”கல்பக்காலத்தில் இந்த ஆலயம் உள்ள தலத்தில் செம்படவன் ஒருவன் வாழ்ந்திருந்தான்.  அவன் தினமும் ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பெரிய ஆற்றில்  மீன் பிடித்துக் கொண்டு வந்து அதை விற்று ஜீவனம் செய்து  வந்தான். இப்படியாக வாழ்வை ஓட்டிக் கொண்டு இருந்த செம்படவன் ஒருநாள் மீன் பிடிக்கச் சென்றபோது  சற்று தொலைவில்  ஆற்றின் கரையில் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டு இருந்ததைக் கண்டான். அவர்கள் உடலே பளபளத்தது.  அந்த இரண்டு சிறுவர்களுமே அழகாக  இருந்தார்கள். இத்தனை ஏழ்மை நிலையில் உள்ள இந்த ஊர் மக்கள் மத்தியில் இப்படி அழகான சிறுவர்களா? நமக்குத் தெரிந்த வகையில் அப்படி எந்த சிறுவர்களும் இந்த ஊரில் உள்ளதாகத் தெரியவில்லையே, அவர்கள் யாராக இருக்கும் என எண்ணியவாறு அவர்கள் யார் என்பதைக் கேட்ட அவர்கள் விளையாடிக் கொண்டு இருந்த  இடத்தை நோக்கி நடந்தான். அவன் அவர்கள் அருகில் வருவதைக் கண்ட சிறுவர்களோ அவன் எதிரிலேயே மாயமாக மறைந்து விட்டார்கள். செம்படவன் குழம்பினான். தான் கண்டது கனவா, கானல் நீரைப் போன்றதா? இல்லை உண்மையா?? உண்மை என்றால் அவர்கள் எப்படி மறைந்து விட்டார்கள்?! ஒரு வேலை பேய், பிசாசு ஏதாவது இருக்குமோ?!! அவனுக்கு விடைக் கிடைக்கவில்லை. குழப்பத்துடன்  வீட்டிற்குச் சென்றவன் தன் மனைவியிடமும் நடந்தவற்றைக்  கூறினான்.

 

மறுநாள் நடந்த சம்பவத்தை மறந்துவிட்டு மீண்டும் அவன் மீன் பிடிக்கச் சென்ற போது முதல் தினம் நடந்த  அதே   நிகழ்ச்சி தொடர்ந்தது.  அவர்களின் அருகில் அவன் சென்றால் அவர்கள் மறைந்து விடுவார்கள். இப்படியாக இரண்டு மூன்று நாட்கள் அதே விளையாட்டு  தொடர்ந்ததினால் இனி அவர்கள் யார் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என ஆவலுற்றான். அவர்கள் ஏன் தன்னைக் கண்டு ஓடி ஒளிய  வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களை ஏதாவது உபாயம் செய்தே பிடிக்க வேண்டும் என எண்ணியவன்  ஒரு நாள் அவர்களைப் பிடித்தே தீர்வது என்ற முடிவுடன் ஒரு மரத்துக்குப் பின்னால் ஒளிந்து  கொண்டு இருந்தான்.

இரவு நேரம் நெருங்கியது.  வெகு நேரம் பொறுத்து  அந்த சிறுவர்களும் அங்கு விளையாட வந்தார்கள்  மரத்தின் மறைவில் பதுங்கி இருந்த செம்படவன் ஓடிப்  போய் அவர்களைப் பிடித்து விட்டான்.  அந்த சிறுவனோ அவனைத் தள்ளி விட்டு தப்பி ஓடி ஆற்று நீரில் குதித்துவிட்டு மறைந்தும் போய் விட்டான். ஆனால்  அதிசயமாக செம்படவன் கையில் சிக்கிக் கொண்ட சிறுமியோ அடுத்த நிமிடமே ஒரு  சிலையாகி விட்டாள்.

அந்த சிலையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். மறுநாள் அது குறித்து யாரையாவது கேட்கலாம் என எண்ணி இருந்தான். அன்று இரவில் தூங்கிக் கொண்டு இருந்தவன்  கனவில் தோன்றிய  பார்வதி தேவி தானே அந்தப் பெண் சிலை  என்றும்  தன்னை வணங்கி வழிபட்டால் நாட்டில் நிலவி வரும் குழப்பங்கள் தீரும் என்றும் கூறினாள் .

அதைக் கண்டு அதிர்ந்து போன செம்படவனும் காலையில் எழுந்ததும் ஊருக்குள் சென்று அந்த நிகழ்ச்சியை அனைவரிடமும் கூறினான். அந்த சிலையை எங்கு வைப்பது எனக் குழம்பினான். கட்டுத் தீயைப் போலப் பரவிய அந்த  செய்தி மன்னனின் காதிலும் சென்று விழுந்தது.  ஏற்க்கனவே பல பிரச்சனைகள் இருந்த குழப்பமான நிலையில் இது என்ன புதிய குழப்பம் என எண்ணிய மன்னன் செம்படவனை அந்த சிலையை எடுத்துக் கொண்டு தனது அரண்மனைக்கு வருமாறு ஆணையிட்டான்.

 ……..தொடரும்