மிகப் பழமை வாய்ந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேவியின் ஒரு ஆலயம் சென்னையின் நெரிச்சலான ஒரு சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு குறித்தோ அல்லது மகிமைக் குறித்தோ பலருக்கும் தெரிந்து இருக்கவில்லை. காளிகாம்பாள் ஆலயம் எனப்படும் இந்த ஆலயத்தின் மூல தேவியான பரப்பிரும்ம சொரூபிணி காளிகாம்பாள் சென்னையின் கடற்கரையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்தருளி தற்போது ஆலயம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்துள்ளாள். ஆலயம் 400 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றனர். ஆனால் வேறு சிலர் அது தவறு ஆலயம் 400 ஆண்டுகளுக்கு உள்ளாகவே எழுப்பப்பட்டதாக இருந்தாலும் அந்த ஆலயத்தின் தேவி 2000 வருடங்களுக்கு முற்பட்டவள் எனக் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக நம்பப்படும் ஆதி சங்கரர் அந்த தேவியின் உக்ரஹத்தைப் பார்த்துவிட்டு, பின்னாளில் அந்த தேவியை வணங்கி துதிக்க வர உள்ள பக்தர்களுக்கு அவளது கோபம் எந்த விதத்திலும் துன்பத்தைக் கொடுக்கக் கூடாது என்பதற்காக அந்த தேவியின் உக்ரஹத்தைக் குறைக்க அவள் காலடியில் அர்த்த மேரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்து உள்ளார் என்பதே. 1640 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பனியினர் சென்னைக்கு வந்தப் பின்னர்தான் காளிகாம்பாள் ஆலயம் எழுந்துள்ளது எனும்போது 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதி சங்கரர் எப்படி அவள் கோபத்தைக் குறைக்க யந்திரத்தை பிரதிஷ்டை செய்து இருக்க முடியும்? இவை அனைத்தையும் அறிந்து கொள்ள மேலே படிக்கவும்.
இந்த ஆலயம் எழுந்த வரலாறு குறித்து காலம் காலமாக வாய்மொழி வழியாக கூறப்பட்டு வரும் கதை அற்புதமானது. முதலில் சென்னைக் கடற்கரையின் ஒரு பகுதியில் இந்த ஆலயத்தின் தேவி தானாகவே தோன்றி மணல் பகுதியில் சிலையாக அமர்ந்து கொண்டாள். அவளை அங்கிருந்தவர்கள் கடல் கன்னி அதாவது கடலில் இருந்து தோன்றியவள் என அழைத்து அவளை வணங்கத் துவங்கினார்கள். நாளடைவில் கடல் கன்னி என்ற வார்த்தை உச்சரிப்பினால் உருமாறி கடல் காளி என ஆயிற்று. அவள் எங்கிருந்து வந்தாள் என்பதோ அல்லது யார் அவளை அங்கு கொண்டு வைத்தார்கள் என்ற விவரமோ யாருக்கும் தெரியவில்லை. ஒருநாள் எதேற்சையாக சில மீனவர்கள் தண்ணீராலும், வேறு இயற்கை செயல்களினாலும் எந்த சேதமும் அடையாமல் இருந்த அந்த தெய்வத்தின் சிலையை கடற்கறை மணலில் கண்டு ஆச்சர்யம் அடைந்து அவளை ஒரு பீடத்தின் மீது வைத்து அது முதல் அவளை வழிபட்டப் பின்னே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனராம். அந்த தேவி அங்கு எழுந்தருளியது முதல் அவளை வணங்கிவிட்டு மீன் பிடிக்கச் சென்றவர்களுக்கு பெரும் அளவிலான மீன்கள் கிடைத்து வருமானமும் அதிகரிக்கத் துவங்கியதாம். ஆகவே அங்கிருந்த மீனவர்கள் அந்த தேவியை காவல் தெய்வமாகவே வழிபடத் துவங்கினார்களாம். ஆனால் அவர்கள் எவருக்குமே அவளே பார்வதி தேவி என்பதோ, தன்னுடைய தெய்வீக சக்திகளை உள்ளடக்கிய அந்த உடலை மாங்காடு செல்லும் முன் பார்வதி தேவியே அங்கு விட்டுவிட்டு சென்று உள்ளாள், அவளே காஞ்சியில் காமாட்சி அம்மனாக அவதரிக்க உள்ளாள் என்பதோ தெரியாது. அந்த கதை இந்தக் கட்டுரையின் பின் பகுதியில் கூறப்பட்டு உள்ளது. அவர்களைத் தவிற அங்கு குடியேறி இருந்த விஸ்வகர்மா எனும் சமூகத்தவர் அந்த தேவியை பீடத்தில் இருந்து எடுத்து சின்ன வழிபாட்டுத் தலம் எழுப்பி (மண் குடிசையினால் ஆனதா, இல்லை எந்த மாதிரியான வழிபாட்டுத் தலம் எனத் தெரியவில்லை) அதற்குள் அவளை வைத்து அவளை தமது குல தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். பொதுவாகவே இந்த சமூகத்தினரே ஆலயங்களில் உள்ள சிலைகளை வடிவமைப்பதிலும் ஆலயங்களைக் கட்டும் பணியிலும் சிறந்தவர்கள் என்பதான கருத்து உள்ளது என்பதினால் இவர்களை கடவுள் வழி சிற்ப சமூகத்தினர் என்பார்கள்.
