ஷேத்ரபாலபுர ஆலய வரலாறு

மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்துக்கு இடையே, அதாவது மயிலாடுதுறையில் இருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் குற்றாலம் எனும் தாலுக்காவில் உள்ளது ஷேத்ரபாலபுரம் எனும் சிற்றூர். இங்குதான் ஆனந்த கால பைரவர் என்ற பெயரில் கால பைரவர் எழுந்தருளி உள்ள மேன்மை வாய்ந்த, பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் உள்ளது. இது அமைந்த காலம் அல்லது அங்கு பைரவர் வழிபாடு துவங்கியதின் காரணம் போன்றவை எவருக்கும் தெரியவில்லை என்றாலும் இந்த ஆலயத்தின் மேன்மை அளவிட முடியாதது. இங்குள்ள பைரவர் தனது பயங்கரமான தோற்றத்தோடு காட்சி தராமல் அமைதியாக புன்னகை பூத்தவண்ணம் தன்னை நாடி வந்து குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், நோய் விலக வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளை முன்வைத்து, பாவக்காய் அல்லது பூஷணிக்காயில் எண்ணை நிரப்பி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு அருள் புரிகிறார். பல நூற்றாண்டுகளுக்கு இப்படி பாவக்காய் அல்லது பூஷணிக்காயில் எண்ணை நிரப்பி தீபம் ஏற்றி வழிபடும் வழக்கம் வேறு எந்த பைரவர் ஆலயத்திலும்  கிடையாது. பல்வேறு இடங்களில் இருந்தும் தொடர்ந்து ஒன்பது வாரம் இந்த ஆலயத்துக்கு தமது வேண்டுகோளுடன் வந்து பாவக்காய் அல்லது பூஷணிக்காயில் எண்ணை  தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதை பல பக்தர்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
முன் ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் வெட்ட வெளியில் இருந்த பைரவரை கிராம காவல் தெய்வம் என்றே அங்கிருந்த மக்கள்  வழிபட்டு வந்துள்ளார்கள். ஆகவே அந்த ஆலய பைரவரின் மகிமை எவருக்கும் தெரியாமல் இருந்தது.  வெகு காலத்துக்குப் பிறகே அங்கு விஜயம் செய்த அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆன்மீக மகான்கள் மூலம் ஆலய பைரவரின் மகிமை குறித்து  செய்திகள் வெளித்  தெரியலாயின. குக்கிராமத்தில் உள்ள அந்த ஆலயம்  சிறியது என்றாலும் மகிமை வாய்ந்தது. தற்போது  அந்த  ஆலயத்தின்  மேல் பகுதியில் மீது சிமெண்டினால் ஆன தகட்டுக் கூறை போடப்பட்டு காட்சி தருகிறது. இங்கு நடைபெறும் பூஜைகள் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படுவதில்லை.
சாதாரணமாக பைரவர் தமது கையில் சூலம், ஒரு கையில் மனிதத் தலை போன்றவற்றை வைத்துக் கொண்டும், தனது வாகனமான நாயுடனும்    பயங்கரமான தோற்றத்தில் காட்சி தரும்  காட்சி தருவார். பயங்கரத் தோற்றத்தில் காணப்படும் சிவபெருமானின் எட்டாவது அம்சத்தில் உள்ள கடவுள் பைரவர் ஆவார். அவர் கையில் உள்ள மனிதத் தலை பைரவரால் வெட்டப்பட்ட பிரும்மாவின் தலை என்பதாக கூறுவார்கள். இன்னும் சிலர் அது தலை அல்ல, மாறாக மனித முகத்தின் ஓடு (கபாலம்) என்றும், கால பைரவரே மனித உயிர்களுக்கு முக்தி தந்து மேலுலகத்துக்கு அனுப்புபவர் என்பதினால் அதைக் குறிக்கும் காட்சி ஆகும் அது என்பார்கள். இன்னும் சில ஆலயங்களில் தலை விரித்த கோலம், பயங்கரமான சிவந்த கண்களைக் கொண்ட முகம், நிர்வாணக் கோலம், கழுத்தில் கபால மாலை, உடலெங்கும் சுற்றித் திரிந்தவண்ணம் உள்ள பாம்புகள், காலுக்கு அடியில் அவருடைய வாகனமான நாய் போன்றவற்றைக் கொண்ட கோலத்திலும் கால பைரவர் காட்சி தருகிறார்.
