சாந்திப்பிரியா
பாகம்-1

இலங்கையின் கிழக்கு திசையில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க நகரம் திருகோணமலை. இலங்கையின் மிகப் பெரிய நதியும் புனிதமானதுமான மகாவலிகங்கை அவ்விடத்தில் கடலுடன் கலப்பதால் அப்பிரதேசம் இயற்கை வளத்துடன் சிறந்து விளங்குகின்றது. அங்கு சுவாமிமலை என்று வழங்குகின்ற உயர்ந்த குன்றம் ஒன்றின் உச்சியிலே திருக்கோணேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமானின் ஆலயம்  உள்ளது. இது அண்மைக் காலத்தில் பழைய ஆலயத்தின் மீது எழுப்பப்பட்ட புதிய ஆலயம் ஆகும் .

ஸ்ரீ லங்காவில் திரிகோண மலைப் பகுதியில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வரலாறு சுமார் 4000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதை த்ரிகூடம் என்றும் திரிகூடம் என்றும் கூறுவார்கள். அதாவது  திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெரிய ஆலயங்கள் இருந்துள்ளன என்பதைக் குறிக்கும் வகையில் அப்படி அழைக்கப்பட்டு இருந்திருக்கலாம். அல்லது தென் பகுதியில் சிவபெருமான் ஏற்படுத்திய மூன்று மலைகளின் காரணமாகவும் அமைந்து இருக்கலாம். மூன்று மலைகள் வந்த அந்தக் கதை பின்னர் வரும் .

இலங்கையின் மிகப் பெரிய நதியாகிய மகாவலிகங்கை எனும் நதி இலங்கையை சுற்றி உள்ள கடலுடன் இந்த ஆலயம் உள்ள பகுதியில்தான் கலக்கின்றது. அந்த மாவல்லி நதியின் மகத்துவமும்  மிகப் பெரியது. அங்குள்ள ஸ்வாமிமலை ( தமிழ்நாட்டில் உள்ள ஸ்வாமி மலை அல்ல) எனப்படும் குன்றின் உச்சியில் எழுந்துள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம்  புதியதாக கட்டப்பட்டு உள்ளது என்றாலும், அதன் வரலாறும் அதிலுள்ள சிலைகளும் புராதானமானவை. ஒரு காலத்தில் இந்தியாவின் தென் பகுதியும்  இலங்கையும்  இணைந்து இருந்திருந்ததாகக் கூறுவார்கள்.  இரண்டு நாடுகளுக்கும் இடையே  சிறிது தூரமே இருந்த நதியை படகு மூலம் கடந்து எளிதில் செல்லும் வகையில் போக்குவரத்து இருந்துள்ளது. அந்த நதி தற்போது கடலுடன் இணைந்து மறைந்து விட்டதாகக் கூறுவார்கள். இமய மலையின் மேல் உள்ள உத்தரக் கைலாச மலையில் இருந்த சிவபெருமான் இந்த மலையில் வந்து தங்கி இருந்ததினால் இதை தக்ஷிண கைலாயம் என்றும் அழைத்தார்கள்.

இந்த ஆலயம் தற்போது  திருகோணேஸ்வரர் என்று அழைக்கப்பட்டதின் காரணம் பண்டைய காலத்தில், அநேகமாக பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் என்று கூறலாம், அங்கு ஒரு ஆலயம் கோணேஸ்வரர் என்ற பெயரில் இருந்துள்ளது. ஆனால் அது கடல் கொந்தளித்ததில் அங்குள்ள மலை அடிவாரத்தில் மூழ்கி விட்டதினால் இன்றும் அங்கு அந்த ஆலயத்தின் நினைவாக அந்த மலைக்கே பூஜைகளை செய்வதாக ஐதீகம் உள்ளது. இன்றைக்கும் மலையின் கீழ் பகுதியில், ஆழ் கடலின் உள்ளுக்குள் சில குகைகள்  உள்ளதாகவும், அதுவே அன்றைய ஆலயம் இருந்த இடம் என்றும் வல்லுனர்கள் சிலர் கருத்துக் கூறுகிறார்கள். அன்று இருந்த ஆலயம் முற்றிலுமாக போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்டு விட்டாலும், அப்போது இருந்த ஆலயச் சிலைகள் பாதுகாப்பாக ஒழித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த வரலாற்றை பின்னர் கூறுகிறேன். முதலில் இந்த ஆலயம் எழக் காரணமாக இருந்த திருக்கோணமலை எழக் காரணமாக உள்ள  புராணக் கதை ஒன்றைப் படிக்கலாம்.

