பகலாமுகி ஆலயம், உஜ்ஜயினி
சாந்திப்பிரியா
நல்கேடா பகலாமுகி
 ஆலயத்தில் பகலாமுகி
நம் நாட்டில் முக்கியமாக ஹிமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, திருபுரா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் – அதாவது மலைவாழ் மக்களும், நாடோடிகளும் நிறைந்த மக்கள் இருந்த இடங்களில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. அவை அனைத்தையுமே அந்த காலத்தில் வாழ்ந்திருந்த அரசர்கள் நிர்மாணித்து அங்கெல்லாம் வழிபாடுகளை செய்து உள்ளார்கள். அப்படி கட்டப்பட்டு உள்ள ஆலயங்கள் மிகப் பெரிய ஆலயங்கள் அல்ல. நமது கிராமங்களில் காணப்படும் கிராம தேவதைகளின் ஆலயங்களைப் போல மிகச் சிறியதாகவும் கூட, அவற்றில் சில மேல் கூரைக் கூட இல்லாமல், மரங்களின் அடியிலும் நதிக் கரைகளிலும் கட்டப்பட்டு உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்கள் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி மாவட்டத்தில் நிறையவே உள்ளன. காரணம் அங்கு ஓடிக் கொண்டு இருந்த பல நதிகள் புனிதமான நதிகள் என்று கருதப்பட்டன. மேலும் அந்த இடங்களில் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் தந்திர மந்திர சக்திகளைக் பயன்படுத்தியே தமது எதிரிகளை அடக்கி , ஆட்சியை விஸ்தரித்துக் கொண்டு இருந்தார்கள் என்பதே.
பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய ஆலயங்களை பல இடங்களிலும் அவர் நிறுவியதாக ஒரு கருத்து உண்டு. ஏன் எனில் அவர் மந்திர தந்திர சக்திகளை பெரும் அளவில் நம்பியவர் என்று நம்புகிறார்கள். ஆகவே மந்திர சக்திகளை ஆராதிக்கும் ஆலயங்களுக்குச் சென்று பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கமாம். அதனால்தான் அவர் ஆண்டு வந்த மத்தியப் பிரதேசத்திலும் அப்படிப்பட்ட ஆலயங்கள் நிறையவே இருந்தன. அவற்றில் ஒன்றுதான் பகலாமுகி தேவிக்கு அமைக்கப்பட்டு உள்ள ஆலயம்.
உஜ்ஜயினியில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் நர்மதை நதியின் கரையைத் தொட்டபடி உள்ளது அந்த ஆலயம். அந்த ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. மற்றபடி ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் இல்லை. இந்த உஜ்ஜயினி ஆலயத்தைத் தவிர மத்தியப் பிரதேசத்தின் ததியா எனும் கிராமத்திலும் ஹிமாச்சலப் பிரதேசத்திலும்  பகலாமுகி ஆலயங்கள் உள்ளன. சென்னையிலும் அவளுக்கு ஒரு ஆலயம்  உள்ளதான செய்தியும் உள்ளது .


ஆலயத்தின் பெருமை

அந்த ஆலயத்தில் உள்ள தேவியின் சிலை 2500 ஆண்டுகளுக்கு முட்பட்டது எனவும், பூமியில் இருந்து தானாக வெளி வந்தது எனவும் கூறப்படுகின்றது. 1815 ஆம் ஆண்டில் ஆலயத்தில் உள்ள தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளதாக கல்வெட்டு செய்தி கூறுகின்றது. குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்திற்காக மந்திர தந்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு இருந்திருக்க வேண்டும் என ஒரு சாஸ்திர பண்டிதர் கூறினார். இன்னொருவர் கூறுகையில் அந்த பதினான்கு தூண்களும் அந்த ஆலயத்தின் தேவியைக் காத்து நிற்கும் பூத கணங்களாக  இருந்திருக்கலாம்  என்றும்,  இல்லை, ஒவ்வொரு தூணிலும்  பகலாமுகி தேவியின் மந்திர சக்தியை  ஆவாஹனம் செய்து வைக்கப்பட்டு அந்த ஆலயத்தின் சக்தியை அதிகரித்து இருக்கலாம் என்றும்  கூறுகிறார்கள்.  புராணச் செய்திகளின் அடிப்படையில் மகாபாரதப் போரின் பொழுது குருஷ்ஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் கௌரவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தர்மர் பகலாமுகி தேவியை இந்த இடத்தில் வந்து வழிபட்டார் என இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

தேவியின் அவதாரம்
சத்யுகத்தில் ஒருமுறை மகா பிரளையம் ஏற்பட்டு உலகமே அழிந்து விடும் நிலைக்குச் சென்றுவிட அதனால் கவலையுட்ற விஷ்ணு சௌராஷ்டிரத்தில் ஒரு இடத்தில் சென்று தனிமையில் அமர்ந்தார். அப்போது அவர் நாபியில் இருந்து வெளிவந்த ஜோதியும், ஆகாயத்தில் இருந்து வந்த நட்சத்திர ஒளியும் சேர்ந்து ஒரு தேவி வெளியே வந்தாள். அவளே பகலாமுகி தேவி . அவள் அந்த பிரளயத்தின் சீற்றத்தை அடக்கி உலகை அழிவில் இருந்து காப்பாற்றினாள்.

