சோழ மன்னர்கள் கட்டிய
சோமேஸ்வரர் எனும்
சிவன் ஆலயம்
சாந்திப்பிரியா
சாந்திப்பிரியா

முன் காலத்தில் இருந்த ஆலயத் தோற்றம்
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பார்கள். அதற்கு எடுத்துக் காட்டாக உள்ளதே சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள ஒருசிறிய சிவன் ஆலயம். ஆலயம் உள்ள இடம் பெங்களூர் நகரின் ஒரு கோடியில் உள்ள ஹுலிமாவு எனும் பகுதியில் உள்ள சோமேஸ்வரர் என்ற சிவன் ஆலயம். ஆலயம். சுமார் இருநூறுக்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ளது அந்த ஆலயம் . அந்த காலத்தில் சோழ மன்னர்கள் இந்தப் பகுதியில் சில முக்கியமான சிவன் ஆலயங்களைக் கட்டி உள்ளனர். அவற்றில் பஞ்சலிங்க சிவன் ஆலயம் (ஹுலிமாவு அருகில் உள்ள பேகூர் பகுதியில் உள்ளது) , இந்த சோமேஸ்வரர் ஆலயம் போன்றவை உண்டு. ஒரு காலத்தில் ஹுலிமாவு என்பது ஒரு கிராமமாக இருந்தது. ஆகவே அங்கு நிறைய நிலங்கள் காடுகளைப் போலவே இருந்துள்ளன. சரியான சாலைகள் கூடக் கிடையாது. ஆனால் அது புண்ணிய பூமியாகவே இருந்து இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக சிறப்பு வாய்ந்த ராமர் ஆலயம், ஹனுமான் ஆலயம் போன்றவையும் இருந்துள்ளன.

ஆலயத்தின் தோற்றம்
இந்த ஆலயத்தின் பின்னணி விவரம் கிடைக்கவில்லை என்றாலும் சோழ மன்னர்கள் கட்டிய ஆலயம் என்பதற்கு மட்டுமே ஆதாரங்கள் உள்ளன. ஆலயத்தில் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வந்துள்ளது. காலப் போக்கில் அந்த இடத்தில் இருந்த சிவ லிங்கத்தை அகற்றிவிட்டு அங்கு கட்டிடம் கட்ட கிராமத்து மக்கள் சிலர் விரும்பினாலும் சிவ லிங்கத்தை எடுக்க முடியவில்லையாம்.

