முன்னர் ஒருகாலத்தில் தம்பலகமத்தில் உள்ள இடங்களில் காணப்படும் வயல்வெளிகள் செழிப்பானவையாக இருந்தன. மழைக் காலங்களில் அந்த வயல்வெளிகள் அனைத்துமே தண்ணீரில் மூழ்கி அவை ஒரு வெள்ளக் காடாக இருக்குமாம். இதனால் தம்பலகமத்தில் வருடம் முழுவதுமே விளை நிலங்களில் தானியங்கள் பயிரிடப்பட்டது இல்லை. கோடை காலங்களில் மட்டுமே வயல்களில் தானியங்களை பயிரிடுவார்களாம். கோடைக் காலத்தை விடுத்து பிற காலத்தில் அதுவும் முக்கியமாக மழைக் காலங்களில் வேட்டை நாய்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள காடுகளில் சென்று காட்டு மான் மற்றும் சிறிய மிருகங்கள் போன்றவற்றை வேட்டை ஆடுவார்கள்.
அந்த வனப் பிரதேசங்களில் வேட்டை நாய்களின் துணை இல்லாமல் வேட்டை ஆடப் போகமாட்டார்கள் என்பதின் காரணம் வேட்டை நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் என்பதினால் ஈரத் தரைகளில் வயல்களில் இருந்து ஓடிச் செல்லும் காட்டு மான்களின் பாத சுவடுகளை பின்பற்றிச் சென்று அவை ஒளிந்துள்ள இடத்தைக் கண்டு பிடித்து கொடுக்கும். அவற்றை வேட்டையாடுபவர்கள் தமது துப்பாக்கிகளினால் சுட்டு மிருகங்களை எடுத்து வந்து உண்பார்கள். அதில் ஒரு சிக்கல் என்ன என்றால் காட்டு மான்களின் பாத சுவட்டை தவற விட்டு விட்டு விட்டால், திரும்ப வழி தெரியாமல் வனத்தில் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆகவேதான் வேட்டை நாய்களுடன் மட்டுமே போவார்கள். அந்த நாய்களுக்கு மட்டுமே போகும் வழியும் திரும்ப வரும் வழியும் நன்கு தெரியும். மேலும் அப்படி வேட்டைக்குச் செல்பவர்கள் தனியாக செல்ல மாட்டார்கள். ஒரு குழுவாக ஒன்று சேர்ந்தே செல்வார்கள். இதுதான் அங்கிருந்த மக்களின் பொதுவான வாழ்கை நிலையாக இருந்து வந்துள்ளது.
போர்த்துகீசியர்கள் கோணேஸ்வரர் ஆலயத்தை இடித்து விட்டுச் சென்றபோது அங்கிருந்த பக்தர்கள் மூல மூர்த்தியை இரவோடு இரவாக எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று தம்பலகமத்தில் இருந்த கழனி மலை என்ற ஒரு ஒரு மலை உச்சியில் வைத்து ரகசியமாக வழிபட்டார்கள். அதன் பின் அந்த பக்தர்களும் எங்கேயோ சென்று விட்டப் பின் அல்லது மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ஆலயம் இருந்த இடம் யாருக்குமே தெரியாமல் இருந்தது. பல காலம் பொறுத்து அந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க பலரும் பெரும் அளவிலான முயற்சி செய்து ஆலயம் இருந்ததாக கூறப்பட்ட மலை சிகரத்தை மட்டுமே, அதுவும் வெகு தொலைவில் இருந்து மட்டுமே கண்டு பிடித்தார்கள். ஆனால் எவராலும் அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதற்குக் காரணம் அந்த மலை உச்சிக்குப் ஏறிப் போவதும் மிகக் கடினம், பாதையும் விளங்காமல் இருந்தது என்பதே. ஆகவே அந்த ஆலயத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் அநேகமாக அனைவருமே தோல்வியுற்று அதை மறந்தும் விட்டிருந்தார்கள். அப்படிப்பட்ட காலத்தில்தான் ஒரு சிவபக்தருக்கு ஒரு அதிசய அனுபவம் அந்த காட்டுப் பிரதேசத்தில் காட்டு மான் வேட்டை ஆடச் சென்றபோது நேரிட்டதாம் . இந்த சம்பவத்தை சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்மஜோதி என்ற ஒரு புத்தகத்தில் கழனி மலையில் நடந்த அற்புதம் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த சம்பவமும் எழுதப்படுகிறது.
