பல வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு முறை பெங்களூரில் ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்குக் சென்று தரிசனம் செய்தப் பின் ஸ்வாமிகள் தங்கி இருந்த மடத்தில் சென்று அவரை சந்திக்கச் சென்றோம் . அப்போது ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் உயிருடன் இருந்த காலம். மதியம் இரண்டரை மணி ஆகிவிட்டது. சுவாமிகளை அப்போது சந்திக்க முடியாது என காவலாளி தடுத்து நிறுத்தி விட்டார். ஆகவே திருச்சி மகா ஸ்வாமிகள் சரித்திரம் என்ற புத்தகத்தை அங்கிருந்த கடையில் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பினோம். அதன் பின் பல ஆண்டுகள் நான் அங்கு செல்லவே இல்லை. காரணம் நான் இருந்தது மத்தியப் பிரதேசத்தில். என்ன காரணத்தினாலோ அந்த புத்தகம் என்னை கவர்ந்தது , இரண்டு அல்லது மூன்று முறை அதைப் படித்தேன். அதை பத்திரமாக வைத்துக் கொண்டேன்.
2005 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஒய்வு பெற்றப் பின் 2006 ஆண்டில் பெங்களூரில் வந்து வசிக்கத் துவங்கினேன். அநேகமாக 2006 ஆண்டு இறுதியில் என நினைக்கின்றேன். மீண்டும் ஒரு நாள்காலை ராஜராஜேஸ்வரி ஆலயத்துக்கு செல்ல சந்தர்பம் கிடைத்தது. ஆலய ஹரிசனம் முடித்ததும் சுவாமிகளை சந்திக்கச் சென்றேன். அப்போது ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் இல்லை என்ற விவரம் எனக்குத் தெரியாது. உள்ளே சென்று ஸ்ரீ திருச்சி மகா சுவாமிகளை சந்திக்க காத்திருந்தபோதுதான் தெரிந்தது, ஸ்வாமிகள் சமாதி ஆகிவிட்டார், அவர் ஸ்தானத்தில் ஸ்ரீ ஜெயேந்திர புரி ஸ்வாமிகள் உள்ளார் என்பது.
நானும் என் மனைவியும் உள்ளே சென்று சுவாமிகளை தரிசித்தோம். முதல் சந்திப்பிலேயே எனக்கு அவர் மீதான அபிமானத்தை ஏற்படுத்தியது. அவர் கண்களில் கருணையும் சாந்தமான ஒளியும் இருந்தது. அதிகம் பேசவில்லை. நான் யார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். என்னைப் பற்றி கூறினேன். அடிக்கடி வந்து கொண்டு இரு என்றவர், யாரோ ஒருவரை அழைத்தார் , எனக்கும் என் மனைவிக்கும் பிரசாதம் கொடுத்து அனுப்புமாறு கூறினார். நாங்கள் அவருடன் சென்றோம். அவர் எங்களை அழைத்துப் போய் காலை சிற்றுண்டிசாலைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தார். அங்கு மேலும் சிலர் அமர்ந்து இருந்தனர். அங்கு அமர்ந்து இருந்த வேத பாடசாலை சிறுவர்கள் பலர் பேசிக் கொண்டு இருந்தனர். திடீரென அவர்கள் உரத்த உரலில் காலபைரவர் ஸ்தோத்திரத்தை உச்சரிக்கத் துவங்கினார்கள். அப்போது ஸ்வாமிகள் உள்ளே நுழைந்தார். அவருக்கு நாங்கள் அமர்ந்து இருந்த அறையிலேயே எங்களுக்கு எதிராக போடப்பட்டு இருந்த தனி இலையில் அமர்ந்து கொண்டு தானும் அதை பாடத் துவங்கி அது முடிந்ததும் சிற்றுண்டியை சாப்பிட்டார். நாங்களும் சாப்பிட்டோம் அதன் பின் வீடு திரும்பினோம்.
அதன்பின் அவரைக் காண எப்போது மனம் அப்போது நாங்கள் பல முறை சென்றோம். ஒவ்வொரு முறையும் அவர் எங்களை காலை பிரசாதமான சிற்றுண்டியை சாப்பிடாமல் செல்ல அனுமதிக்கவில்லை. அப்போதுதான் நினைத்தோம், எங்களிடம் அவர் தனி அன்பு காட்டி வருகின்றார். இத்தனைக்கும் நாங்கள் ஆலயத்துக்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் செல்வந்தர்கள் இல்லை. சாதாரண நடுத்தர பிரிவினை சேர்ந்தவர்கள். ஒருமுறை அவர் உத்தரவு தந்ததற்கு ஏற்ப ராஜராஜேஸ்வரி ஆலயத்தைப் பற்றிய தமிழ் கட்டுரையை திருத்தி அமைத்துக் கொடுத்தேன். அது சீடியாக வெளியாயிற்று. அதை எனக்கும் தந்தார். அது எதோ மிகப் பெரிய காரியம் செய்தது போல எனக்கு மன நிறைவாக இருந்தது. அவரைக் தரிசனம் பெற பெரிய பெரிய பணக்காரர்கள், செல்வம் படைத்தவர்கள், மிட்டா மிராசுதார்கள் என பலரும் வருவதைக் கண்டுள்ளோம். ஆனால் அவர் அனைவரையும் ஒன்றுபோலவே கருதி அனைவரையும் ஒரே இடத்தில் அமரச் சொல்லி அனைவர் முன்னால் மட்டுமே பார்பதைக் கண்டோம். அவர்களை தனி மரியாதை கொடுத்து நடத்தியதாகத் தெரியவில்லை. தனிமையில் அழைத்துப் பேசவில்லை. அதிகபட்சம் அனைவரும் போகும்வரை அவர்களை அமர்ந்து இருக்க சொல்லிய பின் அவர்களுடன் பேசி அனுப்புவார். அதற்குக் காரணம் அவர்கள் அவரிடம் இருந்து முன் அனுமதி பெற்று தம்முடைய அந்தரங்கக் குறைகளைக் கூறி பரிகாரம் கேட்க எங்கிருந்தோ வந்திருக்க வேண்டும்.
