1) குல தெய்வம் அல்லது குடும்ப தெய்வம் என்பது தலைமுறை தலை முறையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் வழிபட்டு வரும் ஆண் அல்லது பெண் தெய்வம் ஆகும். அந்த தெய்வம் மூல தெய்வத்தின் துணை தெய்வமாகவோ அல்லது கிராம தேவதையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட தெய்வம் குல தெய்வமாக இருந்து வந்துள்ளது. வேத ஆகம விதிகளின்படி, குல தெய்வம் அல்லது குடும்ப தெய்வத்தை அந்தந்த குடும்பத்தினர் தினமும் வணங்கி வருவது மட்டும் அல்லாமல், எப்போதெல்லாம் தமது வீடுகளில் பண்டிகைகள் அல்லது முக்கிய பூஜைகள் நடைபெறுமோ, அவற்றில் எல்லாம் அதே குல தெய்வத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து, முதல் கடவுளாக வழிபட வேண்டும் என்பதாக வேத வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டு உள்ளது. குல தெய்வ ஆராதனையின் மேன்மையை வெளிப்படுத்தும் இந்த நடைமுறை , தலைமுறை, தலை முறையாக பல குடும்பத்தினரால் பின்பற்றி வரப்படுகின்றது.
2) ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களால் மட்டுமே தலைமுறை தலை முறையாக குல தெய்வ வழிபாடு முன்னெடுத்துச் செல்லப் படுகின்றது; எந்த நிலையிலும் அவர்களது குல தெய்வம் மாறுபடுவதில்லை. ஆனால் அந்தந்த குடும்பத்தின் பெண் உறுப்பினர்களின் குல தெய்வம், அவர்களின் திருமணத்திற்கு பிறகு மாறி விடுகின்றது. அதன் காரணம் வேத ஆகமங்களின்படி, அவளுக்கு திருமணம் ஆகி விட்டால், அவள் அவளது கணவரது பொருள் ஆகி விடுவதினால், அவளது பிறந்த வீட்டு கோத்திர பந்தங்கள் விலக்கப்பட்டு, அவளது கணவரது வீட்டு கோத்திரங்கள் அவளது கோத்திரங்களாகி விடும். இந்த நடைமுறை வழக்கம் பல நூற்றாண்டு காலங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது. கர்ம வினைகளால் ஏற்படும் அனைத்து துன்பங்கள் மற்றும் தடைகளிலிருந்தும் தம்மை வழிபடும் குடும்ப உறுப்பினர்களை குல தெய்வம் காப்பாற்றி வழி நடத்தி, அவர்களது அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதுகாக்கின்றது. எனவே, குல தெய்வ வழிபாடு புறக்கணிக்கப்படக் கூடாது; குல தெய்வ வழிபாடு குடும்ப பரம்பரை வளரவும், வலுவாக வேறூன்றி நிற்கவும் உதவுகிறது. மேலும் குல தெய்வ ஆலயத்தில் செல்வதைக் காணும் நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழ்ச்சி அடைந்து அந்த குடும்பத்தினருக்கு தமது மனமார்ந்த ஆசிகளை வழங்குகின்றனவாம்.
3) நீண்ட காலமாக நான் குலதெய்வம் என அழைக்கப்படும் குலதெய்வ வழிபாட்டு முறையின் ஆழமான தத்துவத்தை புரிந்து கொள்ள முயற்சித்தேன். பல இடங்களிலும் இன்றளவும் பரவலாக தொடரப்பட்டு வரும் குலதெய்வ வழிபாட்டை புரிந்து கொள்வதற்காக, ஆலய பண்டிதர்கள், முன் காலத்து மூதையோர் மற்றும் சாமானியர்கள் என பலரிடமும் பேசி ஒரு வகையிலான ஆராய்ச்சியை மேற் கொண்டேன். மிக ஆழமான அந்த வழிபாட்டின் தத்துவத்தை புரிந்து கொள்ள நான் மேற்கொண்ட முயற்சி அத்தனை எளிதானது அல்ல என்பது எனக்கு தெரிந்தாலும், அந்த முயற்சியில் இருந்து பின்வாங்க விரும்பாமல் ஆராய்ச்சியை தொடர்ந்தேன்.
4) நான் பணியில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் கிராமப்புறங்களில் இருந்த பல ஆலயங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டு இருந்தேன். அந்த சமயங்களில் எல்லாம் குல தெய்வ வழிபாட்டைக் குறித்த தத்துவங்களையும், அதன் சித்தாந்தத்தையும் புரிந்து கொள்ள சென்ற இடங்களில் நான் சந்தித்த சில முக்கியஸ்தர்களிடமும், ஆலய பூசாரிகளிடமும் அதைக் குறித்த செய்திகளை விவாதித்து உண்மைகளை கேட்டறிந்தேன். நான் சமய விழாக்களில் கலந்து போதெல்லாம் ஆர்வத்தின் மிகுதியினால் குலதெய்வ வழிபாட்டை புரிந்து கொள்ள புரோஹிதர்கள் மற்றும் பண்டிதர்கள் என பலரிடமும் பேசினேன். இதற்கு ஒரு முக்கியமான காரணம் இருந்தது; நாங்கள் எங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குல தெய்வத்தை குறித்து தற்செயலாக கேள்விப்பட்ட பின்னரே, எங்கள் குடும்பத்தினர் வாழ்வில் பாதி காலத்தை, வேறு ஒரு தெய்வத்தை, எங்கள் குல தெய்வமாக நினைத்து வணங்கி வந்திருந்தோம் என்பதை உணர்ந்த பின்னர், எங்கள் தவறை உணர்ந்து கொண்டு நாங்களும் எங்கள் பரம்பரையினர் வணங்கி வந்திருந்த குல தெய்வத்தை வணங்கத் துவங்கினோம்.
5) கடந்த சில ஆண்டுகளாக, நான் கற்றறிந்த ஆலய பண்டிதர்கள், ஜோதிடர்கள், முதியோர்கள் மற்றும் சோழி போட்டு மற்றும் பிற கலைகளை பயன்படுத்தி எதிர்காலத்தை கணிப்பவர்கள் போன்றவர்களை சந்தித்து குல தெய்வ வழிபாட்டைக் குறித்த அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டேன். அவர்களைத் தவிர குலதெய்வ வழிபாட்டை கடைபிடிக்கும் சில முதியவர்களிடமும் பேசினேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த சில செய்திகள் நான் அதுவரை அறிந்திடாதவை. நான் அவர்களிடம் இருந்து பெற்ற செய்திகள் பல வகைகளிலும் மாறுபட்டவை. நான் எனது இணையதளத்தில் எனது புனைப் பெயரான ‘சாந்திப்பிரியா’ என்ற பெயரில் குல தெய்வ கட்டுரைகளை வெளியிட்டு வந்தேன். அதை படித்த பல வாசகர்களிடமிருந்து சுவாரஸ்யமான கேள்விகள் வந்தன. அவர்களின் சில கேள்விகளுக்கான விளக்கங்களை என்னால் தர முடிந்தாலும், சில கேள்விகளுக்கு உடனடியாக என்னிடம் பதில் இல்லை என்பதினால் அவற்றுக்கான பதில்களை தெரிந்து கொள்ள எனது தேடலைத் தொடர்ந்தேன்.
6) இரண்டு மூன்று முகம் தெரியாத முதியோர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் எழுதிய குல தெய்வம் பற்றிய கட்டுரையில் இருந்த தகவல்களுக்கு என்னை பாராட்டினார்கள். அவர்கள் மேலும் சில விஷயங்களைக் குறித்து விவாதித்தார்கள். அது எனக்கு உற்சாகத்தை கொடுத்தது. என்னுடன் பேசியவர்கள் நான் எழுதி வந்த குலதெய்வ வழிபாடு கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டால் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவுமே என்று கருத்து தெரிவித்தார்கள். குலதெய்வங்கள் பற்றிய எனது கட்டுரைகளைப் படித்த பலரும், என்னைப் பல வகைகளிலும் பாராட்டி, என்னுடன் ஈமெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு பாராட்டினார்கள்.
7) என்னுடைய இந்த தேடலில் இரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகளை சந்தித்தேன். முதலாவது திருநெல்வேலி மாவட்டத்தை (இந்தியா) சேர்ந்தவரும், வேறொரு மதத்திற்கு மாறி இருந்தவருமான ஒரு அன்பர் என்னை ஒருநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினார். சில காரணங்களுக்காக அவரது முழுமையான விவரங்களை வெளியிட விரும்பாமல் அவர் தொடர்ப்பு குறித்த தகவல்களை அழித்து விட்டேன். குலதெய்வம் குறித்த என்னுடைய கட்டுரையை படித்தவர், ஈமெயில் மூலம் முதலில் செய்தி அனுப்பிய பின்னர் தொலைபேசியில் என்னை தொடர்ப்பு கொண்டு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின் நீண்ட நேரம் என்னிடம் பேசினார். தனது முன்னோர்கள் மதம் மாறி இருந்ததினால் தனக்கு தன்னுடைய குல தெய்வம் யார் என்பது தெரியவில்லை என்றும், அதனால் தனது குலதெய்வ வழிபாட்டை தொடர முடியாமல் உள்ளதாக வருந்தி, அவரது குல தெய்வத்தைக் கண்டு பிடிக்க உதவுமாறு கேட்டார். மதம் மாறி இருந்தாலும் அவர் குல தெய்வத்தை தேடி அலைந்ததின் காரணம், பல்வேறு குடும்ப பிரச்சனைகளினால் அவர் மிக்க மன உளைச்சலில் ஆளாகி இருந்தபோது, அந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர சில ஜோசியர்களை அணுகியபோது, அவர்கள் அனைவருமே அவரது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் அவரது குலதெய்வ வழிபாட்டை கை விட்டதுதான் என்றும், அவர் குலதெய்வ வழிபாட்டை மீண்டும் மேற்கொண்டால்தான் அவரது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறி விட்டதினால் என்னை அவர் தொடர்ப்பு கொண்டதாகவும் கூறினார்.
