இந்திய எல்லை பகுதியில் உள்ள  
மகிமை வாய்ந்த  ஆலயங்கள்
தராட் தேவி ஆலயம் 
       
சாந்திப்பிரியா

நாம் தென்னிந்தியாவில்தான் அதிக அளவு தமது கிராமத்தைப் பாதுகாக்கும் கிராம தேவதைகள் உள்ளன. ஆனால் அது போல நமது தேசத்தில் எல்லையையே பாதுகாத்து வரும் ஒரு துர்க்கை அம்மனைப் பற்றிய செய்தியை சமீபத்தில் படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது அந்த செய்தி. ராஜஸ்தானில் உள்ளது ஜெய்சல்மீர் என்ற இடம். அது பாகிஸ்தான் நாட்டின் எல்லையைத் தொட்டபடி உள்ள இடம். அந்த மாவட்டத்தில் உள்ளதே தராட் என்ற ஊர். எல்லைக்கு மிக அருகில் உள்ளது அந்த இடம். அங்குதான் துர்க்கை அம்மனின் அவதாரமான தராட் தேவியின் ஆலயம் உள்ளது. அந்த இடம் சுமார் கீ. பீ 837 ஆம் ஆண்டில் பாடீ ராஜபுத்திர மன்னன் தானு ராவ் என்பவரின் ஆளுமையில் இருந்ததாம். அவர் தரோட்டை தனது தலைநகரமாக வைத்து இருந்ததினால் அங்கு தராட் தேவியின் ஆலயத்தை அமைத்து வழிபாட்டு வந்தாராம்.பின்னர் அவர் தன் தலை நகரை ஜெய்சல்மீருக்கு மாற்றிக் கொண்டார். ஆனால் ஆலயாத்தையும் அந்த தேவியின் சிலையையும் அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டார். அதன் பின் அந்த ஆலயத்தில் உள்ள தேவியை உள்ளூரில் இருந்தவர்களும் எல்லையில் இருந்த பாதுகாப்புப் படையினரும் வணங்கி வந்துள்ளார்கள்.

அந்த ஆலயத்தின் மகிமைக்கும் சக்திக்கும் எடுத்துக் காட்டாக இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் 1942 ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் போடப்பட்ட குண்டுகளும் அடுத்து பாகிஸ்தானினால் 1965 ஆம் ஆண்டு நடந்த சண்டையில் போடப்பட்ட குண்டுகளும் அந்த ஆலயத்தில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லையாம். பாகிஸ்தான் வீசிய சுமார் மூவாயிரம் குண்டுகளும் அந்த ஆலயத்தில் வந்து விழுந்தபோது அவை வெடிக்கவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தியாக உள்ளது. பாகிஸ்தானியப் படையினரால் மூன்று பக்கமும் சூழப்பட்டு கிடந்த மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்த படை வீரர் ஒருவர் கனவில் மாதா தோன்றி அவர்களை தன்னுடைய ஆலயத்தில் வந்து தங்குமாறு கூறியதாகவும், அவர்களும் அந்த ஆலயத்துக்குள் மீட்புப் படை வரும்வரை மூன்று நாட்கள் தங்கி இருக்க பாகிஸ்தான் படையினரால் வீசப்பட்ட எந்த குண்டுகளும் அவர்களை தாக்கவில்லையாம்.

 

மீண்டும் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் பெரும் அளவுப் படையினருடன் ஊருக்குள் நுழைந்த பாகிஸ்தானியப் படையினர் அந்த பகுதியில் முன்னேற முடியாமல் அந்த ஆலயத்துக்குள் இருந்த மிகச் சிறிய படையினரால் தடுக்கப்பட்டனராம். அந்தப் பகுதியில் பாகிஸ்தானியப் படையினர் பெருமளவு டாங்கி எனப்படும் புகழ் பெற்ற யுத்த தடவாளங்களை இழந்தது உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக ஆயிற்று. அதற்கெல்லாம் காரணம் அந்த தேவியின் சக்தியே என பாதுகாப்புப் படையினர் நம்புவதால் அந்த ஆலயத்தை பாதுகாப்பதும் அவர்கள்தானாம்.

அந்த ஆலயத்துக்கு செல்ல நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை சரியான நேரமாக இருக்குமாம். ஆனால் அது உள்ள இடம் எல்லைப் பகுதியில் உள்ளதினால் அங்கு செல்ல தராட் கமிஷனரின் அனுமதியைப் பெற வேண்டுமாம். வாடகை வாகனத்தில் செல்ல ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் செலவு ஆகுமாம். இன்னொரு செய்தியின்படி அந்த ஆலயம் உள்ள இடத்தின் கீழே தற்போது மறைந்துவிட்ட சரஸ்வதி நதி ஒரு காலத்தில் ஓடியதினால் அந்த இடம் மேலும் புனிதமாகக் கருதப்படுகின்றது.மேலும் அந்த தேவியை பாகிஸ்தானில் உள்ள பார்வதி தேவியின் உடல்  விழுந்த சக்தி ஆலயமான ஹிங்க்லாஜ் மாதா ஆலயத்து தேவியே எனவும் கருதுகிறார்கள் .