சித்தியை கைகொண்டவர்களே சித்தர்கள் எனப்படுவோர். உண்மையான சித்தர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இயற்கையை மீறிய பல செயல்களையும் செய்ய இயலும். காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவர்கள் வெய்யில் மற்றும் மழையை பொருட்படுத்தியது இல்லை. சித்தர்களுக்கு மரணம் கிடையாது என்ற நம்பிக்கை சிலரிடம் உண்டு. ஆனால் அது சரியான கூற்றாக இருக்க முடியாது. ஏன் எனில் பிறக்கும்போதே மனிதனின் மரணமும் நிர்ணயிக்கப்பட்டே பிறக்கிறார்கள். சாதாரண மனிதர்களுக்கும், சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால் மனிதர்களால் விஞ்ஞான ரீதியில் இல்லாமல் நேரடியாக செய்ய இயலாத காரியங்களை சித்தர்களால் செய்ய முடியும். உதாரணமாக சித்தர்களால் வானிலே பறிக்க இயலும். கூடு விட்டு கூடு பாய முடியும். நினைத்த நேரத்தில் பல நாட்களுக்கு மட்டும் அல்ல பல வருடங்கள் கூட உணவின்றி, தண்ணீர் அருந்தாமல் சமாதி நிலையில் இருக்க முடியும். ஒரு ஷண நேரத்தில் மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய உருவை எடுக்க முடியும். பல காலத்துக்குப் பிறகு நடக்க இருப்பதை, அவ்வளவு ஏன் பல வருடங்களுக்குப் பிறகு நடக்க உள்ளதை இன்றே கூற  முடியும். சித்தர்கள் பிணி தீர்ப்பவர்கள். ஆனால் சித்தர்கள் தம்முடைய சக்தியை தேவை இன்றி வெளிப்படுத்த மாட்டார்கள். அபூர்வமாகவே யாருடைய நோயையாவதோ அல்லது வேறு பிரச்சனைகளையே தம்முடைய சக்தியை பயன்படுத்தி  தீர்ப்பார்கள். தன்னிடம் வரும் அனைவரது துன்பங்களையும் தீர்க்க மாட்டார்கள். ஏன் எனில் அனைவரது குறைகளையும் அவர்கள் தம் சக்தியைக் கொண்டு தீர்த்து வைத்தால் அது தெய்வ நீதிக்கு மாறானது, இந்த பூமியிலே பிறந்தவர்கள் பூர்வ ஜென்ம பாபங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தவர்கள்.  இல்லை எனில் அந்த கர்மா அவர்களது பல பிறப்புகளிலும் அவர்களுடன் சேர்ந்தே செல்லும் என்பதை தவிர்கவே இந்த ஜென்மத்திலேயே அதன் தண்டனையை அனுபவிக்க  வேண்டும் என நம்புபவர்கள்.

சித்தர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் முதன் முதலாக இந்திய துணை கண்டத்தில்தான் தோன்றியவர்கள் என்ற கருத்து உண்டு. சித்தர்கள் தெய்வங்களின் தூதர்களாக பூமியிலே பிறந்தவர்கள். அவர்கள் உருவாக்கிய சீடர்கள் பல இடங்களுக்கும் சென்று சித்தர்களின் பெருமைகளை பரப்பினார்கள்.  இந்திய  பூமி தெய்வீக பூமி என்றும், சித்தர்கள் இந்தியாவில்தான் முதலில் தோன்றினார்கள் என்பதின் காரணம் இங்குதான் இறைவன் வாழும் (சிவபெருமான்) இமயமலையும், தாம்பிரபரணி ஆறு, சரஸ்வதி நதி, கங்கை நதி மற்றும் பல்வேறு புனித தெய்வீக நதிகள் ஓடும்  இடங்கள் உள்ளன. ஆனாலும் இந்தியாவில் தோன்றிய சித்தர்கள் பின்னர் அவர்களது சிஷ்யப் பரம்பரையினர் மூலம் பிற இடங்களில் பரவினார்கள். ஒரு காலத்தில் இலங்கை கூட இந்திய நாட்டுடன் சேர்ந்தே இருந்தப் நிலப் பகுதியாக இருந்தது என்பதினாலோ என்னவோ  இலங்கையில் பெருமளவில் பல அற்புதமான சித்தர்கள் இருந்துள்ளார்கள் என்பது புரிகிறது. இலங்கையைப் பொறுத்தவரை  சித்தர் பரம்பரையில் இருந்ததாக கூறப்படும்  சித்தர்களின் பெயர்கள் கீழே   தரப்பட்டு உள்ளது.

 • கடையிற் ஸ்வாமிகள்
 • பரம குரு ஸ்வாமிகள்
 • குழந்தை ஸ்வாமிகள்
 • சித்தர்  நவநாத ஸ்வாமிகள்
 • பெரியானைக் குட்டி ஸ்வாமிகள்
 • சித்தானைக் குட்டி ஸ்வாமிகள்
 • சடைவரத ஸ்வாமிகள்
 • மகாதேவ ஸ்வாமிகள்
 • நாகநாத சித்தர் ஸ்வாமிகள்
 • நயினாதீவு ஸ்வாமிகள்
 • செல்லப்பா ஸ்வாமிகள்
 • குடை ஸ்வாமிகள்