ஒருகாலத்தில் சென்னை கடற்கரைப் பகுதிகளில் இருந்த குடியிருப்புப் பகுதிகளில் மீனவர்கள், வாழ்க்கை வசதி குறைந்த மற்றும் கீழ் நிலையில் இருந்த மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கி இருந்த இடங்களை குப்பம் என அழைத்தார்கள். அந்த காலத்தில் ஜாதி மற்றும் சமுதாய வேற்றுமைகள் நிறையவே இருந்தது. அதனால்தான் இந்த நிலை இருந்தது. இந்தியாவுக்கு வந்த கிழக்கிந்திய கம்பனியார் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள தென் பகுதியில் வந்து முதலில் அங்கு கடற்கரை அருகில் இருந்த குப்பங்களை வாங்கத் துவங்கினார்கள். அதன் காரணம் வரும் காலத்தில் தமக்கு வந்து செல்ல கடல் பயணம் எளிதாக இருக்கும் என எண்ணியதுதான். இந்த நிலையில் அன்றைய மெட்ராஸ்சில் பாரி முனையில் இருந்த ஒரு கடற்கரைப் பகுதியில் இருந்த குப்பத்தை வாங்கி தமது அரண்மனையை அமைத்துக் கொண்டனர். அந்தக் கோட்டைப் பகுதிகள் இராணுவப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததால், பக்தர்களுக்கு அந்த பகுதிக்குள் இருந்த கடல் காளி அம்மனின் வழிபாட்டுத் ததலத்தில் சென்று வழிபடுவதற்கு சிரமமாக இருந்தது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்தக் கோட்டை இருந்தாலும் விஸ்வகர்மா சமூகத்தினர் அங்கு வந்து வழிபடுவது தொடர்ந்தது. அதன் விளைவாக ஆங்கிலேயர்களும் அரண்மனைக்கு பாதுகாப்பு குறைவாயிற்று என்பதை உணர்ந்தார்கள்.
இதனை தடுக்க முடியாமல் இருந்த ஆங்கிலேயர்கள் தாமாகவே முன்வந்து விஸ்வகர்மாக்களிடம் அங்குள்ள கடல் காளியுடன் சேர்த்து அந்த வழிபாட்டுத் தலத்தை அங்கிருந்து அகற்றி விட்டு அதை அவர்கள் வேறு எங்கு வைத்து வழிபட விரும்புகிறீர்களோ அங்கு அமைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குத் தேவையான அனைத்து செலவையும் தாம் ஏற்பதாக வாக்குறுதி தந்தார்கள். அதைக் கேட்ட விஸ்வகர்மா சமூகத்தினரும் அந்த வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு 1640 ஆம் ஆண்டு தேவி காளிகாம்பாள் ஆலயத்தை அங்கிருந்து கொண்டு வந்து ஒரு ஆலயத்தை தம்பு செட்டி தெருவில் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் கட்டினார்களாம். தற்போது ஆலயம் உள்ள இடத்தை எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு முன்னதாகவே தனக்கான ஆலயம் இன்ன இடத்தில் அமைந்து இருக்க வேண்டும் என்பதை பல்வேறு விதங்களில் பக்தர்கள் மூலம் தேவி காளிகாம்பாள் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தாளாம். அதனால்தான் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் காளிகாம்பாள் ஆலயம் எழுந்தது. இப்படியாக 400 ஆண்டுகளுக்கு முன்பாக ஆலயம் அமைந்தாலும், அந்த ஆலயத்தின் தேவி 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் கரையில் வழிபடப்பட்டு வந்து இருந்ததாகவும், அதை பெயர்த்து எடுத்து வந்தே 400 ஆண்டுகளுக்கு உள்ளேயே தம்பு செட்டி தெருவில் புதிய ஆலயக் கட்டிடத்தைக் கட்டி உள்ளார்கள் என்றும் ஆகவே காளிகாம்பாள் ஆலயம் 2000 வருடத்துக்கு முற்பட்டதே என ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். வாய் மொழிக் கதையாக