ஸ்ரீ மௌன

நிர்வாண ஸ்வாமிகள்

சாந்திப்பிரியா

திண்டுக்கல்  பழனி நெடும் சாலையில்  உள்ளதே கசவனம்பட்டி  என்ற கிராமம்.  திண்டுக்கல்லில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள கசவனம்பட்டி  அமைதியானது.  ஆன்மீகத்தில் விருப்பமுள்ளவர்களைத் தவிர  அதிக மக்கள் அறிந்திராதது அந்த ஊர். அங்குதான் மாபெரும் சித்தரான ஸ்ரீ மௌன ஜோதி நிர்வாண ஸ்வாமிகளின்  சமாதி ஆலயம் உள்ளது.

அவர் எங்கிருந்து வந்தார் என்பதோ, அவருடைய பெற்றோர்கள் யார் என்பதோ எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் செய்துள்ள மகிமைகள் ஏராளமாம்.  அவர் ஊருக்கு வந்தபோது பாலகனாக இருந்தார், நிர்வாணமாகவே வந்தார் என்றும்  எந்த உடையுமே அணியாமல் பிறந்த  மேனியாகவே திரிந்தார் என்பதாகவும் அவரைக் குறித்துக் கூறுகின்றார்கள். ஆகவே அவரை தத்தாத்திரேயரைப்  போல பரப்பிரும்மனின்  அவதாரம் என்றே நம்புகிறார்கள். அவர் மீது எவராவது துணியைப் போர்த்தினால் அதை களைந்து எறிவாராம். பார்த்தால் ஊர் சுற்றித் தெரியும் பைத்தியக்காரனைப் போல காட்சி அளிப்பார்.  பாம்புகளுடன் விளையாடுவாராம்.  திடீரென தன்னைத் தானே அடித்துக் கொள்வாராம்.  அவர் அப்படி செய்தால்  எவரோ ஒருவர் அந்த கிராமத்தில் மரணம் அடையப் போகிறார்கள் என்பது அர்த்தமாம். அதற்கு ஏற்றாற்போல அந்த கிராமத்தில் அதே நேரத்தில் யாராவது மரணம் அடைவார்களாம். 

அவர் எவருடனும் பேசியது இல்லையாம்.  ஆகவே அவரை மௌன ஸ்வாமிகள் என அழைத்தனர். சுமார் அறுபது வயதுவரை வாழ்ந்து இருந்தவரை பற்றி நன்கு தெரிந்திருந்த மக்கள் அவரிடம் சென்று ஆசி பெற்று  வணங்கினார்கள்.  பல ஞானிகள் மற்றும் மகான்கள்  கூட தம்மை வந்து பார்த்தவர்களை அவரைச் சென்று பார்க்குமாறு கூறுவார்களாம். அவரை தெருப் பொறுக்கிகள் சீண்டுவது உண்டு. ஆனால் அவர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாகவே இருப்பாராம். புன்முறுவல் மட்டுமே அவர்களுக்கு அவர் தந்த பதிலாம். ஆனால் நாளடைவில் அவர் மெளனமாக செய்து வந்த மகிமைகளை கேட்டும் பார்த்தும்  வந்த  ஊர் பெரியவர்கள் அவர் பைத்தியம் அல்ல, மாபெரும் மகானே என்பதை உணர்ந்து கொண்டனர்.  ஆகவே அவர்  எந்த இடத்திலாவது தங்க வேண்டும் என்பதை உணர்ந்து கேசவனம்பட்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.

ஊரில் அவர் எந்த வீட்டிலாவது திடீர் என நுழைவாராம்  . சமையல் அறைவரை சென்றுவிட்டுத் திரும்பி வருவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை. காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் நல்லது நடக்குமாம்.

அவருக்கு எதிலும் பற்று இருந்தது இல்லை . மிகக் குறைந்த அளவிலேயே சாப்பிடுவார். எப்போதாவது எவராவது வந்து சிகரட்டைத் தந்தால்  புகை பிடிப்பார். அதற்குக் காரணம்  ஒரு சிகரட்டை புகைக்கும்போதே  அந்த சிகரெட்டை கொண்டு தந்தவர்களது  துயரங்கள் அவரிடம் சென்று விடுமாம்.

