
கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்று புகழ் பெற்ற நாடி நரசிம்மர் ஆலயம். பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டாமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். தேசிய நெடுஞ்சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். அதன் எதிரில் சாலையைத் தாண்டி எதிர்புறத்தில் உள்ள சாலையில் சென்றால் சிறு ரயில் பாதையைக் கடந்து செல்ல வேண்டி வரும். சாலை நன்றாக இல்லை. மிகக் குறுகியதாகவே உள்ளது. அதில் சென்று கொண்டு இருந்தால் ஒரு இடத்தில் ஆலய பெயர் பலகையைக் காணலாம். அங்கு வலது பக்கத்தில் திரும்பி அந்தப் பாதையில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.


அப்படிப்பட்ட நரசிம்மருக்கு இங்கு அமைக்கப்பட்டு உள்ள நாடி நரசிம்மர் ஆலயம் சிறியதுதான் என்றாலும் கீர்த்தி அதிகம். ஆலயம் 1200 வருடத்திற்கு முந்தையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கன்னடத்தில் நாடி என்றால் நதி என்று பொருள். இந்த ஆலயம் முன்பு அங்கிருந்த கான்வா எனும் நதிக்கரையின் பக்கத்தில் இருந்ததினால் இந்த பெயர் வந்துள்ளது. இங்குதான் கான்வா முனிவர் வந்து தவத்தில் இருந்தார். அப்போது நரசிம்மர் அவர் கனவில் வந்து தனக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூற அவரும் இந்த ஆலயத்தை நிறுவினாராம். ஆலயத்தில் வந்து வேண்டுபவர்கள் உரிக்காத தேங்காயைக் கட்டிவிட்டு 48 முறை சன்னதியை சுற்றி பிரதர்ஷனமாக வலம் வந்து வேண்டுதலை செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அங்கு வந்து அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு போய் வீட்டில் இனிப்பு செய்து உண்ணுவார்கள். அவர் சன்னதியை 48 முறை சுற்றியோ அல்லது மூல மந்திரத்தை 108 முறையோ கூறினால் வேண்டியது நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

சன்னதியில் நரசிம்மர் தனது மனைவி லஷ்மி தேவியுடன் காட்சி தருகிறார். ஆலயத்துக்குள் விநாயகர் சன்னதி, பிரஹலாதர், ஹனுமார், ஹயகிரீவர் போன்றவர்களின் சிலைகளும் உள்ளன .