8) தனது குல தெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பது புரியாமல் குழம்பி இருந்தவருக்கு, அவருடைய நண்பர்கள் மீண்டும் குறி சொல்பவர்கள், வேறு சில முறைகள் மூலம் பிற் காலத்தை கணிக்கும் ஜோதிடர்கள் அல்லது ஆவிகளுடன் பேசுபவர்களை அணுகி அவர்கள் மூலம் அவரது குலதெய்வம் யார் என்பதை கண்டு பிடிக்க முயற்சி செய்யலாம் என்று கூறியதினால் அது குறித்து என்னுடைய ஆலோசனையைக் கேட்க என்னை தொடர்ப்பு கொண்டதாக கூறினார்.
9) சாதாரணமாக குல தெய்வத்தை ஜாதகத்தை வைத்துக் கொண்டு கண்டு பிடிக்க முடியும் என்பார்கள், ஆனால் ஜாதகம் பிழை இன்றி இருக்க வேண்டும் என்பார்கள்; இடது கை கட்டைவிரல் ரேகையைக் கொண்டு பார்க்கப்படும் நாடி ஜோசியம் கூட இந்த விஷயத்தில் சரியாக பதில் தர முடியாது. முன்னோர்களின் ஆவிகளுடன் பேசி அதை கண்டு பிடிக்க முயல்வதும் தோல்விகளில்தான் முடியும் போன்ற அனைத்தையும் குறித்து நான் பலரிடமும் கேட்டு அறிந்துள்ளேன். ஒருவரது குலதெய்வம் ஆணா அல்லது பெண்ணா, அது அம்மனாக இருக்குமா போன்ற பொது விவரத்தை மட்டுமே கூற முடியும். ஒருவரது குல தெய்வத்தின் சரியான பெயரையோ அல்லது குலதெய்வம் குடி உள்ள சரியான ஆலயத்தின் பெயரை கூட கூற முடியாது என்பது எனது ஆழ்ந்த எண்ணம் ஆகும் என்பதின் காரணம் பல முறைகளிலும் குல தெய்வத்தைக் குறித்த தேடுதலை செய்தவர்கள் அனுபவபூர்வமாக தமக்கு ஏற்பட்ட தோல்விகளையும், சங்கடங்களையும் என்னிடம் கூறி உள்ளார்கள்.
10) இப்படிப்பட்ட பல்வேறு இடங்களிலும் ஆராய்ச்சி செய்து கொண்டு நேரத்தையும் பணத்தையும் வீணடித்துக் கொள்ளாமல், அவரது தந்தை அல்லது தாயார் வழி முன்னோர்களின் உறவினர்கள் யாராவது இருந்தால், அவர்கள் முன்னோர்கள் வணங்கி வந்திருந்த குல தெய்வத்தை குறித்த தகவல்களை கேட்டு அறியுமாறும், அவரது முன்னோர்கள் எந்த ஆலயத்தில் தலை முடியை மொட்டை அடித்துக் கொள்வது, திருமணம் ஆனதும் எந்த ஆலயத்திற்கு சென்று முதல் பூஜை நடத்துவது போன்ற சடங்குகளை செய்து வந்திருந்தார்கள் போன்ற விவரத்தைக் கேட்டு அறிந்தால் அவரது குல தெய்வத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று ஆலோசனை கூறினேன். அதை அவர் மனதார ஏற்றுக் கொண்டார்.
11) சில நாட்களுக்குப் பிறகு அவர் தொலைபேசியில் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு நான் கொடுத்த ஆலோசனைக்கு நன்றி தெரிவித்தார். அவரது முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தின் பெயர் மற்றும் மற்றும் அதன் இருப்பிடம் ஆகியவற்றை அவரது மூதாதையரின் உறவினர்களில் ஒருவர் மூலம் கண்டு பிடித்து விட்டதாகவும், அவரது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த குல தெய்வம் அவர் மதம் மாறிய பின் வழிபட்டு வந்திருந்த அதே வழிபாட்டு தலத்தின் சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் உள்ளது என்றும் கூறினார்.
12) அவர் மதம் மாறிய பின் வழிபட்டு வந்திருந்த வழிபாட்டு தலத்தின் பின்புறம், அதன் சுவரை ஒட்டி, பலமுறை அவர் நடந்து சென்ற அதே பாதையில், அவரது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த தெய்வம் மூன்று பக்கங்களிலும் சுவர் எழுப்பப்பட்டு இருந்த ஒரு சிறிய அறை போன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் வியப்பு அடைந்தாராம். அவரது உறவினர் அந்த சிறிய வழிபாட்டு தலத்தின் உள்ளே இருந்த ஒரு மாரியம்மன் சிலையைக் காட்டி (அவர் குறிப்பிட்ட அந்த தெய்வத்தின் சரியான பெயரை நான் மறந்து விட்டேன்) அந்த மாரியம்மனைதான் அவரது முன்னோர்கள் குல தெய்வமாக வணங்கி வந்திருந்தார்கள் என்றும் அந்த காலத்தில் நிலவி வந்திருந்த சில சமூக காரணங்களினால் மதம் மாறிய பின்னர் குல தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட வேண்டியதாயிற்று என்று கூறினாராம்.
13) சிதிலமடைந்து இருந்த அந்த சிறிய வழிபாட்டு தலத்தின் உள்ளே அவரது முன்னோர்கள் வழிபட்டு வந்திருந்த மாரியம்மன் சிலை காணப்பட்டதாம். அது முதல் அவர் அந்த வழிபாட்டு தலத்தில் தமது குடும்ப குல தெய்வத்திற்கு வழிபாடு செய்யத் துவங்கினாலும், அவர் மாறிய மதத்தின் வழிபாட்டு தலத்தில் வழிபடுவதையும் சில சமூக காரணங்களினால் நிறுத்த முடியாமல் உள்ளது என்றார்.
14) இப்படியாக அவர் தனது மூதையோர் வழிபட்டு வந்திருந்த குல தெய்வ வழிபாட்டை மீண்டும் தொடரத் துவங்கியதும் அவருடைய வாழ்கையில் ஏற்பட்டு இருந்த பல பிரச்சனைகள் மெல்ல, மெல்ல மறையத் துவங்கியதாம். அவரைத் தொடர்ந்து இன்னும் சில உறவினர்களும் அந்த வழிபாட்டு தலத்திற்கு வந்து மாரியம்மனை வழிபாடு செய்யத் துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த வழிபாட்டு தலத்தில் வழிபட வேண்டிய வழி முறைகளைப் பற்றி சில விளக்கங்களை என்னிடம் கேட்டு அறிந்து கொண்ட அவர், மீண்டும், மீண்டும் எனக்கு நன்றி கூறி, அந்த வழிபாட்டு தலத்திற்கு தம்மால் ஆன உதவி செய்ய விரும்புவதினால் என்ன செய்யலாம் எனக் கேட்டபோது, அந்த வழிபாட்டு தலத்தில் ஏற்றப்படும் எண்ணைக்கான செலவை ஏற்குமாறு கூற, அதைக் கேட்ட அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்; உடனடியாக அதை செய்யத் துவங்குவதாகவும் கூறினார்.
15) அதை போலவே இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்மணி ஒருமுறை என்னைத் தொடர்பு கொண்டார். எங்களது முதல் சந்திப்பிலேயே என்னை அவருடைய நெருங்கிய நண்பரைப் போல நினைத்தவாறு, அவர் தாம் அனுபவித்து வந்த சில சோதனைகளை விவரமாக விரித்தபடி என்னிடம் நீண்ட நேரம் பேசினார். அவருடைய முன்னோர்கள் வணங்கி வந்திருந்த கிராம தெய்வமான தஞ்சம்மா தேவி எனும் தெய்வம் எந்த ஆலயத்தில் உள்ளது என்று தெரியவில்லை என்றும், தமிழ்நாட்டில், காஞ்சீபுரத்தில் உள்ளதாக கூறப்படும் அவரது குல தெய்வமான தஞ்சம்மா தேவி வீற்றிருக்கும் ஆலயத்தைக் கண்டு பிடிப்பதில் அவருடைய கணவனுக்கு சற்று கூட விருப்பமில்லாததால், அவரது குடும்ப தெய்வமான தஞ்சம்மாவிற்கு அவரால் வழிபாடு செய்ய முடியவில்லை என்றும், அவளுடைய குலதெய்வ ஆலயம் எங்கிருக்கிறது என்பதைக் கண்டறிய என் உதவியை நாடியதாகவும் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தினர் மூல ஆண் குடும்ப தெய்வமான அய்யனாருடன் சேர்த்து கிராம தேவதையான தஞ்சம்மாவையும் சேர்த்தே வழிபட்டு வந்துள்ளார்கள். அவர்களுக்கு பெண் கிராம தேவதையான தஞ்சம்மா என்பவர் இரண்டாவது குல தெய்வமாம். அவரது முன்னோர்கள் சிலர் தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்தனர் என்று மட்டுமே தனக்கு தெரியும் என்பதாகக் கூறிய அந்த பெண்மணி அவரது குல தெய்வத்தைப் பற்றிய சில குறிப்புகளை கொடுத்து விட்டு, எத்தனை முயன்றும் அவரது குல தெய்வ ஆலயத்தை தன்னால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதினால் என்னுடைய உதவியை நாடியதாகவும் கூறினார்.