மயில்வாகனார் எனும் ஒரு சிவபக்தர் ஒருநாள் மதியம் தனது நண்பர்களுடைய வற்புறுத்தலின் காரணமாக அந்த அடர்ந்த வனத்துக்கு வேட்டை ஆடச் சென்று இருந்தபோது அடர்ந்த காட்டு மத்தியில் வழியையும், நண்பர்களையும் தவற விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார். எங்கு சென்று விட்டோம் என்பதும் அவருக்கு தெரியவில்லை. அவர் எங்கோ சென்று விட்டிருந்ததும் வேட்டையில் மும்முரமாக இருந்த அவருடைய நண்பர்களுக்கு தெரியவில்லை. அதனால் மயில்வாகனனார் எத்தனைக் குரல் எழுப்பியும் அவரால் அவர் நண்பர்களையோ அல்லது வேட்டை நாயையோ அருகில் அழைக்க முடியவில்லை. இருட்டத் துவங்கியதும் பயமாகி விட்டது. அங்காங்கே காட்டு விலங்குகளின் ஓசையும் பயத்தை அதிகப்படுத்த என்ன செய்வது என முழித்துக் கொண்டு இருந்தவர், ஒரு உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். பசியும் வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. நாடு ஜாமம் ஆகியது.
பயத்தினால் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடியே மரத்தின் மீது அமர்ந்திருந்தவர் தன்னை மறந்து கண் அயர்ந்தார். அப்படியே மரத்தின் மீது அமர்ந்து இருந்தவர் திடீர் என மத்தள ஓசையைக் கேட்டு முழித்தார். தூரத்தில் சிலர் மத்தளத்தை அடித்தவாறும், கையில் விளக்குகளுடன் அந்த மரத்தின் பக்கமாக வந்து கொண்டு இருந்தார்கள். அவருக்கு சற்று உயிர் வந்தது. அவர்களை உதவி கேட்டு தன் ஊருக்கு செல்லலாம் என நினைத்தவாறு அந்த ஊர்வலம் மரத்தின் அருகில் வந்ததும் அவசரம் அவசரமாக கீழே இறங்கினார். கீழே இறங்கியவர் அதிசயித்து நின்றார். அந்த மனிதர்கள் பொன் மேனியுடன் இருந்தார்கள். யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. மெளனமாக எதோ உச்சரித்தபடியே நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுக்க மயில்வாகனனார் முயன்றாலும் அவர்கள் அவரை லட்சியமே செய்யாமல் நடந்து கொண்டு இருந்தார்கள். ஆகவே வேறு வழி இன்றி எங்குதான் செல்கிறார்கள் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றார்.
அவர்கள் அனைவரும் காட்டின் மத்தியில் அமைந்து இருந்த ஒரு ஆலயத்தில் நுழைந்தார்கள். அவரும் அதில் நுழைந்தார். என்னே அவர் கண்ட அந்தக் காட்சி!! ஆலயத்தில் இருந்த சிவலிங்கத்தை பூஜித்துக் கொண்டு இருந்தார் ஒருவர். அனைவரும் அந்த பூஜையில் பக்திபூர்வமாக கலந்து கொண்டார்கள். மயில்வாகனனாரும் அந்த பூஜையில் கலந்து கொண்டார். பல மணிநேரம் பூஜை நடந்தது. பூஜை முடிந்ததும் பூஜை செய்தவர் அனைவருக்கும் திருநீறு, சந்தனம் என பிரசாதத்தை தந்தப் பின் உண்ணவும் அன்னப் பிரசாதம் தந்தார் . பசியால் துடித்தவர் அந்த அன்னப் பிரசாதத்தை அதிகமாகவே பெற்றுக் கொண்டு மறைவிடத்தில் சென்று அமர்ந்து கொண்டு அதை உண்டு முடித்தப் பின், அயர்ச்சியினால் மீண்டும் தன்னை மறந்து அங்கேயே உறங்கி விட்டார். விடிகாலை வந்ததும் திடீர் என கண் விழித்து எழுந்தார். எழுந்தவர் அந்த ஆலயத்தில் முன் இரவில் தான் பார்த்த யாரையுமே காணாமல் திகைத்தார். தீபம் மட்டும் ஆலயத்தில் எரிந்து கொண்டு இருந்தது.