கூறப்பட்டு வரும் ஆன்மீக மகான்களின் கருத்து என்ன என்றால் கற்பகாம்பாள் எனும் பெயரில் கடல் காளி என அழைக்கப்பட்ட பார்வதி தேவியானவள், தனக்கு ஏற்பட்டு இருந்த சாபத்தை விலக்கிக் கொள்ள தற்போது ஆலயம் உள்ள இடத்தில் யாருடைய கண்களுக்கும் புலப்படாத வகையில் தவத்தில் இருந்திருக்க வேண்டும். தினமும் காலை விடிவதற்கு முன்பாகவே கடற்கரைக்கு வந்து குளித்து விட்டு சென்று இருக்க வேண்டும். இப்படியாக அவள் கடற்கரையிலும் தம்பு செட்டி தெருவிலும் இருந்திருக்கின்றாள். அவள் அங்கிருந்துக் கிளம்பி மாங்காட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்த நிலையில் அவளது தெய்வீக சக்தியோடு இருந்திருந்த ஜடமான உடல் கடற்கரையில் பூமியில் புதைந்து சிலையாக மாறி இருக்க வேண்டும். தக்க நேரத்தில் கடல் அரிப்பினால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள நினைத்த சக்தி தேவி அந்த சிலையை வெளியே வரச்செய்ய அந்த சிலையையே மீனவர் மற்றும் விஸ்வகர்மா சமூகத்தினர் வணங்கி இருக்கின்றார்கள் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல தேவியானவள் தற்போது ஆலயம் உள்ள தம்பு செட்டி தெருவில் தவத்தில் இருந்திருந்தபோது அங்கு வந்து அவளது தரிசனத்தைப் பெற்ற ஆதி சங்கரர் அவளுடைய உக்ர நிலையைக் கண்டு அவளது கோபத்தை அவளுடைய யந்திர சக்தியில் அடக்கி வைத்து அவளை சாந்த சொரூபிணியாக மாற்றி இருக்க வேண்டும். இதனால்தான் அவளுடைய ஆலயமும் அவள் தவம் இருந்த இடத்தில் வந்திருக்க வேண்டும் என்பதாக கூறுகிறார்கள். பார்வதி தேவி அந்த இரு இடங்களிலும் குறிப்பிட்ட தோற்றத்தில் இருந்தது மனிதர்களின் கண்களுக்கு புலப்படவில்லை.
பல நூற்றாண்டுகளாக வாய்மொழிக் கதையாக கூறப்பட்டு வரும் கதையின்படி மனிதர்களின் கண்களுக்கு புலப்படாத வகையில் நடைபெற்றுக் கொண்டு இருந்த அந்த நாடகத்தில் கடலில் இருந்த தேவதைகள் கடற்கரையில் கடல் கன்னி தனிமையில் இருப்பதைக் கண்டு அவள் கடலுக்குள் இருந்து வெளிவந்து அங்கு தங்கி உள்ள தெய்வீக கடல் கன்னி என நினைத்து அவளை வணங்கி, துதித்து தம்முடைய பூர்வஜென்ம பாபங்களை விலக்கிக் கொண்டது மட்டும் இல்லாமல் அவளுக்கு பரிவார தேவதைகளாக இருந்து கொண்டு உதவி செய்து வந்தார்கள். இதனால்தான் பிற்காலத்தில் எழுந்த காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னிமார் என ஆயிற்று. கடல் காளி அங்கிருந்த செய்தி கடலுக்குள் இருந்த மற்றவர்களுக்கும் பரவத் துவங்க நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் யார் கண்களிலும் புலப்படாமல் கடலுக்குள் இருந்து வெளிவந்து கடல் காளி என நம்பப்பட்ட அன்னை காளிகாம்பாளை வழிபட்டு தமது பாபங்களை விலக்கிக் கொண்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை பெற்றார்கள் என்ற செய்தி தேவலோகத்துக்கும் பரவியபோது அங்கிருந்தும் தேவ, தேவதைகள் கடற்கரைக்கு வந்து இரண்டு இடங்களிலும் காட்சி தந்த தேவியை ஆராதித்துச் சென்றார்கள். அவர்களைத் தவிர அங்கு வந்து அந்த தேவியை வருணன், குபேரன், இந்திரன் போன்றவர்களும், மகா ரிஷிகளான புலன்தியர், அகஸ்தியர், வியாசர், பராசரர், விஸ்வகர்மா