16) நான் ஒரு ஜோதிடர் அல்லது துப்பறிவாளர் இல்லை என்பதினால், அவருக்கு நம்பிக்கை இருந்தால் ‘குல தேவதையை எப்படி கண்டுபிடிப்பது’ என்பதைக் குறித்து நான் எழுதி உள்ள கட்டுரையை படிக்குமாறு நான் அவளுக்கு அறிவுறுத்தினேன். அந்தக் கட்டுரையை நான் 2018 இல் எனது வலைத்தளமான Santhipriya.com இல் எழுதி இருந்தேன். (https://santhipriya.com/2018/04/ritual-to-find-out-the-tutelary-deity.html). அந்த முறையைத்தான் நமது பல்வேறு முன்னோர்கள் பல ஆண்டு காலமாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்றும் கூறினேன். அதை அவர் உடனடியாக செய்யத் துவங்குவதாக கூறினார்.
17) அவளுடைய குடும்பப் பிரச்சனைகள் அனைத்திற்கும், குலதெய்வ வழிபாட்டுடன் இரண்டாம் குல தெய்வமான கிராம தெய்வ வழிபாட்டை நிறுத்தியதே முக்கியக் காரணம் என்று அவருக்கு ஜோதிடர்கள் கூறியதால், அவளது கிராம தெய்வ ஆலயம் எங்குள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தாள். கடைசி நிலை புற்று நோயால் அவதிப்பட்டு வந்திருந்த அந்த பெண்மணி அவருக்கு எதுவும் ஆகி விடும் முன் தஞ்சம்மா ஆலயத்துக்கு சென்று வழிபட்டு விட வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். அந்த பெண்மணியின் நிலையைக் கேட்ட எனக்கு பரிதாபமாக இருந்ததினால் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சம்மா அம்மன் வீற்றிருக்கும் ஆலயம் எங்குள்ளது என்று வலை தளத்தில் பல வழிகளில் தேடிப் பார்த்தேன். ஆந்திராவில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே இருந்த, எனக்கு கிடைத்த தஞ்சம்மா ஆலயம் பற்றிய சொற்பமான தகவல்களை அவளிடம் கொடுத்தேன். ஆனால் அவர் குறிப்பிட்ட ஆலய விவரம் எதிலும் பொருந்தவில்லை என்றாலும் அதில் ஒரு ஆலயம் மட்டும் ஓரளவு அவர் கூறிய தகவலின் அடிப்படையில் இருந்தது என்பதாக உணர்ந்தேன். ஆனால் காஞ்சீபுரம் அருகில் இருந்த தஞ்சம்மா ஆலயத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
18) சில நாட்களுக்குப் பிறகு அந்த பெண்மணி மீண்டும் என்னை தொடர்பு கொண்டு ஆச்சர்யமாக பெங்களூரில் இருந்த ‘தஞ்சம்மா கார் ரிப்பேர் கராஜ்’ (கார் பழுது பார்க்கும் கடையின் அடையாளப் பலகை) எனும் பெயர் பலகையைக் கண்டு அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தனது கிராம தேவதை ஆலய இருப்பிடத்தை அறிந்து கொண்டதாக கூறினார். அதே கடையை அவள் பல முறை பார்த்திருந்தும் முன்னர் அவர்களை கேட்கத் தோன்றவில்லை என்று அவள் எனக்கு போன் செய்தாள். அவரது கிராம தேவதை தேடுதல் கதை சுவாரஸ்யமாக இருந்ததால், அவரது அனுமதியுடன் அவரது கதையை தமிழில் ‘குல தெய்வத்தை தேடி – ஒரு உண்மைக் கதை’ என்ற தலைப்பில் என் இணைய தளத்தில், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட்டேன். அவர் கேட்டுக் கொண்டபடி அவரது உண்மையான பெயர் மற்றும் அவருடைய எந்த தகவலையும் வெளியிடவில்லை.
19) எனது இணையதளத்தில் அந்த தெய்வத்தின் கதை வெளியான பின்னர் அதே தஞ்சம்மா தேவியை குல தெய்வமாக கொண்டிருந்த மேலும் சிலர் என்னை தொடர்பு கொண்டு தஞ்சம்மா தேவி ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ள பிற ஆலயங்கள் பற்றிய தகவல்களை கேட்டார்கள். அவர்களுக்கு தஞ்சம்மா தேவியின் ஆலயங்கள் உள்ள இடத்தின் விவரம் கிடைக்கவில்லை என்பதினால் என்னை அணுகினார்கள்.
20) சில பக்தர்களுடன் நான் நடத்திய உரையாடல் மூலம் அதே தெய்வம் வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்கள் சில உள்ளதாக தெரிந்தது. ஒவ்வொரு ஆலயத்திலும் இருந்த தஞ்சம்மா தேவியை குறிப்பிட்ட பரம்பரையினர் வழிபட்டு வந்திருந்தது தெரிய வந்தது. ஒவ்வொரு பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களின் முன்னோர்கள் வழிபாடு செய்து வந்திருந்த குறிப்பிட்ட தஞ்சம்மா தேவி ஆலயத்தில் மட்டுமே சென்று வழிபட்டு வந்துள்ளதும் தெரிந்தது. ஆனால் அவற்றின் விவரங்கள் கிடைக்கவில்லை என்பதின் காரணம் அவை தஞ்சம்மாவின் தனி ஆலயங்கள் அல்ல. வேறு ஆலயங்களில் அவளது சன்னதி இருந்துள்ளது.
21) இருப்பினும், அவர்களில் ஒருவர் கொடுத்த தகவலை நான் அந்தப் பெண்மணிக்குக் கொடுத்தேன். அந்த கிராம தேவதையின் ஆலயம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அருகே வேலூரில் உள்ள அடுக்கம்பொறை என்ற கிராமத்தில், தொலைதூர இடத்தில் இருந்ததாக அந்த பெண்மணி கூறினார். மேலும் தஞ்சம்மாவுடன், செல்லியம்மா என்ற ஒரு கிராம தேவதையும் அந்த ஆலயத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அந்த ஆலயத்திற்கு சென்று விட்டு வந்த பின்னர் அந்த பெண்மணி எனக்கு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு பல நாட்கள் நான் அந்த பெண்மணியை தொடர்பு கொள்ளவில்லை, சில மாதங்களுக்குப் பிறகு வேறு யாரோ அது குறித்து கேட்டார்கள் என்பதற்காக அந்த ஆலயத்தின் முகவரி மற்றும் புகைப்படத்தை கேட்கலாம் என்று எண்ணி அவரை தொலைபேசியில் அழைத்தபோது, அந்த தொலைபேசியில் பேசிய அவளுடைய கணவர், அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி இறந்து விட்டதாக என்னிடம் கூறினார். என் இதயம் சோகத்தினால் கனமானதை உணர்ந்தேன். ஆகவே மறைந்து விட்ட அந்த ஆன்மாவின் அடையாளத்தை மறைக்க விரும்பி மார்ச், 2019 இல் எனது வலைத் தளத்தில் வெளியிட்டு இருந்த அவரது கட்டுரையை உடனடியாக நீக்கினேன் (இணைப்பு: https://santhipriya.com/2019/03/tanjamma-kuladevathai.html).
22) என்னுடைய குல தெய்வத் கட்டுரை வெளியான பிறகு வெளி நாடுகள் உட்பட பல இடங்களில் இருந்தும், பலரும் என்னை தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டு, குல தெய்வம் குறித்த தகவல்களை குறித்து விவாதித்தார்கள் என்பதை கண்டபோது என் உள்ளத்தில் உற்சாகம் நிறைந்தது.
23) மேலும் மேலும் பல அன்பர்கள் அவரவர்கள் குல தெய்வம் குறித்த தகவல்களை என்னிடம் கேட்டதினால், குடும்ப தெய்வத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதற்காக பல நூற்றாண்டுகளாக பலரும் கடைப்பிடித்து வந்திருந்த, ஆனால் பரவலாக பலருக்கும் தெரிந்திடாத ஒரு நடைமுறை பழக்கத்தை குறித்து 2018 ஆம் ஆண்டு நான் வெளியிட்டு இருந்த எனது தமிழ் கட்டுரையின் (லிங்க்: https://santhipriya.com/2018/04/குல-தெய்வத்தை-எப்படி-அடை.html ) ஆங்கில மொழிபெயர்ப்பை 2020 ஆம் ஆண்டு (Link https://santhipriya.com/2020/10/family-deity-kulatheivam-how-to-find-out.html ) நான் வெளியிட்டேன்.
