
புராணக் கதையின்படி ஐந்து தலைகளுடன் இருந்த பிரும்ம தேவர் ஒருமுறை தலை கனம் பிடித்து சிவபெருமானிடம் வாக்குவாதம் செய்ய அவர் கோபத்தினால் பிருமாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்து விட்டாராம். அது மட்டும் அல்லாமல் அவர் படைக்கும் தொழிலையும் இனி செய்ய முடியாது எனவும் சாபமிட பிரும்மாவின் முகமும் அசிங்கமாக மாறியதாம். ஆகவே அதிர்ச்சி அடைந்த பிரும்மா தனது தவறை உணர்ந்து தனக்கு சாப விமோசனம் தந்து தன்னை மன்னிக்குமாறு கோரிக்கை வைக்க, சிவபெருமானும் அவரை பூமியிலே சென்று பன்னிரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து தன்னை வழிபாட்டு வந்தால் தக்க நேரத்திலே தான் அவர் முன் தோன்றி அவருக்கு சாப விமோசனம் தருவதாக உறுதி அளித்தாராம். அதன்படி பிரும்மாவும் பூமிக்கு வந்து பிரும்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ள இடத்தில் பன்னிரண்டு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு வந்தபோது கடைசியாக ஒரு மகிழ மரத்தடியில் வைத்த சிவலிங்கத்தை அருகில் இருந்த குளத்தில் இருந்து நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜித்து வந்தபோது அவர் நிலையைக் கண்டு மனம் வருந்திய பார்வதி சிவபெருமானிடம் சென்று பிரும்மாவிற்காக தானே சிவபெருமானை வேண்டிக் கொண்டு அவர் மனதை மாற்றி அவரை பிரும்மாவிற்கு சாப விமோசனம் தர சம்மதிக்க வைத்தாராம். பார்வதியின் வேண்டுகோளை ஏற்றிக் கொண்ட சிவபெருமான் பிரும்மா முன் தோன்றி அவர் தோஷத்தைக் களைந்து மீண்டும் படைக்கும் சக்தியை அவருக்கு அளித்தாராம். இப்படியாக பிரும்மா தண்ணீர் எடுத்தக் குளம் பிரும்மதீர்த்தம் என்ற பெயரை அடைந்தது. அதுமட்டும் அல்லாமல் தான் உள்ள இந்த ஆலயத்தில் பிரும்மாவுக்கும் தனி சன்னதி அமையும் என்றும், அவர் அங்கிருந்தவாறு அங்கு வந்து வணங்கும் மக்களின் தலைவிதியை மீண்டும் மாற்றி அமைக்க சக்தி உள்ளவராக அமர்ந்து இருப்பார் என்று அருள் புரிந்தார். ஆகவே ஸ்வயம்புவாக அவதரித்த சிவலிங்க வடிவிலான சிவனுக்கு ஆலயம் இங்கு அமைய அதில் பிரும்மா மற்றும் பார்வதிக்கும் தனி சன்னதிகள் அமைந்தன. அதனால்தான் இங்கு வந்து வணங்கி துதிப்பவர்களின் சாபங்கள் விலகி மறு வாழ்வு பெறுகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆலயத்தை சுற்றி பிரும்மா நிறுவிய பன்னிரண்டு லிங்கங்கள் பிரும்மா தண்ணீர் எடுத்து வந்ததாக கூறப்படும் பிரும்மதீர்ததை சுற்றி தனித் தனி சன்னதியில் உள்ளன. ஆலயத்தின் பிரதான மூர்த்தி பிரும்மதீஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார். இந்த ஆலயத்தின் இன்னொரு விசேஷம் என்ன என்றால், இங்கு வந்து சிவபெருமானை ஆராதித்த ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதியும் உள்ளது.

- ஸ்ரீ பிரும்மபுரீஸ்வரர்
- ஸ்ரீ பழமலைநாதர்
- ஸ்ரீ பாதாள ஈஸ்வரர்
- ஸ்ரீ சுந்தரத்தினேஸ்வரர்
- ஸ்ரீ தாயுமானவர்
- ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்
- ஸ்ரீ காளத்திநாதர்
- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்
- ஸ்ரீ கைலாசநாதர்
- ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்
- ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
- ஸ்ரீ மண்டுகநாதர்

Sri Brahmapureeswarar Temple,
Tirupattur – 621 105
Tiruchirapalli
INDIA