ஆனால் அவை அனைத்துக்கும் மாறாக சிரித்த, அமைதியான முகத்துடனும், அவருடைய வாகனமான நாயும் இல்லாமல் நின்ற நிலையில் ஷேத்ரபாலபுரத்தில் உள்ள தனி ஆலயத்தில் மட்டும் காட்சி தருவது அற்புதம். பெரும்பாலான  ஆலயத் தூண்களில் அல்லது சன்னதி  சுவற்றின் பின்புறத்தில் அமைக்கப்பட்டு உள்ள சின்ன அறைப் போன்ற பகுதியில் பைரவரின் சிலைகளும் உருவங்களும் காணப்படும். ஆனால் சக்தி ஆலயங்களில் மட்டும் அவர் தனி மரியாதை பெற்று, கருவறைக்கு வெளியே ஆலயத்தின் வளாகத்துக்குள் தனி சன்னதியில் அவர் ஷேத்திரபாலகர் அதாவது ஆலயக் காவலராக இருந்து கொண்டு பார்வதி தேவிக்கு துணையாக இருப்பார். ஆகவேதான் சில தேவி ஆலயங்களில் ஆலயத்தின் பாதுகாவலராக உள்ள அவரிடம் தேவியின் சன்னதிக் கதவை மூடிய பின்  ஆலய சாவிகளை சம்பிரதாயமாக தந்துவிட்டு, காலை வந்து சம்பிரதாயமாக அவரிடம் இருந்து அந்த சாவிகளை திரும்பப் பெற்றுக் கொண்டு கருவறையை திறப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

கால பைரவர் அவதரித்த கதை

கால பைரவரின் அவதாரம் நிகழக் காரணம் பிரும்மா மற்றும் விஷ்ணு இடையே நடைபெற்ற வாக்குவாதமே ஆகும். ஒருமுறை அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்கையில் உலகில் சக்தி வாய்ந்தவர் யார் என்ற கேள்வியை விஷ்ணு பகவான் எழுப்ப அதற்கு பதிலளித்த பிரும்மன் படைப்புத் தொழிலை வைத்துள்ள தானே அனைவரையும் விட உயர்ந்தவர் என்று அகம்பாவத்துடன் கூறினார். ஆனால் அங்கிருந்த நான்கு வேதங்களும் அவர் கூற்று தவறு, அனைவரையும் விட சக்தி வாய்ந்தவர் பெண்ணின் சக்தியுடன் இணைந்துள்ள சிவபெருமானே என்று எவ்வளவோ கூறியும் பிரும்ம பகவான் அதை உதாசீனப்படுத்தியதும் இல்லாமல் சிவபெருமானைக் குறித்து அவமரியாதை தரும் வகையில் சில செய்திகளைக் கூறினார்.
அவர்களது சம்பாஷணையை சற்று தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த சிவபெருமான் தன்னைக் குறித்து பிரும்மா அவமரியாதையுடன் பேசியதைக் கேட்டு கொதிப்படைந்து தன் அருகில் இருந்த ருத்ரனை அழைத்து, அகந்தையுடன் பேசிய பிரும்மனின் வாயுடன் கூடிய அந்த தலையை வெட்டி எரியுமாறு ஆணை இட்டார். அதைக் கேட்ட ருத்திரன் உடனே பயங்கரமான உருவம் கொண்ட பைரவராக தன்னை உருமாற்றிக் கொண்டு விரைந்து சென்று சிவபெருமானை பழித்துப் பேசிய பிரும்மனின் அந்த குறிப்பிட்ட தலையை பிய்த்து எறிந்தார்.  அதை செய்து முடித்ததும், தலையை அறுத்து எறிவது கொலை செய்ததிற்கு சமம் என்பதினால் பைரவரை பிருமஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. தனக்கு இருந்த பல தலைகளில் ஒரு தலையை இழந்த பிரும்மனும் அதிர்ச்சி அடைந்து தனது தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டார். சிவபெருமானும் அவரை மன்னித்தார். ஆனால் சிவபெருமானின்  கட்டளைக்கு ஏற்பவே பைரவர் பிரும்மாவின் தலையை அறுத்து விட்டாலும்,  ஒருவரது தலையை வெட்டி விட்ட தவறினால்  பைரவருக்கு ஏற்பட்டு விட்ட பிரும்மஹத்தி தோஷத்தை சிவபெருமானாலும் விலக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. தெய்வமே என்றாலும்  தெய்வ நியதிப்படியான  தண்டனையை ஏற்க வேண்டும் என்ற விதியை மீற முடியாததினால் அந்த தோஷத்துக்கு பரிகாரம் செய்து கொண்டே பைரவர் அதை விலக்கி கொள்ள வேண்டி இருந்தது. நடந்த அனைத்துமே பரமாத்மனின் நியதிக்கான சில காரணங்களினால் நடைபெற்றுக் கொண்டு இருந்தன.

