காத்தாயி அம்மன் எனும் 
வள்ளி தேவி முருகனை  
மணந்த   கதை
சாந்திப்பிரியா

வள்ளி மற்றும் தெய்வயானையுடன் முருகன்

வள்ளி வளர்ந்து பெரியவளாகத் துவங்கினாள். அவளுக்கு வயல்வெளிகளில் பாதுகாக்கும் வேலையை அந்த வேடுவர்கள் தந்தனர். அவள் வயலில் உள்ள பரண் மீது அமர்ந்து கொண்டு அங்கு தானியங்களை தின்ன வந்த பறவைகளையும் மிருகங்களையும் விரட்டி அடித்தாள். இப்படியாக அவள் அப்படிப்பட்ட வாழ்கையில் இருந்தபோது அந்த இடங்களில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்த முருகப் பெருமான் தற்செயலாக ஒருநாள் அவளை பார்த்தார். அவளுடைய அழகில் அவர் மயங்கினார். அவள் மீது தான் ஒருதலை பட்சமாக காதல் கொண்டு அங்கு ஒரு வேடன் போன்ற உருவில் அடிக்கடி வரத் துவங்கினார். அப்போது ஒரு நாள் ஒரு பிராணியை துரத்திக் கொண்டு வந்ததைப் போல வள்ளியிடம் சென்றார். முன்பின் அறியாதவர் வந்துவிட்டாரே என திகைப்புற்று அவரை யார் எனக் கேட்டாள் வள்ளி. அவர் தான் ஒரு வேடன் எனவும் அங்கு வேட்டை ஆட வந்தவர் எனவும் கூறிக் கொண்டார். இப்படியாக வேட்டை ஆடும் சாக்கில் அவர் தினமும் அங்கு வந்து ஏதாவது பேச்சுக் கொடுக்க இருவரும் நண்பர்கள் ஆயினர். சில நாட்களில் முருகனோ தன்னை மணந்து கொள்ளுமாறு அவளை வற்புறுத்தத் துவங்கினார். ஆனால் வள்ளிக்கு உள்ளூர பயம். அவரை தனக்கு நம்பி மணமுடிபபாரா என்ற பயம் வந்தது .

ஒரு நாள் அவர்கள் தம்மை மறந்து பேசிக்கொண்டு இருக்கையில் நம்பி தனது வேட்டை ஆட்களுடன் அந்த இடத்துக்கு வந்துவிட்டார். அவர் வருவதைக் கண்ட முருகனோ தன்னை ஒரு மரமாக ஆக்கிக் கொண்டு அங்கு நின்றார். வந்தவர்கள் சென்றதும் வள்ளி அவர் எங்கு சென்றுவிட்டார் என அனைத்து இடங்களிலும் தேட அவர் அவளுக்குத் தெரியாமல் மீண்டும் வேட உருவில் மாறினார். இன்னும் சில நாட்கள் சென்றன. இன்னொரு முறை அவர்கள் தனிமையில் உரையாடிக்கொண்டு இருந்தபோது நம்பி வந்துவிட முருகன் தன்னை ஒரு வோடானவர் உருவில் மாற்றிக் கொண்டு தப்பித்தார். இப்படியாக மீண்டும் மீண்டும் வந்து தன்னை மணமுடிக்குமாறு முருகன் வற்புறுத்த அவள் மறுத்தாள் . தான் முருகனை கணவராகப் பெற வேண்டும் என்ற நினைப்புடன் இருப்பதினால் தன்னால் அவரை மணக்க முடியாது என்றாள்.  ஆகவே முருகன் ஒரு நாள் வயதான கிழவர் போல அங்கு வந்தார். அப்போது முன்னரே ஏற்பாடு செய்து வைத்திருந்தபடி தன்னுடைய சகோதரர் விநாயகரை யானைப் போன்று உருவில் வரவழைத்து அவளை துரத்தினார். அவள் பயந்துபோய் முதியவரிடம் சென்று பயத்தினால் அவரை கட்டிக் கொண்டு உதவி கேட்க அவர் தன்னை மணந்து கொண்டாள் மட்டுமே அவளை காப்பாற்றுவேன் என்று கூறி தன்னுடைய உண்மையான உருவைக் காட்டினார்.

அதன் பின் இருவரும் மணந்துகொள்ள முடிவு செய்து ஓடிப்போக நம்பி அவர்களை தன் படையுடன் வந்து துரத்தினார். ஆனால் முருகனோ அவர்களுடன் சண்டைப் போட்டு அவர்களை சில நிமிடங்களிலேயே மரணமடைய வைக்க வள்ளி அவர்களுக்கு உயிர் பிச்சைக் கேட்டாள். முருகன் அவளுடைய வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு உயிர் கொடுக்க அவர்கள் அனைவரது சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் வள்ளிமலையில் முருகன் வள்ளியை மணந்து கொண்டார்.

உண்மையில் வள்ளியும் தெய்வயானையும் முன் பிறவியில் இரட்டையர்களாகப் பிறந்த சகோதரிகளாம்.  அமுதவல்லி மற்றும் சுந்தரவல்லி என்ற அவர்கள் விஷ்ணு பகவானின்  கண்களில் வடிந்த நீரில் பிறந்தவர்கள்.  அவர்கள் இருவருமே  சிறிதும் கோபமே வராத கணவனை மணக்க விரும்பினார்கள். அந்த குணங்களைக் கொண்ட முருகனைப் பார்த்த அவர்கள் அவரையே மணக்க விரும்பினார்கள். அவரிடம் சென்று தமது மனதை வெளிப்படுத்தியபோது அவர் அவர்கள் இருவரும்  அமுதவல்லி தேவேந்திரனின் மகளாக தேவலோகத்தில் பிறக்க வேண்டும் எனவும்,  சுந்தரவல்லி பூலோகத்தில் பிறக்க வேண்டும் எனவும் அங்கு இருந்து தன்னை  வழிபட்டால் தாம் அவர்களை மணப்பேன் எனவும் கூறினார்.  ஆகவேதான் இருவருமே அடுத்தப் பிறவியில் இச்சா  சக்தி மற்றும் க்ரியா சக்திகள் என முருகனையே மணந்து கொண்டனர் என்று ஒரு  கதை உள்ளது .