கருநெல்லினாதர் முருகன் ஆலயம்
சாந்திப்பிரியா
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் எனும் ஊராட்சி எனப்படும் பஞ்சாயத்து டவுனில் உள்ள குன்றின் மீது உள்ள ஆலயமே கருநெல்லினாதர் ஆலயம். இந்த ஆலயம் முருகனின் ஆலயம். இதில் உள்ள முருகனை கருநெல்லினாதர் அல்லது சொக்கப்பன் என்று அழைக்கின்றார்கள். அங்குள்ள அம்மனை அதாவது வள்ளியை சொக்கி என்று அழைக்கின்றார்கள். ஆலயம் 1000 முதல் 2000 வருட காலத்துக்கு முற்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளதாகத் தெரியவில்லை என்றாலும், இந்த ஊரான திருத்தங்கலைப் பற்றி சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது என்பதினால் இந்த ஆலயமும் மிகப் பழைய காலத்தை சேர்ந்ததாகவே இருந்திருக்க வேண்டும்.
சிவகாசி மற்றும் விருது நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கும் குறைவான அளவில் உள்ள இந்த டவுனுக்குச் செல்ல பஸ்கள் உள்ளன. மதுரையில் இருந்து இந்த ஆலயம் உள்ள பஞ்சாயத்து டவுன் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் திருத்தங்கல் செல்ல ரயில் வசதியும் உள்ளது.
இந்த ஆலயம் அமைந்த வரலாறு சிறப்பானது. முன் ஒரு காலத்தில் திருத்தங்கலில் ஆறுமுகத் தம்பிரான் என்ற முருக பக்தர் வாழ்ந்திருந்தார். அவர் ஒவ்வொரு ஆண்டும் முருகப் பெருமானின் பண்டிகை நாட்களில் தவறாமல் பாத யாத்திரையாகவே பழனி மலைக்கு சென்று முருகனை தரிசித்து வருவது வழக்கம். அப்படியாகச் செல்கையில் அந்த ஊரில் இருந்த ஒரு வாய்க்கல்லைக் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இப்படியாக காலம் ஓடிக் கொண்டு இருந்தபோது அவருக்கு வயதாகி விட, ஒரு ஆண்டு அவரால் பழனிக்கு யாத்திரை செல்ல முடியாமல் ஆயிற்று. காரணம் முதுமையின் காரணமாக அவரால் அந்த வாய்க்காலைக் கடந்து செல்ல முடியவில்லை. அதனால் மனம் வருந்தியவர் என்ன செய்வது என வருந்திக் கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தபோது முருகனே அவர் கனவில் வந்து அவரை இனிமேல் நீ பழனிக்கு வர வேண்டாம், வாய்க்கால் அருகிலேயே பூஜைகளை செய்து விட்டு வீட்டிற்குப் போ என்று கூறினார். அதனால் அவரும் அந்த வாய்க்காலின் அருகிலேயே பூஜை செய்ய முடிவு செய்து, அதற்கு முன்னர் நெய்வித்தியத்தை செய்வதற்காக ஒரு குழியை தோண்டி அடுப்பை பற்ற வைக்க எண்ணினார். என்ன ஆச்சர்யம்….அவர் குழி தோண்டிய இடத்தில் ஏராளமான தங்கக் காசுகள் கிடைத்ததாம். ஆனந்தம் அடைந்த அவரும், அந்த தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு போய் , அதை விற்றுக் கிடைத்தப் பணத்தில் முருகனுக்கு ஒரு ஆலயத்தை அருகில் இருந்த குன்றுப் பகுதியில் மேல் (பழனி ஆலயத்தை போல) கட்டினாராம். அதுவே கருநெல்லினாதர் ஆலயமாக உள்ளதாம்.
இந்த ஆலயத்து சொக்கப்பன் ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் உள்ளவரைப் போலவே காட்சி தருகிறார். தனது ஆலயத்தின் தல விருட்ஷமாக கருநெல்லி மரத்தை வைத்து வளர்க்க வேண்டும் என முருகன் அவருக்கு ஆணை இட்டதினால் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகனின் பெயரும் கருநெல்லினாதர் என ஆயிற்றாம். அவர் சொக்க வைக்கும் அழகில் இருந்ததினால் அவரை சொக்க வைத்த அப்பன் என்ற அர்த்தத்தில் சொக்கப்பன் என்று ஆறுமுகத் தம்பிரான் அழைத்தாராம். இது வாய்மொழிக் கதையாகவேதான் கூறப்படுகிறது.
இந்த ஊரில் அர்ஜுன தீர்த்தம் என்ற நதி உள்ளது. அதில் புனித நீராடிவிட்டு ஆலயத்துக்குச் செல்வதே சிறப்பு என்கிறார்கள். அந்த நதியும் அர்ஜுனனினால் ஏற்படுத்தப்பட்ட நதியாம். அதில் குளிப்பதினால் பல பாவங்களும் விலகுமாம் என்பதற்கு ஆதாரமாக பஞ்ச பாண்டவர்கள் வன வாச கதையைக் கூறுகிறார்கள். பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இந்த கிராமப் பகுதிக்கும் வந்து தங்கி இருந்துள்ளார்கள். தமது பாவங்களைக் களைந்து கொள்ள அவர்கள் இரண்டு வேலைகளிலும் குளித்து விட்டு பூஜைகளை செய்து வந்தார்கள். ஒருமுறை அவர்கள் குளித்து வந்த நீர் ஊற்று வற்றி விட அதிகாலையில் எழுந்த அர்ஜுனன் கங்காதேவியை நினைத்து வேண்டிக் கொண்டு அந்த இடத்தில் பூமியில் அம்பை செலுத்தினான். பூமியைப் பிளந்து சென்ற அம்பு அங்கு பெரிய பிளவை ஏற்படுத்த அதில் இருந்து தண்ணீர் பாய்ந்து வெளிவந்தது. பூமியில் இருந்து வெளியில் வந்த நீர் நதி போல மாறிவிட அந்த நதிக்கு அர்ஜுன தீர்த்தம் என்றப பெயர் வந்துள்ளது.
இந்த ஆலயத்தில் பிரதோஷ தினங்களில் சென்று முருகனை வழிபட்டால் தீராத நோய்கள் விலகும், பௌர்ணமி தினங்களில் சென்று வழிபட பெண்களுக்கு தாலி பாக்கியம் நிலைக்கும், மற்றும் விதியால் ஏற்படும் தொல்லைகளின் வேகம் குறையும் என்று நம்புகிறார்கள். திருப்பதி மற்றும் பழனி முருகனுக்கு காணிக்கையாக முடி கொடுப்பதைப் போலவே இங்கும் பக்தர்கள் வந்து வேண்டுதலுக்கு முடியைக் காணிக்கையாகக் கொடுக்கின்றார்கள். ஆலயம் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்து உள்ளது. சித்திரை பண்டிகை மற்றும் கார்த்திகை விழாக்கள் பெரும் அளவில் நடைபெறும்.

ஆலய விலாசம்

ஸ்ரீ கருநெல்லினாதஸ்வாமி ஆலயம்
திருத்தங்கல்
திருத்தங்கல் பஞ்சாயத்து
விருதுநகர் மாவட்டம்
பின் கோடு : 626 130
தமிழ்நாடு.