திருமேனீஸ்வரர்
 அல்லது சுந்தரேஸ்வரர்- புதன் ஆலயம்
சாந்திப்பிரியா 
 

வழி : கேது ஆலயத்தில் இருந்து மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து (SH 113) அதே சாலையில் திரும்பி குன்றத்தூர் நோக்கிச் செல்ல வேண்டும். அதில் சென்றால் இடதுபறம் ஹோலி சர்ச் ஸ்கூல், வலப்புறம் சர்ச் போன்றவை வரும். அடுத்து சுமார் அரை அல்லது முக்கால் கிலோ தூர தொலைவில் வரும் கோவூர் பஸ் ஸ்டாப்பின் பக்கத்து தெருவில் திரும்ப புதன் ஆலயம் தெரியும். யாரைக் கேட்டாலும் கூறுவார்கள்.

வரலாறு:-
பலவிதங்களிலும் சிறப்பு மிக்க இந்த ஆலயம் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு முன்பானது எத் தெரிகின்றது. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பாக சுந்தர சோழன் கட்டத் துவங்கிய ஆலயத்தை பல்லவ மன்னன் முடித்ததாக கூறுகிறார்கள். ஏழு அடுக்குகளைக் கொண்ட ஆலயம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. சாதாரணமாக அனைத்து ஆலயங்களுமே கிழக்கை நோக்கித்தான் அமைந்து இருக்கும். ஆனால் இந்த ஆலயமோ தெற்கு நோக்கி அமைந்து உள்ளதின் காரணம் அந்த ஆலயத்தில் சௌந்திராம்பிகையாக அன்னை பார்வதி அமர்ந்து இருந்தார்.
சிவபெருமான் ஒரு முறை தவத்தில் இருந்தார். வெகு காலம் கண் திறக்கவில்லை. ஆகவே தற்போது திருமேனீஸ்லரர் ஆலயம் உள்ள இடத்தின் அருகில் இருந்த மாங்காட்டில் சிவபெருமானின் அங்கத்தில் தாம் பாதியாகி அவரை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பார்வதி தவத்தில் அமர்ந்து இருந்தார். அவள் தவத்தினால் ஏற்பட்ட உஷ்ணத்தினால் உலகம் தகிக்கலாயிற்று. அனைத்தும் கருகலாயின. உயிர் சேதங்கள் துவங்கின. அப்போது கண்களை மூடியபடி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முடியாமல் போன தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று உதவி கேட்க அவர் தனது மனைவி மகாலஷ்மியை அந்த இடத்துக்கு அனுப்பினார். இலஷ்மி தேவியும் ஒரு பசுவின் உருவில் அந்த இடத்துக்குச் சென்று சிவலிங்கத்தின் மீது தன் மடியில் இருந்து பாலை சுரந்து அபிஷேகித்து சிவனை வேண்ட அவர் கண் திறந்தார். ரிஷப வாகனத்தில் மகாலஷ்மிக்கு காட்சி தந்தார். அவர் கண் திறந்ததும் அனைத்து இடங்களும் குளிர்ந்தன. அவளுடைய பக்தியை மெச்சிய சிவனார் அந்த இடத்துக்கு கோபுரி எனப் பெயரிட்டார். கோ என்றால் பசுமாடு. புரி என்றால் இடம். அதுவே பின்னர் மறுவி கோவூர் ( கோ+ஊர்) என ஆயிற்றாம்.
புதன் கிரகம் சூட்டு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு நிவாரணம் தருபவர். புதன் மன இறுக்கத்தையும் குறைப்பவர். அவர் குளுமையானவர். அதற்கும் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு. ஒரு முறை சந்திரன் பிரஹஸ்பதியிடம் பாடம் பயின்று கொண்டு இருந்தபோது அவருடைய மனைவியின் மீது மையல் கொண்டு சந்திரன் அவளை தூக்கிப் போய் விட சண்டை மூண்டது. யுத்தத்தில் தோற்றுப் போன சந்திரனுக்கு தான் செய்த தவறு புரிந்து மன்னிப்புக் கேட்டார். ஆனால் அதற்குள் சந்திரனுக்கும் குருவின் மனைவிக்கும் குழந்தைப் பிறந்து விட்டது. அதை பிரகஸ்பதி ஏற்க மறுத்தார். ஆகவே அந்த குழந்தைக்கு விஷ்ணுவே பாடம் பயில்வித்து வளர்த்து பெருமையை ஏற்படுத்தினார். ஆகவேதான் சந்திரனின் குளுமையான குணம் புதனுக்கு வந்ததாம். ஆகவே சிவபெருமான் கண் விழித்த பின்னர் குளுமையான அந்த இடம் புதனுக்கு அர்பணிக்கப்பட்டது. அங்கு தேவர்களுடன் சேர்ந்து வந்து தன்னை வணங்கி துதித்த புதன் கிரகத்தை சிவபெருமான் தன்னுடன் அங்கு தங்கி இருந்தவாறு, அந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு கூற, அந்த ஆலயம் புதன் கிரகத்துக்கு முக்கியத்துவம் தரும் ஆலயம் ஆயிற்று.
அந்த ஆலயத்துக்கு மேலும் சில சிறப்புகள் உண்டு. இந்த ஆலயத்தில் மட்டுமே மகா வில்வம் என்று சொல்லக் கூடிய இந்த மரத் தளம் ஒவ்ஒன்றிலும் 5, 7 மற்றும் 9 இலைகளைக் கொண்ட தளங்களைக் கொண்ட வில்வ மரம் உள்ளதாம். எந்த ஒரு இடத்திலும் வில்வத்துக்கு ஒரு தளத்தில் மூன்று இலைகள்தான் இருக்கும். ஆகவே இந்த இடத்தில் வந்து அந்த வில்வ இலைகளினால் பூஜை செய்பவர்கள் பெரும் பாக்கியத்தை அடைவார்கள். ஒரு முறை பாடலாசிரியர் தியாகராஜர் அந்த வழியாக செல்லும்போது திருடர்கள் தாக்கினர். வழிப்போக்கர்கள் போல வந்து அவரை இராமரும் லஷ்மணரும் காப்பாற்றினர். அதற்கு முன்னர்தான் பாடலாசிரியர் தியாகராஜர் இராமர் மீது பாடல்களைப் பாடுவது போல சிவன் மீதும் பாடல் பாடுமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ள அவர் மறுத்து இருந்தார். ஆனால் தம்மை அந்த இடத்தில் ராம-லஷ்மணர்கள் காப்பாற்றியதினால் அந்த பூமிக்கு விஷேச சக்தி உள்ளது எனப் புரிந்து கொண்டு சுந்தரீஸ்வரர் புகழ் பாடும் பஞ்சரத்தின கீர்தனையை அந்த இடத்துக்கு மீண்டும் வந்து பாடினார். அது போல குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் இந்த இடத்தில் வந்து பெரிய புராணத்தை இயற்றினாராம். 

https://1.bp.blogspot.com/_e4SvnlOM5g4/TBJmY0G5JsI/AAAAAAAAASU/qLapoK6fvHs/s1600/5-a.JPG