தெரிந்த ஆலயம்…பலருக்கும் அறிந்திடாத வரலாறு – 25
வரதராஜப் பெருமாள்
ஆலயம்- காஞ்சிபுரம்

சாந்திப்பிரியா
1053 ஆம் ஆண்டில் பல்லவர்கள் காலத்தில் கட்டியதாக கூறப்படும் இந்த ஆலயம் சோழர்கள் காலத்தில் மேலும் புதிப்பிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரத்தில் ஹிமயகிரி    என்ற சிறு மலைக்  குன்றின் மீது உள்ள இந்த விஷ்ணு ஆலயம் திவ்ய தேசத்தின் முக்கியமான ஆலயமாகும். மலை மீது உள்ள ஆலயத்துக்கு சுமார் இருபத்தி நான்கு படிகள் ஏறிப் போக வேண்டும். ஆலயம் பிரும்மாண்டமானது. அதில் பகவானைத் தவிர முக்கியமாக தரிசிக்க வேண்டியது அங்கு உள்ள இரண்டு பல்லிகளின் சிலைகளையும் என்பது பொதுவான நம்பிக்கை. அதென்ன பல்லிகளின்  தரிசனம்? ஆலயத்தின் சுவையான பின்னணிக் கதை  இது .
வரதராஜப் பெருமான் 
முன் ஒரு காலத்தில் படைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பிருமாவுக்கு தன் மனைவியான சரஸ்வதியுடன் ஏற்பட்ட சண்டையினால் ஒரே மனக் குழப்பம் ஏற்பட்டதாம். என்ன முயன்றும் அவரால் நிதானமாக சிந்திக்க முடியாமல் போக அவர் கங்கை கரையில் சென்று த்யானம் செய்தார். அப்போது அவருக்கு ஒரு குரல் ” உங்கள் மன நிலை மாற வேண்டும் எனில் ஆயிரம் யாகங்களை செய்ய வேண்டும்” என்று கூறியது. அவருக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. ஆயிரம் யாகம் செய்வதென்றால் அதுவரை தன்னுடைய படைக்கும் தொழில் என்ன ஆவது என கவலைப்பட்டார். ஆனால் நாரதர் அவருக்கு சத்யாவ்ரத ஷேத்திரம் எனப்படும் விஷ்ணு காஞ்சிக்குச் சென்று யாகம் செய்யுமாறும் அங்கு செய்யப்படும் ஒரு யாகத்துக்கு ஆயிரம் யாகம் செய்த பலன் உண்டு எனவும் உபாயம் கூற பிரும்மா அங்கு சென்று தவம் இருந்தார். ஆனால் அவருடன் ஏற்பட்டு இருந்த சண்டையினால் சரஸ்வதி அதை தடுக்க முயன்றாள். வேகவதி என்ற நதியாக மாறி அங்கு வந்து யாக குண்டத்தில் பாய்ந்து யாகத்தை தடுக்க முயன்றாள். யாகத்தில் முக்கியமானது யாக குண்டத்தில் எரியும் தீயில் போடப்படும் பொருட்கள். அந்த யாகத் தீயே பாய்ந்து வரும் நதியின் நீரினால் அணைந்து விட்டால் என்ன ஆவது? ஆகவே பிரும்மா தனக்கு யாகத்தை நல்லபடியாக முடிக்க உதவுமாறு விஷ்ணுவை வேண்டிக் கொண்டு யாகத்தை துவக்கினார். விஷ்ணுவும் பாய்ந்து வந்த நதியை தடுக்கும் விதமாக குறுக்கே படுத்துக் கொண்டுவிட நதியால் அந்தப் பக்கம் ஓடி வர முடியவில்லை. பிரும்மா அதற்குள் யாகத்தை செய்து முடித்து விட்டார். அப்போது விஷ்ணு பிரும்மாவுக்கு அங்கேயே வரதராஜராகக் காட்சி த்தார். பிரும்மாவின் மனக் குழப்பம் தீர்ந்தது.