போன்றவர்களும் அவ்வப்போது வந்து வணங்குவார்களாம். குபேரன் அங்கு வந்து அவளை வணங்கத் துவங்கிய பின்னரே அவருக்கு அவருக்கு செல்வமும் அதிகரித்தது என்பதும் கதையில் உள்ளது. ஆனால் இவை அனைத்துமே எவருடைய கண்களுக்கும் புலப்படாத நிலையில்தான் நடைபெற்றுக் கொண்டு இருந்தனவாம். ஆனால் இப்படியாக கூறப்பட்டு வரும் இந்த கதைகள் எதற்கும் ஆதாரம் இல்லை, நம்பிக்கையின் அடிப்படையில் காலம் காலமாக கூறப்படுகிறது. இத்தலத்தின் மேன்மைக் குறித்து மச்சபுராணம், வாமன புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம், பவிஸ்ய புராணங்களில் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது என்பதாக பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
கடல் காளி கடற்கரையில் பார்வதியின் நிழல் அவதாரமாக அவதரித்தபோது அவள் காளியின் உக்ரஹ அம்சத்துடன் இருந்தாள் என்றாலும் அது வெளித் தெரியாமல் அமைதியான உருவிலேயே காணப்பட்டாள். அவளை அங்கிருந்து எடுத்துச் சென்று தம்பு செட்டி தெருவில் இருந்த ஆலயத்தில் அமர்த்தியபோது அவள் காளிகாம்பாள் என அறியப்பட்டாள். கடல் காளி எதனால் காளிகாம்பாள் என அழைக்கப்படலானாள்? காளியின் உக்ரஹ குணத்தோடும், அம்பாளின் அனுக்ரஹ குணத்தோடும் இருந்த கடல்காளியை காளி+அம்பாள் அதாவது காளிகாம்பாள் என அழைக்கலாயினர். அது மட்டும் அல்ல கலியுகத்தில் மக்களின் துயர் துடைக்க வந்த அம்பாள் அதாவது கலியம்பாள் என்ற அர்த்தத்தில் அதை மருவி அவளை காளிகாம்பாள் என அழைத்ததாகவும் கருத்துக்கள் உள்ளன. முதலில் காளி என அழைக்கப்பட்டவள் பின்னர் அவள் காளி அல்ல காளி மற்றும் அம்பாளான காளிகாம்பாள் எனவும் அவளே மும்மூர்த்திகளை படைத்த சக்தி தேவி எனவும், பார்வதியின் அவதாரமே எனவும் அறியப்பட்டாள்.
வாய் வழிக் கதையில் கூறப்படுவது என்ன என்றால் காளிகாம்பாளே தனது ஆலயத்தில் உள்ள சிலைகளை தான் பூமியில் இருந்தபோது இருந்த காட்சியிலேயே வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவலோகத்தில் இருந்து விச்வகர்மாக்களை மனித உருவில் அனுப்பி வைத்தாள் என்பதாகும். தற்போது ஆலயத்தில் உள்ள தேவியின் சிலை கடற்கரையில் இருந்த அதே சிலையா, இல்லை புதியதாக வடிவமைக்கப்பட்டதா என்பது சரிவரத் தெரியவில்லை. புதியது என்றால் கடற்கரையில் காணப்பட்ட சிலை எங்கு உள்ளது என்பது விளங்காத புதிராக உள்ளது. காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக இந்த ஆலயத்தில் பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். இதன் மூலம் காஞ்சி காமாட்சியும் கற்பகாம்பாளும் ஒருவளே என்ற கருத்து வலுப்பெறுகிறது.
காஞ்சீபுரம், திருவானைக்காவல், காளிகாம்பாள் மற்றும் மாங்காட்டு அம்மன் ஆகிய நான்கு தேவிகளும் ஒருவருக்கொருவர் சம்மந்தம் கொண்டவர்கள், நான்கு ஆலயங்களும் தனித் தனி இடங்களில் இருந்தாலும் அந்த நான்கு தேவிகளும் ஒரே மூலக் கதையுடன் சம்மந்தப்பட்ட பார்வதிதேவியின் உருவங்களே என்பதாக ஆன்மீக உலகின் வாய்மொழிக் கதையும் கருத்துக்களாக நிலவுகின்றது. அந்த மூலக் கதை என்ன? அவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் சம்மந்தம் கொண்டுள்ளார்கள்?