முன்னொரு காலத்தில் கைலாயத்தில் சிவபெருமான் தனது மனைவி உமையுடன் வீற்று இருக்கும்போது அனைத்து தேவர்களும் , கடவுட்களும் அங்கு கூடி இருந்தார்கள். ஒவ்வொருவரும் சிவபெருமானை புகழ்ந்து கூறிக் கொண்டு இருந்தபோது படைக்கும் தொழிலுக்கு பிரும்மாவையும், காக்கும் தொழிலுக்கு விஷ்ணுவையும், படைப்பவை அனைத்தும் பெருகிக் கொண்டே இருந்தால் என்ன ஆவது என்பதற்காக அவ்வபோது அவர்களை அழிக்கும் தொழிலுக்கு ருத்திரன் என்ற பெயருடைய சிவபெருமான் படைக்கப்பட்ட கதையையும் எடுத்துக் கூறி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தவர்களை பார்த்து சிவபெருமான் புன்னகை புரிந்தவாறு கூறினார் அந்த பரப்பிரும்மனாக தான் படைத்த சிருஷ்டியிலே பூலோகத்தில் பூமியை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் வகையில் ஆதிசேஷனை படைத்துள்ளதாகவும் நினைவு கூர்ந்தார். அப்போது அதைக் கேட்ட வாயு பகவானினால் ஆதிசேஷனுக்கு கொடுக்கப்பட்ட புகழைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உடனே வெகுண்தெழுந்தவர் சிவபெருமானின் சபையில் கேட்டார் ‘பரப்பிரும்மனே, உம்மை வணங்கி துதிக்கிறேன். நான் இப்படி பேசுவதற்கு மன்னிக்கவும்.  என்னை விட எந்த விதத்தில் ஆதிசேஷன் மேன்மையானவர்? அவர் எனக்கு எந்த விதத்திலாவது  ஈடாவாரா?. அவருக்கு சுய பலம் இல்லை என்பதினால் அவருக்கு கிடைத்த பலம் விஷ்ணு கொடுத்ததல்லாவா’ .

அதைக் கேட்ட யாரும் பதில் கூறவில்லை. அப்படி ஒரு நிலை வரும் என எவரும் எதிர்பார்க்கவும் இல்லை. வாயடைத்து நின்றவர்கள் மத்தியில் மீண்டும் வாயு பகவான் கூறினார் ‘ பரப்பிரும்மனே, ஆதிஷேஷனார் சக்தி வாய்ந்தவரா, நான் சக்தி வாய்ந்தவரா என்பதை நிரூபிக்க ஒரு போட்டியை ஆதிசேஷன் ஏற்க வேண்டும் . அந்தப் போட்டியின்படி நாங்கள் இருவரும் யுத்தம் செய்வோம். அதில் யார் வெற்றி அடைவார்களோ, அவர்களை மற்றவரை விட மேன்மையானவர் என்று நீங்கள் ஏற்க வேண்டும்’ என்று கூற சற்றும் தாமதிக்காமல் அந்த போட்டியை ஆதிசேஷனும் ஏற்றுக் கொண்டார்.

