ஆகவே பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள ராமபிரான் பல ஆலயங்களுக்கும் சென்று சிவபெருமானை துதித்து தனது தோஷத்தைக் களைந்து கொள்ள வேண்டி இருந்தது. மேலும் யுத்தத்திற்கு செல்லும் முன்னால் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்பிய ராமபிரான் சிவபெருமானை வணங்கித் துதித்து அவரது அருளையும் ஆசியையும் வேண்டினார். அவர் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவருக்கு யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு பல வகைகளிலும் சக்தி கொடுத்து அருள் புரிந்தார்.
ஆகவே தனக்கு அருள் புரிந்து யுத்தத்தில் வெற்றி பெற சக்தி கொடுத்த சிவபெருமானுக்கு நன்றி கூறுவதற்காக ராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் இருந்த பூமிக்கு வந்த உடனேயே அவருக்கு இருந்த பிரும்மஹத்தி தோஷம் மறைந்து விட்டதை உணர்ந்து அதிசயித்தார். என்னே சிவபெருமானின் மகிமை என வியந்தார். ஆகவே அங்கேயே ஒரு மண்ணினால் ஆன ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து சிவபெருமானை பூஜித்து வணங்கினார். அவர் முன்னாள் தோன்றிய சிவபெருமானும் ராமபிரானை மீண்டும் ஆசிர்வதித்து மறைந்தார். அதற்குக் காரணம் அந்த இடத்தில் முன்னதாகவே சிவபெருமான் ஒரு சிவலிங்க உருவில் அங்கு எழுந்தருளி இருந்தார். அது ராமர் பூஜை செய்த இடத்தின் அடியில் புதைந்து கிடந்தது. ஆக ராமர் பூஜை செய்த இடத்தின் கீழ் பூமியில் புதைந்து இருந்த ஸ்வயம்பு சிவலிங்கத்திற்கு தன்னையே அறியாமல் ராமபிரான் பூஜை செய்ததினால் சிவபெருமான் அந்த சிவலிங்கத்தில் இருந்து வெளிவந்து ராமருக்கு காட்சி கொடுத்ததினால் அந்த சிவலிங்கம் ஜீவன் பெற்ற லிங்கமாயிற்று.
இந்த ஆலயத்தில் வடிவாம்பிகை சமேதராக முன்னேஸ்வர ஈசன் எழுந்தருளி உள்ளார். இங்குள்ள வடிவாம்பிகை அற்புதமானவள். அழகானவள். அதனால்தான் அவளை வடிவிற்கே அழகானவள் என்பதைக் கூறும் விதத்தில் வடிவு + அம்பிகை என வடிவாம்பிகை ஆனாள். ”.
ரிஷி முனிவர்கள் ஆர்வத்துடன் சூதக முனிவர் கூறிய கதையை கேட்டவாறு அமர்ந்து இருந்தார்கள். சூதகர் தொடர்ந்து கூறும் முன் ஆர்வத்தினால் சில முனிவர்கள் அவரிடம் கேட்டார்கள். ” ஸ்வாமி அவள் எப்படி இங்கு எழுந்தருளினார் என்ற கதையையும் எமக்கு விளக்கிக் கூற வேண்டும் ”
சூதகர் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக சிரித்துக் கொண்டே கதையைத் தொடரத் துவங்கினார்.