இன்னொரு  ஆலயத்தில்  தேவி 

தேவியின் ஸ்வரூபம்
கொக்கு போன்ற முகத்தைக் கொண்ட இந்த தேவியை வால்கமுகி என்றும் கூறுகிறார்கள். பத்து மந்திர தந்திர சக்திகளைத் தரும் தேவிகளான தச மஹா வித்யா தேவிகளில் இவளும் ஒருவள். நான்கு கைகளைக் கொண்ட இவள் அமிர்தக் கடலில் தங்க நிறத்திலான சிம்மாசனத்தில் அமர்ந்து மஞ்சள் நிறத்தில் காட்சி தருபவளாம். ஒரே கல்லில் மூன்று முகங்களைக் கொண்ட தேவிக்கு ஒரு முகத்தில் மூன்று கண்கள் உள்ளன. ஆகவே மூம்மூர்த்திகளை உள்ளடக்கிய முக்கண்ணராகிய சிவபெருமானின் அவதாரமே அந்த சிலை என்றும் அர்தநாரீஸ்வரரைக் குறிக்கும் சிலையே அது எனவும் கூறுகின்றனர். பகலா தேவியின் மேனி பொன்னிரமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம் அவளே மந்திர தந்திர சக்திகளின் தெய்வம் மஞ்சள் நிற தாமரைப் பூக்களின் மஞ்சத்தில் அமர்ந்து கொண்டு இருப்பவள் என அவளுடைய ரூபத்தை வர்ணிக்கின்றனர். ஆனால் நல்கேடாவில் உள்ள சிலையோ கழுத்துவரைதான் உள்ளது.
தேவியின்  மகிமை 
பகலாமுகி தேவியை வணங்கி ஆராதித்தால் எதிரிகள் அடங்குவர், தடைகள் விலகும், வழக்குகளில் வெற்றி கிட்டும், நமக்கு தொல்லைத் தரும் எதிரிகள் செயல் இழப்பார்கள், பில்லி சுனியங்களினால் ஏற்படும் அபாயங்கள் விலகும் என்றெல்லாம் நம்புவதால் பலரும் இங்கு வந்து வேண்டுதல்கள் செய்கின்றனர். அவளை ஆராதித்துத் துதிப்பத்தின் மூலம் எதிரிகளின் செயல்கள் அனைத்தும் அடங்கி விடுமாம். முக்கியமாக அவள் எதிரிகளின் நாக்கு வன்மையை, சிந்திக்கும் திறனை ஒழித்து விடுவதினால் அவர்களால் கடவுளை வேண்டிக் கொண்டு மந்திர உச்சாடனைகளை செய்ய முடியாமல், தமது சகாக்களுக்கும் , படையினருக்கும் உத்தரவுகள் போடா முடியாமல் அடங்கி விடுவார்கள். அவளை ஆராதிக்கும் மந்திரத்தில் மேன்மையான மந்திரத்தின் சாரம் ”தேவியே, என்னுடைய எதிரிகளின் நாக்கை அறுத்து, அவர்களை செயலிழக்கச் செய்ய வேண்டும் ” என்ற அர்த்தத்தில் இப்படியாக ஆராதிக்கின்றார்கள் :-
ஓம் ஹலீம் பகலாமுகி,
சர்வ துஷ்ட்யாநாம் வாசம்
முகம் பதம் ஸ்தம்பயா
ஜீவம் கிலையா
புத்திம் வினாஷாயா
ஹலீம், ஓம் ஸ்வாஹா
ஆனால் இந்த மந்திர உச்சாடனைகள் தகுந்த முறையில் உச்சரிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட முறையில் ஆராதிக்க வேண்டும் போன்ற பல விதி முறைகள் உள்ளதினால் இவற்றை தக்க குருவின் மூலமே தீட்ஷை எடுத்துக் கொண்டு முறையாக செய்ய வேண்டும். தவறாக உச்சாடனைகள் செய்தால் அவை அதை ஆராதிப்பவரையே அழித்து விடும்.

படம் நன்றி:-  http://www.kheper.net/index.htm
தேவியின் ஒரு கதை 
தேவியின் சக்தியைக் குறிப்பிடும் ஒரு கதை உள்ளது. முன்னர் மதன் என்றொரு அசுரன் அளவிடமுடியாத சக்திகளை, முக்கியமாக வாக்கு சித்தியை பெற்று இருந்தான். அதனால் அனைவருடைய சித்திகளும், பூஜை மந்திர ஒலிகளும் நின்றன. எவர் எதை ஒதினாலும் அவன் அவற்றை தன் வாக்கு வலிமையினால் தடுத்தான். தேவர்களை கொடுமை படுத்தினான். ஆகவே அவர்கள் பகளாமுகி தேவியை சந்தித்து தம் இன்னலைக் கூறி தம்மை காத்தருளுமாறு அவளிடம் வேண்டிக் கொள்ள பகளாமுகி தேவி அந்த அசுரன் மீது படையெடுத்து அவனுடன் சண்டையிட்டு அவன் நாக்கைப் பிடுங்கி எறிந்து அவனுடைய வாக்கு சக்தியை அழித்தாள். நாக்கு இருந்தால்தானே எதையும் உச்சரிக்க முடியும். ஆனால் அவன் நாக்கைப் பிடுங்கி கொல்லப்படும் முன்னால் அவன் அவளை மனதார ஆராதித்தான். ஆகவே அவன் இறக்கும்போது கேட்ட வரத்தின்படி அவள் அவனை வதம் செய்யும் காட்சியுடன் இருக்கும் தன்னை தனது பக்தர்கள் அந்த கோலத்திலேயே வழிபட வேண்டும் என்று கூறி அவனுக்கும் முக்தி கொடுத்தாளாம். அதனால்தான் அவன் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் காட்சியில் உள்ள படத்தையும், சிலையும் சில இடங்களில் உள்ள மக்கள் ஆராதிக்கின்றார்கள்.