கடன் தொல்லைகளை
தீர்க்கும் தலம்
சாந்திப்பிரியா
  ஞானாம்பிகை சமேத ரினவிமோச்னீஸ்வரர் 

திருவாரூர், கும்பகோணம் செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து பதினைத்து கிலோ தொலைவில் உள்ளது  ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சிவன் ஆலயம். அதை கடன்களை நிவர்த்தி செய்து தரும் ஆலயம் என்றே அழைகின்றார்கள். அந்த ஆலயம் உள்ள இடம் திருச்சேரி என்ற கிராமம். அந்த ஆலயத்தை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள கடன்களை நிவர்த்தி செய்து கொள்ள வந்து வணங்கும் ஆலயம் என்று கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஜென்மத்திலும் பிறக்கும்போதே அவரவர் பித்ருக்கள், சில ரிஷி முனிவர்கள், மற்றும் சில தெய்வங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் கடன்பட்டு உள்ளார்கள் . அவற்றினால் ஏற்படும் தோஷங்கள் களைந்தால்தான் மறு ஜென்மம் ஏற்படாது என்பது மட்டும் அல்ல இந்த ஜென்மத்திலும் வாழ்கை சுமைகள் குறைந்து மன நலத்தோடு வாழ முடியும் என்பதே உண்மை. அந்த தெய்வ மற்றும் ரிஷி முனிவரின் கடன் பாக்கிகளே  நமக்கு பல விதங்களிலும் தொல்லை தருகின்றது. அவற்றில் ஒன்றே வறுமை, கடன் போன்றவை. ஆகவே இந்த ஆலயத்தில் சென்று ரினவிமோச்னீஸ்வரர் எனும் கடன் நிவர்தீஸ்வரர் எனும் லிங்கத்தை வணங்கித் துதித்தால் பூர்வ ஜென்ம கடன்கள் மட்டும் அல்ல இந்த ஜென்மத்தில் அதனால் ஏற்படும் வறுமை ஒழியும், பட்டுள்ள கடன்களும் குறையும் என்கிறார்கள் .

இந்த ஆலயம் எப்படி உருவானது. முன்னொரு காலத்தில் மார்கண்டேய முனிவர் என்பவர் இந்த இடத்தில் வந்து தங்கி இருந்து தவம் செய்து வந்தார். அப்போது ஏற்பட்ட வறட்சியின் காரணமாக அந்த பூமியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் மடிந்தனர். பலர் உணவு கிடைக்காமல் தவித்தனர். ஆகவே அங்கு இருந்த மார்கண்டேய முனிவர் ஒரு சிவலிங்கத்தை அங்கு வடித்து , அந்த மக்களின் வறுமை ஒழிந்து அவர்கள் நலமாக இருக்க உன் அருளே வேண்டும் என சிவபெருமானை அவர்களுக்காகத் துதித்தார். சிவபெருமானும் அவருடைய கோரிக்கையை ஏற்று அந்த பூமியை மீண்டும் வளமிக்க பூமியாக்க மக்களின் துயரம் அகன்றது. அதன் விளைவாக மார்கண்டேய முனிவர் வழிபட்ட லிங்கம் இருந்த இடமே குலோத்துங்க சோழனினால் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆலயமாக கட்டப்பட்டது .

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்து சிவ லிங்கம்

ஆலயத்தில் ரினவிமோச்னீஸ்வரருடன் ஞானவல்லி என்ற பெயரில் பார்வதியும் உள்ளாள். தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் பைரவருக்கும் சன்னதிகள் உள்ளன. அந்த ஆலயத்தில் உள்ள கடன் நிவர்தீஸ்வரர் எனும் லிங்கத்தை பதினோரு திங்கள் கிழமைகள் வழிபட்டால் கடன் தொல்லைகள் நிச்சயமாகக் குறையும் என்று கூறுகிறார்கள். பதினோரு திங்கள் கிழமைகள் அங்கு செல்ல முடியாதவர்கள் ஆலயத்துக்கு பணம் அனுப்பி பத்து திங்கள் கிழமைகள் பூஜை செய்யச் சொல்கிறார்கள். பதினோராம் திங்கள் கிழமை அங்கு சென்று சாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டுகோளை முடித்துக் கொள்கிறார்கள். பத்து வாரமும் பூசைப் பிரசாதங்களை வேண்டுதல் செய்பவர்களுக்கு தபாலில் அனுப்புகிறார்கள். கடன் தொல்லைகள் குறைய மட்டும் அல்ல குழந்தை பேறு பெறவும், படிப்பில் மேன்மை கிடைக்கவும் வேண்டுதல் செய்கிறார்கள். ஆலயத்தின் அருகில் பிந்து சார தீர்த்தம், மார்கண்டேயர் குளம் போன்ற புனிதமான நீர்நிலைகளும் உள்ளன. ஆலய விலாசம் மற்றும் தொடர்பு கொள்ள :-

Sri S. Sundaramoorthy Gurukkal
2/45-B, South Street,
Thirucherai – 612 605.
Kumbakonam. (T.K)
Cell: 94426 37759
94437 37759