திருப்பாற்கடல்
சாந்திப்பிரியா

 

சென்னை- பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் அதாவது NH 4 சாலையில் வருவது காவேரிப்பாக்கம் எனும் சிறு ஊர். இது சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர், வேலூரில் இருந்து 40 கிலோ மீட்டர் அல்லது காஞ்சிபுரம் வழியே வந்தால் அங்கிருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் அங்கு யாரையாவது கேட்டால் திருப்பாற்கடலுக்கு செல்லும் வழியைக் கூறுவார்கள். பெங்களூரில் இருந்து சென்றால் ராணிபேட்டையைத் தாண்டியவுடன் அந்த சிற்றூர் உள்ள பெயர் பலகையைக் காணலாம். சென்னையில் இருந்து வரும்போது  ராணிபேட்டைக்கு முன்பே வரும்  காவேரிபாக்கத்தை அடைந்தவுடன் இடது புறம் திரும்பிச் செல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து சென்றால் காவேரிபாக்கத்தை அடைந்ததும் வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும்.

திருப்பாற்கடலில் இரண்டு பண்டை கால ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுவானவர் சிவபெருமானின் சிவலிங்கத்தின் ஆவுடையார் மீது நின்ற காட்சியில் இருக்கின்றார். அந்த ஆலயத்தின் பக்கத்திலேயே உள்ள இரண்டாவது ஆலயமான ஆதி ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் விஷ்ணு ஆதிசேஷன் மீது படுத்தவாறு காட்சி தருகிறார். சிவன் -விஷ்ணு ஆலயத்தில் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவம் காணப்படுகின்றது.
இந்த புண்ணியதலத்தில்தான் சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா என மூவரும் தோன்றி ரிஷி முனிவர்களுக்கு தரிசனம் தந்துள்ளதாகக் கூறுகிறார்கள். அந்த சப்தரிஷிகளில் நான்கு ரிஷிகள் இங்கு வந்து நான்கு வேதங்களையும் பாடியதினால் இந்த தலத்தின் பெயர் சதுர்வேத மங்களம் என்றும் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது.

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியம்
107 வது திவ்ய தேசம் என அழைக்கப்படும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலய மகாத்மியத்தைப் பற்றிக் கூறுகையில் அதற்கு ஒரு கதை கூறுகிறார்கள். ஒருமுறை விஷ்ணு அனந்த சயனத்தில்- சேஷ நாகம் மீது பாற்கடலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். அபோது அவர் நாபியில் இருந்து எழுந்த நாபித் தண்டில் பிரும்மா பிறப்பு எடுத்து உலகை சிருஷ்டி செய்யத் துவங்கினார். அவர் பூமிக்குச் சென்று காஞ்சீபுரம் பகுதியில் இருந்த இந்த தலத்தில் ஒரு யாகம் செய்யக் கிளம்பி தனது மனைவியான சரஸ்வதியை அதற்கு உடன் அழைத்தார். ஆனால் சரஸ்வதியோ அவருடன் செல்ல மறுக்கவே, வேறு வழியின்றி பிரும்மா தன்னுடன் காயத்ரி மற்றும் சாவித்திரியை அழைத்துக் கொண்டு சென்று யாகத்தைத் துவக்கினார். ஆகவே கோபமுற்ற சரஸ்வதி வேகவதி என்ற ஒரு நதியாய் உருவெடுத்து, அந்தப் பகுதியில் பாய்ந்து யாகசாலையே மூழ்கடிக்க வந்தவுடன் பிரும்மா விஷ்ணுவை வேண்டிக் கொண்டார். உடனே சற்றும் தயங்காமல் விஷ்ணுவானவர் அங்கு வந்து நதிக்கு நடுவில் சேஷ நாகத்தின் மீது படுத்து நதியின் ஓட்டத்தை ஒரு அணைப் போலத் தடுத்து நிறுத்தி யாகம் நடந்து முடிய அருள் புரிந்தார். அவரை அந்த கோலத்தில் கண்ட சரஸ்வதி கோபம் தணிந்து திரும்பிச் சென்றாள். ஆகவே திருப்பாற்கடலில் தான் சயனித்து இருந்த அதே கோலத்தில் பூமியில் வந்து திருப்பாற்கடல் காட்சியை இங்கு அருளியதினால்தான் இந்த சேஷ்திரத்தின் பெயரும் திருப்பாற்கடல் என ஆயிற்று. அவருக்கு ஸ்ரீ ரங்கநாதர் என்ற பெயரில் ஆலயமும் அமைந்தது. இந்த ஆலயத்தில் விஷ்ணுவை பாற்கடலில் சயனிக்கும் கோலத்தில் சிலை அமைத்து பூஜிக்கிறார்கள். ஸ்ரீ ரங்கநாதர் தன்னுடன் தாயார் பூதேவி மற்றும் தாயார் ஸ்ரீ தேவியுடன் காட்சி தருகிறார்.

