ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்– 14
ஸ்ரீ ராமபிரான் ஸ்தாபித்த
நவபாஷண ஆலயம்
சாந்திப்பிரியா
ராமேஸ்வரத்தில் இருந்து 77 கிலோ தொலைவிலும் ராமநாதபுரத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவிலும் உள்ளதே தேவி பட்டினம் என்ற ஊர் . ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவி பட்டினத்துக்கு மதுரை வழியிலும் போகலாம்.
அந்த ஊரில்தான் இராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு போருக்குச் செல்லும் முன்னர் வேத விதிகளில் கூறப்பட்டு உள்ளபடி முதலில் விநாயகரை பூஜித்து அதன்பின் ஒன்பது கிரகங்களையும் பூஜித்து தனக்கு யுத்தத்தில் வெற்றியைத் பெற வேண்டிக்கொண்டாராம். அப்போதுதான் கொந்தளித்துக் கொண்டு இருந்த கடலை அடக்க விஷ்ணுவை வேண்டிக் கொண்டு தனது கைகளைத் தூக்கி கடலை நோக்கிக் காட்டி அதன் சீற்றத்தை சாந்தப்படுத்தி ஒன்பது நவபாஷாண பாறைக் கற்களை தமது கையினாலேயே நவகிரகங்களாக அதே கடலில் ஸ்தாபித்து அங்கேயே சிவன் பார்வதியை வணங்கி துதித்தாராம். அதை ஸ்தாபித்தப் பின்னர்தான் ராமருக்கு சனி தோஷமும் அகன்றதாம். ராமபிரான் அந்த கடலுக்கு அருகில் ஸ்தாபித்த அந்த ஒன்பது நவகிரகங்களுக்கான கற்கள் நவபாஷண ஆலயம் என ஆயிற்று. கடலுக்கு நடுவில் உள்ள அந்த நவபாஷாண நவக்கிரஹ ஆலயம் போல உலகில் வேறு எங்குமே நவக்கிரஹ ஆலயம் கிடையாது.
கடலில் ஸ்தாபிக்கப்பட்டு உள்ள ஒன்பது நவக்கிரஹங்கள்
மற்றும் திலகேஸ்வரர் ஆலயம்
அந்த நவபாஷாண நவகிரகங்கள் உள்ள இடத்தின் அருகிலேயே திலகேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும், மற்றும் சௌந்தர்யநாயகி என்ற பெயரில் பார்வதியும் ஒரு ஆலயத்தில் உள்ளனர். அந்த ஆலயத்துக்குச் சென்று தமது பூர்வ ஜென்மப் பாபங்கள் விலக வேண்டும் எனப் பிராத்தனை செய்து கொண்டு , தம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்களும் சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும் ஸ்ரார்தம் செய்கின்றனர். அந்த ஆலயத்தில் எட்டு கைகளைக் கொண்ட துர்காதேவி பார்வதியின் அவதாரமாக உள்ளாள். அவள் சன்னதியில் எள்ளைக் கொண்டே பூஜிக்கின்றனர். அது மட்டும் அல்ல ஆலயத்தில் ஒன்பது விதமான தானியங்களைக் கொண்டும் நவக்கிரஹா சாந்தி செய்கின்றனர். அதுவே அந்த ஆலயத்தின் விசேஷம். அதன் பின் குளிர்ச்சியாக கடலில் அமர்ந்து கொண்டு உள்ள சாந்தமான நவக்கிரகங்களையும் தமக்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் விலக பிரார்த்தித்துக் கொண்டு பக்தர்கள் திரும்புகின்றனர்.
பக்தர்கள் நீருக்குள் சென்று அந்த ஒன்பது
நவக்கிரஹ கற்களையும் சுற்றும் காட்சி
அந்த நவபாஷன ஆலயத்தின் அதிசயம் என்ன எனில் அந்த ஒன்பது நவக்கிரகங்களையும் பார்க்க வேண்டும் எனில் காலை பதினோரு மணிக்கு மேல்தான் கடல் மட்டம் குறைந்ததும் செல்ல வேண்டும் . மற்ற நேரங்களில் அதன் வடிவம் வெளியில் தெரியாது. கடலுக்குள் அவையுள்ள இடத்தில் சென்றுக் கைகளால் மட்டுமே தொட்டுப் பார்க்க முடியும்.