முதலில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற விரும்புகிறேன். சித்தர்கள் என்றால் பதினெட்டு சித்தர்கள் மட்டுமே என்று நாம் பலரும் நினைத்து இருக்கிறோம். அந்த பதினெட்டு சித்தர்களும் ஆரம்ப காலத்தில் இருந்த முதன்மை சித்தர்கள்.

1. கொங்கணவர் – திருப்பதி
2. போகர் – பழநி
3. திருமூலர் – சிதம்பரம்
4. பாம்பாடம்சித்தர் – விருத்தாச்சலம்
5. இடைக்காட்டுச்சித்தர் – திருவண்ணாமலை
6. சச்சிதானந்த சுவாமி – வள்ளிமலை
7. கோரக்கர் – போரூர்
8. நந்தீசர் – காசி
9. குதம்பை சித்தர் – மாயவரம்
10. கமலமுனிவர் – திருவாரூர்
11. வான்மீகர் – எட்டக்குடி
12. கட்டமுனிவர் – ஸ்ரீரங்கம்
13. மச்சமுனிவர் – அழகர்கோவில்
14. ராமதேவர் – மதுரை
15. கந்தாநத்தித்தேவர் – வைத்தீஸ்வரன் கோயில்
16. தன்வந்திரி – ராமேஸ்வரம்
17. பதஞ்சலி முனிவர் – திருவனந்தபுரம்
18. கும்பமுனிவர் – சப்தகிரி

ஆனால் இப்போது இணையதளங்களில் 108 முதல் 175 சித்தர்கள் வரையிலான பெயர்களும் காணப்படுகின்றன. இன்னும் ஒரு படி மேலே சென்றால் தமிழ்நாட்டின் பக்கத்து மானிலமான புதுச்சேரியில் மட்டும் கடந்த 500 ஆண்டுகளில் 32 சித்தர்கள் இருந்துள்ள தகவலும்  கிடைக்க ஆச்சர்யமாக இருந்தது. அந்த 32 சித்தர்கள் அனைவருமே புதுச்சேரியில் பிறந்து வளர்ந்து சித்தர்களானவர்கள்  அல்ல.  ஆனால் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து கடும் தவம் புரிந்து தாம் வாழ்ந்த இடங்களிலேயே சமாதியும் அடைந்து புதுச்சேரியை புண்ணிய பூமியாக்கி உள்ளார்கள். ஆகவே ஒருவிதத்தில் புதுச்சேரியை ஞான பூமி  அல்லது சித்தர்கள் பூமி  என்று கூடக் கூறலாம் என்றே தோன்றுகிறது.

அப்படிப் பெருமை வாய்ந்த புதுச்சேரியில் ஒரு சித்தரால் உருவாக்கப்பட்டதே மயிலம் பொம்மபுர ஆதீனம் எனும் வீரசைவ மரபைச் சேர்ந்த ஆதீனமாகும். இது சென்னை மற்றும் புதுச்சேரி மானிலத்தின் இடையில் அமைந்து உள்ளது. ஆதீனங்கள் அனைத்துமே ஆன்மீகம் மற்றும் பக்தி நெறி போன்றவற்றையும், அவற்றோடு சேர்த்து தமிழ் மொழியினையும் வளர்க்கவே ஏற்படுத்தப்பட்டன. அதனால்தான் ஆதீனங்களின் கட்டுப்பாடுகளில் உள்ள ஆலயங்களில் பெரும்பாலும் தமிழ் மொழியிலேயே அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன.  இந்த வழியில் வந்த மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆதீனத்தாருடைய வரலாறும் ஆலய எழுச்சியும் சுவையானது. இது ஏற்படக் காரணமானவரே தேவலோகத்தில் இருந்து வந்த ஒரு சிவகணம் என்பது இன்னும் அதிசயமானது.  அந்தக் கதைதான் கீழே தரப்பட்டுள்ளது.

திருக்கயிலையில் சிவபெருமானுக்கு மேற்குத் திசைக் காவலராக விளங்கிய பூதகணங்களுள் ஒருவர் சங்குகன்னர் என்பவர் ஆவார். ஒருமுறை  அவர் செய்த ஒரு தவறுக்காக சிவபெருமான் அவரை சபித்து விட்டார். அதனால் மனம் வருந்தி சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்ட சங்குகன்னர் தனக்கு சாப விமோசனம் கிடைக்க தக்க வழி கூறுமாறு  சிவபெருமானிடமே கேட்டார்.  அதற்கு அவர் ‘தென்னாட்டில் வீரசைவ நெறியை வளர்த்து சித்தர் பெருமைகளை பரப்பி வந்தால் உமக்கு சாப விமோசனம் கிடைக்கும் !’ என்று  சிவபெருமான் அருள் புரிந்தார் .

அதற்கு சங்குகன்னர் சம்மதித்தாலும் சிவபெருமானிடம் இன்னொரு வேண்டுகோளையும்  வைத்தார். அது என்ன என்றால் ‘கைலாய மலையின் தென் புறப்பகுதிக்கு காவலாக இருந்து கொண்டு சிவபெருமானின் அருகிலேயே எப்படி தான் அத்தனை நாளும் இருந்தேனோ அதே போன்ற நெருக்கமான நிலை தான் பூமிக்குச் சென்றாலும் கிடைக்க வேண்டும்.  அங்கும் சிவபெருமானுடன் தனக்கு நெருக்கமான உறவு இருக்க வேண்டும்’ என வேண்டிக் கொண்டார்.  அவரது  அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தக்க நேரத்தில் தன்னுடைய குடும்பத்தினரான முருகனின் மூலம் சங்குகன்னர் விரும்பியது நிறைவேறும்  என்றும்  அந்த நேரம் வரும்போது முருகப் பெருமான் அவர் முன் தோன்றி அவருக்கு அருள் புரியும்போது சங்குகன்னர் சிவயோக சமாதியை அடைந்து சிவலிங்கமாகி தன்னுடன் ஐக்கியம் ஆகிவிடுவார்  என்றும் கூறி அருள் புரிந்தார். அதைக் கேட்ட சங்குகன்னரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து  பூலோகத்தில் பிறப்பு  எடுக்கச் சென்றார்.

…………தொடரும்