ஒருமுறை சரீர ரோகத்தினால் அவதிப்பட்ட சித்ரகுப்தர் (ஜனன மரண கணக்கு வழக்குகளை வைத்துள்ளவர்) விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரை இந்த ஷேத்திரத்தில் வந்து தன்னை பூஜித்தால் ரோகம் தீரும் என்று கூறினார். ஆகவே சித்ரகுப்தர் இங்கு வந்து விஷ்ணுவை துதித்து ரோக நிவாரணம் அடைந்தார். அதற்கு நன்றிக் கடனாக இங்கு வந்து யார் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தையும் தான் நீக்குவேன் என்றும்  உறுதி தந்தார்.

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலய மகாத்மியம்

இந்த ஆலயம் பற்றியும் ஒரு சுவையானக் கதை உள்ளது. 1957 -58 ஆம் ஆண்டுகளில் ஒரு பிரசங்கத்தில் அந்தக் கதையை காஞ்சி பரமாச்சார்யார் அழகாக கூறி உள்ளார். அவர் கூறிய அந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டே இந்தக் கதையை நான் எழுதி உள்ளேன்:

ஒரு காலத்தில் பாலாறு எனக் கூறப்படும் அந்த நதிக் கரையில் ஒரு விஷ்ணு ஆலயமும் கிடையாதாம். இருந்த ஆலயங்கள் அனைத்துமே சிவன் ஆலயங்களாகவே இருந்தன. அப்போது ஒரு விஷ்ணு பக்தர் பல சேத்திரங்களுக்கும் சென்று விஷ்ணுவை தரிசனம் செய்தப் பின் இந்த தலம் உள்ள ஊரின் வழியே வந்தார். அந்த பக்தர் தினமும் நதிகளில் நீராடியப் பின் விஷ்ணுவின் ஆலயத்துக்கு சென்று விஷ்ணுவை தரிசிக்காமல் உணவு அருந்த மாட்டார்.  அப்படி பயணத்தில் இருந்தவர் இந்த ஊரை அடைந்தார். குளித்துவிட்டு அங்கும் இங்கும் விஷ்ணுவின் ஆலயத்தை தேடினார். ஒன்று கூடத் தென்படவில்லை. அப்போது முடிவாக அவர் கண்ணில் பட்ட இந்த ஆலயத்துக்குள் நுழைந்தார். வெளியில் அது விஷ்ணுவின் ஆலயமா, சிவன் ஆலயமா எனத் தெரியாமல் இருந்ததினால் உள்ளே நுழைந்தவர் அடுத்த கணம் போன வேகத்திலேயே ஓடி வந்து விட்டார். ‘ நான் இன்று என்ன பாவம் செய்தேன், விஷ்ணுவை தரிசிக்க முடியவில்லையே என வருத்தத்தில் அமர்ந்து இருந்த அவரிடம் ஒரு கிழவர் வந்து ”என்ன ஸ்வாமி விஷ்ணுவின் தரிசனம் முடிந்து ஆகாரம் அருந்த உட்கார்ந்து இருக்கின்றீர்களா?” எனக் கேட்டார். விஷ்ணு பக்தரோ எரிச்சல் அடைந்து  ” ஆகாரமா, விஷ்ணுவின் ஆலயம் இல்லாத இந்த ஊரில் எங்கிருந்து நான் சாப்பிட முடியும்?” என்று கோபமாகக் கூற அந்தக் கிழவர் கூறினார் ”ஆச்சர்யமாக இருக்கிறது, அதோ தெரிகிறதே, அது விஷ்ணுவின் ஆலயம்தானே”.