பயந்து போய் வெளியில் ஓடி வந்தவர் அங்கும் யாரையும் காணாமல் திகைத்தார். நல்ல வேளையாக முதல் நாள் இரவில் தனக்கு பிரசாதம் கொடுத்தவரிடம் தனது நிலையை சுருக்கமாகக் கூறி திரும்பிச் செல்லும் வழியைக் கேட்டபோது அவருக்கு செய்கை மூலம் மட்டுமே அவர் செல்ல வேண்டிய பாதையை காட்டி இருந்தார். ஆகவே நன்கு விடிந்ததும், பூஜை செய்த அர்ச்சகர் கூறிய வழியில் செல்லத் துவங்கினார். ஆனால் தான் கண்ட அந்த ஆனந்தமான காட்சியையும், ஆலயத்தையும் குறித்து அனைவருக்கும் காட்ட வேண்டும் என நினைத்தவர் திரும்பிப் போகும்போது பாதையை அடையாளம் காட்டும் விதமாக இருக்கட்டும் என மரக் கிளைகளை உடைத்து அதில் இருந்த பச்சை இலைகளுடன் கூடிய கிளைகளை பத்து அடிக்கு ஒன்றாக பூமியில் பாதை நெடுங்கிலும் நட்டுக் கொண்டே சென்றார். அவர் சென்று கொண்டிருந்த பாதை எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தது. நல்ல வேளையாக சில மணி நேரம் நடந்தப் பின் கவலைக் கொண்டு அவரை தேடிக்கொண்டு இருந்த நண்பர்களை சந்திக்க நேரிட்டது. அவர்களிடம் நடந்த அத்தனை விஷயத்தையும் கூற, அதைக் கேட்டவர்களும் வியந்து நின்றார்கள். அவர்களும் அந்த ஆலயத்தைக் காண விருப்பத்தை தெரிவிக்க அவர்களுக்கும் அந்த ஆலயத்தைக் காட்டுவதாகக் கூறிவிட்டு அவர்களை அழைத்துச் சென்றார். அவர் நெற்றியில் காணப்பட்ட சந்தனத்தின் மணமும், வீபுதியும் அவர்களை அவர் கூறியதை நம்ப வைத்தது.
அனைவரும் மயில்வாகனார் நட்டு வைத்து இருந்த பச்சை மரக் கிளைகளை பின் தொடர்ந்து அந்த நல்ல பாதையிலேயே சென்றார்கள். ஆனால் அவர்களால் துரதிஷ்டவசமாக ஒரு அளவுக்கே செல்ல முடிந்தது. அதற்கு மேல் , அவர் நட்டு வைத்திருந்த மரத்தின் கிளைகளைக் காணாமல் திகைத்தார்கள். அடர்ந்த வனமே சுற்றிலும் இருந்தது. எந்தப் பாதையும் காணப்படவில்லை. ஆனால் அதெப்படி அந்த இடத்துக்கு வந்தவரை நட்டு வைத்திருந்த மரக் கிளைகள் இருக்க அதற்க்கு மேல் மரக் கிளைகளைக் காண முடியவில்லை? அங்கும் இங்கும் எத்தனை அலைந்தும் அவர்களால் அந்த அடர்ந்தக் காட்டு மத்தியில் இருந்த ஆலயத்தை மட்டும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால் சில இடங்களில் சாம்பிராணியின் மணமும், ஊதுபத்தியின் மணமும் மட்டும் எங்கிருந்தோ வந்து அவர்களின் மூக்கைத் துளைத்தது. அதுவும் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் திகைத்தார்கள். அடுத்தடுத்து சில நாட்கள் பலரும் அந்த அடர்ந்த காட்டில் வந்து கோணேஸ்வரர் இருந்த ஆலயம் இருந்த இடத்தைக் கண்டு பிடிக்க முயன்றும் இன்றளவும் அந்த ஆலயம் இருந்த இடத்தை யாராலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை என்பதுதான் பெரிதும் வியப்பான செய்தி. மயில்வாகனார் மட்டுமே அதிருஷ்டவசமாக அதைப் பார்த்து இருந்துள்ளார்.