24) எனது கட்டுரையால் பலரும் பயனடைந்தனர் என்பதையும், நான் வெளியிட்டு இருந்த நடை முறையை கடைப்பிடித்து தங்கள் குல தெய்வத்தை தங்களால் கண்டறிய முடிந்தது என்று சிலர் எனக்கு தொலைபேசி மூலம் கூறியபோது மகிழ்ச்சி அடைந்தேன்.
25) இப்படிப்பட்ட அனுபவங்கள் என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கான கூடுதல் தகவல்களைத் தேட என்னைத் தூண்டியது என்பதினால் கீழுள்ள கேள்விகளுக்கு பதில் காண விருப்பம் கொண்டு மேலும் பல தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.

• தெய்வ வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு என்கின்ற கருத்து எப்படி, எங்கிருந்து தோன்றியது?
• எப்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் குறிப்பிட்ட குல தெய்வ வழிபாட்டை மேற்கொண்டார்கள் ?
• ஒரு பரம்பரையை சேர்ந்தவர்களது சந்ததியினர் அவர்களது குல தெய்வத்தை மாற்றியமைக்க எதுவும் சடங்கு உள்ளதா ?
• உலகில் காணப்படும் பெருவாரியான குலதெய்வங்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும் ?
• மேலும் மேலும் புதிய குல தெய்வங்கள் வெளிப்பட்டபோது அவற்றுக்கான தெய்வீக சக்திகள் எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தன மற்றும்
• ஒருவர் தமது குல தெய்வத்தை தனது விருப்பத்துக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ள முடியுமா? அதற்கான ஏதேனும் சடங்கு முறை அல்லது கட்டுப்பாடு உள்ளதா?
26) என்னைத் தொடர்பு கொண்ட அனைவரிடமும் எனது அறிவுக்கு எட்டியவரை குல தெய்வ வழிபாடு குறித்த அனைவரது சந்தேகங்களையும் விளக்கும் ஒரு விரிவான கட்டுரையை எழுதுவதாக உறுதியளித்தேன். வேத கால சில புராண நூல்களில் குல தெய்வம் பற்றி சில குறிப்புகள் மட்டுமே உள்ளன என்றாலும் எனது கட்டுரையில் காணப்படும் செய்திகள் பல இணைய தள செய்திகள், பல்வேறு ஆலய பண்டிதர்களுடன் நடத்திய விவாதங்கள், அவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்ற தகவல்கள், பல வழிகளில் எனக்கு கிடைத்த வாய்மொழி கதைகள், சொற்பொழிவுகள், தனிப்பட்ட பெரியோர்களுடன் நடத்திய விவாதங்கள், மற்றும் பல்வேறு கால கட்டங்களில் நான் நேரில் சேகரித்த பிற செய்திகளை அடிப்படையாக கொண்டது ஆகும். இதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
27) குலதெய்வ தோற்றம் பற்றி நிறைய கருத்துக்களும் விவாதங்களும் உள்ளன. வேத காலத்தில் எழுதப்பட்டதாக கூறப்படும் புராணங்கள் மற்றும் இதிகாச நூல்களைப் படித்தால், வேத காலத்தில் கூட தெய்வ வழிபாடு இருந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட தெய்வ வழிபாடுகள்தான் அந்த காலத்திலேயே குல தெய்வ வழிபாட்டிற்கு வழிவகுத்து உள்ளன.
28) ஒரு நாட்டுப்புறக் கதையின்படி, கிருஷ்ண பகவான் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான யுதிஷ்டரிடம் அவர்களது குல தெய்வம் உஜ்ஜயினியில் நல்கேடா எனும் கிராமத்தில் உள்ள பகலாமுகி தேவி என்றும், யுத்தத்தில் தமக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என அங்கு சென்று வேண்டிக் கொள்ளுமாறு கூறியதினால் பகலாமுகி ஆலயத்திற்கு வந்து யுதிஷ்டர் வணங்கியதாக கூறப்படுகிறது. (அந்த தேவியின் கதையை எனது இணையதளத்தில் படிக்கவும்: https://santhipriya.com/2012/05/ujjain-bagalamuki-temple.html) ஆகவே குல தெய்வ வழிபாடு என்பது , 3500 ஆண்டுகள் அல்லது 7000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், துவாபர யுக முடிவில் நடந்திருந்ததாக கூறப்படும் மகாபாரதப் போர் காலத்திலும் இருந்துள்ளது தெரிகின்றது. அந்த காலகட்டத்தில்தான் பகவான் கிருஷ்ணர் தனது உடலை விட்டு வெளியேறினார் என்றும் புராணக் கதைகளில் கூறப்படுகின்றது.
29) இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பிற நூல்களைப் படிக்கும்போது, குல தெய்வ வழிபாடு என்பது வேத காலத்தில் இருந்தே இருந்துள்ளது தெரிகின்றது. அதன் காரணம் வேத காலத்தில் எழுதப்பட்டு உள்ள ராமாயணம், மஹாபாரதம், ரிக் வேதம் மற்றும் பாஷ்ய புராண நூல்களில் அந்தணர்கள் எனும் பிராமணர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது. வேத காலத்தில் ஆதிக்கம் செலுத்திய அந்த பிராமணர்களில் ஒரு பிரிவினர் சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்திருந்ததாக கூறப்படும் சரஸ்வத் பிராமணர்கள் ஆவார்கள். சரஸ்வத் பிராமணர்கள் தாம் பிரம்மாவினால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஏழு ரிஷிகளின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கின்றார்கள். பாரம்பரியமாக ஒவ்வொரு குலமும், ஒவ்வொரு குடும்ப சந்ததியினரும் ஒரு தனித்துவ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கோத்திரமும் ஏழு சப்த ரிஷிகளில் ஒருவரைக் குறிக்கிறது. ஆனால் பத்து மஹரிஷிகளின் பெயரில் பத்து கோத்திரங்களைக் கொண்டுள்ளதாக கூறப்படும் சரஸ்வத் பிராமணர்கள், எட்டு குறிப்பிட்ட குல தேவதைகளை வணங்கி வந்துள்ள நீண்ட வரலாற்றை கொண்டுள்ளனர். இதுவே வேத காலத்திலும் குல தெய்வ வழிபாடு இருந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதை தொடர்ந்தே ஒவ்வொரு குடும்பமும் அவரவர் கோத்திரத்தை சார்ந்த குல தெய்வங்களை ஏற்றுக் கொண்டு வந்திருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகின்றது. சரஸ்வத் பிராமணர்கள் பற்றிய பல வரலாற்றுக் கதைகள் குல தெய்வ வழிபாடு வேத காலத்தில் இருந்துள்ளது எனும் கருத்தை நிரூபிக்கின்றன.
30) குல தெய்வ வழிபாடு என்ற நடைமுறை வேத காலத்திலிருந்தே தோன்றியது என்றாலும் அப்போது ஜாதிகளோ அல்லது மதங்களோ இருந்ததாக தெரியவில்லை; அனைவரும் ஒரே தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற மிகப் பெரிய இதிகாசங்களிலும் இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் போன்ற ஜாதிகள் மற்றும் மதப் பிரிவுகள் இருந்துள்ளதாக குறிப்புக்கள் இல்லை; ஆனால் சமூகத்தில் அவரவர் செய்து வந்திருந்த தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக அதாவது பிரிவினராக அவர்களை பிரித்து வைத்து இருந்தார்கள்.
31) உண்மையில் தெய்வம் அல்லது தெய்வீகம் என்றால் என்ன? இந்த உலகத்தில் இயங்கிவரும் அனைத்தையும் இயக்கி வரும் சக்தியாக, மனிதர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டுள்ள, கண்களுக்கு புலப்படாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்டுள்ளதாக கூறப்படும் அந்த சக்தியை, ஒருவரது மன எண்ணங்களுக்கு ஏற்ப பல்வேறு தோற்றங்களில் வடிவமைத்து பார்க்கின்றார்கள். அதையே தெய்வம் என்ற பெயரில் வழிபடுகிறார்கள். கடவுளை ‘தேவதா’ என இந்து மதத்தினர் கூறியதையே லத்தீன் மொழியில் டியூஸ் (Deus)’ என்றும், தேவதா (deity) என்றும் ஐரோப்பியர்கள் கூறுகின்றார்கள். சமஸ்கிருதத்தில் ‘தேவா’ என்பது தெய்வம் என்றும் ‘குல’ என்பது ஒரு பரம்பரையை குறிக்கும் சொல்லாகவும் உள்ளது.
