தேவி கருமாரியம்மன் ஆலயம்,
பெங்களூரு
சாந்திப்பிரியா
ஒரு முறை விநாயகர் தேவி கருமாரிக்கு தன்னிடம் இருந்த வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்ய அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து , தன்னுடைய ஆலயத்துக்கு வருபவர்கள் முதலில் அவரை வணங்கி விட்டுத்தான் தனக்கு பூஜை செய்ய வேண்டும் என அருள் புரிந்தாள். அந்த நேரத்தில் திருவேற்காடில் பாலாம்பிகாவுடன் இருந்த சிவபெருமான் தேவர்களை துன்புறுத்தி வந்த அசுரர்களை அழிக்கத் தான் செல்ல வேண்டி இருப்பதினால் தான் திரும்பி வரும் வரையில் தான் செய்து வந்த படைத்தல், காத்தல், அருள் புரிதல், ஆறுதல் தருதல் மற்றும் அழித்தல் என்ற அனைத்துக் காரியங்களையும் பராசக்தியே தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று கூறி தன் உடலில் இருந்து எடுத்த வீபுதியை அவளிடம் கொடுத்தார். ஆகவே அந்த அம்பிகையும் அகஸ்தியரை அழைத்து தான் தங்குவதற்கு நல்ல ஒரு இடத்தைத் தேடுமாறுக் கூறினாள் . அவர் எங்கு சென்று நிற்கின்றாரோ அங்கேயே தான் தங்குவேன் என்று கூற அவரும் திருவேற்காடு போன்ற இடங்களிலும் மற்றும் தற்போது பெங்களூரில் உள்ள அவளது ஆலயம் அமைக்கும் இடங்களிலும் கருமாரி அவதாரத்தில் நின்று கொண்டார். கரு என்றால் கருவை சுமப்பவள், அதாவது மக்கள் அனைவருக்குமே தாயாக இருந்து அவர்களை தன் கருவில் சுமந்தவள் என்று பொருள். ஆகவேதான் படைத்தல் காத்தல் மற்றும் அருள் புரிதல் போன்ற அனைத்தையும் தன்னிடத்தில் கொண்டு இருந்தாள். அழித்தலை எப்படி செய்கிறாள்? அழித்தல் என்பது மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்தல் என்பதான பொருளில் அவள் அழிக்கும் தொழிலையும் செய்து வருகிறாள். அப்படி என்றால் மாரி என்று ஏன் பெயர் கொண்டாள் ? மாரி என்றால் மழை என்பது பொருள். அவள் தனது அருளை மழைப் போல பொழிபவள் என்பதான அர்த்தம் தரும் சொல் அது. அதனால்தான் கரு+மாரி என கருமாரியாக பல ரூபங்களில் இந்த உலகில் இருக்கின்றாள். அவளுடைய லீலைகள்தான் என்னே!

கருமாரி அம்மன் யார்? அவளும் பார்வதியின் ஒரு அவதாரமே. ஒருமுறை அவள் ஒரு நாடோடிப் பெண்ணைப் போல வேடம் அணிந்து கொண்டு சென்றபோது அவளை சூரிய பகவானினால் அடையாளம் காண முடியாமல் போயிற்று. அவள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் போன சூரியன் அவளை உதாசீனப்படுத்தினார். அதனால் கோபமுற்றவள் அவர் ஒளி தரும் தனது களையை இழக்க வேண்டும் என்று சாபமிட சூரியனின் ஒளி வெள்ளம் குறைந்தது. தன் தவறை உணர்ந்தவர் ஓடோடிச் சென்று அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் அவரை மன்னித்தாள். அதற்குப் பரிகாரமாக பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களில் அவளுடைய திருவேற்காடு ஆலயத்தில் சூரிய ஒளி இரண்டு நாட்கள் மட்டும் அவள் தலை மீது விழுவதைக் காணலாம். அதன் மூலம் அவளை பூமியில் வந்து சூரிய பகவான் வணங்குவதாக ஐதீகம் உள்ளது. தேவி கருமாரிக்குப் பிடித்த விருட்ஷம் வேப்ப மரம். அவள் ஒருமுறை நாரதரிடம் கூறினாளாம் ” நான் வேப்ப மர இலைகளை இருக்கையாகப் பயன்படுத்தி அதன் மீதே வாசம் செய்து வருகிறேன். ஆகவே வேப்ப மர இலைகள் மகிமை வாய்ந்தவை. என்னை வேண்டிக் கொண்டு வேப்ப இலைகளை நோயுற்றவர்கள் உபயோகித்தால் அவர்களது நோய் நொடிகள் குணமாகும். அது மட்டும் அல்ல வேப்ப மர இலைகளில் நான் உள்ளதினால் எந்த தீய ஆவிகளுமே வேப்ப இலைகளை உள்ள இல்லங்களை நெருங்க முடியாது ”. இதனால்தான் பல நோய்களை குணப்படுத்தவும், தீய ஆவிகளை விரட்டவும் மந்திரம் ஓதி குணப்படுத்துபவர்கள் வேப்ப மரத்தின் இலைகளைப் உபயோகிக்கின்றார்கள்.

