தக்ஷிண கர்னாடகாவின் சிர்சீயில் 
இரண்டு அற்புத ஷேத்திரங்கள்
சாந்திப்பிரியா

உத்தர கர்னாடகா  மானிலத்தில் உள்ளது சிர்சீ எனும் சிறிய ஊர். ஹூப்ளி அல்லது சிமகோடாவின் அருகில் உள்ள இந்த ஊருக்கு பெங்களூரில் இருந்தும் செல்லலாம். பெங்களூரில் இருந்து சிர்சீ சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ரிகாம்பா ம்

சிர்சீயில் சில முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மரிகாம்பா தேவியின் ஆலயம் . 1611 ஆம் ஆண்டு ஒரு குளத்தில் மூழ்கிக் கிடந்த ஏழு அடி உயர மரத்திலான மரிகாம்பா சிலையை சோன்டாவை சேர்ந்த மன்னன் வெளியில் எடுத்து அதற்கு ஒரு ஆலயம் அமைத்தார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்த ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருடாந்திர விழா நடை பெறுகின்றது. அந்த விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

ஆலய விழா ஏழு நாட்கள் நடைபெறுகின்றது. மேரி என்றால் பயன்கரமானவள் மற்றும் காம்பா என்றால் காப்பற்றுபவள் என்றும் அர்த்தம் உள்ளதினால் பயங்கரமான தோற்றத்தை உடைய அவள் அவளது பக்தர்களை கருணையுடன் காத்து அருள்பவள் என்பதினால் அவள் பெயர் மரிகாம்பா என ஆயிற்றாம். பெருமளவிலான மரிகாம்பாவின் பக்தர்கள் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் உள்ளார்கள். அவளை அங்குள்ளவர்கள் தமது குல தெய்வமாக ஏற்று உள்ளார்கள். ஆலயத்தில் மரிகாம்பா எட்டுக் கைகளைக் கொண்டு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இந்த ஆலயம் பற்றிய ஒரு கிராமியக் கதை உள்ளது. அதன்படி அசாத்தி எனும் ஒரு வணிகன் ஒவ்வொரு ஆண்டும் சந்த்ரகுட்டி எனும் இடத்தில் இருந்த ஒரு ஆலய விழாவிற்குச் சென்று கொண்டு இருந்தார். ஆனால் அவரை அங்குள்ள மற்ற வணிகர்கள் தொந்தரவு செய்து கொண்டு இருந்ததினால் அவர் ஒரு ஆண்டு அங்கு செல்லாமல் சிர்சீவரை சென்று வியாபாரம் செய்துவிட்டு வந்தார். அப்போது ஒரு நாள் அவர் கனவில் மரிகாம்பா தோன்றி தான் சிர்சீயில் உள்ள ஒரு குறிப்பிட்ட குளத்தில் முழுகிக் கிடப்பதாகவும், தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைக்குமாறும் கூறினாள். அதை அந்த வணிகன் ஆலய தலையாரியிடம் கூற அவரும் அந்த குளத்துக்கு ஊர் மக்களுடன் சென்று அந்த குளத்தில் முழுகி இருந்த சிலையை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்தாராம்.

மரிகாம்பாவை பரசுராமரின் தாயாரான ரேணுகா தேவி மற்றும் மாரியம்மனின் அவதாரம் என்றும், துர்க்கை மற்றும் மகாலஷ்மியின் அவதாரம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலய முகப்பு கருத்த ரோஜாப் பூ போன்ற வண்ணமயமாக உள்ளது. முக்கியமாக கவி எனப்படும் வர்ணக் கலைக் கொண்டு இது அமைந்து உள்ளது. அதில் நுழைந்தவுடன் உள்ள பெரிய கூடத்தில் பல ஓவியங்கள் கவி ஓவியக் கலையில் வரையப் பட்டு உள்ளது. அதைத் தாண்டிச் சென்றால் வருவதே மரிகாம்பாவின் சன்னிதானம். ஒரு சிலர் இந்த ஆலயத்தை விஸ்வகர்மா எனும் பிரிவினர் அமைத்துள்ளதாகக் கூறுகிறார்கள். அவர்களே மர வேலைபாடுகளில் கை தேர்ந்தவர்கள்.

இந்த அன்னையிடம் சென்று வேண்டி வணங்கினால் குறைகள் தீரும் என்றும், அம்மை, காலரா மற்றும் வைசூரி போன்ற நோய்கள் அண்டாது என்றும் கூறுகிறார்கள்.

ஸ்லிங்ஷேத்திம் 
 
 
அது போல சிர்சீயில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சஹஸ்ர லிங்க ஷேத்திரம் . அங்குள்ள ஷல்மாலா எனும் நதியில் மூழ்கிக் கிடக்கும் பாறைகள் முழுவதும் லிங்கங்கள் மற்றும் நந்தியின் உருவத்துடன் கூடிய லிங்கம் போன்றவை செதுக்கப்பட்டு உள்ளது அதிசயமான காட்சியாகும்.  அதை சிவராத்திரி தினங்களில் மக்கள் வந்து தரிசிக்கின்றார்கள். இந்த சிவலிங்கப் பாறைகளின் காலம் 1500 வருடங்களுக்கு முன்பானது என்று கூறுகிறார்கள். அதை எதற்காக வடிவமைத்து உள்ளார்கள் அல்லது அதை வடிவமைத்தவர் யார் என்ற சரியான விவரமும் தெரியவில்லை. அநேகமாக அங்கு எதோ ஒரு ஆலயம் அமைக்கப்பட இருந்தது என்றும் அந்நியர்களின் படையெடுப்பினால் அவை கட்டப்படாமல் நதியில் மூழ்கிக் கிடப்பதாகவும் கருதுகிறார்கள். சஹாஸ்ர என்றால் ஆயிரம் என்றுப் பொருள். ஆனால் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவு சிவ லிங்கங்கள் காணப்படுவதினால் இந்த இடத்தின் பெயரே சஹஸ்ரலிங்க ஷேத்திரம் என அமைந்து விட்டது.
 
 படங்கள் பல இணையதளங்களில் இருந்து கிடைத்தவை. அவற்றுக்கு நன்றி