பிரும்மா தலையை இழந்த கதை

பிரும்மன் படைக்கப்பட்டபோது எத்தனை தலையுடன் இருந்தார் என்பதைக் குறித்து புராணத்திலேயே முரண்பட்ட கதைகள் உள்ளன. ஒரு புராணத்தின்படி படைப்புத் தொழிலை செய்ய முதலில் பிரும்மன் படைக்கப்பட போது அவருக்கு ஒரே ஒரு தலை மட்டுமே இருந்தது. படைப்புத் தொழிலை செய்யத் துவங்கியவர் நான்கு பக்கங்களிலும் திரும்பிப் பார்த்தபடி படைப்பை செய்யத் துவங்க ஒவ்வொரு பக்கத்திலும் அவர் திரும்பிய போது அவருக்கு ஒவ்வொரு தலை முளைத்தது. இப்படியாக நான்கு பக்கத்தைப் பார்த்தவர் நான்கு தலைக் கொண்ட தெய்வமாக உருமாறினார். அந்த நான்கு தலைகளும் நான்கு வேதங்களை உச்சரிக்கத் துவங்கின. ஆகவே பிரும்மனின் நான்கு தலைகளும் நான்கு திசைகளையும், நான்கு வேதங்களையும் பிரதிபலிப்பவனவாக அமைந்தன. ஆகவே பைரவர் துண்டித்தது பிரும்மனின் நான்காவது தலை என்று கருதப்பட்டது.
இன்னொரு கதையின்படி உலகைப் படைக்கத் துவங்கிய பிரும்மா தனக்கு உதவி செய்வதற்காக சத்ரூபா எனும் ஒரு அழகிய பெண்ணை படைத்தார். ஆனால் அவரே படைத்த அந்தப் தேவலோகப் பெண்ணின் அழகில் மயங்கிய அவர் அவள் சென்ற இடங்களில் எல்லாம் அவளையே திரும்பிப் பார்த்தபடி இருந்தவாறு அவளது அழகை ரசிக்கலானார். அவருக்கு படைப்புத் தொழிலில் உதவி செய்து கொண்டு இருந்தவள் சில நாட்களிலேயே அவருடைய பார்வையில் காமம் இருந்ததைக் கண்டு பிடித்தாள். ஆகவே அதை தவிர்க்க எண்ணியவள் நான்கு திக்குக்களில் எங்கு சென்று ஓடி ஒளிந்து கொண்டாலும்,  நான்கு திசைகளிலும் இருந்த முகத்தினால் அவரால் அவளது அழகை ரசிக்க முடிந்தது. அவரது தீய எண்ணத்தினால் பாதிக்கப்பட்டவள் இனி தப்பிச் செல்வதற்கு வேறு திசை இல்லை என்பதினால் அவரது பார்வையில் இருந்து தப்புவதற்காக தேவ லோகத்தை நோக்கி ஓடிச் செல்லத் துவங்க அவரும் தன்னுடைய உண்மையான முதல் முகத்தினால் மேலே பார்க்க அது ஐந்தாம் தலை ஆயிற்று. பயந்து போன சத்ரூபா  பார்வதி தேவியிடம் சரண் அடைந்து தன்னை பிரும்மாவின் காமப் பார்வையில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள். அதைக் கேட்டு கோபமுற்ற பார்வதி தேவியும் பிரும்மனுக்கு சாபம் கொடுத்தாள். ‘சத்ரூபாவுக்கு நீ செய்த கொடுமைக்காக உன் ஐந்தாவது தலையை அவமானப்பட்டு நீ இழப்பாய்’. அவள் சாபத்தைக் கேட்டு பயந்து போன பிரும்மாவும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பைக் கேட்டாலும், செய்த தவறுக்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நியதியின் விதியை மீற முடியாததினால்தான்  பைரவரின் மூலம் அவரது ஐந்தாவது தலையை இழக்க வேண்டி இருந்தது. அதன் பின் பிரும்மன் நான்கு தலைக் கொண்ட கடவுளாக மாற வேண்டி இருந்தது. ஆமாம், பிரும்மா ஏன் பைரவர் மூலம் பிரும்மன் ஏன் தலையை இழக்க வேண்டி இருந்தது? அதன் காரணம் என்ன?