தக்ஷனின் யாகத்தில் அவமானம் அடைந்து தற்கொலை செய்து கொண்ட பார்வதி தேவியின் உடலை சிவபெருமான் தூக்கிக் கொண்டு சென்றபோது அவர் கோபத்தை தணிக்க விஷ்ணு அவளது உடலை சக்ராயுதத்தால் வெட்டி எரிய பார்வதியின் உடலின் பல பாகங்கள் பல இடங்களிலும் விழுந்தன. அப்படி ஒரு பாகம் விழுந்த ஒரு இடம் காஞ்சீபுரம் ஆகும். அந்த காஞ்சீபுரத்தில் பார்வதிக்கு சக்தி பீடம் அமைய வேண்டும் என எண்ணிய பரமாத்மன் ஏற்கனவே அதற்கான நாடகம் ஒன்றை அரங்கேற்ற அதனை தயார் நிலையில் வைத்து இருந்தார். அப்படி அமைய உள்ள சக்தி பீடத்தில் திரிபுரசுந்தரி தேவியின் அம்சங்களோடு கூடிய அம்மனாக பார்வதி தேவி எழுந்தருள வேண்டும் என்பதை மனதில் கொண்டு ஒன்றுடன் ஒன்றிணைந்த நாடகங்கள் நடந்தேறின.
பார்வதியின் உடலின் ஒரு பாகம் காஞ்சியில் விழுந்ததும், நாடகத்தின் அடுத்த காட்சி தேவலோகத்தில் துவங்கியது. ஒருநாள் விளையாட்டாக பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை மூடிவிட உலகமே இருளில் மூழ்கி, அனைத்து சலனங்களும் நின்றன. ஆகவே கோபமுற்ற சிவபெருமானும் பார்வதியை பூலோகத்தில் சென்று பிறவி எடுத்து தன்னைவிட்டு விலகி இருக்கட்டும் என சாபம் தந்தார். ஆனால் பார்வதி தேவி தான் விளையாட்டாக செய்ததை இத்தனை பெரிதாக எடுத்துக் கொண்டு சாபமிட்டுவிட்டாரே என வருந்தி, அவரிடம் மன்னிப்புக் கேட்க அவரும் தான் ஒருமுறை கொடுத்துவிட்ட சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால் அவள் பூலோகத்தில் சென்று தவம் இருந்து தன்னை வேண்டி நின்றால் தக்க நேரத்தில் அவளுக்கு காட்சி தந்து மீண்டும் அவளை மணமுடித்துக் கொள்வதாக வாக்குறுதி தந்தார். பார்வதியும் அங்கிருந்து கிளம்பி சென்றாள். சென்ற வழிகளில் அவள் பல்வேறு இடங்களில் தங்கிய பின் முடிவாக மாங்காடு சென்று தான் சிவபெருமானுடன் மீண்டும் இணைய வேண்டும் என வேண்டிக் கொண்டு தவத்தில் இருந்தாள்.
மாங்காட்டி நோக்கிச் சென்ற வழிகளில் அவள் திருவானைக்காவல் மற்றும் சென்னை (குறிப்பு:- *அந்தந்த இடங்களை தெரிந்து கொள்ளவே இன்றைய காலத்து பெயர்கள் அங்காங்கே தரப்பட்டு உள்ளன. அந்த இடங்களுக்கு பெயர்கள் எதுவும் அப்போது கிடையாது) போன்ற இடங்களில் தங்கி தவம் இருந்தாள். அப்படி அவள் சென்றபோது அவள் மனதில் ஆவேசத்துடன் சென்றதினால் அவள் தங்கி இருந்த இடங்களில் உக்கிரஹ தேவியாக இருக்கும்படி ஆயிற்று. இதனால் ஆதி சங்கரர் பிற்காலத்தில் அவள் தரிசனத்தைப் பெற்றபோது அவளது கோபத்தை அடக்கி சாந்தப்படுத்தினாராம். முடிவாக அவள் மாங்காடு சென்று பல காலம் ஊசி முனையில் தவமிருக்க அசிரி ஒன்று அவளை காஞ்சீபுரத்துக்கு சென்று தவம் இருந்தால் அவளுக்கு சிவபெருமான் காட்சி தந்து அவளை மணந்து கொள்வார் என்று கூற பார்வதியும் காஞ்சீபுரத்துக்கு சென்று தவமிருக்க அவளுடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவளுக்கு காட்சி தந்து அவளை அங்கேயே மீண்டும் மணந்து கொண்டார். அதன் பின் அவள் அங்கேயே அமைய உள்ள சக்தி பீடத்தில் எழுந்தருள்வாள் என்றும், அவளுக்கு இரு கண்களாக கல்வி அறிவைத் தரும் சரஸ்வதியும், செல்வத்தைத் தரும் லஷ்மி தேவியும் இருக்க, கருணை உள்ளம் கொண்ட காமாட்சி எனும் பெயரில் அவள் இருந்தவாறு அவளிடம் வரும் பக்தர்கள் செல்வம் பெற்று கல்வி அறிவும் பெற அருள் புரிந்து கொண்டு இருப்பாள் என்றும் சிவபெருமான் அருள் புரிந்தார். இப்படியாக காஞ்சீபுரத்தில் சக்தி பீடம் அமைய வழி பிறந்தது.
