ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத
ஸ்ரீ ஆஞ்சநேய ஆலயம்

சாந்திப்பிரியா
நான் சமீபத்தில் பெங்களுர் ரூபன் அக்ரஹாரம் எனும் இடத்தில் இருந்த நரசிம்மர் ஆலயத்துக்கு சென்றேன். ஆலயம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. அதைப் பார்த்தபோதே அது மிகவும்  புராதான ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெரிந்தது.  ஆலயத்தில் நுழைந்ததுமே மிகப் பெரிய அரச மரத்தின் அடியில் இருந்த நாக தேவதைகளும், ஒரு சக்தி தேவியின் சிலையும் அதை உறுதிப்படுத்தியது.

தூண் ஆஞ்சநேயர் 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்குள்ள ஒரு பெரிய ஸ்தம்பத்தில் ஹனுமார் சிலை இருந்தது. அதுவும், நாக தேவதைகளும் அங்கிருந்த மக்களினால் வழிபடப்பட்டு வந்துள்ளன. அதுவே அங்கு இருந்த கிராமத்தின் ஆலயமாக இருந்துள்ளது. ஆனால் இன்று அந்த ஆலயம் ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்திர ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சமேத ஸ்ரீ ஆஞ்சநேய சன்னதி ஆலயமாகி உள்ளது. ஆலயம் பிரதான சாலையை விட்டு சற்று சற்று உள்ளே அமைந்து உள்ளதினால் பலருக்கும் தெரியவில்லை.

மேரு நரசிம்மரின் இரண்டு தோற்றங்கள் 

இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் என்பதின் காரணம் இங்குள்ள நரசிம்மர் ஆலயத்தில் பீஜாக்ஷர மந்திரங்களினால் ஆராதிக்கப்பட்ட நரசிம்ம மேரு வைக்கப்பட்டு உள்ளது. இந்த மேரு நரசிம்மரும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இந்த மேரு நரசிம்மரே ஆலயத்தின் பிரதான தெய்வம். வேறொரு இடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டு வந்துள்ள இந்த மேரு நரசிம்மர் இந்த ஆலயத்தில் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாம். இது போன்ற மேரு நரசிம்மர் இந்தியாவில் வேறு எங்குமே கிடையாது என்பது இன்னொரு விசேஷம். அந்த மேரு நரசிம்மரை சுற்றி எட்டு அஷ்ட லஷ்மிகளும் அமர்ந்து உள்ளார்கள். ஐந்து அடுக்கு மேரு வடிவிலான இதில் ஆதி கூர்மா, ஆதி வரஹா, ஆதி வாசுகி, ஆதி மன்தகு போன்ற நான்கும் மேருவை சுமந்தபடி உள்ளதைக் காணலாம். மேருவின் அடியில் சேத்தூர் துவாரா மற்றும் அஸ்தகாகா போன்றவை மேருவை தாங்கி நிற்கின்றன. அவற்றில் நரசிம்ம ஸ்வாமிக்கு தேவையான பீஜாக்ஷரங்கள், அஸ்தாக்ஷரங்கள் மற்றும் துவாதாக்ஷரங்கள் போன்றவை பொறிக்கப்பட்டு உள்ள தாமரை இதழ்கள் காணப்படுகின்றன. அந்த மேருவின் தலைப் பகுதியில் ஸ்ரீகாரா மற்றும் ஓம்காரா இரண்டுமே உள்ளன. நரசிம்மரின் தலை மீது பாம்பு படம் எடுத்து குடை பிடிப்பது போல அமர்ந்து உள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில் மேருவின் முன்பக்கத்தில் மேரு நரசிம்மரின் மந்திர தேவைக்கு ஏற்ப பாம்பின் ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது. (படத்தில் காண்க ) .
நாகதேவதைகளும் ,  அரச  மரமும்
  
