அர்த்தநாரீஸ்வரர்
சாந்திப்பிரியா
அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண் மற்றும் பாதி பெண் உருவில் உள்ள ஈஸ்வரர் என்று அர்த்தம். ஒரு முறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் என்ன என்றால் சிவனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தம்மையும் வணங்குகையில் முனிவர்கள் மட்டும் சிவபெருமானை வணங்கிவிட்டுச் செல்கிறார்களே, அது தன்னை அவமதிப்பது போல உள்ளது. ஆனாலும் அதைப் பற்றி சிவபெருமான் கவலைப்படுவது இல்லையே என்பதே. அவளுடைய கருத்து என்ன என்றால் உலகில் உள்ள அனைத்து ஜீவா ராசிகளுமே ஆண் -பெண் உறவில் ஏற்பட்டவையே. பெண் இன்றி ஆணால் மட்டுமா ஜீவராசிகளை படைக்க முடியும்? ஆக ஆணும் பெண்ணும் சமம் அல்லவா என்பதினால் ஆணாக உள்ள சிவனை வணங்குபவர்கள், அவருடைய பத்தினியான தன்னையும் வணங்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர் வருபவர்களுக்கு வரம் தர வேண்டும் என கூறினாள். அந்தக் கூற்றை ஏற்காத சிவனோ உலகப் பற்றுதல் இல்லாத முனிவர்கள் மட்டுமே அப்படி செய்கிறார்கள், அவர்கள் கண்களில் சிவத்தை தவிற வேறு எதுவும் தெரிவதில்லை, உலக சக்தியே தான் மட்டுமே என அவர்கள் எண்ணுகையில் தாம் என்ன செய்ய முடியும் எனக் கூறிவிட்டார். அப்போது அங்கு வந்த பிருகு முனிவரும் சிவனை மட்டுமே வணங்கிச் சென்றுவிட அதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தன்னுடைய சக்தியை சிவனுக்குக் காட்ட அந்த முனிவரை சதை இல்லாத பிண்டமாக ஆகுமாறு சபித்து விட தன சக்தியைக் காட்ட எண்ணிய சிவன் அந்த முனிவருக்கு தன் கையில் இருந்த தடியைத் தூக்கிப் போட்டார். அந்த சதை இல்லாத பிண்டமும் அந்தக் கழியை பிடித்துக் கொண்டு நடந்தே சென்றது.
அதைக் கண்டு பார்வதி அவமானம் அடைந்தாள். தானும் சிவனுக்கு நிகராக சக்தி பெற்றவளே, உலகமே ஆண் பெண்ண உருவரின் அங்கமாக இருக்கையில் சிவன் மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன் என எண்ணி அது குறித்து பிரும்மாவிடம் யோசனைக் கேட்க அவரோ அவளை சதுரகிரி மலைக்குச் சென்று சிவபெருமானையே துதித்து தவம் இருந்து அவரின் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வரம் கேட்குமாறு யோசனைக் கூறினார். அப்படி அவள் சிவனின் பாதியாகி விட்டால் அவர் உண்மையை புரிந்து கொள்வார் எனக் கூற பார்வதியும் அது போலவே சதுரகிரிக்குச் சென்று சிவபெருமானை துதித்து தவம் இருக்க அவர் முன் தோன்றிய சிவனிடம் அவர் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வேண்டிக்கொள்ள வேறு வழி இன்றி சிவபெருமானும் அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டு அங்கேயே சிவ லிங்க வடிவில் அர்த்தநாரீஸ்வரராக அமர்ந்தாராம். அதன் பிறகே அவர் சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டாராம். இப்படி ஒரு கதை உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் குறித்து கூறப்படும் இன்னொரு கதை என்ன என்றால் ஒரு முறை தேவலோகத்தில் சிவனும் பார்வதியும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கையில் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பார்வதி மூடி விட்டாள். அதனால் அந்த நேரத்தில் உலகம் இருண்டது. பூமி உலர்ந்தது, ஜீவராசிகள் அழியத் துவங்கின. ஆகவே கோபமுற்ற சிவ பெருமான் பார்வதியை விட்டுப் பிரிந்தார். மீண்டும் தன்னுடன் அவள் இணைய வேண்டும் எனில் அவளை இமயமலையில் சென்று தவம் இருக்குமாறு கூறிவிட்டார். அங்கு பல காலம் தவம் இருந்த பார்வதிக்கு காட்சி தந்த சிவபெருமான் அவளை மீண்டும் காசி நகருக்குச் சென்று அங்கு விஸ்வனாதராக உள்ள தன்னை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறு கூறிவிட்டு மறைந்து விட்டார். பார்வதியும் காசிக்குச் சென்று சிவனை வேண்டி தவம் இருக்க அவளுக்குக் காட்சி தந்த சிவனும் மீண்டும் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவம் இருக்குமாறுக் கூறினார். பார்வதியும் சளைக்கவில்லை. தான் அவருடன் இணைவது மட்டும் இல்லாமல் அவருடைய சக்தியின் பாதியாக வேண்டும் என்ற திடமான எண்ணத்தில் திருவண்ணாமலைக்கு சென்று இன்னமும் கடுமையாகத் தவம் செய்தாள். அவள் தவத்தை மெச்சிய சிவனும் அங்கேயே அவளுக்குக் காட்சி தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டாராம். அதனால்தான் அவர் அர்த்தநாரீஸ்வரராக ஆனார் என்றும் ஒரு கதை உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் படைப்பு தோன்றியது குறித்து கூறப்படும் கதைகளில் சில இவை. சிவன் திருவண்ணாமலையில் அல்ல கொங்கு நாட்டில்தான் தவத்தில் இருந்த பார்வதிக்கு தரிசனம் தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றார் என்ற மூன்றாவது கதையும் உள்ளது.
அதனால்தான் திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு அம்மையப்பன் என்ற பெயரில் அற்புதமான ஒரு ஆலயம் அமைந்து உள்ளது. அர்த்தநாரீஸ்வரருக்கு உலகில் வேறு எங்குமே தனியான ஆலயம் இல்லை, இங்கு மட்டுமே உள்ளது என்பதே அந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.
இங்குள்ள ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த ஆலயம் உள்ள இடமான திருச்செங்கோடு எழுந்த வரலாறும் சுவையானது.
இந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மூலவர் திருவுருவம் கற்சிலை இல்லை என்றும் அதுவும் பழனி மலையில் செய்யப்பட்டு உள்ள நவபாஷண முருகனைப் போன்றே இங்கு சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையதாம் . ஆகவே இங்குள்ள மூலவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர் மற்றும் மூலவரின் பாதத்தில் இருந்து விழும் சுனை நீர் தீர்த்தம் போன்றவற்றை தொடர்ந்து பருகி வந்தால் மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப் பழமையான சிலை என்பதால் தொடர்ந்து அபிஷேகம் செய்து வருவதினால் சிலையின் உருவம் சற்றே மாறி வருகிறதாம். ஆகவேதான் தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அர்த்தநாரீஸ்வரர் உருவில் அலங்காரம் செய்யப்படுகிறது.
ஆலயத்தில் பிரதோஷ்ட காலத்தில் செய்ய வேண்டிய பிரதர்ஷன முறை
அர்ச்சனையின் போது உச்சரிக்கப்படும் ஸ்தோத்திராவளி எனும் நாமம் எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் ஆராதிக்கப்பட்டு அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்திற்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. இந்தத் தளம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார ஸ்தலமாகும்.