அடுத்து யுத்தத்தை எங்கே வைத்துக் கொள்வது, எப்படிப்பட்ட யுத்தம் நடத்தப்பட வேண்டும் என அங்கிருந்த அனைவரும் கூடி விவாதித்தப் பின் பிரும்மா கூறினார் ‘ ஆதிசேஷன் கைலாய மலையை தனது உடலினால் சுற்றிக் கொண்டு மலையின் சிகரங்களை தனது தலைகளினால் மறைத்துக் கொள்ள வேண்டும். வாயு வேகமாக தனது சக்தியை வெளிப்படுத்தி அந்த சிகரத்தின் ஒரு பகுதியையாவது விழ வைக்க வேண்டும். அப்படி செய்தால் அவர் ஆதிசேஷனை விட மேன்மையானவராக கருதப்படுவார். இல்லை எனில் அவர் தான் கூறிய வார்த்தைகளுக்கு ஆதிசேஷனிடம் மனிப்புக் கேட்டுக் கொண்டு அவரை தன்னைவிட மேன்மையானவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் ‘.

பிரும்மா கூறியதை இருவரும் தயங்காமல் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு நல்ல காலத்தில் தேவர்கள் மற்றும் பிற கடவுட்கள் அனுமதி கொடுக்க இருவரும் யுத்தத்தைத் துவக்கினார்கள். ஆதிஷேஷனார் தன் உடலால் கைலாய மலையை நன்கு சுற்றிக் கொண்டு நின்றவாறு  தனது ஆயிரம் தலைகளினாலும் மேகத்தை முட்டிய இமய மலையின் மீதிருந்த உத்திர கைலாய மலை வரை மறைத்துக் கொள்ள, வாயு பகவான் வேகமாக காற்றை வீசத் துவங்கினார். எத்தனை வேகமாக காற்றை வீசியும் ஆதிசேஷன் மறைத்து நின்ற பர்வதத்தை அசைக்க முடியாமல் வாயு பகவான் தடுமாறினார். பல காலம் தொடர்ந்து கொண்டு இருந்த போரினால் அண்டம் நடுங்கியது, அங்கிருந்த பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என அனைவரும் இடம் பெயர்ந்து விழுந்து மடியத் துவங்க, நகரங்களும் அழியத் துவங்க , அங்காங்கே நதிகள் சீறி எழுந்து மிச்சம் இருந்த நகரங்களை நாசம் செய்யத் துவங்க  தேவர்கள் அஞ்சி ஓடி சிவனை சரணடைந்தார்கள். அவர்களுடன் பிரும்மாவும் சென்றார்.

ஆதிசேஷன் மற்றும் வாயு பகவானின் யுத்தத்தினால் நிகழும் நிலையை எடுத்துக் கூறி அதை தடுத்து நிறுத்த வேண்டும் என சிவபெருமானிடம் அனைவரும் வேண்டிக் கொள்ள, அவர்கள் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கூறினார் ‘ பிரும்மனே, நீங்கள் யாரும் கவலைப்படத் தேவை இல்லை. இந்த யுத்தத்தை  உருவாக்கியவன் நான்தான். அதற்குக் காரணம் தட்ஷின தேசத்தின் நானும் உமையும் சென்று தங்க அங்கு  ஒரு கைலாய மலையை உருவாக்க எண்ணினேன்.  அதற்காகவே  இந்த நாடகத்தை அரங்கேற்றினேன். ஆகவே கவலை வேண்டாம். நான் உருவாக்கியதை  நானே முடித்து வைக்கிறேன்’ எனக் கூறியவர் பிரும்மாவிடம் உடனடியாக உத்தர கைலாய மலையைப் போல இன்னுமொரு மலையை இமய மலைப் பர்வதத்தின் மேல் பகுதியில்  உருவாக்குமாறு கூறினார்.

