தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈச்சங்கரணை எனும் சிறிய கிராமத்தில் திருவடிசூலம் எனும் மலையின் அடிவாரத்தில், சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்த பகுதியில், அமைதியான சூழ்நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது அதிசயமான ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயம். சுற்றிலும் காணப்படுவது மலை முகட்டும், மரங்களுமே. ஈச்சங்கரணை கிராமம் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பைரவருக்கு எனத் தனி ஆலயத்தைக் காண்பது அரிதானது. எனக்குத் தெரிந்தவரை காசியில் உள்ள கால பைரவர் ஆலயத்தை தவிர மாயவரத்தின் அருகில் ஷேத்ரபாலா எனும் இடத்தில் மட்டுமே கால பைரவருக்கு எனத் தனியான ஆலயம் உள்ளது. அதற்கு அடுத்து ஈச்சங்கரணையில்தான் பைரவருக்கு என்றே தனியான அமைக்கப்பட்டு உள்ள ஆலயத்தைக் காண நேரிட்டது. பல ஆலயங்களிலும் பைரவர் சன்னதி இருக்கும். ஆனால் பைரவருக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அவரையே பிரதான தெய்வமாக வைத்து பூஜிக்கப்படும் ஆலயம் இவை இரண்டு மட்டுமே என்றே நினைக்கிறேன்.
பைரவர் யார்? அவர் சிவபெருமானால் தன்னுள் இருந்து, தனது அவதாரமாகவே படைக்கப்பட்டவர். ஆகவேதான் அவரை சிவபெருமானின் அம்சம் என்பார்கள். எந்த சிவன் ஆலயத்திலும் சிவபெருமான் சன்னதியின் வடகிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதை பார்க்கலாம். சிவாலயம் சென்று விட்டு பைரவரை வணங்காமல் திரும்பி வந்தால் அந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்காது என்பது ஐதீகம் ஆகும். இவரையே தன்னுடைய மனைவியான பார்வதியின் ஆலயங்களிலும், பார்வதியின் அவதார ரூப ஆலயங்களிலும் தேவிக்கு காவல் தெய்வமாக இருக்குமாறு அமைத்தார் என்பார்கள்.
ஈச்சங்கரணை கால பைரவருடைய ஆலயத்தின் முக்கியமான மகத்துவம் மற்றும் விசேஷம் என்னவென்றால் இங்கு மட்டுமே இறந்தவர்களுக்கு போடப்படும் ‘வாய்க்கரிசிக்கு’ முக்கியத்துவம் தரப்பட்டு வாய்க்கரிசி எனும் பெயரில் அரிசி தானம் பெறுவதுதான். எந்த ஒருவருக்கும் தான் எப்போது மரணம் அடைவோம் என்பது தெரியாது. அந்த நேரத்தில் பூர்வ ஜென்ம ஊழ்வினைகளினால் அவதிப்பட்டு பலர் எண்ணற்ற மனத் துயரை அடைவார்கள். மாறி வரும் கால சூழ்நிலையில் தனக்கு யார் வாய்க்கரிசி போட உள்ளார்கள் என்பதுகூட அவர்களுக்கு தெரியாது. ஆகவே தனக்குத் தானே இந்த ஆலயத்தில் வாய்க்கரிசி போட்டுக் கொண்டால் அவர்களது பூர்வஜென்ம ஊழ்வினைகளை பைரவர் களைந்து விடுகிறார். ஏன் எனில் வாய்க்கரிசி போடப்படுவது பைரவர் ஆலயத்தில்.
வாய்க்கரிசி போடுதல் என்பது தனது வாயில் தானே அரிசியை போட்டுக் கொள்வது அல்ல. அப்படி என்றால் அதை எங்கு, எப்படி போடுவது என்பதை கடைசியில் விளக்கி உள்ளேன். வாய்க்கரிசிக்கு போடப்படும் அரிசியை நம் வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல வேண்டும். கடையில் இருந்து வாங்கிக் கொண்டு செல்லக் கூடாது.
இப்படியாக போடப்படும் வாய்க்கரிசியில் உள்ள தீமைகளும் இந்த பைரவர் சன்னிதானத்தில் களையப்பட்டு விடுவதினால் அந்த அரிசியைக் கொண்டு சமைத்த உணவு அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலம் அந்த உணவை உண்டு பசி தீர்த்துக்கொள்ளும் மக்களது ஆசிர்வாதமும் வாய்க்கரிசி போட்டவர்களுக்குக் கிடைக்குமாம்.
ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயத்தின் இரண்டாவது பிரதான சிறப்பு என்னவென்றால், இந்த ஆலயத்தின் பைரவரை இன்னென்ன கிழமைகளில்தான் வணங்கித் துதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவரை இன்ன மாதிரியான பூஜாவிதிப்படித்தான் வணங்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டுப்பாடோ, வரைமுறையோ கிடையாது.
மூன்றாவதாக இந்த ஆலயம் எந்தவிதமான கட்டிடக் கலை நிபுணர்களின் வரைப்படத்தைக் கொண்டும் கட்டப்படவில்லை. நடுத் தூணே இல்லாமல் அவ்வப்போது நேரடியாக பைரவரிடம் இருந்து பைரவ ஸ்வாமிக்கு ( இவர் யார் என்ற கேள்விகளுக்கு பதிலாக இவரைக் குறித்த செய்தி கீழே வருகிறது) பைரவர் மூலம் கிடைத்த நிர்மாணத் தோற்றத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது.
நான்காவது அற்புதம் கூம்பு வடிவ கருவறை மேலே எழுப்பப்பட்டு உள்ள ஆடும் கும்ப கலசம் ஆகும். இது போன்ற ஆடும் கலசம் வேறு எந்த ஆலயத்திலும் காணப்பட முடியாதது. ஆடும் கலசம் என்பது எதற்காக அமைக்கப்பட்டது? இந்த பிரபஞ்சத்தில் தோன்றும் பல்வேறு இயற்கை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த ஆடும் கலசம் நம் கண்களுக்குப் புலப்படாத வகையில் சுயன்று அந்த மாற்றங்கள் இந்த ஆலயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்குமாம்.