ஆலயத்து சிவலிங்கம் ( சோமேஷ்வர் )
ஆலய பண்டிதரின் கூற்றின்படி சிவ லிங்கம் சுமார் பத்து அல்லது பதினைந்து அடி ஆழமாக புதைந்து இருக்கும் என்கின்றார். அதற்குள் அதைக் கேள்விப்பட்ட சிலர் அங்கு வந்து அந்த ஆலயத்தின் நிர்மாணப் பொறுப்பை தம் கையில் வைத்துக் கொண்டனர். மெல்ல மெல்ல அந்த ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 1990 ஆம் ஆண்டு முதல் அந்த ஆலயத்தை நிர்வாகித்து வருபவர் அந்த ஆலயவளாகளத்திலேயே தங்கி உள்ள திரு பிரகாஷ் பாரத்வாஜ் என்ற பண்டிதர் ஆவார். அவர் அந்த ஆலயத்தின் மகிமைகள் சிலவற்றை குறித்து தன் நினைவலையில் இருந்து நம்மிடம் கூறினார்.
ஒரு முறை ஒரு வியாபாரி தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அதை சரிக்கட்டுவது நடக்ககூடிய காரியமல்ல என நினைத்தவர் மனம் வருந்தியவாறே அந்த ஆலயம் வழியே நடந்து கொண்டு இருந்தபோது ஆலயத்தின் அருகில் வந்தும் உள்ளே செல்லாமல் நினைத்தாராம் ‘ எனக்கு தொழில் நல்லபடியாகி விட்டால் ஆலயத்துக்கு ஏதாவது கைம்மாறு செய்வேன்.’ அடுத்து சில நாட்களிலேயே அவர் நஷ்டத்தில் இருந்த தொழில் ஸ்திரப்பட்டது. அவர் தாமாகவே ஆலயத்தில் வந்து அந்த பண்டிதரை சந்தித்து தன்னுடைய அனுபவத்தைக் கூறிவிட்டு சிவன் தலைக்கு மேல் தண்ணீர் விழுந்தபடி இருக்கும் பாத்திரத்தை அமைத்தாராம். அதுவே இன்றும் உள்ளது.
இன்னொரு வழக்கறிஞ்சருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. ஒருவர் நல்ல வழக்கறிஞ்சர் வேலையில் ஒரு இடத்தில் இருந்தார். ( நினைவு இல்லை . எதோ கம்பனி என நினைகின்றார்) . அவர் வந்து பண்டிதரிடம் தனக்கு தொழில் ரீதியாக ஒரு பிரச்சனை உள்ளதாகவும் அது நல்லபடி முடிய என்ன செய்யலாம் எனவும் கேட்க திரு திரு பிரகாஷ் அவரிடம் திங்கள் கிழமையில் வந்து சோமவார பூஜை செய்து வேண்டிக் கொள்ளுமாறு கூறி இருந்தார். ஆனால் அவர் தன்னைப் பற்றிய முழு விவரமும் தெரிவிக்கவில்லை. பண்டிதர் கூறியது போல அவர் பக்தியோடு திங்கள் கிழமைகளில் வந்து பூஜை செய்து விட்டுப் போனார். ஆறு அல்லது ஏழு வாரம் ஆயிற்று. ஒன்றும் நடக்கவில்லை. பண்டிதரிடம் மீண்டும் அவர் என்ன சாமி ஒன்றுமே ஆகவில்லையே எனக் கேட்டுள்ளார். அவர் ஆறுதல் கூறினாராம், ‘ பகவான் கைவிடமாட்டார். நம்பிக்கையுடன் இன்னும் சில வாரங்கள் செய்யுங்கள் ‘ என்றார். அந்த வழக்கறிஞ்சரும் மேலும் இரு வாரங்கள் செய்துவிட்டு இன்னும் ஒன்றும் ஆகவில்லை சாமி என குறையாகக் கூறி விட்டுச் சென்று உள்ளார். சென்றவர் ஆலய வாயிலில் ஒரு நாகத்தைப் பார்த்து உள்ளார். அது வாழும் நாகம். இன்றும் அந்த ஆலயத்தை பாதுகாக்கும் நாகமாம். ஆனால் அது அவருக்குத் தெரியாது. தவறுதலாக தன்னுடைய தலைக்கு அணியும் ஹெல்மட்டை அந்த ஆலயத்தில் விட்டு விட்டுச் சென்று விட்டார். ஆலயத்தை மூடும் நேரம் வந்தது. பண்டிதர் யாரோ ஒருவர் ஹெல்மட்டை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே எனக் கருதி அதை பத்திரமாக வைத்துவிட்டு ஆலயத்தை மூடச் சென்றபோது அந்த வழக்கறிஞ்சரும் அதை எடுத்துக் கொள்ள அப்போது வந்தார் . அவர் ஆலயத்துக்கு ஹெல்மட்டை எடுத்துக் கொள்ள திரும்பி வரும் வழியில் அவர் கையை விட்டுப் போய் இருந்த வழக்கறிஞ்சர் வேலை மீண்டும் அவருக்கு கிடைத்து விட்டது என்று அவருக்கு ஒரு தொலைபேசி செய்தி வந்துள்ளது. ஆலயத்தில் வந்தவர் பண்டிதரிடம் வந்து அழுதே விட்டார். நடந்தவற்றைக் கூறியப் பின்னர்தான் அந்த நாகம் ஆலயத்தைக் காத்து வரும் வாழும் பாம்பு என்பதையும், அவருக்கு அது காட்சி அளித்து அந்த வேலை கிடைக்க ஆசிர்வாதம் செய்து உள்ளது என்பதும் வழக்கறிஞ்சருக்குப் புரிந்தது.
அந்த நாகம் எங்குள்ளது? எவருக்கும் தெரியாதாம். ஆனால் முன்னர் அங்கு அடிக்கடி கர்பக் கிரகத்துக்குள் பண்டிதர்கள் அமர்ந்து ருத்ரம் ஓதிக்கொண்டு இருக்க பிரதோஷகால பூஜைகள் நடைபெறுமாம். அப்படி நடந்து வந்த பூஜையில் ஒரு நாள் எங்கிருந்தோ எவருக்கும் தெரியாமல் வந்த அந்த நாகமும், இரண்டு பூரான்களும் திரு பிரகாஷ் அவர்கள் முதுகில் ஏறி சிவலிங்கத்தின் பின்னால் சென்று உள்ளது. பூஜை செய்து கொண்டு இருந்தவர் தன் முதுகில் எவரோ ஏறி சென்றது போல உள்ளதே என்பதை கவனித்து விட்டு பார்த்தபோதுதான் அவை அந்த நாகமும் பூரானும் என்பது தெரிந்ததும் பயந்து போய் பூஜையில் இருந்து வெளியில் ஓடி வந்துவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பாம்பு கர்பக்கிரகத்தில் இருந்த சிறு துவாரத்தின் மூலம் வெளியில் சென்று விட்டதாம். அதன் பிறகு அதே பாம்பு அந்த ஆலயத்தில் சுற்றுவதை அவர் பார்த்து உள்ளாராம். வேறு சிலரும் அதைப் பார்த்து உள்ளனராம். அது ஆலயத்தைப் பாதுகாக்கும் நாகமே அது என்று நம்புகிறார்கள். ஆலயம் சிறிய அளவில் இருந்தாலும் இவற்றைக் கேட்கும்போது பக்தியினால் நம் இதயம் படபடக்கின்றது.