சக்தி பீடம் எங்கு அமைய வேண்டும் என முடிவு ஆனதும், பார்வதி அங்கு வரும் முன் அமர்ந்திருந்த இடங்களில் பூமியில் அவளுடைய தெய்வீக சக்தி புதைந்து இருந்தன என்பதினால் அந்த சக்திகள் புதைந்திருந்த இடங்கள் மேன்மை மிக்க ஆலயங்களாக மாற வேண்டும் என்பதற்கான நிகழ்வுகள் நடைபெறலாயின.
இதன் உள் தத்துவம் என்ன என்றால் தேவி பல்வேறு ரூபங்களில் அமர்ந்திருந்தபோது அவளது தெய்வீக சக்திகள் அந்தந்த இடங்களில் மண்ணில் புதைந்து இருந்தன. ஆனால் தேவியின் தெய்வீக சக்திகள் மனித குல மேம்பாட்டிற்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவே அங்கு ஆலயங்கள் எழ வேண்டும் என்பதான முடிவாயிற்று. அப்படி எழும்பும் ஆலயங்களில் மறைந்து உள்ள தேவியின் தெய்வீக சக்திகள், பக்தர்கள் அங்கு வந்து தேவியை வேண்டி நிற்கையில் அவர்களது வேண்டுகோட்களை அவளிடம் எடுத்துச் செல்லும் கருவியாக அமைந்து இருக்கும். புராணங்களைப் படித்தோம் எனில் இவற்றை எல்லாம் வெளிப்படையாகக் கூறாமல், மறைமுகமாக எடுத்துரைக்கும் வகையில், பக்தர்கள் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள தெய்வீக சக்திகளை உள்ளடக்கிய சன்னதிகளில் வேண்டுகோள் வைத்தால் மட்டுமே வேண்டியது நிறைவேறும் என அறிவுறுத்தி உள்ளார்கள். ஆனால் இந்த உண்மையான காரணத்தை விவேகம் மிக்க ஆன்மீகவாதிகள் கிரகித்துக் கொண்டு அவற்றை உலகிற்கு தெரியப்படுத்தினார்கள்.
காளிகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காடு மற்றும் காஞ்சி அன்னை ஆகிய நான்கு தெய்வங்களும் ஒவ்வொருவருக்கொருவர் சம்மந்தம் கொண்டுள்ளனர் எனும் ஆச்சர்யமான விஷயம் பிரமிப்பூட்டும். ஏன் என் அவை நான்கும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு உருவங்களிலும் உள்ளன என்றாலும் பண்டிதர்களின் கூற்றின்படி அவை அனைத்துமே பார்வதி தேவியின் அவதாரமான காமாட்சி அம்மனின் தெய்வீக சக்தியுடன் அமைந்தவை, அவளது கதையுடன் சம்மந்தப்பட்ட வெவேறு கிளைக் கதைகளைக் கொண்டவையே என்பதாகும். அது எப்படி உண்மையாகும் ? தன் கணவரை மீண்டும் அடைய வேண்டும் என பெரும் பயணத்தை மேற்கொண்டு இருந்த பார்வதி தேவி காஞ்சீபுரத்தை அடையும் முன்னால் காளிகாம்பாள், அகிலாண்டேஸ்வரி மற்றும் மாங்காட்டு அம்மன் போன்ற ஆலயங்கள் உள்ள இடத்தில் எல்லாம் மாற்று உருவில் தங்கி இருந்து தவம் செய்துள்ளாள். அவள் அங்கிருந்தெல்லாம் கிளம்பிச் சென்ற போது அந்தந்த உருவத்துடன் கூடிய அவள் துறந்து விட்டு சென்ற உடல் கல்லாக மாறி பூமிக்குள் புதைந்தன. பல காலம் பொறுத்து பரமாத்மனின் நியதிக்கு உட்பட்டு பல்வேறு உப கதைகளுடன் இணைத்து அந்த சிலைகள் மனிதர்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டு ஆலயங்கள் அமைந்தன.
