உறையூர்
பஞ்சவர்ணேஸ்வரர் 
ஆலயம்
சாந்திப்பிரியா
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் நான் நாச்சியார் திருக்கோவிலைப் பற்றி எழுதியபோதே உறையூரின் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படும் திருமூக்கிச்சரம் எனும் சிவன் ஆலயத்தைப் பற்றி எழுத நினைத்து தட்டிப் போய் விட்டது. இன்று பிரதோஷ தினம் என்பதினால் இதை எழுதி வெளியிட்டேன். திருச்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உறையூரில் உள்ள இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.  ஆலயத்தின் மூலவரை பஞ்சவர்ணேஸ்வரர்  என்றும், தேவியான பார்வதியை காந்திமதி என்றும் அழைக்கின்றார்கள்.  இந்த ஆலயத்தைக் கட்டியவர் ஒரு சோழ மன்னன் என்கிறார்கள். இந்த ஆலயம் குறித்து பல புராணக் கதைகள் நிலவுகின்றன.
ஒருமுறை அந்த ஊரை ஆண்டு வந்த கரிகாலன் என்ற சோழ மன்னன் அண்டை நாட்டில் படையெடுத்து வெற்றிப் பெற்ற பின் அந்த ஊர் வழியே திரும்பிச் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீர் என  அவர் அமர்ந்து கொண்டு  வந்து  இருந்த யானைக்கு மதம் பிடித்து விட்டது. அங்கும் இங்கும் ஓடத் துவங்கிய யானையை யாராலும் அடக்க முடியவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்து அந்த மன்னன் சிவபெருமானை மனமுருகி வேண்டினார்.  அந்த மன்னனுக்கு உதவ சிவபெருமான் ஒரு கோழியை அனுப்பினார். அந்தக் கோழியும் வலிமை மிக்கதாக இருந்தது. யானை மீது பறந்து வந்து உட்கார்ந்து அதன் தலையில் அங்குசத்தைப் போல வேகமாக குத்தியதும், பயந்து போன யானை ஓடிச் சென்று ஒரு வில்வ மரத்தடியில் சென்று நின்றது. அந்தக் கோழியும் அந்த மரத்தடியில் சென்று யானை முன்னால் நிற்க யானையின் மதம் முற்றிலும் அடங்கியது. அது முதல் அந்த ஊரின் பெயரும் சோழியூர் என ஆயிற்று. அந்த அதிசயத்தைக் கண்ட அந்த மன்னன் அந்த இடம் மகிமை வாய்ந்த இடமாக இருக்க வேண்டும் என நினைத்து அங்கே ஒரு சிவன் ஆலயத்தை எழுப்பினாராம்.
இன்னொரு கதை என்ன என்றால் ஒரு காலத்தை உறையூரே சோழ மன்னர்களின் தலை நகரமாக இருந்தது. அப்போது ஒருமுறை அந்த நாட்டை ஆண்டு வந்த  சோழ மன்னனின் மனைவியான காந்திமதி என்பவள், தினமும் திருச்சியில் இருந்த தாயுமானவர் ஆலயத்துக்குச் நடந்தே சென்று வழிபாட்டு வந்தாள். அவள் பெரிய சிவபக்தையாக இருந்தாள். அவள் ஒருநாள் தாயுமானவர் ஆலயத்துக்குச் சென்று கொண்டு இருந்தபோது மயக்கம் அடைந்து விழுந்து விட அவளை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். ஆகவே அன்று தனது பூஜை தடைப்பட்டு விட்டதே என வருந்தியவளுக்கு இறைவன் தற்போது ஆலயம் உள்ள இடத்திலேயே தான் உள்ளதைப் போல அவளுக்கு கனவில் காட்சி தந்தாராம். உடனே மறுநாள் அவள் அந்த இடத்துக்குப் போய் பார்த்தபோது சிறிய சிவலிங்கம் அங்கு ஸ்வயம்புவாகத்  தோன்றி இருந்ததைக் கண்டாள். உடனே தினமும் அங்கேயே சென்று அந்த சிவலிங்கத்தை பூஜித்து வழிபட வேண்டும் என்பதற்காக  சிவனுக்கு அங்கேயே ஒரு ஆலயம் அமைத்தாள்.  ஸ்வயம்புவாக சிவன் அங்கு தோன்றியதினால் அந்த சிவலிங்கத்தை தான்தோன்றீஸ்வரர் என்ற பெயரில் அழைத்து பூஜித்தார்களாம்.
அமர்நாத் சிவலிங்கம் 

