சாந்திப்பிரியா                                                        –  4

ஸ்ரீ பைத்யநாத் மகாதேவ் ஆலயம்

நல்கேடாவில் இருந்து தேவாஸ்  நகருக்கு திரும்பும் வழியில் நாங்கள் சென்றது ஆகர் என்ற கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே  தள்ளி இருந்த ஒரு அற்புதமான ஒரு சிவன் ஆலயம் ஆகும்.  ஆகர் எனும் கிராமத்தை தாண்டியே நல்கேடாவுக்கு செல்ல வேண்டும். ஸ்ரீ பைதியநாத் மகாதேவ் எனும் அந்த ஆலயத்தைக் கட்டியது ஒரு ஆங்கிலேயர் என்பது வியப்பான செய்தி.  அந்த ஆலயத்தின் கதையும் கிராம மக்களினால் காலம் காலமாக கூறப்பட்டு வந்திருக்கிறது.  ஆலய சுவற்றிலும் அதைப் பற்றிய சிறு கதை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.

1879 ஆண்டு. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டு வந்தார்கள். அப்போது ஆங்கிலேயப் படையின் தலைவராக மார்டின் என்ற ஆங்கிலேயர் இருந்தார். அவருடைய குடும்பம் ஆகர்  கிராமத்தில்தான் இருந்தது.  திடீர் என ஒருமுறை மார்டின் ஆப்கான் நாட்டின் மீது ஆங்கிலேயர் தொடுத்து இருந்த யுத்தத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று அங்கு  செல்ல வேண்டி இருந்தது. அவருடைய மனைவி ஆகரில் இருந்தார்.  அந்த காலத்தில் பைஜியநாத் மகாதேவ்   ஆலயம் இருந்தப் கிராமப் பகுதி ஒரு வனம் போலத்தான் இருந்தது. அங்கு ஒரு இடத்தில் பைஜியநாத் லிங்க உருவில் ஸ்வயம்புவாக பிரசன்னமாகி இருந்தாராம். அந்த சிவலிங்கம் எப்போது தோன்றியது என்பது குறித்து யாருக்குமே தெரியாதாம். அதன் காலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பது பண்டிதர்களின் கணிப்பு. அந்த சிவலிங்கத்துக்கு உள்ளூர் மக்கள் தினமும் பூஜைகளை செய்து வழிபாட்டு வந்தார்கள். அங்கு சென்று  அவரை வழிபாட்டு வேண்டிக் கொண்டால் அவர்களது கோரிக்கைகள் நிறைவேறி  பல நன்மைகளையும் அவர்கள் பெற்று இருந்தார்கள் என்பதினால் அந்த ஆலய  சிவன் அந்த கிராம மக்களிடையே பிரபலமாக இருந்துள்ளார். (அப்போது இந்த ஆலயம் சிறு கூரைப் போன்ற இடத்தில்  இருந்ததாகக் கூறுகிறார்கள்). மார்டினின் மனைவி தினமும் அந்த  ஆலயம் உள்ள  இடத்தைக் கடக்கும்போது அங்கு மந்திரங்களை ஒதி  பூஜித்துக் கொண்டு அபிஷேகம் செய்வதை கவனித்து  இருக்கிறார். மந்திரங்களை ஓதி பூஜை செய்து  அபிஷேகம் செய்வதின் மூலம் மக்களுக்கு  என்ன கிடைத்தது என  அவர்  மனதில் கேலியாக நினைப்பாராம்.

ஸ்ரீ பைஜியநாத் மகாதேவ் ஆலயம்,  நல்கேடா 

இந்த நிலையில் ஆப்கான் நாட்டின் மீது ஆங்கிலேயர் தொடுத்து இருந்த யுத்தத்திற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றுச் சென்று இருந்த ஆங்கிலேயரான மார்டின் வாரம் ஒருமுறை அவர் மனைவிக்கு செய்தி அனுப்புவாராம். ஆனால் சில வாரங்களாக அவரிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை என்பதாலும் ஆப்கான் நாட்டில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டு இருந்த நிலையில் பல ஆங்கிலேய படையினர் மரணம் அடைந்தார்கள் போன்ற செய்தியும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததினால் மார்டினிடம் இருந்து எந்த தகவலுமே கிடைக்காத அவர் மனைவி பெரும் கவலையில் ஆழ்ந்தாள்.

இந்த நிலையில் ஒரு நாள் பெரும் மனக் கவலையுடன் இருந்தவள்   இங்குள்ள ஆலயம் வழியே சென்று இருந்தபோது தன்னை அறியாமலேயே அங்கு சென்று மந்திரங்களை ஓதி லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதின் மூலம் அவர்கள் என்ன பயன் அடைந்திருக்கிறார்கள் என்பதை அங்கிருந்த பண்டிதரிடம் கேட்டு உள்ளார்.  அவரும்  அந்த ஸ்ரீ பைஜியநாத் சிவலிங்க  பெருமைகளைக் கூறி அவர்கள் பலரும்  பெற்று இருந்த நன்மைகளை கூற அந்தப் பெண்மணியும் ஆச்சர்யம் அடைந்து, தன்னுடைய கணவரின் நிலைமையை அவரிடம் எடுத்துக் கூறி, அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாமல் தான் கலந்குவதாகக் கண்ணீர் விட்டு அழுதாளாம்.  அடுத்து தன்னுடைய கணவர்  நலமாக வந்து சேர அந்த சிவன் உதவுவாரா என்று அங்கிருந்த பூசாரியிடம் கேட்டு இருக்கிறார். அங்கிருந்த பூசாரியோ உண்மையான பக்தியுடன் ஸ்ரீ பைஜியனாத்தை வேண்டிக் கொண்டால் அவர்  நிச்சயமாக நன்மை செய்வார் என்று கூற, அவளும் தன்னுடைய கணவர் யுத்தத்தில் இருந்து வெற்றிகரமாக திரும்பி வந்து விட்டால் அந்த பைஜியநாத்துக்கு தானே ஆலயம் கட்டிக் கொடுப்பதாக வாக்கு கொடுத்து விட்டு அதற்கான பிரார்த்தனை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டாளாம். பூசாரியும் அவளுக்கு பதினோரு நாட்கள் செய்ய வேண்டிய விரதத்தை கூறி உள்ளார். அவளும் வீடு திரும்பிச் சென்று தனது கணவர் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்பதற்காக தூய பக்தியுடன் அவர் கூறிய விரதத்தை செய்தபடி, மந்திரத்தையும் முறையாக ஓதி வந்தார். விரதத்தின் கடைசி நாளான பதினோராவது நாள் அவரது கணவரிடம் இருந்து ஒரு செய்தி வந்ததாம்.

……தொடரும்