32) இந்து சமயத்தில் தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் தெய்வம் உள்ளது என்பதை மறுக்காமல் பல்வேறு வழிபாட்டு முறைகளில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த வழிபாட்டு முறைகள் ஹினோதிசம் (பல கடவுள்கள் இருப்பதை ஒப்புக் கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டும் வழிபடும் ஒரு மத நம்பிக்கையைக் குறிக்கிறது); பாலிதிசம் (ஆண் மற்றும் பெண் என பல கடவுட்களும் உள்ளனர் எனும் தெய்வ நம்பிக்கை), பனின்திசம் (தெய்வம் என்பது அனைத்து இடங்களிலும் ஊடுருவி உள்ள ஒன்று, அனைவராலும் அணுகக் கூடியது ஒன்று என்ற நம்பிக்கை) மற்றும் மோனோதிசம் (ஆண் தெய்வம் எனும் ஒரு தெய்வம் மட்டுமே உள்ளார் எனும் நம்பிக்கை) என்பன ஆகும். குல தெய்வ வழிபாடு என்பது பாலிதிசம் மற்றும் பனின்திசம் என்ற பிரிவில் வருகின்றது.
33) பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குடும்பமும் குறிப்பிட்ட ஒரு ஆண் அல்லது பெண் தெய்வத்தை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டிருந்தன. தலைமுறை, தலைமுறைகளாக அந்த குடும்பத்தினர் அதே குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கி வந்தார்கள்; ஒவ்வொரு குடும்பத்திற்கும், அவர்கள் வணங்கி வந்திருந்த தெய்வத்திற்கும் இடையே எப்போதும் ஒரு பிணைப்பு இருந்தது. அந்த தெய்வமே அவர்களது குடும்பத்தை பாதுகாத்து வரும் தெய்வம் என மக்கள் நம்பியதினால் அவர்கள் செய்து வந்திருந்த சடங்கு, பூஜை அல்லது விழாவில் முதலில் விநாயகர் பூஜை செய்யப்பட்டு அதற்கு அடுத்தபடியாக குல தெய்வத்திற்கு பூஜை செய்த பின்னரே சடங்குகள் அல்லது விழாக்களின் அடுத்த கட்ட வழிபாட்டு பூஜைகள் துவங்கப்படும் என்ற கடுமையான நடைமுறை இருந்தது. பண்டைக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலைவரும் ‘அவரவர்களது குடும்பத்தை ஒன்றிணைத்து வைக்கும் மையப் புள்ளியாக’ இருந்துள்ளார். அவரே குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் வலுவான பிணைப்புகளையும் ஏற்படுத்தி வைத்து இருந்துள்ளார்.
34) குடும்பங்களில் நடத்தப்பட்டு வந்திருந்த விழாக்களிலும், சடங்குகளிலும், பூஜைகளிலும் வினாயகப் பெருமானை ஆராதனை செய்த உடனேயே குல தெய்வ ஆராதனை செய்யாமல் நடத்தப்படும் சடங்குகளும் பூஜைகளும், அவை நடத்தப்பட்டதிற்கான பயன் தராது என்ற நம்பிக்கை உள்ளது.
35) பெரும்பாலான குல தெய்வ ஆலயங்கள் அந்தக் குடும்பத்தினரின் மூதாதையர் வாழ்ந்திருந்த கிராமங்கள் அல்லது நகரங்களில் காணப்படுகின்றன; பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான மக்கள் கிராமங்களில் அக்கம் பக்கத்தில் தங்கள் உறவினர்களுடன் ஒரு குழுமமாக வாழ்ந்து வந்தார்கள். பிராமண சமூகத்தினரால் அந்த இடங்கள் அக்ரஹாரங்கள் என்று அழைக்கப்பட்டன.
36) இதேபோல், இந்தியாவில் ஒவ்வொரு மானிலத்திலும், வரலாற்று ரீதியாக சில ஜாதி பிரிவினர் அல்லது சமூகங்கள் ஒன்றாக குடியேறிய இடங்கள் அல்லது குடியிருப்புகள் பல கிராமங்களிலும் உள்ளன; அவை அக்ரஹாரங்கள் போன்ற தனித்துவமான சுற்றுப்புறங்களை கொண்ட இடங்களாக அமைந்து இருந்தன. அதன் காரணம் அவரவர் சமுதாயத்திற்கேற்ப நிலவிய கலாச்சார நடைமுறைகளை அங்கு வசித்து வந்தவர்களினால் கடைபிடிக்க முடிந்தது. அதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கிராம அளவில் தனித் தனியான குல தெய்வ ஆலயங்கள் இருந்தன. குல தெய்வமாக அவர்களால் வழிபடப்பட்ட தெய்வம் அவரவர்கள் சார்ந்து இருந்த சமூகத்தின் மரபுகளைப் பொறுத்து அமைந்து இருந்தன.
37) வேத காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்தந்த குடும்பத்தின் தந்தையே வழிகாட்டுபவராக இருந்து வந்துள்ளார்; அவரது கட்டளையை மீறவோ மாற்றவோ அல்லது அதைக் குறித்து அந்த குடும்பத்தினர் வெட்கப்பட்டதோ இல்லை. குடும்பங்களின் ஒற்றுமையைப் பேணுவது மட்டுமே அவர்களுக்கு முன்னுரிமையாக இருந்தது. குடும்ப ஒற்றுமையை எந்த விதத்திலாவது குலைக்க முயன்ற குடும்ப உறுப்பினர்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களால் கண்டிக்கப்பட்டனர் அல்லது அவர்கள் குடும்பத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும் – தாத்தா பாட்டி முதல் கொள்ளுப் பேரன் வரை – ஒரே கூரையின் கீழ் வசித்து வந்தனர்; ஒருவேளை சிறிய வீட்டில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து வாழ முடியாவிட்டால், குடும்ப உறுப்பினர்களில் சிலர் தங்கள் குழந்தைகளுடன் அருகிலுள்ள வீடுகளில் வசித்து வந்தனர். அதனால் முக்கியமான நிகழ்வுகளின் போது, அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஒருங்கிணைந்த குடும்பமாக விழாவைக் கொண்டாட முடிந்தது. ஒரு குடும்ப தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி அல்லது அந்தக் குடும்பத்தில் முதல் மகன் தானாகவே குடும்பத் தலைவர் எனும் அந்தஸ்தைப் பெற்று விடுவார் என்பது அப்போது நிலவி வந்திருந்த நடைமுறை பழக்கம் ஆகும்.
38) கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் அல்லது இடத்தில் வாழ்ந்திருந்த கொள்ளு மற்றும் எள்ளு தாத்தா முதல், கொள்ளு மற்றும் எள்ளு பேரன் வரையிலான குடும்பத்தினர், அவரவர் கிராமங்களில் இருந்த குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று, குறிப்பிட்ட தெய்வத்தையே வணங்கி வந்திருக்க, அதுவே அவர்களது குடும்பத்தின் குல தெய்வம் ஆயிற்று. இப்படியாகத்தான் முதல் தலை முறையை சேர்ந்த குடும்ப வம்சாவளியினர் வணங்கி வந்திருந்த குல தெய்வத்தை அடுத்தடுத்த பரம்பரையினரும் தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு, அந்த தெய்வத்தையே குல தெய்வமாக வணங்கி வரலானார்கள்.
39) மானிடர்கள் அறிவு விரிவடையத் துவங்கிய காலத்தில், பெரும்பாலான குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களுடன் மற்றும் உறவினர்களுடன் கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள். அதன் காரணம் அவர்களில் சிலர் கிராமங்களில் இருந்த நிலங்களில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தார்கள்; இன்னும் சிலர் புரோகிதர்கள் அல்லது பண்டிதர்களாக தொழில் செய்து வந்தார்கள் என்றாலும் ஒருங்கிணைந்த குடும்பத்தினராக, ஒன்றாகவே அதே கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள்.
40) ஒவ்வொரு கிராமங்களிலும் பலதரப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் வசித்து வந்திருந்தார்கள் என்றாலும் அந்த காலத்தில் ஜாதி மற்றும் மத வேறுபாடு என்பவை கிராமத்தினர் ஒற்றுமையை பிரித்து வைக்கவில்லை. ஜாதி மத வேறுபாடின்றி கிராமத்தினர் அனைவருமே கிராமங்களில் நடைபெற்ற பண்டிகைகள், ஆலய விழாக்கள் போன்றவற்றில் ஒன்றிணைந்து கலந்து கொண்டு ஒரே தெய்வத்தை வணங்கி வந்திருந்தார்கள்.
41) தொலைதூர கிராமங்களில் குடியிருப்புகள் தோன்றிய பண்டை காலத்தில், குடும்ப உறுப்பினர்கள், தாம் செல்லப் பிராணிகள் போல வளர்த்து வந்திருந்த விலங்குகள் இறந்த பின், அவற்றை புதைத்த இடங்களில், அல்லது எங்கெல்லாம் இறந்த தமது உறவினர்களை புதைத்து வைத்தார்களோ அல்லது விலங்குகள் அல்லது பறவைகள் அமர்ந்து கொண்டு விசித்திரமான சப்தங்களை எழுப்பினவோ அந்த இடங்களில் எல்லாம் அடையாளக் கற்களை புதைத்து வைத்து அந்த இடங்களுக்கு மரியாதை காட்டத் தொடங்கினர். அவை கண்களுக்கு புலப்படாத ஆன்மாக்களின் இடம் என்று நம்பப்பட்டது. அவ்வாறு கற்கள் நடப்பட்டு இருந்த இடங்கள் காலப்போக்கில் வழிபாட்டு தலங்களாகவும் மாறின.