கால பைரவர் அவதார தத்துவம்

உயர்நிலை ஆன்மீக போதனா வழிமுறைகளில் கூறப்படுவது என்ன என்றால் இந்த பிரபஞ்சம் பரமாத்மனால் படைக்கப்பட்டபோது முதலில் படைக்கப்பட்ட மும் மூர்த்திகளினால் அவர்களுடைய துணைக் கடவுட்கள், உப கடவுட்கள், நிழல் கடவுட்கள் என பலரும் பல்வேறு காரிய காரணங்களுக்காக பிரபஞ்சத்தில் படைக்கப்பட வேண்டி இருந்தது. அவர்கள் மூலம் பல்வேறு நாடகங்களை நடத்திக் காட்டி பூமியில் உள்ள மனிதர்களுக்கு ஆன்மீக போதனைகளை செய்ய வேண்டி இருந்தது. அந்த நாடகம் ஒவ்வொன்றிலும் சக்தி மற்றும் சிவபெருமானின் பாத்திரங்கள் முக்கியமானவையாக இருந்தன. அவற்றில் பங்கேற்க  இருந்த  பார்வதி தேவி மானிட உருவில் பல்வேறு இடங்களில், பல்வேறு அவதாரங்களாகவும் எழுந்தருள வேண்டி இருந்தது. பூமியில் பல இடங்களிலும் எழும்ப இருந்த ஆலயங்களில் அவள் தெய்வ உருவில் இருக்க வேண்டி இருந்தது. அதில் பலவற்றில் அவள் தனிமையில் இருக்க வேண்டி இருக்கும். அவள் தெய்வமே என்றாலும் அவளுக்கு துணை தேவையாக இருக்கும். அதற்கு சிவபெருமான் தன்னுடைய நிழல் உருவை படைத்து அவள் ஆலயங்கள் உள்ள இடங்களில் தங்க வைக்க வேண்டும். அவர் படைக்க உள்ள அவரது சக்தியினால் எழுந்தருள உள்ள அந்த நிழல் உருவம் தனித் தன்மைக் கொண்டதாக, ஏதாவது ஒரு பயங்கரமான தோற்றத்தில் இருந்தவாறு, அவளுக்கு துணையாக பாதுகாவலனாக அந்த ஆலயங்களில் இருக்க வேண்டும். இறந்தவர்களின் ஆத்மாவுக்கு முக்தி தரும் தொழிலை செய்து வரும் சிவபெருமானின் அவதாரமாக அவரே அமைக்க உள்ள நிழல் உருவம் அந்த வேலையை தன்னிடம் எடுத்துக் கொண்டு சிவபெருமானின் வேலை பளுவை குறைக்க வேண்டும். இப்படியாக அந்த நிழல் உருவம் காசிக்கு பாதுகாவலராக இருந்து கொண்டு ஆத்மாக்களுக்கு முக்தி தரும் தொழிலை செய்து கொண்டு, எங்கெல்லாம் பார்வதி தேவியின் ஆலயம் அமையுமோ, அந்த ஆலயங்களில் பார்வதி தேவி சென்று வசிக்கும்போது அவளுக்கு காவலாக அங்கே இன்னொரு சன்னதியில் பாதுகாவலராக தங்கி இருக்க வேண்டும். இவற்றை மனதில் கொண்டே அனைத்துக் கடவுட்களுக்கும் மேலான சிவபெருமான் தனது சக்தியினால் தனது உடலில் இருந்தே  பைரவர் மற்றும் கால பைரவர் என்ற இரு நிழல் உருவங்களைப் படைத்தார்.
