆலயங்களில் உள்ள சிவலிங்கங்கள்  என்று நம்பிக்கைக் கதை உள்ளது.

மாட்டின் கழுத்துப் பகுதி விழுந்த இடமே கேதார்னாத்  ஆலயம் என்பதினால் இங்குள்ள சிவபெருமானின் உடல் கழுத்துவரை மட்டுமே காணப்படுகிறது.
மாட்டின் வயிற்றுப் பகுதி விழுந்த இடமே மத்திய மகேஸ்வரர் என்பது. குப்தகாசி   எனப்படும் அதுவும் ஐந்து ஆலயங்களில் ஒன்றாயிற்று.

மாட்டின் புஜங்கள் விழுந்த இடமான துங்கனாத்தில் இன்னொரு ஆலயம் அமைந்தது.   இங்கு காணப்படும்  சிவபெருமான் புஜங்களோடு அற்புத தரிசனம் தருகிறார். மேலும் இது இராமாயண காலத்துக்கு முன்னர் இருந்துள்ள ஆலயம் என்பது ஒரு கதை மூலம் தெரிகிறது. இலங்கையின் அதிபராக இருந்த ராவணன் பெரும் சிவபக்தன்.  அவன் இங்கு வந்து சிவபெருமானைத் துதித்து தவம் இருந்துள்ளதான  கதையும் உள்ளது.

நந்தியின் உருவில் இருந்த சிவபெருமானின் ஜடை விழுந்த இடம் யுர்கம் எனும் பள்ளத்தாக்கில் உள்ள கர்பேஸ்வரர் ஆலயமாயிற்று. அங்குள்ள சிவபெருமான் ஜடாதாரியாகக் காட்சி தருகிறார்

கடைசியாக மாட்டின்  முகம்  விழுந்த இடமான ருத்ரநாத் ஆலயத்தில் அழகிய முகத்தோடு சிவபெருமான் காட்சி தருகிறார். இப்படியாக பார்வதி விரும்பிய ஐந்து இடத்திலும் சிவபெருமானின் ஆலயம் அமைய கேதார்னாத்துக்கு  செல்பவர்கள் பஞ்ச கேதார் ஆலய தரிசனம் என்ற பெயரில் அந்த ஐந்து ஆலயங்களுக்கும் செல்வார்கள்.  அப்போதுதான்  அவர்கள் சிவபெருமானின் முழு உருவத்தையும் கண்டு வழிபட்டப் பலன் கிடைக்கும்.

பாண்டவர்களின் பக்தியைக் கண்டு மெச்சிய சிவபெருமானும் கேதார்னாத்தில் அவர்களுக்குக் காட்சி தந்து அருள் புரிந்தார். சிவபெருமானின் தரிசனத்தையும் அருளாசியையும் பெற்றுக் கொண்டு தமது அனைத்து தோஷங்களையும் அவர் அருளினால் விலக்கிக்  கொண்ட பாண்டவர்கள் திரௌபதியுடன் சேர்ந்து ஆலயத்தின் பின் வழியே இருந்தப் பாதை மூலம் சொர்க்கம் சென்றதாக கதை உள்ளது.  தமது கடமையை முடித்துக் கொண்ட ஸ்ரீ ஆதி சங்கரரும் இந்த  வழியேதான் மலை மீது சென்று அப்படியே அங்கிருந்து  மறைந்து போனார்.

கேதார்னாத்திற்கு விஜயம் செய்பவர்கள் அங்கிருந்து நேபாளத்தில் உள்ள பசுபதினாத் ஆலயத்துக்குச் சென்று அங்கும் சிவ தரிசனம் செய்வது பெரிய விஷேசம் என்பார்கள். காரணம் பசுபதினாத்தில் பரமசிவனின் தலைப் பகுதி உள்ளது என்றும். கேதார்னாத்தில் உள்ளது பரமசிவனின் பாதப் பகுதி என்ற நம்பிக்கையும் உள்ளது.

கேதார்னாத் ஆலயத்தின் அருகில் உள்ள நதிகளில் இறந்து போன முன்னோர்களுக்கு திதியும் கொடுப்பார்கள். இங்கு தரப்படும்  திதியை பெற்றுக் கொண்டு பூலோகத்திலிருந்து தேவலோகத்திற்கு செல்லும் இறந்து போனவர்களுடைய ஆத்மாக்கள்  இந்த ஆலயத்தின் அருகில் ஓடும் வைதாரிணி என்ற நதியில் குளித்து விட்டு கேதார்னாதரை வணங்கி விட்டு பூரண மன அமைதியுடன் மேலுலகம் செல்கின்றன என்பதினால் அவர்களுடைய சந்ததியினருக்கும்  குடும்பத்தினருக்கும் மன நிறைவான வாழ்க்கை அமைகின்றன  என்ற நம்பிக்கையிலான ஐதீகமும் உள்ளது.

கேதார்னாத்  ஆலயம் முதல் முதலாக பாண்டவர்களால் கட்டப்பட்டது என்றும், அதன் பின்னர் ஆதிசங்கரரால் புனரமைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இன்று சிதைந்த நிலையில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்னாத்  ஆலயங்கள் மீண்டும் புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு திறந்து விடப்படும். இரண்டு ஆலயங்களின் இந்த தற்காலிக  அழிவும்  எதோ ஒரு  காரணத்திற்கானது  என்றே நினைக்க வேண்டி உள்ளது.

முற்றும்