பிரும்மாவும் சற்றும் தாமதம் செய்யாமல் விஸ்வகர்மாவின் துணைக்கொண்டு உத்தர கைலாயத்தைப் போலவே இன்னுமொரு கைலாய மலையை தயார் செய்து முடித்தார். அடுத்தக் கவலை அதை எப்படி, எந்த தட்ஷிணப் பகுதிக்கு எடுத்துச் செல்வது?   ஜாடை காட்டி ஆதிசேஷனை அழைத்தார் சிவபெருமான்.  அருகில் வந்த ஆதிசேஷனிடம்  ‘ஆதிசேஷனே நாம் இன்னொரு கைலாய மலையை தென் பகுதியில் அமைக்க எண்ணி உள்ளோம். அதற்கான தருணம் இப்போது வந்து விட்டது. அந்தக் காரணத்தைக் கேட்பாயாக ‘ என்று கூற, அதை தனது தலைக் குனிந்து ஆதிஷேசம் கேட்ட நேரத்தில் வாயு  வீசிய காற்றில் பிரும்மா படைத்திருந்த கைலாய மலை உத்தரக் கைலாய மலையில் இருந்து பிளந்து வானில் பறக்கத் துவங்கியது. ஆதிசேஷன் அதைத் தடுக்க ஓடினார் . அவ்வளவுதான், அதையே எதிர்பார்த்திருந்த சிவபெருமான் உடனடியாக  வாயு பகவானை அழைத்து   வானிலே பறந்து கொண்டிருந்த பிரும்மன் படைத்திருந்த கைலாய மலையின் மறு உருவை அப்படியே கொண்டு சென்று தற்போது இலங்கை என அழைக்கப்படும் ஈழ நாட்டின் தென் பகுதியில் கொண்டு போய் வைக்குமாறு கூறினார். வாயு பகவானும் அதை தாமதிக்காமல் செய்து முடித்தார். அது செய்யப்பட்டு முடிந்ததும்தான் யார் தோற்றது, யார் வெற்றி பெற்றது என்ற சர்ச்சை மீண்டும் சிவபெருமானின்  முன்னால் வந்தது. சிவ பெருமான் வாயுவையும், ஆதிசேஷனையும் அழைத்து தான் நடத்திய  நாடகத்தை எடுத்துக் கூறி யாரும், யாருக்கும் மென்மையானவரும் அல்ல, கீழானவர்களும் அல்ல. அவரவர் படைக்கப்பட்டதிற்கு  ஏற்ப அவரவர் தத்தம் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று உண்மையை எடுத்துரைத்து அவர்களை ஆசிர்வதித்து, அவரவர் இருந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தார்.

ஆக சிவபெருமானே பிரும்மாவின் மூலம் இன்னொரு கைலாய மலையை உருவாக்க வைத்து அதை ஈழ நாட்டின் தென் பகுதியில் கொண்டு வைக்க ஏற்பாடு செய்து, அதையும் தனது வாசஸ்தலமாக்கிக் கொண்டார். இப்படியாக உருவானதே திருகோணீ ஸ்வரர் மலை ஆகும். அடுத்து பிரும்மாவை அழைத்த சிவபெருமான் அவரிடம் கூறினார் ‘ இன்னும் சில காலத்தில் இந்த மலையில் உன்னதமான நிகழ்வுகள் நடைபெறும். நானும் உமையும் அங்கு தங்கி இந்த உலகை ரஷித்தவாறு  இருப்போம். ஒரு காலத்தில் இந்த மலையே ஒரு ஆலயமாகும். அங்குள்ள பல பிராகாரங்களில் தேவ ரிஷி முனிவர்கள், மற்றும் தேவ லோகத்தில் உள்ள நீங்கள் அனைவரும் வந்திருக்க சிறப்பான ஏற்பாடுகள் நடக்கும்’.  சிவபெருமான் கூறியது போலவே பின்னாளில் அங்கொரு அற்புதமான ஆலயம் எழுந்தது.

 

…..தொடரும்