பரபிரும்மனின் நியதிப்படி பூமியிலே நடக்க உள்ள நாடகத்தில் பிரும்மா தன்னுடைய பல தலைகளில் ஒன்றை இழக்க வேண்டி இருக்கும். அந்தத் தலையும் பிரும்மனால் படைக்கப்பட்ட அவருடைய நிழல் உருவமேயாகும். நடக்க உள்ள நாடகத்தில் பிரும்மாவின் நிழல் உருவமான அந்த தலையும் சிவபெருமானின் நிழல் உருவால் மட்டுமே வெட்டி எறியப்பட வேண்டும். ஏன் எனில் சிவபெருமானால் படைக்கப்பட உள்ள அந்த நிழல் உருவமே ஆத்மாக்களுக்கு முக்தி தரும் உருவமாக பூமியிலே காசியில் இருக்கும். பூமியிலே நடக்க உள்ள நாடகத்தில் பூமியிலே வெட்டி எறியப் பட இருந்த தலை, பூமியிலே மரணம் அடையும் மனித ஆத்மாக்கள் முக்தி பெற்று தேவலோகத்துக்கு திரும்பச் செல்வதைப் போல முக்தி பெற்று தேவலோகம் செல்ல வேண்டும்.  அதே சமயம் காசியின் மகத்துவமும் உலகுக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும். அதற்கும் அந்த சிவபெருமானின் நிழல் உருவத்தின் பாத்திரம் அவசியமானது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே பைரவ அவதாரம் நிகழ்ந்தது.

பைரவர் தோஷம் விலகிய கதை

இனி மூலக் கதைக்கு வருவோம். பிரும்மாவின் தலையைக் கிள்ளி எறிந்ததினால் பைரவருக்கு பிரும்மஹத்தி தோஷம் தொற்றிக் கொண்டது. அவர் கையில் வைத்திருந்த சூலமும் உடனடியாக மறைந்து போனது. பிரும்மாவின் ஐந்தாவது தலையும் ஒரு கபாலமாக உருமாறி அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை தொலைக்க என்ன செய்வது என பைரவர் சிவபெருமானிடம் கேட்க அவரும் ‘அவருக்கு (பைரவருக்கு) ஏற்பட்டுள்ள தோஷம் நான்கு வேதங்களையும் படைத்த பிரும்மாவின் தலையை வெட்டி எரிந்ததால் வந்தது என்பதினால் அந்த பாவம் விலக வேண்டும் என்றால் அந்த தலையின் கபாலத்தை கையில் ஏந்திய வண்ணம் பைரவர் உலகெங்கும் சுற்றி பிட்சை பெற்றுக் கொண்டு காசியை அடைந்து அந்த பாபத்தைத் தொலைத்துக் கொள்ள வேண்டும். பைரவர் காசியை அடைந்ததும் அந்த தோஷமும் விலகும்’ என சிவபெருமான் பைரவரிடம் கூறினார். சிவபெருமான் பைரவருக்கு அவ்வாறு கூறிய உடனேயே மற்றொரு பயங்கர முகத்தைக் கொண்ட இரத்தம் கக்கிக் கொண்டு இருந்த பெண் அங்கு தோன்ற ‘பைரவர் காசியை அடையும்வரை அவரை அவள் பயமுறுத்திக் கொண்டே துரத்திச் சென்ற வண்ணம் இருப்பாள் என்றும், பைரவர் காசியை அடைந்ததும் அவரை பயமுறுத்திக் கொண்டு சென்றப் பெண்ணும் மறைந்து விடுவாள் என்றும்,  அவளுக்கு காசியில் நுழைய அதிகாரம் இல்லை’ என்றும் சிவபெருமான் பைரவரிடம் கூறினார். பைரவரும் கபாலத்துடன் ஓடத் துவங்க, அந்தப் பெண்ணும் அவரை துரத்திய வண்ணம் சென்று கொண்டு இருந்தபோது காசியில் நுழைந்த பைரவர் கையில் இருந்த கபாலம் கீழே விழுந்து உடைய, அவரைத் துரத்திக் கொண்டு சென்ற பெண்ணும் மறைந்து போனாள். இப்படியாக காசியில் பைரவருடைய தோஷமும் விலகியது. அதன் பின் காசியில் காசி விஸ்வனாதராக சிவபெருமானும், அவர் மனைவியாக விசாலட்ஷி எனும் பெயரில் பார்வதியும் அங்கு எழுந்தருளினார்கள்.  காசியும் மேலான புனிதத் தன்மையை  பெற்றது. அதனால்தான்  காசிக்கு வந்து இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு இறுதிக் காரியங்களை செய்ததும், இறந்து போனவர்களின் ஆத்மாக்களுக்கு   சிவபெருமான் அங்கு  முக்தி தரத் துவங்கினார். பின்னர் தனது அந்த வேலையை தனது நிழல் ரூபமான பைரவருக்குத் தந்துவிட்டு காசிக்கு தலைமை காவல் தெய்வமாகவும் பைரவரை நியமித்தார்.