42) பல வருடங்கள் கழிந்தவுடன், முந்தைய பத்தியில் கூறப்பட்டது போல, மக்கள் தங்கள் கிராமத்தில் கைவினை கலைஞ்சர்களினால் செதுக்கப்பட்ட வெவ்வேறு வடிவ கற்களை அந்த இடங்களில் அமைக்கத் தொடங்க, நாளடைவில் அவை புனித இடங்களாகக் கருத்தப்படத் தொடங்கின. இப்படியாக கற்களில் வடிவமைத்த சிற்பங்கள், தெய்வ உருவங்களாக கருதப்பட்டு அவற்றை வழிபடும் பழக்கம் துவங்கியது. நாளடைவில் அந்த இடங்கள் வழிபாட்டுத் தலங்களாக மாறி விட அங்கு நிறுவப்பட்டிருந்த சிலைகள் குல தெய்வம் அல்லது அவரவர்களின் இஷ்ட தெய்வமாக மாறியது.
43) கிராமங்களில் பல இடங்களும் வழிபாட்டுத் தலங்களாக மாறின. அந்த இடங்களில் எதோ ஒரு உருவத்தில் செதுக்கப்பட்ட உருவக் கற்கள் அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் நிறுவப்பட்டு, அவை கிராமத்தை பாதுகாக்கும் தெய்வங்கள் என்று கூறப்பட்டன; பின்னர் அவை மேல் கூரை இல்லாத திறந்த வெளியிலோ அல்லது தென்னை அல்லது பனை மரங்களின் நெய்த இலைகளால் மூடப்பட்ட கூரையின் கீழேயோ வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்தன.
44) மேற்கூறிய பின்னணியில், குல தெய்வம் எனும் கருத்து, நாட்டுப்புற மரபின் ஒரு பகுதியாக கிராமங்களில் நிறுவப்பட்டு, போற்றப்பட்டு வரப்பட்டுள்ள பல சிலைகளை வணங்கித் துதித்த வழிபாட்டிலிருந்து தோன்றியது என்று கருதுவது மிகையானது அல்ல. ஐயனார், முனீஸ்வரன், கருப்பசாமி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படும் தெய்வ சிலைகள் இல்லாத ஒரு கிராமத்தைக் கூடக் காண முடியாது. மேலும் மாரியம்மன், ரேணுகா தேவி, எல்லம்மா, பச்சை அம்மன், போத்துராஜா, சாஸ்தா, கங்கம்மா, போலம்மா, சுங்கலாமா, சாஸ்தா, காத்தவராயன், சப்த கன்னிகா, மகேஸ்வரம்மா, பிடாரியம்மன், மகா காளி என பல்வேறு பெயர்களில் ஏராளமான தெய்வ சிலைகளும் பல கிராமங்களிலும் காணப்படுகின்றன .
45) தெற்கு மற்றும் வட இந்தியாவில் நிலவும் தெய்வங்களின் பெயர்கள் சற்றே வேறுபடுகின்றன; உதாரணமாக தெற்கில் உள்ள மாரியம்மனை வடக்கில் சீதலம்மா என்று அழைக்கின்றார்கள். எனக்குத் தெரிந்தவரை, வட இந்தியாவில் குல தெய்வம் என்ற ஒரு கருத்து இருப்பதாகத் தெரியவில்லை; ஆனால் அவர்கள் இஷ்ட தெய்வம் அல்லது கிராம தெய்வம் என்ற பெயரில் தெய்வங்களை வணங்குகின்றார்கள். வட இந்தியாவில் பெரும்பாலும் அவரவர் சாதி, சமூகம் அல்லது புவியியல் பகுதியுடன் சம்மந்தப்பட்ட தெய்வங்களையே வணங்குகின்றார்கள். அந்த தெய்வங்கள் குல தெய்வங்களைப் போல ஆராதிக்கப்படாமல் இருக்கலாம் என்றாலும் குடும்பம் மற்றும் சமூக அடையாளத்தின் அடிப்படையில் அவர்கள் வணங்கித் துதிக்கப்படுகின்றார்கள். வட இந்தியாவில் குல தெய்வங்கள் எனும் பெயரில் பார்வதி தேவியின் பல அவதாரங்கள், சிவன், நாக தெய்வங்கள், துர்கா தேவி, காளி, ஹனுமான், கிருஷ்ணர் போன்ற தெய்வங்கள் சில சமூகத்தினரால் வணங்கப்படுகின்றார்கள்.
46) இதன் காரணமாகவே 95%ற்கும் அதிக அளவிலான பரம்பரையினரின் குல தெய்வம் அவர்களது மூதாதையர் வாழ்ந்திருந்த கிராமத்தில் காணப்படுகின்றன. அந்த 95% குல தெய்வங்களில் கூட 90% க்கும் அதிக அளவிலான தெய்வங்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை தெய்வங்களான கிராம தேவதைகளாக அல்லது கிராம காவல் தெய்வங்களாகவே இருந்து உள்ளன.
47) தெய்வங்களில் முதல், இரண்டாவது, மூன்றாவது நிலை போன்ற நிலையிலான தெய்வங்களைக் குறித்து பின்னர் விளக்கப்பட்டு உள்ளது.
48) காலப்போக்கில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் தமக்கு முடிந்த நேரத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்று, தங்கள் குல தெய்வத்தை வழிபடுவதை தமது வாழ்வின் ஒரு நியதியாக வைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள்.
49) ஒருவரின் குல தெய்வத்தின் ஆசிகள் கிடைக்காவிடில் குடும்பத்தில் நல்லது எதுவும் நடக்காது என்று மூதையோர் கூறுவார்கள். அவர்கள் வேறு எந்த இஷ்ட தேவதை அல்லது அவர்களின் குருமார்களிடம் {மடாதிபதி) சென்று பிரார்த்தனை செய்தாலும் எந்த பலனும் கிடைக்காது நம்பிக்கையாக உள்ளது.
50) தென்னிந்தியாவில் சில காரணங்களால் தமது குல தெய்வம் யார் என்பது தெரியாத நிலையில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமியையோ அல்லது திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதியையோ தங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வணங்குவது வழக்கமாக இருந்துள்ளது.
51) அதன் காரணம் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ வெங்கடாசலபதி பரப்பிரும்மனின் ஆண் சக்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்களின் சக்திகளையும், பரபிரும்மனின் பெண் சக்தியான சக்தி தேவியின் அம்சங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளவர் என்பதினால் பக்தர்கள் எந்த வடிவத்தில் குல தெய்வத்தை வழிபட நினைக்கிறார்களோ அதே குல தெய்வமாகி அவர்களது கோரிக்கைகளை ஏற்கிறார் என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள்.
52)
அதே போன்ற சக்திகளைக் கொண்டவர் சிவலிங்க வடிவில் இருக்கும், சிவபெருமானின் அவதார ரூபமான ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமியும் ஆகும். சிவலிங்கம் என்பது சிவன் மற்றும் சக்தியின் உருவங்களை உள்ளடக்கிக் கொண்டு உள்ளதாக நம்பப்படுகிறது. சிவலிங்கத்தின் ஒரு பாதி, பிரபஞ்சத்தைப் படைத்த ‘உன்னதமான’ ஆண் தெய்வீக சக்தியாகவும், மற்ற பாதி பெண் சக்தியாகவும் கருதப்படுகிறது. பிரம்மாவும் விஷ்ணுவும் அவர்களை தமது தலை மீது தாங்கியபடி அமர்ந்திருக்கிறார்கள்.

53) எந்த ஒருவரும் அவர்களது முன்னோர்கள் தலைமுறை தலை முறை, தலை முறையாக வழிபட்டு வந்திருந்த குல தெய்வ வழிபாட்டை திடீரென துறந்து விட்டு அவர்களின் விருப்பப்படி வேறு ஒரு தெய்வத்தை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆராதிக்க முடியாது. ஒரு பரம்பரையின் குறிப்பிட்ட குல தெய்வ வழிபாடு என்பது இயற்கையாகவே ஒரு பரம்பரையின் வாரிசுகளில் ஆண் உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும், குழந்தைகளே இல்லாத நிலைகளிலும் தானாகவே நின்று விடும்.
54) ஒரு குடும்பத்தில் குல தெய்வ வழிபாடு என்பது ஆண்கள் மூலமாக மட்டுமே தொடர்கிறது. பெண் திருமணம் செய்து கொண்டு வேறொரு வீட்டிற்குச் சென்று விட்டால், அவளுடைய கோத்திரம் அவர்களின் கணவர்களின் கோத்திரமாக மாறி விடும் என்பது நியதி; அதனால் அவளுடைய குல தெய்வமும், அவளுடைய கணவனின் குடும்ப தெய்வமாக மாறி விடும் என்பதினால், திருமணத்திற்கு முன்பு அவள் எந்த குல தெய்வத்தை ஆராதித்து வந்திருந்தாளோ அந்த குல தெய்வ வழிபாடு அவளுக்கு இருக்காது.