அந்த அந்தணரோ அப்போதுதான் அந்த ஆலயத்துக்குள் சென்று விட்டு அது சிவன் கோவில் என்று வெளியே ஓடி வந்து விட்டவர். ஆகவே அவர் கோபமாக மீண்டும் கூறினார் ” ஸ்வாமி என் வயிற்று எரிச்சலை ஏன்  கொட்டிக் கொள்கிறீர்கள்…அது சிவன் கோவில் என்று தெரிந்தும் ஏன் பொய் கூறுகிறீர்கள்”. கிழவரோ, ” சரியான ஆளப்பா  நீங்கள், அது விஷ்ணுவின் ஆலயம்தான் வாருங்கள் காட்டுகிறேன் ”என்றார்.  அந்தனரோ அதை ஒத்துக் கொள்ளவில்லை. கிழவரும் விடவில்லை. ” பந்தயம் கட்டும்….அது விஷ்ணுவின் ஆலயம் என உமக்கு காட்டுகிறேன்…வாரும்” என்றார். அந்த பண்டிதரும் செல்ல மறுத்தார் .  ஒருவர் மாற்றி ஒருவர் மீது பொய் கூறுகிறார் என்று குற்றம் சுமத்த அவர்கள் சண்டை  வலுத்துக் கொண்டே  போய் பஞ்சாயத்தில் அந்த சண்டை போய் நின்றது. இருவருடைய வாதத்தையும் கேட்டவர்கள்  அந்த ஆலயத்துக்குள் சென்று  யார் பொய் கூறுகிறார்கள் எனப் பார்க்கலாம் என்று அந்த ஆலயத்துக்கு அந்த இருவரையும் அழைத்துக் கொண்டு போனார்கள். உள்ளே போய் பார்த்தால் ஒரு சிவலிங்க  ஆவுடயார் மீது விஷ்ணு நின்று கொண்டிருந்த கோலத்தில் ஆலய மூர்த்தியின் சிலை இருந்தது.  அடடா….மகாவிஷ்ணு அல்லவா இங்கு இருக்கின்றார்…முதலில் என் கண்ணுக்கு ஏன் மாறித் தெரிந்தது  என்று வருந்திய விஷ்ணு பக்தர் அங்கேயே விஷ்ணு  மீது தோத்திரம் பாடினாராம். அதன் பின் அவர்கள் அந்தக் கிழவரைத் தேட அவரைக் காணவில்லை. அப்போதுதான் அனைவரும் புரிந்து கொண்டார்கள் நடந்தது விஷ்ணுவின் நாடகமே என்பதை.  இப்படியாக சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் ஒரே ஆலயத்தில், ஒரே சன்னதியில் இருந்தபடி சிவனும் விஷ்ணுவும் வெவ்வேறானவர்கள்  அல்ல  என்பதைக் காட்டும்  ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயம் எழுந்தது.

இந்த தலத்தின் மகிமை
இந்த ஆலயங்கள் விஜயநகரத்தை சேர்ந்த கிருஷ்ணதேவராயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகின்றது.

  •  ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் வந்து கருடாழ்வாருக்கு ராகு காலத்தில் தேன்- திருமஞ்சனம் செய்வதினால் சரீர வியாதிகள் விலகும்.
  • ஆஞ்சனேயருக்கு பதினோரு பூஷனிக்காய் மாலையை சாத்துவதின் மூலம் மிருத்யு தோஷங்கள் விலகும்.
  • இங்கு வந்து  எவர் ஒருவர் ஸ்ரீ ரங்கநாதரை பூஜிக்கின்றார்களோ அவர்களுக்கு அன்றுவரை இருந்த பாவங்கள் அனைத்தும் விலகும்.
  • சிவ-விஷ்ணுவை ஒரு சேர இங்கு வணங்குபவர்கள் ஞானம் பெறுவார்கள், முக்தி கிடைக்கும்.