இலங்கை கதிர்காம 
ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு

சாந்திப்பிரியா

பாகம்-1

ஆதி காலத்தில் ஸ்ரீ லங்கா என்று இன்று அழைக்கப்படும் அன்றைய இலங்கை, தென் இந்தியாவுடன் சேர்ந்திருந்த ஒரு நிலப் பகுதியாக இணைந்தே இருந்துள்ளது. ஆனால் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட கடல் வெள்ளத்தினால் இலங்கையின் தற்போதைய நிலப்பரப்பு தென் இந்தியப் பகுதியில் இருந்து வெட்டுப்பட்டு தனி நிலப்பரப்பாகி தென் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஓடிய கடல் நீரினால் ஒரு தனித் தீவாகி விட்டது. அந்த நிலை ஏற்படும் வரை நிலப்பரப்பு வழி மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த மக்கள் ஒருவருக்கொருவருடன் தொடர்ப்பு கொண்டு இருந்தார்கள். அதனால் அந்த காலத்தில் இரு பகுதிகளிலும் இருந்த ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களுக்கு இரு நாட்டு மக்களாலும் தாராளமாக சென்று கொண்டு வர முடிந்தது.
ஸ்ரீ லங்காவில் கிடைத்த சில கல்வெட்டு செய்திகளின்படி கிருஸ்துவர்கள் இந்த தீபகற்பத்துக்கு வருவதற்கு முன்னரே முருகப் பெருமான் ஸ்ரீ லங்காவில் ஸ்கந்தன் என்றும் கதிர்காமன் என்றும்  வழிபடப்பட்டு வந்துள்ளார். பத்தாம் நூற்றாண்டுகளில் இருந்த இலங்கை அரசாட்சியினர் ஸ்கந்த முருகனை தமது நாட்டை காக்கும் கடவுளாகவே ஆராதித்து வந்துள்ளனர். அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என நம்பப்படும் கதிர்காமனுக்கும் நிலப்பரப்பு மூலம் வந்து மக்கள் முருக வழிபாடு செய்துள்ளார்கள்.
கதிர்காமம் என்பது இலங்கையில் கொழும்பு நகரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம். ஸ்ரீ லங்காவின் தென்பகுதியில் அம்பான்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிர்காமம் எனும் வனப் பிரதேசம். கதிர்+ காமம் எப்ன்பதே கதிர்காமனாயிற்று. கதிர் என்றால் சூரியன் என்றும் காமம் என்றால் அன்பு என்றும் கூறுகிறார்கள். ஆகவே சூரிய பகவான் விரும்பிய இடம் என்பதால் இது கதிர்காமம் என ஆயிற்று என்றும், காமம் என்றால் கிராமம் என்று அர்த்தம் வருவதினால் நெல் கதிர் போன்ற பயிர்கள் விளைந்த கிராமம் என்பதினால் கதிர்காமம் என ஆயிற்று என்றும் கூறுகிறார்கள்.
கதிர்காமத்தில் உள்ள கதிர்காமன் எனும் முருகன் ஆலயம் புகழ் பெற்ற, மெத்த மகிமை வாய்ந்த ஆலயம் என்றாலும் அது குறித்து உலகெங்கும் உள்ள மக்களுக்கு அதிகம் தெரியவில்லை. அந்த காலத்தில் இருந்து வந்த சாஸ்திர முறை வழிபாடுகளும் சமூகத்தில் விளங்கி வந்த பிராமணர்களின் ஆதிக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால் அந்த காலங்களில் முருகனை பிராமணர்கள் தமது கடவுளாக ஏற்றது இல்லை என்பது உண்மை. முருகன் பிராமணர்கள் அல்லாதவர்களின் அதாவது திராவிட மக்களின் கடவுள் எனக் கருதப்பட்டு வந்திருந்தார். காலப்போக்கில் அந்த எண்ணம் மாறி அனைத்து சமூகத்தினராலும் ஏற்கப்பட்டவர் முருகன் என்பது ஆனாலும் அந்த காலத்தில் இருந்த உண்மை நிலையைக் கூறாமல் இருக்க முடியாது. அந்த காரணத்தைத் தவிர  இலங்கை தனி தீபகற்பம் ஆனபின் கடல் கடந்து செல்வது சாஸ்திர முறைக்கு மாறானது என நம்பிய அந்தணர்கள் முருகனை இந்தியாவில் இருந்த ஆறுபடை வீடுகளில் மட்டுமே ஆராதிக்கத் துவங்கி அதிகபட்சமாக திருச்செந்தூர் முருக ஆலயம் இருந்த கடல் பகுதிவரை மட்டுமே சென்று வந்துள்ளார்கள். அதனாலும் கதிர்காம யாத்திரை குறையத் துவங்கி அந்த ஆலயம் மக்களால் அதிகம் அறியப்படாமல் இருந்துள்ளது.
ஸ்ரீ லங்காவின் முருக வழிபாட்டு முறைகளை ஆராய்ந்தோம் எனில் ஸகந்த-முருகன் ஆலயங்களில் புகழ் மிக்கதும் புனிதமான ஆலயம் என்ற பெருமையையும் கதிர்காமன் ஆலயமே பெறுகின்றது. கதிர்காமனை பற்றிய பல பக்தித் தோத்திர நூல்களும் தலப் புராணப் புத்தகங்களும் தமிழில் உள்ளன. அவற்றில் பல புத்தகங்கள் முறையாக எழுதப்படவில்லை என்பதினால் கதிர்காமனை பற்றிய வரலாற்றுச் செய்திகளை முழுமையாகவும் சரியாகவும் தமிழ் மக்களினால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படி எழுதப்பட்ட நூல்களில் மிகப் பழமையானதும், 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகவும் கூறப்படும்  அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமே சைவ தமிழர்கள் கதிர்காமனை அறிந்து இருந்தார்கள் என்பதையும் அது ஒரு முருக வழிபாட்டுத் தலமாக இருந்தது என்ற உண்மை நிலையும் தெரிய வருகின்றது. அருணகிரிநாதரின் ‘திருப்புகழில்’ கதிர்மானனைப் போற்றும் பதினாறு பாடல்கள் (செய்யுட்கள்) உள்ளன.  கதிர்காம முதுர் என்று அழைக்கப்பட்ட  கதிர்காமம் மிகப் பழமையானது. அந்த காலத்தில் முருக வழிபாட்டுத் தலத்தின் யாத்திரையை மேற் கொண்ட பக்தர்கள் இந்தியாவின் மற்ற இடங்களில் இருந்த ஆலயங்களுக்கு சென்ற பின் மிக முக்கியமான ஆலயம் என கருதப்பட்ட கதிர்காமனுக்கும் சென்றுள்ளனர்.
அருணகிரிநாதரின் திருப்புகழ் என்ற நூலில் முருகப் பெருமான் கதிர்காமனில் மலை உச்சியில் வசிப்பதாக எழுதப்பட்டு இருந்ததில்  ‘கதிரமலை’ என்ற அது புகழ் மிக்கத் தலமாக அவருடை காலத்தில் இருந்து இருக்கின்றது என்பது புரியும். திருப்புகழ் இயற்றப்பட்ட காலத்தின் பொழுது முருகன் வேடர் குலப் பெண்ணுடன் அந்த மலையில் இருந்ததாக நம்பப்பட்டது.  கதிர்காமனில் உள்ள முருகனின் ஆலயம் எழுந்த கதையும், வழிபாட்டு முறையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
……….தொடரும்