இன்னொருமுறை கருமாரியிடம் நாரதர் கேட்டார் ”அன்னையே, உங்கள் தலை மீது ஐந்து தலை நாகம் உள்ளது. மேலும் நீங்கள் பாம்புப் புற்றுகளில் வசிப்பதாக ஐதீகம் உள்ளதே. அதன் காரணம் என்ன?”. அதற்கு கருமாரி அம்மன் கூறினாள் ‘ நாரதா, நான் இமய மலையில் வசிப்பவள். அங்கு எப்போதுமே குளிமையான சீதோஷ்ண நிலையே இருக்கும். ஆகவே பூமிக்கு இந்த அவதாரத்தில் வந்து வாசம் செய்யும் எனக்கு குளுமையான இடத்தை அமைத்துத் தர வேண்டும் என்பதினால்தான் பாம்புப் புற்றுகளில் நான் வசிப்பதற்கு வசதியாக ராகுவும், கேதுவும் எனக்கு இதுபோன்ற இடங்களில் குடில்களை அமைத்துத் தருகிறார்கள். ராகுவும் கேதுவும் எனக்கு அடிமையான கணங்கள். நான் பல இடங்களுக்கும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களை ரஷிக்கச் செல்லும்போது நான் குளுமையான இடத்தில் தங்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பல இடங்களிலும் எனக்காக இப்படிப்பட்ட குடில்களை அவர்களுடைய தலைவரான நாகராஜர் கூறியபடி அமைக்கின்றார்கள். நான் எங்கு சென்றாலும் அந்தக் குடில்களில்தான் தங்குகிறேன் என்பதினால், எனக்குக் கட்டுப்பட்ட ராகு மற்றும் கேதுவினால் ஏற்படும் கிரக தோஷங்களைக் களைந்து கொள்ள என்னிடம் வேண்டுபவர்களுக்கு ராகுவும், கேதுவும் எந்த கெடுதலும் செய்வதில்லை. அதுவும் முக்கியமாக நான் விரும்பும் வேப்ப மரங்களுக்கு அருகிலோ அடியிலோ உள்ள புற்றுக்களில் நான் அதிகம் வசிக்கின்றேன். அங்கெல்லாம் அவர்களின் தலைவனான ஐந்து தலை நாகராஜர் ஐம்புலன்களின் தத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் எனக்கு குடையாக நிற்பது வழக்கம். இதுவே உங்கள் கேள்விக்கான விடை ” என்றாள்.

அதைக் கேட்ட நாரதர் தேவி கருமாரியை வணங்கிச் சென்றார். அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற நாரதரை வழியில் சந்தித்த பிரும்மா ”என்ன நாரதரே எதோ யோசனை செய்த வண்ணம் நடந்து வருகிறீர்கள்” எனக் கேட்க ” நான் இப்போதுதான் அன்னை கருமாரியை தரிசித்துவிட்டு வருகிறேன். ஆனால் அவளை குறித்த ஒரு முக்கியமான குழப்பத்திற்கு அவளிடமே விடையைக் கேட்க கூச்சமாக இருந்தது. ஆகவே நீங்கள்தான் எனக்கு அதற்கான விளக்கத்தைத் தர வேண்டும்” என்று கேட்ட நாரதர் ” தேவாதி தேவா நான் பூஉலகில் ஒன்றை கவனித்தேன் தேவி கருமாரியானவள் நகரங்களைவிட கிராமப்புறங்களில் அதிகம் வணங்கப்படுகிறாள். அதன் காரணம் என்னவாக இருக்க முடியும் ?” என்று கேட்க பிரும்மா கூறினார் ” நாரதா, இதுவும் நல்ல கேள்விதான். தேவியைப் பொறுத்தவரை நகரம் என்றோ கிராமம் என்றோ அவளுக்கு பேதம் இல்லை. யார் அவளை அதிகம் வேண்டுகிறார்களோ அங்கெல்லாம் அவள் நிச்சயமாகச் சென்று அருள் மழைப் பொழிகிறாள். நகரங்களில் உள்ளவர்களுக்கு உண்ண எங்கு உணவு உற்பத்தி ஆகின்றது? கிராமங்களில் உள்ளவர்கள் பயிரிட்டு விளைவிக்கும் தானியங்களினால்தானே? அந்த தானிய விளை நிலங்களுக்குள் போடப்படும் தானியங்களை செழுமையாக விளைவிக்க தண்ணீர் வேண்டும் அல்லவா. அது எங்கிருந்து கிடைக்கும். அதற்கு தேவையான தண்ணீரைத் தர மழை வேண்டும் அல்லவா? ஆகவே அங்கெல்லாம் நல்ல மழை தக்க நேரத்தில் பொழிய வேண்டும், தமது பயிர்கள் செழுமையாக விளைய வேண்டும் என்பதற்காக அவளை ‘ தாயே …மாரியைத் தா………மாரியைத் தா’ என்று அங்குள்ளவர்கள் வேண்டுகிறார்கள். அதுவே மாரியாத்தா என்று மருவி விட்டது. அவர்கள் ‘மாரியாத்தா ….மாரியாத்தா ‘ என அவளை மனமுருகி வேண்டும்போது, அழைத்தக் குரலை உதாசீனப்படுத்தாமல் அங்கெல்லாம் சென்று விடுகிறாள் . அதனால் வருடம் தவறினாலும், அவளது ஆராதனை தவறக் கூடாது என எண்ணிக் கொண்டு அங்குள்ளவர்கள் அவளை அதிகம் ஆராதித்து, பெரிய விழாக்கள் எடுத்து, வழிபாடு செய்கிறார்கள். அவளுக்கு கிராமப்புறங்களில் தத்தம் பூமிகளில் ஆலயம் அமைக்கின்றார்கள். ஆகவே அவள் அதிகமாக கிராமங்களில் மட்டுமே ஆராதிக்கப்பபடுகிறாள் என்பது மனப் பிரமையே தவிர உண்மை இல்லை . பராசக்தி அன்னையை தேவி கருமாரியாக ஆராதித்து அனைத்து பிரிவு மக்களுமே ஆலயங்கள் அமைக்கின்றார்கள் என்பதே உண்மை” என்று கூறி நாரதரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் பிரும்மன்.