காமாட்சி அம்மன் காஞ்சீபுரத்தில் சிவபெருமானை மணம் செய்து கொள்வதற்கு செல்லும் முன் எங்கெல்லாம் அவள் தங்கி இருந்து தவம் செய்தாளோ அந்த இடங்களில் எல்லாம் தமது பிம்ப தேவிகளாக உக்ரஹமான நிலையுடன் இருந்தவர்கள் சாந்த தேவியாக மாறி விட அந்த இடங்களில் எழும்பிய ஆலயங்களில் கற்பகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காட்டு அம்மன் என்ற பெயர்களில் தமது பிம்ப தேவிகள் மூல தேவியாக அமர வழி வகுத்தாள். அதனால்தான் இந்த நான்கு ஆலயங்களிலும் உள்ள பார்வதி தேவியின் அம்ச தேவிகள் பல்வேறு காட்சிகளில் அமைந்து இருந்தாலும் அவை அனைத்துமே காஞ்சியில் தனது நாயகனான சிவபெருமானுடன் மீண்டும் திருமணம் செய்து கொண்ட காமாட்சி அம்மனின் அம்சங்களே என்பதற்கு சான்றாக, இந்த நான்கு ஆலயத்தில் மட்டுமே அந்தந்த அம்பாளின் உக்ரஹத்தை தணிக்க ஆதி சங்கரர் ஸ்ரீ சக்கர ஆராதனை வித்தையை பயன்படுத்தினார் என பண்டிதர்கள் எடுத்துக் காட்டுவது எந்த கோணத்திலும் தவறில்லை எனத் தெரிகிறது. இதனால்தான் காஞ்சி காமாட்சி, கற்பகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காட்டு அம்மன் ஆகிய நால்வரும் வெவ்வேறு உருவங்களில் காணப்பட்டாலும் கற்பகாம்பாள், அகிலாண்டேஸ்வரி, மாங்காட்டு அம்மன் ஆகிய அந்த மூன்று தேவிகளும் காஞ்சி காமாட்சி அம்பாளே என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.
புராணங்களைப் படித்தோம் எனில் பல தெய்வங்கள் தமக்கு ஏற்பட்ட சாபங்களை நிவர்த்தி செய்து கொள்ள பூமியில் பிறப்பு எடுத்து அங்கு வந்து அவரவர்களுக்கு தரப்பட்டு இருந்த விதிப்படி தவமிருந்து சாபங்களை நிவர்த்தி செய்து கொண்டு மீண்டும் பழைய தெய்வீக உடலை அடைந்தார்கள் என்ற கதைகள் உண்டு. அப்படி தெய்வங்கள் பூமிக்கு வந்து மனித உருவிலே தங்கி விட்டு திரும்பச் சென்றபோது பூமியில் எந்த உருவுடன் இருந்தார்களோ அந்த உடலை பூமிக்குள் புதைய வைத்து விட்டே சென்றன. அதே நேரத்தில் அந்த உடலைத் துறந்து சென்றபோது தமது உண்மையான உருவத்தையும், தமது தெய்வீக சக்திகள் சிலவற்றையும் அதற்குள் பதிய வைத்து விட்டே சென்றிருந்தன என்பதினால் பூமிக்குள் புதைந்து கிடந்த உடல்கள் சிதைந்து போகாமல் காலப் போக்கில் கற்களாகி விட்டன. அதனால்தான் கற்களாக மாறிய சிலைகள் தேவ உருவத்துடனேயே அமைந்து இருந்தன. காலப்போக்கில் அவை மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு ஆலயங்கள் அமைக்கப்பட்டதும், அவற்றை ஆலயங்களில் ஸ்தாபனம் செய்து மந்திரங்களை ஓதி சக்தியூட்டினார்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் மந்திரங்கள் தெய்வீக சக்தியை உற்பத்தி ஆக்கித் தருவதில்லை. குறிப்பிட்ட மந்திர ஒலிகள் மூலம் அந்த சிலைகளில் புதைந்து இருக்கும் தெய்வீக சக்திகள் தட்டி எழுப்பப்படுகின்றனவாம். அப்படி தெய்வீக சக்திகளை தட்டி எழுப்பும் சக்தி பெற்ற குறிப்பிட்ட மந்திர ஒலிகளை மனிதர்களால் கேட்க இயலாது, அவற்றின் உள்ளடங்கிய சக்தியை புரிந்து கொள்ளவும் இயலாது.