இன்னுமொரு காட்சியையும் கண்டோம். வந்தவர்கள் எவருக்குமே அது நடக்கும், இது நடக்கும் என்றோ, கூறாமல். எந்த பிரச்சனையைக் கூறினாலும் அம்பாளை தரிசனம் செய்துவிட்டுப் போ, அனைத்தும் நல்லபடி நடக்கும் என்பார். இல்லை அம்பாள் சன்னதிக்குச் சென்று ஏதாவது ஒரு பூஜையை கூறி அந்த பூஜையை செய்துவிட்டுப் போ, அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும் என்பாரே தவிர தன்னை வந்து பார்ப்பதின் முக்கியத்துவத்தைத் தவிர்தார். எவரிடமும் தனிப்பட்ட முறையில் எந்த குடும்ப விவகாரத்தையும் பேசியது இல்லை. அது தனக்கு தேவையற்றது என நினைப்பவர்.
அது மட்டும் அல்ல அவர் முன் வைக்கப்பட்டு இருக்கும் எந்த பொருளையுமே அவர் தன்னிடம் தனியாக வைத்துக் கொள்ளவில்லை. அங்கு வை என திருச்சி ஸ்வாமிகள் படத்தின் முன்னால் வைக்கப்பட்டு உள்ள தட்டைக் காட்டுவார். அவருக்கு தரப்படும் அனைத்தும் எல்லோர் முன்னாலும் ஸ்ரீ .திருச்சி சுவாமிகளின் படத்தின் முன்னால் வைக்கப்படும். அதை மடத்தினர் எடுத்துப் போய் உள்ளே வைத்து கணக்கில் வைப்பார்கள். பழங்கள் அனைத்தும் வேத பாடசாலையில் உள்ள சாப்பாடு கூடத்துக்குச் சென்று விடும். சுவாமிகளுக்கு என தனியாக எதையும் எடுத்து வைப்பதை நாங்கள் பார்க்கவில்லை. கேட்டதும் இல்லை. அந்த காட்சிகள்தான் எங்கள் மனதில் அவர் மீது ஒரு உயர்வை ஏற்படுத்தி உள்ளது. அவர் லௌகீக ஆசைகளில் பற்று வைத்து இருக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது .
அவ்வபோது போனால் எத்தனைக் கூட்டம் இருந்தாலும் எங்களை பார்த்து அருகில் அழைத்து ‘ சௌக்கியமாக இருக்கிறீர்களா, குழந்தைகள் நலமா? அனைவரும் ஷேமமாக இருக்கட்டும்’ என்று மட்டுமே கூறுவார். அதற்கு மேல் குடும்ப விவகாரம் பற்றிய எந்த கேள்வியும் எழுந்தது இல்லை. அவருக்கு நமஸ்காரம் செய்தப்பின் எங்களை ஆசிர்வதித்து அனுப்புவார். அவ்வளவுதான் எங்கள் பந்தம். ஆனால் அதையும் மீறி எங்களுக்கு பந்தம் பூர்வ ஜென்மத்தில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன். ஸ்வாமிகள் ஒருமுறை எதோ பேச்சில் எங்களிடம் கூறினார் ‘உங்களை நான் இந்த ஆலயக் குடும்பத்தில் ஒருவராகவேதான் நினைக்கின்றேன்’. அதனால்தான் என்றைக்கும் அவர் எங்களிடம் காட்டும் அன்பில் மாறுதலே இல்லை. என் வாழ்க்கையில் நான் எத்தனையோ மகான்களை சந்தித்து உள்ளேன், சுவாமிகளை சந்தித்து உள்ளேன், சன்யாசிகளை, யோகிகளை சந்தித்து உள்ளேன். ஆனால் அவர்களில் ஒன்று அல்லது இருவரே இவரைப் போல இருந்தனர் என்பதே உண்மை.
2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் மகா சர்வோஷனம் என்ற கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அந்த விழாவின்போது யாருமே எதிர்பாராத வகையில் ஸ்ரீ திருச்சி மகா ஸ்வாமிகள் தனது வாரிசாக ஸ்ரீ ஜெயேந்திர புரி சுவாமிகளை அறிவித்ததும் அல்லாமல் அவருக்கு பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.