சைவ சித்தாந்தத்துக்கு அடிப்படையான சைவ ஆகமங்கள் 28 ஆகும். இவற்றுக்குள் முக்கியமானவை  காமிகாகமம், காரணாகமம் என்ற நூல்களே . காரணாகமம் என்பது வடமொழியில் எழுதப்பட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டில் நான்காவது நூல் ஆகும் . இதில் பூர்வ, உத்தர என்ற இரு பகுதிகள் உண்டு. பூர்வ பக்கத்தில் 147 படலங்கள் அமைந்துள்ளன. இதிலே தந்திரங்கைளப் பற்றியும் மந்திரங்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இதன் பதினெட்டாம் படலத்தில் எண்பத்தி நான்கு செயல்கள் (கரணங்கள்) விளக்கப்பட்டுள்ளன. பராசக்தியின் வெவேறு அவதாரங்களாக கௌரி மனோன்மணி சாமுண்டி, துர்க்கை மற்றும் மகாமாரி போன்றவர்கள் அவதரித்தார்கள். இவர்களில் மகாமாரி என்பவள் மாரகாசூரனை வதம் செய்ததினால் அவள் மாரனை வதைத்த மகா தேவி என்ற பொருளில் மகா மாரி என அழைக்கப்பட்டு இருக்கின்றாள் என்று காரணாகமம் என்ற நூலில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

அந்தக் கதையின்படி முன்னொரு காலத்தில் கடுமையான தவமிருந்து தன்னை எளிதில் அழிக்க முடியாத பல அறிய வரங்களையும் பெரும் சக்தியையும் இறைவனிடம் இருந்து பெற்ற மாரகாசூரன் என்ற அசுரன் ஆணவமும் , அகங்காரமும் கொண்டு மூவுலகங்களிலும் இருந்தவர்களை துன்பப்படுத்தினான். ஆகவே அனைவரும் ஒன்றிணைந்து ஆதி பராசக்தியிடம் சென்று அந்த அசுரனின் தொல்லைகளைக் கூறி தம்மை அவன் தொல்லைகளில் இருந்து பாதுகாக்குமாறு வேண்டினார்கள். அவற்றைக் கேட்ட தேவியும் அவர்களை தானே காத்தருளுவதாக உறுதி கூறிவிட்டு , கோபாவேசத்தோடு மாரகாசூரனின் இருப்பிடத்துக்குச் சென்று அவனோடு உக்ரஹமாக போரிட்டு அவனது இரு கால்களையும் பிடித்து மேலே தூக்கி அவனது தலையை பூமிக்குள் புதைத்துக் கொன்றாள். தேவர்களும், கடவுட்களும் பூ மாறி பொழிந்து தமது நன்றியை அவளுக்கு செலுத்தினார்கள். அன்று முதல் ‘ மாரகாசூரனை வதம் செய்த அம்மன் எனப் பொருள் தரும் வகையில் மாரம்மன் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி மாரியம்மன் என ஆயிற்று. அவள் தலையை சுற்றி எப்போதுமே அக்னி ஜுவாலைகள் எரிந்து கொண்டே இருக்கும் என்பதினால் அவளை எப்போதுமே குளுமையான இடத்தில் சீதளா தேவி அதாவது குளுமைத் தருபவள் என்று வணங்கி குளுமையான இடத்தில் அமரச் செய்கிறார்கள்.

அப்படிப்பட்ட அந்த அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தற்போது குளுமை நிறைந்த பெங்களூரில் ராஜராஜேஸ்வரி நகரில் உருவாகி வரும் தேவி கருமாரியம்மன் ஆலயமும் ஒன்று.  அந்த ஆலய விலாசம் :-

Sri Devi Karumariamman Temple
Opp to Shrugagiri Shanmuka Temple,
BEML Layout, Rajarajeshwari Nagara, Bangalore-560098.
Ph: 9945044433 / 9880865461