தம்புசெட்டி தெருவில் அமைந்து உள்ள ஆலயத்தில் உள்ள கற்பகாம்பாளை ஸ்தாபனம் செய்யும் முன் ஒரு மாமரத்தின் அடியில் ஆலய நிர்மாணத்துக்கான பூஜையின் முதல் சடங்குகள் ஆகம விதிமுறைப்படி நடைபெற்றனவாம். எந்த ஒரு ஆலயத்திலும் எந்த மரத்தின் அடியில் முதல் சடங்கு பூஜை நடைபெறுகின்றதோ அந்த மரமே ஆலயத்தின் தல விருஷமாக அமைந்து விடுமாம். மாங்காட்டில் காஞ்சி காமாட்சியின் மூல உருவமான பார்வதி தேவி மாமரத்தின் அடியில்தான் தவம் இருந்துள்ளாள். ஆகவே அவளுடைய அம்சமான காளிகாம்பாளையும் மாமரத்தின் அடியில் வைத்து பூஜையின் முதல் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பதாகக் கூறுகிறார்கள்.
வேறு எந்த ஆலயங்களுக்கும் இல்லாத பல சிறப்புகள் இவ்வாலயத்திற்கு உள்ளன. அந்த ஆலயத் தேரை கிண்ணித்தேர் என்று அழைக்கின்றார்கள். ஸ்ரீ சக்ரமே இங்கு உள்ள ஆலயதேரின் சக்கரமாக அமைந்துள்ளது. அதன் மூலம் இந்த ஆலயத்தின் தேவியையே பெண் தெய்வங்களின் முதன்மை தெய்வமாக கருதுகிறார்கள்.
ஆலய அம்மனின் பிராகாரத்தை சுற்றி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சித்தி புத்தியுடன் வினாயகர், ஸ்ரீ கமடேஸ்வரர், துர்கை, சண்டிகேஸ்வரர், பிரம்மா, வீரபத்ர மாகாளி, ஸ்ரீ நாகேந்திரர், காயத்ரி, விஸ்வகர்மா, நடராகஜர் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் மேலும் சில சன்னதிகளும் உள்ளன.
விஸ்வ கர்மா சமூகத்தினர் இந்த ஆலயத்தை எழுப்பியதும், அந்த தேவியை தமது குல தெய்வமாகவே ஏற்றுக் கொண்டார்களாம். திருமணத் தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க என பல்வேறு பிரார்த்தனைகளை முன்வைத்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்கள். பில்லி, சூனியத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றில் இருந்து விடுபட இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் அகோர வீரபத்திரரை பௌர்ணமி அன்று இங்கு வந்து வழிபட்டால் அவற்றின் தீமைகள் உடனே விலகி விடும் என்பது நம்பிக்கை.
மராட்டிய சிங்கமான சத்ரபதி சிவாஜி 1677 ஆம் ஆண்டு அங்கு வந்து காளிகாம்பாளை வணங்கிச் சென்றாராம். அதன் பின்னரே அவர் யுத்தத்தில் வெற்றி பெற்றாராம். அவருக்கு சத்ரபதி என்ற பட்டப் பெயரும் இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டுச் சென்ற பின்னரே கிடைத்ததாம். பவானி தேவியை தமது குல தெய்வமாகக் கொண்டு இருந்த மராட்டிய மன்னனான சிவாஜி காளிகாம்பாள் மீது அதீத நம்பிக்கை கொண்டு இருந்ததினால் அவளையும் தன்னுடைய குலதெய்வமாகவே அவர் ஏற்று இருந்தாராம்.
கைகளில் அங்குசம், பாசக் கயிறு, கிளி, தாமரை போன்றவற்றை ஏந்தி அமர்ந்துள்ள நிலையில் காணப்படும் காமாட்சி அம்மனின் அம்சங்களைப் பார்த்தால் லலிதா பரமேஸ்வரி மற்றும் திரிபுரசுந்தரியின் அம்சங்களோடு ஒத்திருப்பதைக் காணலாம்.