சிக்கல் சிங்காரவேலர் 
ஆலயம் – II   

 சாந்திப்பிரியா 

இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப் பெருமாள் வரலாற்றுக் கதையில் காணப்படுகிறது.

ஸ்ரீ வாமனப் பெருமாள் கதையின்படி தேவர்களை துன்புறுத்தி வந்த மகாபலி சக்கரவர்த்தி என்பவற்றின் கொடுமைகளை தேவர்கள் திருமாலிடம் சென்று கூறினார்கள் . ஆகவே திருமாலும் வாமனாக அவதாரம் எடுத்துக் கொண்டு சிக்கலை அடைந்து அங்கு கயா தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உருவாக்கினார் . அதன் பின் அதில் ஸ்நானம் செய்துவிட்டு நவநீதேஸ்வரரை வணங்கித் துதித்து மகாபலி சக்கரவர்த்தியை அழிக்க தமக்கு சக்தியைத் தருமாறு வேண்டினார். நவநீதேஸ்வரரும் அவர் மூன் தோன்றி அவர் கேட்ட வரத்தை அருள அந்த பலத்தைக் கொண்டு விஷ்ணு யுத்தம் செய்து மகாபலி சக்கரவர்த்தியைக் கொன்று தேவர்களைக் காத்தார். இப்படியாகவே சிக்கல் ஆலயத்தின் உள்ளேயே சிவபெருமானுடன் சேர்ந்து விஷ்ணுவிற்கும் ஒரு ஆலயம் அமைந்தது. இப்படியாக அங்கு அமர்ந்த விஷ்ணுவே கோலவாமனப் பெருமான் என அழைக்கப்படலானார்.

அது போலவே சிக்கலின் அருகில் உள்ள திருகண்ணக்குடி என்ற கிருஷ்ணர் ஆலய வரலாற்றுக் கதையின்படி வசிஷ்டர் பாற்கடலில் இருந்து எடுத்த வெண்ணையை கொண்டு சிவன் உருவைப் படைத்து அதை பூஜிக்க அந்த வெண்ணையை உண்பதற்காக கிருஷ்ணர் கொண்டு போக முயன்றபோது அந்த வெண்ணை அவர் விரலில் ஒட்டிக் கொண்டு வெளிவர மறுக்க அவருக்கும் சிக்கல் ஏற்பட்டதினால் சிக்கல் எனும் பெயர் இந்த இடத்துக்கு ஏற்பட்டது என்றும் கதை உள்ளது.

இப்படியான கதைகளைக் கொண்டு அமைந்த அந்த சிவன் ஆலயம் எப்படி முருகனுக்கு பெருமை சேர்க்கும் ஆலயமாக கருதப்படுகிறது ? அதன் கதை இது. உலகை ஆட்டிப் படைத்து கொடுமைப்படுத்தி வந்த சூரபத்மனை எவராலுமே அழிக்க முடியாமல் தேவர்கள் தவித்தபோது, முருகனுக்கு அந்த சூரனை அழிக்கும் கடமையை சிவபெருமான் கொடுத்தார். சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான் செல்லக் கிளம்பியபோது அந்த யுத்தத்தில் சூரபத்மனை அழிக்க வேண்டும் என்பதற்காக விஷேசமான ஒரு ஆயுதத்தைப் படைத்த பார்வதி அதை முருகனுக்கு இந்த தலம் உள்ள இடத்தில்தான் அளித்தார். அதுவே முருகன் சூரனை அழித்த வேல் ஆகும்.

சூரனை அழித்தப் பின் முருகன் இந்த தலத்தில் வந்து தனது பெற்றோர்களை வணங்க, அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இனி தான் உள்ள இந்த தலமான சிக்கல், யாராலும் அழிக்க முடியாமல் இருந்த சூரனை அழித்த முருகனுக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமையட்டும் என சிவபெருமான் ஆசி கூற அது முதல் சிக்கல் சிவபெருமான் ஆலயம் சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் என ஆயிற்று என்பது தல வரலாற்றுக் கதை.  சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் சிவபெருமான், விஷ்ணு, முருகன் என அனைவரும் குடி கொண்டு இருந்தாலும் முருகனே மூலவராக வழிபடப்படுகிறார்.

ஆலயத்தில் வருடாந்திர விஷேஷம் என்ன என்றால் சூரசம்ஹார விழா. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சூரபத்ம சம்ஹார விழாவில்  சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேலை வாங்கிக் கொண்டு முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் உடலெங்கும் வியர்க்குமாம். அங்குள்ள பண்டிதர்கள் பட்டுத்துணியால் அந்த தண்ணீர் திவலைகளை  துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதத்தைக் காணக் கண் கோடி வேண்டும் என்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் அந்த சன்னதியின் சுவர் முழுவதும் வியர்வை சிந்தியது போல தண்ணீரால் காணப்படுமாம். இந்த மாயத்தைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள் என்று ஆலயத்தில் கூறுகிறார்கள்.

இங்குள்ள ஆலயத்தின் இன்னொரு சிறப்பான அம்சம் என்ன என்றால் ஒரு சன்னதியில் தனியாக ஹனுமாரும் ஆராதிக்கப்படுவதே. வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது. முருகன் ஆலயங்களில் ஹனுமான் இருப்பது அறியதே. அப்படி முருகனும் ஹனுமானும் சேர்ந்தே உள்ளதாக கூறப்படும் ஆலய விவரம் இங்குள்ள ஆலய சுவற்றில் எழுதப்பட்டு உள்ளது. அதைக் கீழே காணலாம்.

பிரகார சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். அது போலவே சிவனும் விஷ்ணுவும் சேர்ந்துள்ள ஆலயங்கள் 28 எனத் தெரிகின்றது. அவை இந்த ஆலயத்தின் சுவற்றின் பலகையில் காணப்படுகிறது. அதையும் கீழே காணலாம்.

கோவிலின்  பிற சிறப்பு அம்சங்கள் இவை: 
  1. திலோத்தமையுடன் கூடாத நட்பைக் கொண்டதினால் தன் தவ வலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் தாம் இழந்த தவவலிமையை திரும்பப் பெற இங்கு வந்து தவம் இருந்தாராம். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு  தவ வலிமையை மீண்டும் கொடுத்தாராம் .
  2. இந்த ஆலயத்தைக் கட்டியதாக கூறப்படும் முசுகுந்தச் சக்கரவர்த்தி ஒரு அந்தணனைக் கொன்ற ஏற்பட்ட பாவத்தினால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்ப்பட அவர் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற்றாராம்.
  3. இந்த தலத்தில்  எப்போதுமே காமதேனுப் பசு வசிப்பதாக ஐதீகம் உள்ளது.

 

ஆலய விலாசம்
அருள்மிகு நவனிதேஸ்வரர் திருக்கோயில்
சிக்கல்
சிக்கல் அஞ்சல்
வழி நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN – 611108