ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -31 
பாதாள புவனேஸ்வரி
ஆலயம்
சாந்திப்பிரியா
 ஆலயம்  உள்ளப்  பகுதி 

ஹிமாசலப் பிரதேசத்தின் அருகில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் எனும் மாவட்டத்தில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் மலைப்பகுதியில் ஒரு காட்டின் அடர்ந்த பகுதியில் பூமியின் கீழே ஒரு பெரிய குகையில் உள்ளது ஒரு அபூர்வ ஆலயம். அதன் பெயர் பாதாள புவனேஸ்வரி என்பது. அதை த்ரேதா யுகத்தில் இருந்த மன்னனான ரிதுபார்னா என்பவன் தனது கனவில் தோண்டிய இடத்தில் சென்று கண்டு பிடித்ததாகவும் அந்த குகை ஆலயத்திற்கு  1191 ஆம் ஆண்டு ஆதி சங்கரர் வந்து வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். ஆலயத்துக்குள் செல்வது கடினம் என்பதினால் உள்ளே செல்பவர்கள் சிறிய விளக்கை எடுத்துக் கொண்டு அங்கு கட்டப்பட்டு உள்ள இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டுதான் நடக்க வேண்டும். இந்த குகை கைலாசத்தில் உள்ள சிவபெருமானின் வாசஸ்தலத்துக்குப் போகும் வழி எனவும், சிவன் இந்த குகையில் வந்து தங்கி ஒய்வு எடுப்பதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் பஞ்ச பாண்டவர்கள் கூட இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள். இந்த குகை ஆலயத்தில் உள்ளே  செல்லச் செல்ல அதற்குள் மேலும் கீழும் படிக்கட்டுகள் அமைந்த இன்னும் பல குகை ஆலயங்கள் உள்ளன.

சுமார் நூற்றி அறுபது மீட்டர் நீளமும் நூறு அடி ஆழமானதுமான இந்த சுண்ணாம்புக் கல்லினால் ஆன குகை ஆலயத்தில் சிவபெருமானும் முப்பத்தி மூன்று கோடி தேவர்களும் தெய்வங்களும் வசிக்கின்றனாறாம். ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். அது மட்டும் அல்ல இந்த ஆலயத்தை விஷ்ணுவின் வாகனமான ஆதிசேஷா நாகமே நிறுவி உள்ளதாகக் கருதுகிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிய செய்தி ஸ்கந்த புராணத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாம் . ஏன் எனில் மனிதர்களால் அப்படிப்பட்ட மாபெரும் ஆலயத்தை குகைக்குள் உள்ள குகைகளில் அமைக்க முடியாது. அனைத்து தெய்வ சிற்பங்களும் பாறைகளில் இயற்கையாகவே அமைந்து உள்ளதாம். ஆதி சங்கரர் காலத்தில் இருந்தே அந்த ஆலயத்தில் பூஜைகளை செய்துவரும் பண்டார்களின் ( பூசாரிகள்) வம்சாவளியினரே இன்றும் அந்த ஆலயத்துக்குள் பூஜைகள் மற்றும் ஹோமங்களை செய்து வருகிறார்கள் எனக் கூறுகிறார்கள். ஆலயத்தில் இருந்து அரை கிலோ முன்னால்வரைதான் வண்டியில் செல்ல முடியும். அதப் பின் ஆலய முகப்புக்கு நடந்தே செல்ல வேண்டும். ஆலயத்தின் உள்ளே செல்ல முதலில் சுமார் நூறு படிக்கட்டுக்களில் இறங்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே நான்கு யுகங்களைக் குறிக்கும் மிகப் பெரிய சிவ லிங்கங்கள் உள்ளனவாம். மூன்று யுகங்கள் கழிந்து விட்டதினால் அந்த யுகங்களை குறிக்கும் சிவ லிங்கங்கள் வளர்வது நின்றுவிட நான்காவது சிவலிங்கமான கலியுக சிவலிங்கம் மட்டும் வளர்ந்து கொண்டே உள்ளது என்கிறார்கள். இதை மாநில அரசாங்கம் சுற்றுலா பகுதியாக அமைத்துள்ளது.

குகை ஆலயத்தின் நுழை வாயில் 

ஆலயத்துக்குச் செல்லும் வழி இது:

விமானம் மூலம் : நைனிடால் எனும் நகரில் உள்ள விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மற்ற வண்டிகள் மூலம் பித்தோராகர் செல்லலாம்.
ரயில் :- உத்தராஞ்சலில் உள்ள கத்கொடம் மற்றும் தனக்பூர் என்ற ரயில் நிலையங்களில் இருந்து இறங்கி பித்தோராகர் செல்லலாம் .
பஸ் மற்றும் வாகனங்களில்: பித்தோராகர்ரில் இருந்து பதினைந்து கிலோ தொலைவில் ஆலயம் உள்ள இடமான கன்ஹோலிஹட்டுக்கு வண்டியில் செல்லலாம்.