இவர்களில் குடை ஸ்வாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளவர். குடை ஸ்வாமிகள் 1897 ஆம் ஆண்டு குமாரக் கோட்டம் என்ற இடத்தில் நாகேந்திரன் மற்றும் ஆச்சிப்பிள்ளை என்ற தம்பதியினருக்கு பிறந்தவர் எனத் தெரிகிறது. குடை ஸ்வாமிகள் எனும் கந்தையா ஸ்வாமிகள் முதலில் விவசாயத்தில் ஈடு பட்டிருந்தவர். சுருட்டு சுற்றும் தொழிலையும் செய்து வந்தவர். இவருடைய குரு மகாதேவ ஸ்வாமிகள். வயதுக்கு வந்த அவருக்கு தகுந்த காலத்தில் திருமணம் ஆயிற்று. ஆனால் 1930 ஆம் ஆண்டில் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே அவர் மனைவியார் மரணம் அடைந்து விட்டதினால் உலக ஆசைகளையும் பிற சொந்த பந்தப் பிடிப்புக்களையும் துறந்த இவர் துறவறத்தை மேற்கொண்டார். பெரும் சிவபக்தரான இவர் கையில் எப்போதுமே ஒரு குடை இருக்கும். இவர் வாழ்க்கையோ மிகவும் எளிமையானது. இடுப்பில் நான்கு முழ வெட்டி. மேல் சட்டை போட்டதில்லை. பாதத்தில் காலணிக் கிடையாது. முகத்தில் மழிக்காத தாடி. உடல் வளைந்து இருந்ததினால் அவர் நடக்கும் விதமே அலாதியானது. சாதரணமாக நடப்பது இல்லை. திடீர் திடீர் என தாவித் தாவி நடப்பது உண்டு. அவர் படுத்து உறங்கியது மணல் தரை மீதும், வைக்கோல் போர்களின் மீதும்தான். விறகு விற்கும் இடங்களுக்கு அருகில் சென்றால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் விறகுகள் மீதும் படுத்து உறங்குவது உண்டு.

குடை ஸ்வாமிகள் எங்கு செல்வார், எப்போது நம் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பது தவறு. அவர் யாருக்கும் புரியாத புதிர். இவரை சிலர் பைத்தியம் என்றார்கள். வேறு சிலரோ இறை சக்தி மிக்கவர் என்று எண்ணினார்கள். திடீர் என யார் வீட்டிற்காவது சென்று தனக்கு உணவு தருமாறு கேட்பார். அவர்கள் உணவை எடுத்துவரப் போனப் பின் அங்கிருந்து அவர்களிடம் எதுவும் கூறாமல் சென்று விடுவார். தேடினாலும் கிடைக்க மாட்டார். அவர் அந்த வீட்டிற்கு வந்து விட்டுப் போனதும் அவர்கள் வீட்டில் செல்வம் தாண்டவமாடும் என்ற நம்பிக்கை இருந்தது என்பதற்கு சான்றாக பல நிகழ்ச்சிகளை அங்குள்ள மக்கள் கூறி உள்ளார்கள். சித்தர்களின் சக்திக்கு ஏற்ப அவர் பிற்காலத்தில் நடக்க இருப்பதை முதலிலேயே கூறி உள்ளார். பலரும் அவரிடம் பக்தர்கள் ஆனதின் காரணமும் அதுவே.

அவர் நுழைந்த இடத்தில் செல்வம் கொழிக்கும். வீட்டில் நுழைந்தால் அங்கு நிலவிய தரித்திரம் தொலைந்து போகும் என்பார்கள். அவர் பார்வையில் அருள் இருக்கும். அவர் அதிகம் பேசியது இல்லை. அவரிடம் சென்று பேசும் அனைவருக்கும் பதில் கூறியதில்லை. ஆனால் அவராகப் போய் பேசினால் அவர்கள் அதிருஷ்டசாலிகளாகவே இருப்பார்கள். அவரிடம் செல்பவர்கள் சிலரிடம் திடீர் என ‘உன் வீட்டில் இன்று நல்லது நடக்காது’ என்பார். அது போலவே அன்று அவர்கள் வீட்டில் ஏதாவது துக்கம் நேரிடும். அவர் அனைத்தையுமே வாய் வார்த்தையினால் மட்டுமே கூறியது இல்லை. ஏதாவது செய்கை மூலமோ இல்லை செயல் மூலமோ ஜாடைமாடையாகக் கூறுவார். புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவே.

ஒருமுறை இவரை கீழே தள்ளி அவமானப்படுத்திய காவல்துறையை சார்ந்த ஒரு அதிகாரி, எந்தக் கையினால் அவரை கீழே தள்ளினாரோ அதே கையின் அனைத்து உணர்ச்சிகளையும் இழந்து கைகளைத் தூக்க முடியாமல் போனதும் அவர் சக்தியைப் புரிந்து கொண்டவர் குடை சுவாமிகளிடம் ஓடோடி சென்று மன்னிப்புக் கேட்டு தனது கையை சரி செய்து கொண்டார் என்ற கதை உண்டு. அது போலவே ஒரு விவசாயி நிலத்தில் ஒருநாள் இவர் செல்ல அந்த ஆண்டு என்றும் இல்லாமல் அந்த விவசாயி நிலத்தில் அபார விளைச்சல் ஏற்பட்ட  கதையும் உள்ளது. இப்படியாக பல அற்புதங்களை நிகழ்தியதாக இவரைப் பற்றிக் கூறுவார்கள். இந்த சித்தர் 1978 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.  அவர் மேல் வாழ்க்கை குறித்து பெரிய அளவில் விவரம் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணம் கொசி உணவகத்தில் உள்ள
குடை சுவாமிகள் சிலை
( Courtesy:  Cosy Jaffna and