ஆலய வளாகத்துக்குள்  நுழைந்ததும் இடதுபுறம் பெரிய அரச  மரத்தின் அடியில் ஒரு சக்தி தேவியின் சிலை உள்ளது. அதைத் தவிர ராகு, கேதுக்கள் உட்பட பல நாக தேவதைகளின் சிலைகள் உள்ளன . அந்த சன்னதியில் இருந்து வெளியில் வந்துடன் நேராக நரசிம்ம ஸ்வாமி உள்ள இடத்தை அடையலாம்.  அந்த சிறிய ஆலயம் அந்த ஆலய வளாகத்துக்கு உள்ளேயே கட்டப்பட்டு உள்ளது.  அதற்குள்  உள்ள மூல சன்னதியில்  லஷ்மி தேவியை மடியில் வைத்துக் கொண்டவாறு நரசிம்மர் காட்சி தருகிறார். அந்த சன்னதிக்கு முன்சன்னதியில் மேரு நரசிம்மர் வைக்கப்பட்டு உள்ளது. அந்த மேரு நரசிம்மரை சுற்றி அஷ்ட லஷ்மிக்கள் உள்ளனர்.  இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை மேரு நரசிம்மரே மூல தெய்வம் ஆகும்.  அந்த மேரு நரசிம்மர் வைக்கப்பட்டு உள்ள சன்னதியில் பெரிய கல் தூணில்  ஹனுமார் சிலை காணப்படுகின்றது. அதையும் அங்கு பிரதானமாக பூஜை செய்கிறார்கள். காரணம் இந்த  ஆலயத்தில் மேரு நரசிம்மரும், லஷ்மி நரசிம்மரும் பிரதிஷ்டை செய்யப்படுவதாற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தே இந்த  ஆஞ்சநேயரே வணங்கப்பட்டு வந்துள்ளார். இப்படிப்பட்ட ஹனுமாரின் ஸ்தூபியில் உள்ள  சிலைகள் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அதிக அளவில் செய்யப்பட்டு இருந்துள்ளன. அவர் காலத்தில்தான் ஆஞ்சநேய  வழிபாடு மிக அதிக அளவில் இருந்துள்ளது என்பது வரலாற்று செய்தி. பெங்களூரில் பல ஆலயங்களில் இப்படிப்பட்ட புராதான கல் தூண் ஹனுமாரைக் காணலாம். ஆனால் அந்த இரண்டு சன்னதிகளும் ஒன்றுக்குள் ஒன்றாக, இரண்டு அறைகளைப் போலவே உள்ளதினால் பக்தர்களுக்கு அந்த சன்னதியில் செல்ல அனுமதி இல்லை.  வெளியில் இருந்துதான் அவர்களை தரிசிக்க முடியும். சன்னதிக்கு வெளியில் இருபுறமும் காவலுக்கு ஜெயா-விஜயா எனும்  காவல் தேவதைகளின் சன்னதிகள் உள்ளன. அவர்களைத் தவிர, சைவ ஆலயங்களில் உள்ள பிள்ளையாரைப் போலவே கருதப்படும்  விஸ்வஷேனா என்ற  கடவுளும் ஒரு சன்னதியில் உள்ளார்.  அந்த சன்னதிக்கு நேர் எதிரில் கருடாஷ்வார் சன்னதி உள்ளது. அதில் அவர் நரசிம்மரை வணங்கிய நிலையில்  காணப்படுகிறார்.


வேண்டுகோள் நிறைவேற

இந்த ஆலயத்தில் யார் யாருக்கு என்ன குறை உள்ளதோ அதை தீர்க்க  வேண்டும் என நரசிம்மரை வேண்டிக் கொண்டு தம்மால் முடிந்த அளவு துவரம் பருப்பை (அரை கிலோ /ஒரு கிலோ அல்லது மனதிற்கேற்ப எடையில் ) பாத்திரம் அல்லது பையிலோ வைத்துக் கொண்டு அதை இரு உள்ளங்கையிலும் ஏந்திக் கொண்டு  நரசிம்மரை வணங்கி வேண்டிக் கொண்டப் பின் ஆலயத்தை 48 முறை பிரதர்ஷனம் செய்துவிட்டு  அங்குள்ள பாத்திரத்தில் அதைக் கொட்டி விட வேண்டும். இந்த வேண்டுதலை செய்வாய் கிழமையில் செய்ய வேண்டுமாம். பாத்திரத்தில் போடப்பட்ட துவரம் பருப்பை அவர்கள் அன்னதானத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
விஷ்ணுவானவர் வைசாக மாதம் ஸ்வாதி நட்ஷத்திரத்தில்தான் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவைக் கொன்றதினால் , ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நட்சத்திர தினத்தன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று சுதர்ஷன நரசிம்ம ஹோமம், ரதரோகன, ரூன விமோச்சனா, ஸ்தோத்திரப் பாதேஸா மற்றும் சத்யநாராயண பூஜை செய்து அன்னதானம் நடைபெறுகின்றது.

 

ஆலய நேரம்
தினமும்
காலை 6.00 முதல் 9.00 மணிவரை
மாலை 5.30 முதல் 8.00 வரை
செய்வாய் / ஞாயிற்றுக்  கிழமைகளில் 
காலை 5.30 முதல் 12.00 மணிவரை
மாலை 5.30 முதல் 8.00 வரை 

ஆலய சேவை
 
(ஆலய விளம்பரத்தின்படி
 
 ஆலய அமைப்பு 
 
ஆலயம் செல்லும் வழி
ஆலய விலாசம்
ஸ்ரீ ஹரி வைகுண்ட ஷேத்ரா
ரூபென்  அக்ரஹாரா ,

ஹோசூர்  பிரதான சாலை
பெங்களுரு  – 560068

தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி 
ஆபீஸ் /அலுவலகம்  : +91 – 080 – 25732289
பட்டாபி  ராம்  பட்டர்  : +91 – 9480620338
Email : prbhattar@sriharivaikuntakshetra.org
ரங்கா  பட்டர்  : +91 – 9448303538
திம்மராஜு  : +91 – 9481421733
பவானி  ஷங்கர்  : +91 – 9036128884
Email : bshankar@sriharivaikuntakshetra.org