ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் -19
தட்சிண மூகாம்பிகை அல்லது
சரஸ்வதி ஆலயம்
சாந்திப்பிரியா
நாம் அனைவரும் கல்வி அறிவு பெருக கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயத்துக்கு சென்று வழிபடுவது உண்டு. ஆனால் அது போல வித்யாபலம் கிடைக்க ( கல்வியறிவு பெருக) கேரளாவிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது என்பது பலருக்கும் தெரியவில்லை. அந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அந்த ஆலயம் உள்ள இடம் கோட்டயத்தில் இருந்து பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள பண்ணாசிக்காடு என்ற சிறிய கிராமம். கோட்டயத்தில் இருந்து சாங்கனச்சேரி என்ற ஊருக்குச் செல்லும் பிரதான சாலையில் சென்றால் சின்காவனம் என்ற இடம் வரும். அங்கிருந்து சுமார் நாலு அல்லது ஐந்து கிலோ தொலைவில் உள்ளது ஆலயம். பஸ் வசதிகள் நிறைய உள்ளன. அந்த இடத்தில் இறங்கி எவரைக் கேட்டாலும் ஆலயம் செல்லும் வழியைக் கூறுவார்கள். ஸ்வயம்பு தேவியாக சரஸ்வதி வந்த இடம். அது பற்றியக் கதை இது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கிராமத்தில் வைதீக பிராமணர் குடும்பம் இருந்தது. அந்த குடும்பத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்குச் சென்று வழிபட்டப் பின் திரும்புவார். வயது ஏறிக் கொண்டே போனவருக்கு தனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் வந்தது. ஆகவே கொல்லூருக்குச் சென்று மீண்டும் வழிபட்டார். ஊர் திரும்பி வந்ததும் இன்று சரஸ்வதி ஆலயம் உள்ள இடத்தில் இருந்த ஒரு குளத்தில் குளிக்கச் சென்றார். அதன் அருகில் இருந்த பனை மரத்தடியில் தனது ஓலை குடையை வைத்துவிட்டுச் சென்று குளித்தார். திரும்பி வந்தவரால் குடையை எடுக்க முடியவில்லை. அப்போது ஒரு ஆசிரி கூறியது, ‘நான் அருகில் உள்ள காட்டில் புதைந்து உள்ளேன். என்னை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூஜித்து வா. உனக்கு நல்ல கல்வி அறிவு கொண்ட புத்திர பாக்கியம் கிடைக்கும்’. அது மட்டும் அல்ல தானே மூகாம்பிகை தேவியின் அவதாரமாக இங்கு சரஸ்வதி தேவி உருவில் வந்துள்ளதாகக் கூறினாளாம். அவரும் அந்த ஆசிரி சொன்ன இடத்துக்குப் போய் சிலையை தோண்டி எடுத்து வந்து அந்த குடை எங்கிருந்து எடுக்க முடியவில்லையோ அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவே தட்சிண மூகாம்பிகை என்ற பெயரில் ஆலயமாக உள்ளது.

சரஸ்வதியின் சில தோற்றங்கள்
ஆலயத்தில் உள்ள சிலை பூமியில் கிடைத்த சரஸ்வதி தேவியின் சிலையாம். அவருக்கு புத்திர பாக்கியமும் கிடைத்தது. ஆலயத்தில் அந்த தேவிக்கு கற்பகிரகம் இல்லை. அருகில் உள்ள மலைப் பிரதேசத்தில் இருந்து ஊறி வரும் தண்ணீரே தானாகவே ஏற்படுத்திக் கொண்டு உள்ள சதுரமான குளத்தில் உள்ள அந்த சிலையின் மீது வழிந்து சிலையை தண்ணீருக்குள் முழுகி இருக்குமாறு வைத்து உள்ளது. அதன் அருகில் சிறிய விஷ்ணு ஆலயம் உள்ளது. மலை பகுதியில் இருந்து வழியும் நீர் அந்த விஷ்ணுவின் பாதம் வழியாகவே சரஸ்வதி ஆலயத்துக்கு வருவதினால் அந்த சரஸ்வதி ஆலயத்துக்குச் செல்பவர்கள் முதலில் விஷ்ணுவை வணங்கிவிட்டுத்தான் சரஸ்வதியை வணங்கி கல்வி அறிவு பெற வேண்ட வேண்டும். அந்த சிலை நீரில் மூழ்கி உள்ளதினால் சாதாரணமாக சரஸ்வதி வடிவத்தை பார்க்க முடிவதில்லை. மேலும் அந்த தேவியை மறைத்துக் கொண்டு உள்ளது போல விசேஷமான ஒரு கோடி வளருகின்றது. அது இதுவரை காய்தது இல்லையாம், பூத்தது இல்லையாம். அந்த கொடியின் இலையைப் போல வேறு எங்குமே காணப் படவில்லையாம். ஆகவே அதை சரஸ்வதி இலை என்றே அழைக்கிறார்கள். தேவி மறைக்கப்பட்டு உள்ளதினால் அதன் பக்கத்திலேயே அது போன்ற சிலையை செய்து வைத்து உள்ளனர். அதையே மூல தேவியாகக் கருதி பூஜைகள் செய்கின்றனர். ஆலயத்தில் உள்ள மற்ற தெய்வங்களில் சிவன், விநாயகர், மூகாம்பிகை போன்றோர் உள்ளனர்.

சரஸ்வதியின் ஒரு தோற்றம்
அங்கு வந்து தத்தம் குழந்தைகள் நன்கு கல்வி அறிவு பெற வேண்டும், தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், மேல் கல்வி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு செல்கின்றனர். விஜயதசமி அன்று ஆயிரக்கணக்கானவர்கள் குழைந்தைகளுடன் வருவதினால் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிகின்றது.