அவர் மொழி மௌனம்.  அவர் செயல்கள் மௌனத்தில், அவர் மற்றவர்களுடன் பேசியது மௌன மொழியிலேயே. அவரிடம் சென்றவர்களுக்கு அவர் மருந்து தந்தது இல்லை, பிரசாதம் தந்தது இல்லை, மந்திரம் செய்தது இல்லை, போதனைகளையும் செய்தது இல்லை. ஆனால் அவர் முன் சென்று தம் துயரைக் கூறி நின்றால், அவர் அவர்களை ஒரு முறை பார்ப்பார்.  அவ்வளவுதான். அல்லது திடீரென வந்தவர்களை எட்டி உதைப்பார், கையில் உள்ளதைக் கொண்டு அடிப்பார் அல்லது ஒரு அறை விடுவார்.  அடுத்தகணம் அவர்களின்  வியாதியின் தன்மை குறைந்துள்ளது போல உணருவார்கள். வந்தவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். சில நாட்களிலேயே  அவர்கள் துயரமும் அதன் காரணமும் விலகுவதை உணர்ந்தனர். 

பல சித்தர்களும் செய்ததை போலவே இவரும் யாருடைய வீட்டிலாவது    திடீர் என நுழைவாராம்.  சமையல் அறைவரை சென்று விட்டு எதையும் தொடாமல் திரும்பி சென்று விடுவாராம். அதை எவரும் தவறாக எண்ணியது இல்லை. காரணம் அவர் எந்த வீட்டில் நுழைந்து விட்டுத் திரும்பினாரோ அவர் வீட்டில் அது முதல் நல்லவைகள் நடக்கும், வீட்டில் வறுமை விலகி விடுமாம்.

இவருடைய பெருமையை கேள்விப்பட்ட போலி சாமியார் ஒருவன் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் அவரை இழுத்துக் கொண்டு போய்  ஒரு அறையில் சிறை வைத்ததை போல பூட்டி வைத்து விட்டானாம். அடுத்த நாள் அந்த அறையை திறந்து பார்த்தால் ஸ்வாமிகளைக் காணவில்லை.  அவரை தேடியவர்கள் ஊரின் ஒரு கோடியில் அவர் திரிந்து கொண்டு இருந்ததைக் கொண்டார்களாம். அது மட்டும் அல்ல அன்று முதல் அந்த போலி சாமியார் வாழ்க்கை அலங்கோலமாயிற்று. சாப்பிடக் கூட உணவு கிடைக்காமல் திண்டாடி ஊரை விட்டே ஓடி விட்டானாம்.

இன்னொருமுறை ஒரு மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து அனைவரிடமும் ஸ்வாமிகளை  ஞானம் இல்லாதவர் என்று கூறி அவமானப்படுத்தியது அல்லாமல் ஸ்வாமிகள் தங்கி இருந்த ஆலயத்துக்கு சென்று அவரை ஏளனமாகப் பேச, வெளியில் வந்த ஸ்வாமிகள் தன் கையில் இருந்த சிகரெட்டினால் அவன் உடலை தடவிக் கொடுக்க அடுத்தகணமே அவன் கையும் கால்களும் வலி வந்தவனைப் போல இழுக்கத் துவங்க கீழே விழுந்து வலி பொறுக்க முடியாமல் அலறினான். தன்னை நலப்படுத்துமாறு ஸ்வாமிகளிடம் அவன் அனைவர் முன்பாகவும் சப்தமாக மன்னிப்பு கேட்க அவரும் அதே சிகரெட்டின் சாம்பலை அவன் மீது தெளிக்க அவன் நலமடைந்து எழுந்தான்.  நலமடைந்து எழுந்தவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஊரை விட்டே ஓடினான்.

ஒருமுறை தன்னிடம் வந்த அனைத்து பக்தர்களுக்கும் சாக்கடை நீரை பாத்திரத்தில் எடுத்து குடிக்குமாறு கொடுத்தாராம். முகம் கோணாமல் வாங்கி கொண்டு வாயில் வீட்டுக் கொள்ள அது இளநீராக இருந்ததைக் கண்டு வியந்து போனார்களாம்.

இப்படியாக மௌனப் புரட்சியினாலேயே பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் பல  மக்களுக்கு அருளி வந்த கருணைக்கடல்  22.10.1982  அன்று  சமாதி அடைந்தார். ஆலயத்தில் அவர் சிவலிங்கமாக இருந்து கொண்டு அங்கு வரும் பக்தர்களைக் கத்து அருளுகின்றாராம். அவரை அடக்கம் செய்த இடத்தின் மீது மழைக் காலமே அற்ற  அன்று  பெரும் மழை கொட்டியது. வானத்தில் கருடன் ஒன்று அவர் சமாதி மீது மூன்றுமுறை சுற்றிப் பறந்து விட்டுச் சென்றது என்பதே அவருடைய தெய்வீகத்தை பறை சாற்றுவதாக உள்ளது.