மூன்றாவதாகக் கூறப்படும் கதை என்ன என்றால் அந்த நகரை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருமுறை பாதாள லோக அதிபதியான நாகராஜரின் ஐந்து மகள்களும் தினமும் அங்கிருந்த நதிக்கரையில் ஐந்து சிவலிங்கத்தையும்  எடுத்து வந்து  வழிபட்டுச் செல்வதைக் கண்டார். அந்த ஐந்து பெண்களும் ஒரு சாபத்தினால் பூமியில் பிறந்து இருந்தார்கள். அந்தப் பெண்களின் அழகில் மயங்கிய மன்னன் அவர்களில் இளையவளை மணக்க விரும்பி அவர்களிடம் அனுமதி கேட்க அவர்கள் தமது தந்தையைக் கேட்டு கூறுவதாக உறுதி அளித்தார்கள். நாகராஜரும், தனது பெண்கள் சாப விமோசனம் பெறுவதற்கு நேரம் வந்து விட்டதை உணர்ந்து அதற்கு அனுமதி அழைத்தார். அந்தப் பெண் அரசனுடன் போகும்போது  சீதனமாக அவளிடம் தான் கொடுத்து இருந்த  சிவலிங்கத்தை தந்தை அவளிடம் கொடுத்து அனுப்ப , மற்ற நான்கு சகோதரிகளும் தம்மிடம் இருந்த நான்கு வர்ண சிவலிங்கங்களையும் (ஒவ்வொரு சிவலிங்கமும் ஒவ்வொரு நிறத்தில் இருந்ததாம்) அவளிடம் கொடுத்தார்கள். அந்த ஐந்து சிவலிங்கத்தையும் அவள் இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்த வில்வ மரத்தின் அடியில் வைத்து பூஜை செய்தாள். மறுநாள் அவை அனைத்தும் ஒன்றாகி ஒரே சிவலிங்கமாகி விட்டது. அந்த சிவலிங்கத்தைக் கொண்டே இந்த ஆலயம் அமைந்தது என்பதினால் ஐந்து சிவலிங்கத்தைக் கொண்ட ஆலயம் பஞ்ச வர்ண ஈஸ்வரர் என்ற பெயரில் பஞ்சவர்ணீஸ்வரர் என ஆகியதாம்.

இப்படியாக பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டு உள்ள இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை வணங்கிய பிரும்மாவிற்கு  ஐந்து நிறத் தோற்றத்தில் சிவபெருமான் காட்சி அளித்தாராம். ஆகவேதான் ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்தின் நிறம் சற்றே மாறுதலாக இருப்பதைக் காண முடியும் என்று இந்த ஆலய மேன்மையைக் கூறுகிறார்கள். இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாட்டு அருள் பெற்றவர்கள் கருடன், காஷ்யப முனிவர், அவரது புதல்வர் கத்துரு மற்றும் கார்கோடன் என்பவர்கள் இருந்தார்கள்.

ஒருமுறை உதங்க முனிவர் என்ற மாபெரும் முனிவர் அவர் தனது மனைவியுடன் கங்கையில் நீராடிக் கொண்டு இருந்தபோது அவரது மனைவியை ஒரு முதலை இழுத்துக் கொண்டு போய் விட்டது. முதலை இழுத்துக் கொண்டு ஓடியப் பின்னர் மனத் துயரம் தாங்காமல் சிறிது நேரம் அழுதபோது, சற்று தூரத்தில் இறந்தவர் ஒருவருடைய உடலை அவருடைய உறவினர்கள் மந்திரங்களை ஓதியவாரே கங்கையில் வீசி விட்டுச் செல்வதைக் கண்டார். அப்போதுதான் அவர் சுய உணர்வை அடைந்து உண்மையைப் புரிந்து கொண்டார். மோட்ஷம் தரும் கங்கையில் அல்லவா தாம் தனது மனைவியை கங்கையில் முதலை மூலம் அவளைப் படைத்தவரிடமே திருப்பி அனுப்பி விட்டோம், அவளுக்கு ஏற்பட்டுள்ள விதிப்படியேதான் அவளுக்கு முடிவு வந்துள்ளது. இல்லை என்றால் இந்த கங்கையில் வந்து நான் ஏன் குளித்தேன்? இந்த உண்மையை முனிவர் எனக் கூறிக்கொள்ளும் நான் கூடப் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வருந்தினார். அதன் பின்னர் உதங்க முனிவர் பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு தென் பகுதியை அடைந்தவர் உறையூரில் இருந்த பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து சிவனை வழிபட்டார். அவர் தவத்தை மெச்சிய சிவபெருமானும் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல் ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் அவருக்கு காட்சியளித்தார்.

இந்த ஆலயம் தினந்தோறும் காலை 5.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

இந்த ஆலய விலாசம்:
அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வர் திருக்கோயில்
உறையூர்
உறையூர் அஞ்சல்
திருச்சி
திருச்சி மாவட்டம்
PIN – 620003

தொலைபேசி எண் மற்றும் தொடர்புக்
கொள்ள வேண்டிய எண் :
431-276 8546, 94439-19091, 97918 06457