55) ஒரு குடும்பத்தினருக்கு மாரியம்மன் குல தேவதையாக இருக்கின்றாள் என்றால் அவள் எப்படி அந்த ஆறு பரம்பரையினருக்கும் குல தெய்வமாக இருப்பாள் என்பதை கீழ்கண்ட படம் இதை விளக்குகின்றது.

• குடும்ப எண் -1: ஒரு குடும்பத்தில் ஆறு குழந்தைகள்- முதல்வர் ஆண், மற்றவர்கள் பெண்கள் – பிறக்கிறார்கள். குடும்பத்தின் முதல் ஆண் பிள்ளைக்கு குழந்தைகள் பிறந்து இருந்தால், மாரியம்மன் தொடர்ந்து அவர்களது குல தெய்வமாக இருந்து வருவார். முதல் ஆண் பிள்ளைக்கு குழந்தைகள் இல்லை என்றால், அல்லது அவர் இறந்து விட்டால், அல்லது அவருக்கு பெண் குழந்தைகள் மட்டுமே இருந்தால், முதல் தலைமுறை ஆண் பிள்ளையுடன் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நின்று விடும். இருப்பினும், அதே குடும்பத்தில் அடுத்த ஐந்து பெண்களும் அவர்களுக்கு திருமணமாகாத வரை, குல தெய்வமாக மாரியம்மன் இருப்பார். அவர்கள் திருமணம் செய்து கொண்ட உடன் அவர்களின் குல தெய்வம் அவர்களின் கணவரின் குடும்ப குலதெய்வமாக மாறுகிறது.
• குடும்ப எண் -2: மேலே உள்ள அதே விளக்கக் கோட்பாடு இதற்கும் பொருந்தும். ஆறாவது ஆண் மகன் வரையிலான குடும்பத்தினருக்கு மாரியம்மன் குல தெய்வமாக இருப்பார், ஆறாவது ஆண் மகனுக்கும் ஆண் குழந்தைகளே பிறந்தால், அவர்களும் ஆண் குழந்தைகளைப் பெற்றால் 7, 8, 9 வைத்து பரம்பரை என தொடர்ந்து அவர்கள் பரம்பரையில் மாரியம்மனே குல தெய்வமாக இருப்பார். அவர்கள் யாருக்குமே ஆண் மகவு பிறக்கவில்லை என்றால் அந்த குடும்ப மரத்தில் ஆறாவது உறுப்பினர் மரணத்துடன் குலதெய்வ வழிபாடு நின்று விடும்.
• குடும்ப எண் -3: மேலே உள்ள அதே விளக்கக் கோட்பாடு இதற்கும் பொருந்தும். ஆனால் அந்த குடும்பத்தின் அனைத்து பெண்களுக்கும் திருமணம் ஆனதும் மாரியம்மன் வழிபாடு நின்று விடும் என்பதினால் அந்த குடும்ப நான்காவது மகனுக்கு ஆண் மகன்கள் பிறந்தால் மட்டுமே மாரியம்மன் குல தெய்வ வழிபாடு தொடரும். அந்த குடும்ப மரத்தில், நான்காவது ஆண் மகன் எந்த குழந்தைகளையும் பெற்று எடுக்காமலும் அல்லது பெண் குழந்தைகளை மட்டுமே பெற்று இருந்தால் அவரது மறைவோடு அந்த குடும்ப மரத்தின் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நின்று விடுகிறது.
• குடும்ப எண் -4: ஐந்தாவது மற்றும் ஆறாவது குடும்ப உறுப்பினர்களுக்கு மாரியம்மன் குல தெய்வமாக இருக்கிறார், மேலும் அந்த தலைமுறையில் ஆண் குழந்தைகளைப் பெற்றால் 7வது, 8வது, 9வது மற்றும் பலவற்றில் மாரியம்மன் வழிபாடு தொடரும். இல்லையெனில், எண் 4 இன் குடும்ப மரத்தில், ஐந்தாவது மற்றும் ஆறாவது தலைமுறை உறுப்பினர்களின் மறைவுடன் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நின்று விடுகிறது.
• குடும்ப எண் -5: குடும்பத்தின் ஆறாவது உறுப்பினருக்குப் பிறகும் மாரியம்மன் குல தெய்வமாகவே இருக்கிறார், மேலும் அந்த தலைமுறையில் இவருக்கு ஆண் மகன் பிறந்தாலும் அவர்கள் மூலம் மாரியம்மன் வழிபாடு 7வது, 8வது, 9வது பரம்பரை எனத் தொடரும்.
• குடும்ப எண் -6: மாரியம்மன் குல தெய்வ வழிபாடு எண் 1 முதல் எண் 6 வரையிலான பெண்கள் திருமணம் செய்து கொள்ளும்வரை தொடரும். அவர்களது திருமணத்திற்கு பிறகு அந்த குடும்பத்தின் மாரியம்மன் வழிபாடு முடிவுக்கு வந்து விடும்.

56) குல தெய்வ வழிபாடு என்பது புதிதாக தோன்றியது அல்ல, அது பண்டை காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்துள்ளது என்பது ஏற்கனவே மேலே உள்ள பத்திகளில் விளக்கப்பட்டு உள்ளது. ஆகவே இப்போது நாம் தெய்வங்களின் தோற்றம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து பார்க்கலாம். இதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் நாம் முதலில் பிரபஞ்ச தோற்றத்தைக் குறித்த செய்தியை சிறிதளவு தெரிந்து கொள்ள வேண்டும். துரதிஷ்டவசமாக, படைப்பின் கொள்கையும், நியதியும் வேத புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் காணப்படும் குறைந்த அளவிலான செய்திகளாகவே அல்லது வாய்மொழிக் கதைகளாகவேதான் உள்ளன. அவை அனைத்தும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீக தீர்க்கதரிசிகள், ஆன்மீக போதகர்கள், ஆன்மீக குருமார்கள் போன்றவர்கள் எழுதி வைத்துள்ள சுவடிகள், ஞானிகள் மற்றும் முனிவர்களின் சொற்பொழிவுகள் போன்றவற்றால் இன்றளவும் பரப்பப்பட்டு வந்துள்ளன.
57) மிகப் பழமையான நூல்களான ரிக் வேத நூல் மற்றும் வேத காலத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கால புராண நூல்கள் பலவும் பனை மர இலைகளில் எழுதப்பட்டு இருந்ததாகவும் அவற்றில் பலவும் காணாமல் போய் விட்டதாகவும், அவை இன்றுவரை கண்டு பிடிக்கப்படாமல் உள்ளன அல்லது இயற்கையால் அழிந்து இருக்கலாம் எனவும் நம்பப்படுவதினால் துரதிஷ்டவசமாக படைப்பின் நியதியும் தத்துவங்களும் காலம் காலமாக வாய் வழி கதைகள், பிரசங்கங்கள், ஆன்மீக குருமார்கள் மற்றும் ஞானிகளின் சொற்பொழிவுகள், உரைகள் மூலமாக தொடர்ந்து நமக்கு கிடைத்து வந்துள்ளன. தொலைந்து போய் விட்டதாக கூறப்படும் அந்த நூல்களில் காணப்பட்ட படைப்பின் ரகசியங்களும், குலதெய்வ வழிபாடு உட்பட அனைத்து தெய்வீக செய்திகளும் பல சமயங்களில் தெய்வீக முனிவர்களுக்கு தெய்வங்களினாலேயே உபதேசிக்கப்பட்டு உள்ளதாக கருதப்படுவதினால், அவர்கள் கூறி வந்திருந்த வாய்மொழி கதைகள் மற்றும் போதனைகள் மூலம் அவை மக்களிடம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது .
58) பிரம்ம குமாரி சமாஜ், காயத்ரி பரிவார், தத்தாத்ரேய பரிவார் போன்ற ஆன்மீக அமைப்புகளும், பல ரிஷி முனிவர்கள், சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளின் வாழ்க்கைக் கதைகளும் மேல் கூறிய கருத்துக்களை பிரதிபலிக்கின்றன. “ரஹஸ்ய ஸ்துதி” எனும் நூலில் படைப்பின் நியதி குறித்து பகவான் விஷ்ணு நாரத முனிவருக்கு உபதேசம் செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளதாம். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நூலும் இன்றுவரை கிடைக்காமல் உள்ளதினால் அதில் இருந்ததாக கூறப்படும் செய்திகளும் நாடோடிக் கதைகள் மற்றும் வாய் மொழி கதையாகவே கூறப்பட்டு வருகிறது.
59) புராண நூல்கள் மற்றும் மத நம்பிக்கைகளின்படி, எப்போதும், எங்கும் பரவியுள்ள ‘உயர்ந்த’, நமது அறிவுக்கு அப்பாற்பட்ட, கண்ணுக்குத் தெரியாத மாபெரும் எதோ ஒரு சக்தி, பிரபஞ்சத்தை வெளிப்படுத்த முடிவு செய்தபோது, தனது உடலிலிருந்து முதலில் தண்ணீருடன் கூடிய பூமியை விடுவித்தார். அதில் அவர் சில விதைகளை (படைப்பைக் குறிக்கும் விதை) தூக்கி எறிந்தார்; அந்த விதைகள் ஒரு தங்க முட்டையாக மாறியது. ஒரு வருடத்திற்கும் மேலாக அனைத்து அம்சங்களையும் கவனமாக ஆராய்ந்த பிறகு, அவர் முட்டையை இரண்டு துண்டுகளாக உடைத்து, அவற்றை பூமி மற்றும் சொர்க்கம் என மாற்றினார், அவற்றுக்கிடையே காலி இடத்தை வைத்து அதை ஆகாசம் என்பதாக கூறினார் (குறிப்பு: மனு ஸ்மிருதி வசனங்கள் 1.8 முதல் 1.13 வரை).