ஷேத்ரபாலபுர ஆலய வரலாறு

ஷேத்ரபாலபுர ஆலய பைரவரின் கதை மற்ற புராணங்களில் காணப்படும் கதையில் இருந்து மாறுபட்டு உள்ளது. ஒரு விதத்தில் பார்த்தால் இந்த ஆலயத்தின் கதை புராணங்களில் காணப்படும் கால பைரவர் கதையின் தொடர்ச்சி எனலாம். கால பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் காசியில் விலகியதாக கூறப்பட்டாலும், அது முற்றிலுமாக அங்கே விலகவில்லை. காசியில் ஒரு பாதியும், இன்னொரு பாதி ஷேத்ரபாலபுரத்திலும்தான் விலகின என்பதாக இந்த ஆலய வரலாறு கூறுகிறது.
இந்த ஆலய வரலாற்றின்படி பிரும்மாவின் தலையைக் கிள்ளி எறிந்தவுடன் பிரும்மாவின் ஐந்தாவது தலை ஒரு கபாலமாக உருமாறி அவர் கையில் ஒட்டிக் கொள்ள, சிவபெருமான் கூறியபடியே பைரவரும் கபாலத்துடன் ஓடியபடியே காசியை அடைந்தவுடன் கபாலம் அங்கு கீழே விழுந்தது. அதோடு ஒரு பாதி பிரும்மஹத்தி தோஷம் அவரை விட்டு விலகியது. அடுத்த பாதி தோஷத்தைக் களைந்து கொள்ள  பைரவரும் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ரத்த பிட்ஷை எடுத்தபடி அங்கிருந்து மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு ரத்த பிட்ஷை எடுத்து வரலானார். பல்வேறு இடங்களுக்கும் சென்று ரத்த பிட்ஷை எடுத்து வந்தாலும் கமண்டலத்தில் ஒரு சொட்டு ரத்தம் கூட கிடைக்கவில்லை என்பதினால் வருத்தம் அடைந்தவர் தென் பகுதியில் இருந்த திருவாலஞ்சுழி எனும் இடத்தை அடைந்ததும் அங்கு ஸ்வேத வினாயகராக எழுந்தருளிக் கொண்டு இருந்த விநாயகரை சந்தித்தார். அவரை வணங்கி அவரிடம் தன்னுடைய தோஷம் விலக எங்கு செல்ல வேண்டும் என்று ஆலோசனைக் கேட்டபோது, வினாயகரும் அவரிடம் அவர் கையில் இருந்த சூலத்தை மேற்குப் பக்கமாக வீசி எறிந்த பின் அந்த சூலம் எங்கு சென்று விழுமோ அங்கு சென்று தவமிருந்து விஷ்ணுவை வேண்டிக் கொண்டால் கமண்டலத்தில் ரத்தம் நிறைய அவர் அருள் புரிவார் என்று கூற பைரவரும் தனது சூலத்தை மேற்கு திசையில் வீசி எறிந்தார்.