ஆலயத்தில் பல்லியின் தோற்றம் 
இன்னொரு கதையின்படி ஒருமுறை தனக்கு ஏற்பட்ட சாப விமோசனத்துக்காக பிரும்மா அந்த இடத்தில் வந்து தவம் செய்தாராம். தவத்தின் முடிவில் விஷ்ணுவை சதுர்புஜங்களுடன் கூடிய ( நான்கு கைகளுடன்) தரிசிக்க பிரும்மா ஆசைப்பட விஷ்ணு முதலில் நதியாக காட்சி தர அதை ஏற்காத பிரும்மா மீண்டும் தவத்தைத் தொடர, விஷ்ணு ஒரு காட்டுப் பிரதேசமாக காட்சி தர அதையும் ஏற்காத பிரும்மா தவத்தைத் தொடர முடிவில் விஷ்ணு சதுர்புஜத்தவராக சங்கு, சக்கரம், அபாய முத்திரையுடன் வரதராஜப் பெருமாளாகக் காட்சி தந்தாராம். பிருமாவின் சாபமும் அகன்றதாம். ஆகவே பிருமாவே விஷ்ணுவின் உருவத்தை மரத்தினால் ஆனா சிலையாக செய்து வழிபாட்டுக்கு வைக்க அதுவே பிற்காலத்தில் ஆலயம் ஆயிற்றாம்.
அந்த ஆலயத்தில் உள்ள இரண்டு விசேஷமான பல்லிகளின் சிலைகளைப் பற்றிய கதை இது. தேவேந்திரனை யானையாக ஆகுமாறு  ஒருமுறை சரஸ்வதி கொடுத்த சாப விமோசனத்துக்கு அங்கு வந்து அவர் விஷ்ணுவை துதித்து வழிபட்டாராம். அப்போது அந்த நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் சாட்சியாக இருக்க வேண்டி இருந்த முன் பிறவியில் இரண்டு மன்னர்களாக இருந்து சாபத்தினால் அந்த ஜென்மத்தில் பல்லிகலாக இருந்த இரண்டு பல்லிகளும் தேவேந்திரன் யானை வடிவில் இருந்து சாப விமோசனம் பெற்றப் பின் தாமும் சாப விமோசனம் பெற்றனவாம். ஆகவே அவர்களது நடத்தையை கண்டு மகிழ்ந்த தேவேந்திரன் அவர்களின் நினைவாக இரண்டு பல்லிகளை செய்து அந்த ஆலயத்தில் வைத்தாராம். ஆகவே பகவானையும் தாயாரையும் வணங்கியப் பின் அந்த இரண்டு பல்லிகளையும் வணங்குவது ஒருவர் பெற்றுள்ள சாபங்களை விலக்குமாம். யானையாக வந்து சாப விமோசனம் பெற்ற தேவேந்திரன் தவம் இருந்த மலை யானை மலை அதாவது ஹிமய என்றால் யானை, கிரி என்றால் மலை என்ற அர்த்தம் வரும் வகையில் ஹிமயகிரி   என்ற பெயர் பெற்றது.
ஆலயத்தின் இன்னொரு ஒரு அற்புதக் காட்சி

வெகு காலத்துக்குப் பின் அங்கு விஷ்ணுவிற்கு வரதராஜப் பெருமாள் ஆலயத்தை பல்லவ மன்னர்கள் கட்டியபோது தவறுதலாக பிரும்மா செய்து வைத்து இருந்த சிலை அங்கிருந்த ஆனந்த சரஸ் என்ற குளத்தில் விழுந்து முழுகிவிட மன்னர்கள் அது போன்ற சிலையை கல்லில் செய்து பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்தார்களாம். ஆனால் அதன்பின் கிடைத்த கட்டளைப்படி நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுகி இருந்த மரத்திலான சிலையை குளத்தில் இருந்து வெளியில் எடுத்து பூஜித்தப் பின் மீண்டும் அதை அந்த குளத்திலேயே போட்டு வைக்க வேண்டும் என ஆயிற்று. ஆகவே அந்த சிலையை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுத்து மக்கள் பார்வைக்கு வைத்தப் பின் மீண்டும் குளத்தில் முழுக வைகின்றார்களாம்.