தெரிந்த ஆலயம் – பலரும் அறிந்திராத தல வரலாறு – 3
சென்னை தேனாம்பேட்டை
ஆலையம்மன் ஆலயம்
சாந்திப்பிரியா


முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும் மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து கடற்கரைவரை தோப்புக்களும் மரங்கள் அடர்ந்த பகுதிகளுமாக இருந்தனவாம். அப்போதெல்லாம் அங்கு ஒரு பெரிய ஏரியும் உண்டாம். மக்கள் அந்த ஏரியில்தான் சென்று குளிப்பதும் மற்றவற்றை செய்வதும் உண்டாம். அதன் ஒருபுறம் வண்ணான்கள் துணிகளைத் துவைப்பார்கள். அதனால்தான் இன்றும் அந்த பகுதியில் ஒரு இடத்தில் வண்ணான்துறை உள்ளது. அந்த ஆலயம் பற்றிய கதை ஆலயத்தில் பெரியதாக எழுதி வைக்கப்பட்டு உள்ளது.
அப்படிப்பட்ட காலத்தில் ஒரு வண்ணான் தினமும் அந்த ஏரியின் படியில் துணிகளைத் துவைத்து எடுத்து வருவான். ஒரு முறை பெரும் மழையினால் ஏரி நிறம்பி வெள்ளமே வந்து விட்டது. தொழிலை அதற்காக விட்டு விட முடியுமா? வண்ணான் எப்போதும் போல அங்கு துணிகளைத் துவைக்கச் சென்றான். துணிகளை அடித்துத் துவைக்க படிகளும் இல்லை. வெள்ளத்தில் முழுகி இருந்தது. என்ன செய்வது என திகைத்து இருக்கையில் அந்த ஏரியின் தண்ணீரில் ஒரு பெரிய பாறை மிதந்து வருவதைக் கண்டான். நீந்திச் சென்று அதை கரைக்கு இழுத்து வந்து அதன் மீது துணியைத் துவைக்கத் துவங்க துணியில் இரத்தக் கறைகள்……….பயந்து போனவன் தன் முகத்தை துடைத்துக் கொள்ள அதிலும்; இரத்தம். அடுத்து மூக்கு, காது, வாய் என அவன் உடலில் இருந்து இரத்தம் பெருக்கிட மயங்கி கரையருகில் விழுந்து விட்டான்.
அதே நேரத்தில் அற்த ஊர் நாட்டாண்மையார் வீட்டில் இருந்த ஒரு பெண்மணிக்கு சாமி வந்து ஆடினாள். ‘உன் ஊரைக் காக்க வந்த என் மீதா துணிகளைத் துவைக்கிறாய்…..போ…போய் என்னை எடுத்து வந்து அந்த வண்ணான் கையினால் ஆலயம் அமைத்திடு’ எனக் கத்தத் துவங்க, எவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவளை சாந்தப்படுத்தி அமர வைத்து ஊராரை அழைத்துக் கொண்டு ஏரிக்கரைக்குச் சென்று பார்த்தால் வண்ணான் மயங்கிக் கிடந்ததைக் கண்டனர். அவனை தண்ணீரில் இருந்து வெளியில் இழுத்து வந்து என்ன நடந்தது எனக் கேட்க அவன் தனக்கு நடந்ததைக் கூறினான். ஆனால் துணியிலோ, அவன் உடம்பிலோ இரத்தக் கறைகளே இல்லை. அந்த பாறையும் காணப்படவில்லை. அழகிய அம்மனின் சிலையே பாறைப் போலக் கிடந்தது. மீண்டும் அதே பெண்மணிக்கு அங்கும் சாமி வந்தது. ‘மைந்தா, உன்னைதான் எனக்கு ஆலயம் அமைக்கத் தேர்ந்து எடுத்தேன். போ……….போய் அந்த சிலையை எடுத்து வந்து எனக்கு ஆலயம் அமைத்திடு’ எனக் கூற ஊரார் மீண்டும் கூடி விவாதித்தப் பின் அந்த சிலையை எடுத்து வந்து தற்போது தேனாம்பேட்டையில் அந்த ஆலயம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்தனர். அவள் அலைமீது மிதந்து வந்ததினால் அலை அம்மன் என அழைக்கப்பட்டு பின்னர் அவள் ஆலையம்மன் என மருவினாள்.
ஆலயம் அண்ணா சாலையில் தேனாம்பேட்டையில் தியாகராஜ நகர் செல்லும் திருப்பத்தில் உள்ளது. ஆலயத்தில் அர்த்த மண்டபம், நவக்கிரகம், வினாயகர்ää சுப்ரமண்யர், நாகதேவதைகள் என அனைவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. தேனாம்பேட்டையில் மிகப் பிரபலமான அந்த ஆலயம் எழுந்த காலம் தெரியவில்லை. ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறுகிறார்கள்.