அந்த சூலம் விழுந்த இடமே ஷேத்ரபாலபுரம் ஆகும். அது அடர்ந்த காட்டுச் மரங்களாலும், செடி கொடிகளினாலும் மூடப்பட்ட இடமாக இருந்தாலும், சூலம் விழுந்த இடம் அங்கிருந்த ஒரு குளத்தின் அருகில் இருந்த திறந்தவெளி இடமாக இருந்தது. பைரவரும் அந்த இடத்துக்கு சென்று தவத்தில் அமர்ந்து கொண்டு விஷ்ணு பகவானை வேண்டிக் கொள்ள, விஷ்ணுவும் அவர் முன் தோன்றி அவரது தோஷம் விலகட்டும் என்பதற்காக தன் கை விரலில் இருந்து ஒரு சொட்டு ரத்தத்தை அந்த கமண்டலத்தில் சொட்ட, கமண்டலம் ரத்தத்தினால் நிறைந்தது. விஷ்ணு அவருக்கு அளித்த ரத்த பிட்ஷையினால் கமண்டலம் நிறைய, பைரவரின் பிரும்மஹத்தி தோஷம் முற்றிலும் விலகியது. பைரவர் எந்த இடத்தில் நின்று கொண்டு சாப விமோசனத்தைப் பெற்றாரோ அந்த இடமே ஷேத்திரபாலபுரம் என ஆகியது. அடுத்தகணம் விஷ்ணு மறைந்து விட்டார்.
தோஷம் விலகிய பைரவரும் அங்கிருந்த ஒரு தாடகத்தில் குளித்தவுடன் அந்த தாடகத்தில் மறைந்திருந்த சூலமும் அவருடன் வந்து சேர்ந்து கொண்டது. அந்த தாடகத்தின் பெயரும் சூல தீர்த்தம் என்றாகியது. பைரவரின் உருவமும் அவர் மூல உருவமான பயங்கரத் தோற்றத்தில் இல்லாமல் அமைதியான, புன்னகைப் பூத்த முகமாக அமைந்தது. தாடகத்தில் குளித்தப் பின் பைரவர் வெளியில் வந்ததும் அங்கு ஒரு சிறுவன் உருவில் வினாயகர் தோன்றினார். வினாயகரும் தனது தந்தையின் நிழல் உருவமான பைரவரை வணங்கினார். அது மட்டும் அல்லாமல் இனி அந்த இடம் காசியைவிட மேன்மையான இடமாக விளங்கும் என்றும், அங்கும் பைரவரை துதிக்கும் ஆத்மாக்கள் முக்தி பெறும் என்றும், எந்த ஒரு தோஷங்களினாலும் பீடிக்கப்பட்டவர்கள் அங்கு வந்து பைரவரை வணங்கித் துதித்தால் தோஷங்கள் அனைத்தும் முற்றிலுமாக விலகும் என்றும் கூறினார். ஆகவே பால உருவில் வினாயகர் அவதரித்த அந்த இடம் ஷேத்திரபாலபுரம் எனப் பெயர் பெற்றது.

ஆலய தீர்த்தங்கள்

இந்த ஆலயத்தை சுற்றி சூல தீர்த்தம், காவேரி தீர்த்தம், கணேஷ தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் ஸ்கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. காசிக்குச் சென்று விட்டு திரும்பிய கால பைரவரை இந்த தலத்தில் வந்து பிரும்மா, இந்திரன், நவகிரகங்கள், தேவலோகத்தில் மென்மையான ரிஷி முனிவர்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்ததான கதை உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலயத்தின் மேன்மை வெளித் தெரியாமல் இருந்ததின் காரணம் ஆலயம் ஒதுக்குபுறமான கிராமத்தில் அமைந்து இருந்ததேயாகும். அது மட்டும் அல்ல, அங்கு செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த ஆலயத்தின் மேன்மை மெல்ல மெல்ல வாய்மொழிக் கதையாக கிராம மக்கள் மூலம் வெளி உலகுக்குத் தெரியலாயிற்று.
