சந்திரன் ஆலயம்
 சோமனாதீஸ்வரர் 
 சாந்திப்பிரியா

வழி-
ராகு ஆலயத்தில் இருந்து மெயின் ரோடுக்கு வந்து வலப்புறம் திரும்பி (SH 113) அதே சாலையில் அங்கிருந்து சுமார் பத்து அல்லது பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ள சோமமங்கலத்தை நோக்கிச் செல்ல வேண்டும். அதை அடைந்ததும் ரோடு இரண்டாகப் பிரியும். ஒருபுறம் தாம்பரத்தை நோக்கிச் செல்லும் பாதையும் மறுபுறம் NH-4 சாலையை நோக்கி SH 113 பாதையும் செல்லும். அந்த இடத்தை அடைந்தப் பின் எவரைக் கேட்டாலும் சோமமங்கலம் செல்லும் குறுகியப் பாதையைக் காட்டுவார்கள். சோமமங்கலம் சிறிய கிராமம் என்பதினால் குன்றத்தூரை தாண்டியப் பின் அங்காங்கே சோமமங்கலத்துக்குப் போகும் வழியை கேட்டுக் கொண்டே செல்வது சிறந்தது.

வரலாறு :-

ஆலயம் சோழ மன்னர்களால் 1073 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாம். இந்த ஆலயத்தின் வரலாறு மிகச் சுவையானது.ஒரு முறை சிவபெருமானின் பூதகணங்களின் தலைவரான தஷ்யன் கோபமடைந்து சந்திரனுக்கு சாபம் தந்தாராம். அதற்குக் காரணம் அவருடைய இருபத்தி ஏழு பெண்களும் சந்திரனின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொள்ள அவரை அனுமதி கேட்டனராம். அவரும் சம்மதிக்க அவர்கள் சந்திரனை மணந்து கொண்டனர். ஆனால் திருமணத்துக்குப் பின்னால் சந்திரன் அவர்களில் ஒருவர் மீது மட்டுமே அன்பு கட்டி மற்றவர்களை உதாசீனப் படுத்தினார் . மட்டற்ற பெண்கள் தந்தையிடம் சென்று அதைப் பற்றி புகார் கூற கோபமடைந்த தஷ்யன் சந்திரனுக்கு சாபம் தந்துவிட சந்திரனின் அழகு மறைந்தது. அனைத்து சக்திகளும் அவரை விட்டு அகன்றன. செய்வது அறியாது நின்ற சந்திரன் மீண்டும் தஷ்யனிடமே சென்று மன்னிப்புக் கேட்டு அதற்கு பரிகாரம் கேட்க அவரும் சோமமங்கலத்துக்குச் சென்று அங்கு சிவனும் பார்வதியும் அப்போது தங்கி இருந்த இடத்தின் அருகில் ஒரு குளத்தை வெட்டி அதில் தினமும் குளித்துவிட்டு சிவனை வணங்கித் துதித்தால் சாப விமோசனம் பெற முடியும் என்றார். அதை ஏற்று சந்திரனும் அங்கு சென்று குளம் வெட்டி சிவனை துதிக்க சாப விமோசனம் பெற்றார். அந்த குலமே சந்திரன் தீர்த்தம் என ஆயிற்று. ஆகவே சந்திரனை கவுரவிக்கும் விதத்தில் சிவ பெருமான் அங்கு சோமனாதீஸ்வரராக தன்னுள் சந்திரனை இணைத்துக் கொண்டு காட்சி தருகிறாராம்.

அந்த ஆலயத்தின் விசேஷம் என்ன எனில் அங்கு நந்திதேவர் சிவ பெருமானை நோக்கி அமராமல் அவருக்கு பின்புறத்தைக் கட்டியபடி அமர்ந்து உள்ளார். அதற்குக் காரணம் சோமகன்தன் என்ற மன்னன் அந்த ஆலயத்தைக் கட்டிக் கொண்டு இருந்தபோது அவனுடைய எதிரிகள் அவர் மீது படையெடுத்தனர். அப்போது மன்னன் சிவபெருமானிடம் அந்த ஆலயம் கட்டி முடிக்கும்வரை தன்னை எதிரிகளிடம் இருந்து காக்குமாறு வேண்டிக்கொள்ள சிவபெருமான் நந்திதேவரை அனுப்பி எதிரிப் படையினரை துரத்தி அடித்தப் பின், அவர்கள் மீண்டும் அங்கு வராமலிருக்க வாயிலில் காவலுக்கு நின்றாராம்.

ஆலய வளாகத்துக்குள் காமாட்சி அம்மன், பைரவர், நவகிரகங்கள் போன்றவர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஆலய தல விருட்சம் சர கொங்கை மரமாகும்.