இவை அனைத்தும் நடைபெற்ற இடம் ஷேத்ரபாலபுரம் என்பதாகும். இங்குள்ள ஆலயத்தில் பைரவர் ஆனந்த கால பைரவர் எனும் பெயரில் எழுந்தருளி உள்ளார். நின்ற நிலையில், அமைதியாக புன்சிரிப்புடன் காட்சி தரும் அவரது கைகளில் கபாலம், மத்தளம், பாசக் கயிறு மற்றும் சூலம் போன்றவை காணப்படுகின்றன. ஆனால் அவருடைய வாகனமான நாய் காணப்படவில்லை. இவரையே ஷேத்ரபாலகர் என்று அழைக்கின்றார்கள். சாதாரணமாக உக்கிரஹ சொரூபமாக காட்சி தரும் பைரவர் இங்கு அமைதியானவராக காட்சி தருகிறார். தென் நாட்டிலேயே கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயமே பைரவருக்கு மட்டுமே மூல தெய்வமாகக் கொண்டு கட்டப்பட்டு ஆலயம் ஆகும். இங்கு ஸ்வேத வினாயகரும், நந்தியும் உள்ளார்கள். ஆலய வளாகத்துக்குள் ஒரு கிணறும் உள்ளது.
இந்த ஆலயத்தின் மகத்துவம் என்ன என்றால் சாதாரணமாக விளக்கு ஏற்றி வழிபடப்படும் எலுமிச்சை காய், மண் மற்றும் உலோகங்களில் செய்யப்பட்ட விளக்கில் எண்ணை ஊற்றி வழிபடாமல் இங்குள்ள பைரவருக்கு பாவக்காயில் எண்ணை ஊற்றி விளக்கு ஏற்றி அவரை வழிபடுவதுதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இப்படி பாவக்காய் மற்றும் பூஷணிக்காயில் எண்ணை ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது இந்த ஆலயத்தில் இருந்துதான் துவங்கி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
பாவக்காயில் எண்ணை ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவத்தின் தத்துவம் என்ன? ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கசப்பான காலம் உண்டு. அதன் காரணம் பூர்வ ஜென்ம வினைப் பயன் மற்றும் முன்னோர்கள் செய்த பாபங்களின் தொடர்வதுதான். ஏன், அவரவர்களே செய்த பாவங்களும் துன்பங்களைத் தரும். கரடு முரணான நம் வாழ்கையை பிரதிபலித்து அதன் துன்ப காலத்தை எடுத்துக் காட்டுவதே கசப்புத் தன்மையை கொண்ட பாவக்காய். அதில் எண்ணை ஊற்றி வழிபடுகையில் ஒளி தரும் விளக்கைப் போல பைரவரை வழிபட்டால் வாழ்விலும் ஒளி ஏற்படும். இங்குள்ள ஆலயத்தில் பாவக்காய் பொரியல், உணவு செய்து அவற்றை நேவித்தியம் செய்தபின் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். நமது வாழ்க்கையில் ஏற்படும் ஊழ்வினையினால் ஏற்படும் தீமைகள் விலக வேண்டும் எனில் பைரவரை வேண்டித் துதிப்பதே சிறந்தது ஆகும். அவரே அனைத்து பூர்வ ஜென்ம பாபங்களையும் அழித்து முக்தி தரும் பரமாத்மன் எனும் சிவபெருமானின் நிழல் ரூப தெய்வம் ஆகும். அவருக்கு பாவக்காயில் எண்ணை ஊற்றி துதிக்கையில் இருளைப் போன்ற வாழ்வின் துன்பப் பகுதியை அழித்து வெளிச்சம் தருவதைப் போல இன்பத்தை அளிப்பார். ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு வந்து காயத்ரி பிரவ மந்திரத்தை ஜெபிக்கையில் அவரவருக்கு உண்டான கிரக தோஷங்கள் விலகுகின்றன என்பது நம்பிக்கை ஆகும். அந்தந்த கிரஹங்களுக்கு உரிய பிராண தேவதை மற்றும் உபசக்தி தேவதைகளின் பெயர்கள் கீழே தரப்பட்டு உள்ளன.
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தொல்லைகளை களைந்து கொள்ள அவரவர்கள் எந்த பூக்களையும், பொருட்களையும் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும், அன்று என்ன பிரசாதம் விநியோகிக்க வேண்டும் என்பதை ஆலய வளாகத்துக்குள் எழுதி வைத்து உள்ளார்கள். அது கீழே தரப்பட்டு உள்ளது.