60) திரிபுர ரஹஸ்யம் எனும் நூலின் பாகம் 22 என்பதில் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து இப்படியாக கூறப்பட்டு உள்ளது. ‘நான் என்ற எண்ணத்தைக் கொண்ட அந்த சக்தியே, பிரும்மாண்டத்தை வெளிப்படுத்தி அதில் மூன்று தன்மைகளில் ஆன பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் என்பவர்களை வெளிப்படுத்தினார். அவரே பிரும்மா எனும் ரூபத்தில், பல்வேறு தன்மைகளிலான கோடிக்கணக்கான அசையும், அசையா, ஆண் மற்றும் பெண் போன்ற உயிரினங்களை படைக்கின்றார். அவரே விஷ்ணு எனும் ரூபம் எடுத்து பிரும்மா எனும் ரூபம் மூலம் படைத்தவற்றை காத்து வருகின்றார். அடுத்து அவர் எடுத்த ருத்திரன் எனும் ரூபம் மூலம், படைக்கப்பட்டவற்றில் இருந்த தீயவர்களையும் தீமைகளையும் அழிக்கிறார்’. இப்படியாக பிரபஞ்சம் தோன்றியது.
61) கண்களுக்கு தெரியாத மாபெரும் சக்தியானது தங்க முட்டையை உடைத்து பிரபஞ்சத்தை தோற்றுவித்ததாக கூறப்படுவதையே, ஆராய்ச்சியாளர்கள் பெரு வெடிப்பு (Big Bang) என்ற கோட்பாடாகக் கூறுகின்றார்கள். பெரு வெடிப்பு தத்துவத்தின்படி, பிரபஞ்சம் 13.7 அல்லது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது தெரிகின்றது. ஆனால் ஆன்மீகவாதிகளின் கூற்றின்படி அதற்கும் முற்பட்ட காலத்திலேயே பிரபஞ்சம் படைக்கப்பட்டு உள்ளது. எதோ எப்படியோ, பிரபஞ்சம் படைக்கப்பட்ட பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகே மானிடர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாயிற்று என்பதே உண்மை நிலை ஆகும்.
62) கண்களுக்கு புலப்படாமல் இருந்த சக்தியில் இருந்து பிரபஞ்சம் வெளிப்பட்டபோது பூமியின் நிலை என்னவாக இருந்தது, அது எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமாக பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் பெருவெடிப்பு (Big Bang) எனும் தத்துவத்தையே ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அவர்களின் கூற்றின்படி இன்று நாம் காணும் பிரபஞ்சம் முதலில் தீயின் ஜுவாலை போல சிறு புள்ளியாக தெரிந்தது. அதுவே மெல்ல, மெல்ல விரிவடைந்தது.
63) சிறு புள்ளியாக தெரிந்த நெருப்பு பொறி என்பது பர பிரும்மனால் முதலில் வெளிப்படுத்தப்பட்ட, உருவம் வெளித் தெரியாமல் இருந்த சூரியனாக இருக்கலாம். ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி முதலில் பிரபஞ்சம் தோன்றியபோது பூமி முழுவதுமே வாயுவும், உறைந்த நீருமாக காணப்பட்டது. பல்லாயிரம் கோடி வருடங்களாக அவை வெளியேறியவண்ணம் இருந்து, வாழுவதற்கு ஏற்ற நிலம் ஆயிற்று.
64) ஆய்வாளர்களின் கூற்றின்படி பிரபஞ்சம் படைக்கப்பட்ட பிறகு நான்கு அல்லது ஐந்து கட்டங்களில் உயிரினங்கள் வாழத் தகுதியான நிலையை பூமி எட்டி உள்ளது. முதலில் வெளி வந்த நிலம் கண்களால் பார்க்க முடியாத அளவிலான தூசியினால் மூடப்பட்ட புகை மண்டலமாக காட்சி தந்தது. எதோ ஒரு வாயு முற்றிலும் நிறம்பி இருந்த நிலையில் இருந்த நிலமோ, உருகிய பாறைகளைக் கொண்டு வெளிச்சம் அற்ற இருட்டு நிலமாகவே இருந்துள்ளது. மெல்ல மெல்ல சிறிதளவு வெளிச்சத்தை காணும் வகையில், பூமி மீது படர்ந்திருந்த புழுதிப் படலம் கீழ் இறங்கி வர பல்லாயிரம் கோடி வருடங்கள் ஆக, பூமியும் அனைத்து பக்கங்களிலும் விரிவடையத் துவங்கியது.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் எங்குமே திரவ வடிவிலான தண்ணீர் இருக்கவில்லை என்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மிக அதிக அளவிலான வெட்ப நிலையில் இருந்த பூமியில் பாறைகள் திரவ நிலையில் உருகிக் கிடந்தன.
65) மிக அதிக அளவிலான வெட்ப நிலையில் இருந்த பூமியில் தண்ணீர் வாயு வடிவில் மறைந்து இருந்தது என்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். பூமியில் மறைந்து கிடந்த வாயு நீராவியாக வெளியேற துவங்கியவுடன், அது மெல்ல மெல்ல திரவ நிலையை அடைந்து கீழ் நோக்கி தண்ணீராக விழத் துவங்கின. கோடானுகோடி ஆண்டுகளாக இப்படியாக பூமியின் உள் இருந்து வெளியேறிய வாயு, நீராவியாகி மீண்டும், மீண்டும் பூமியின் மேற்பரப்பில் மழையாக பெய்த வண்ணம் இருந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்த பெரும் பள்ளங்களுக்குள் தண்ணீர் நிறையத் துவங்க அதுவே கால ஓட்டத்தில் பெரும் கடலாக உருவாயிற்று. இப்படியான பல்வேறு செயல்களுக்கு அதிபதிகளாக இருந்த தெய்வங்கள் பரபிரும்மனால் வெளிப்படுத்தப்பட்டு கண்களுக்கு புலப்படாவண்ணம் இருந்தார்கள். அவர்களில் சூரிய பகவான், சந்திர பகவான் மற்றும் இடி, மின்னல், மழை, ஆகாயம், சீதோஷ்ணம் போன்ற அனைத்திற்கும் அதிபதியான தேவேந்திரனும், வாயு பகவானும் அடங்குவார்கள். பூமியை மானிடர்கள் வாழும் நிலமாக்க பரபிரும்மன் ஏற்பாடு செய்த அனைத்து நிகழ்வுகளையும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பின்னணியில் இருந்தவாறு அந்த தெய்வங்கள் செய்தார்கள்.
66) மானிட மற்றும் பிற ஜீவன்கள் உயிர் வாழத் தேவையான நீரும், நிலமும், கடலும் உருவாக பல்லாயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதினை பரபிரும்மன் அறிந்தே இருந்தார் என்பதினால்தான் தன்னுள் இருந்து பூமியை வெளி வரச் செய்த பரபிரும்மன், அடுத்து கடலை உருவாக்கினார். அவை அனைத்தையும் செய்வதற்காக இயற்கைகளை கட்டுப்படுத்தும் தெய்வங்களான இந்திரன், சூரியன், சந்திரன், வாயு மற்றும் வருணன் போன்ற தெய்வங்களை படைத்தார். அதன் பின் மானிடர்களும் விலங்கினங்களும் வாழத் தேவையான பூமி உருவானதும் அந்த தெய்வங்களை மீண்டும் தனக்குள் இழுத்துக் கொண்டு விட்டார்.
67) ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி பரபிரும்மன் மூலம் வெளிப்பட்ட பூமி உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நிலையில் அமைய சுமார் 13 பில்லியன் வருடங்கள் எடுத்துக் கொண்டதாம். அதுவரை பூமியை வெளிப்படுத்திய பரபிரும்மன் பொறுமையாக காத்திருந்தார். சுமார் 55 முதல் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் பிரும்மா மூலம் வெளிப்படுத்தப்பட்ட உயிரினங்கள் சுமார் 15 முதல் 20 வகைகளிலானவை ஆகும் என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். அவற்றில் இருந்தே சுமார் ஆறு அல்லது எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனித இனம் தோன்றியதாம்.
68) பரபிரும்மனின் உடலுக்குள் செயல்படாத நிலையில் கிடந்ததாக கூறப்படும் நிலம் நான்கு யுகங்களின் தன்மைகளை உள்ளடக்கிக் கொண்டிருந்ததாம். செயல்படாத நிலையில் இருந்த அந்த நிலத்தையே பரபிரும்மன் வெளிப்படுத்தி, பிரும்மா மூலம் பல்வேறு உயிரினங்களையும் மானிடர்களையும் அதன் மீது படைத்தார் என்று ஆன்மீக குருமார்கள் நம்புகிறார்கள். ‘ஏதாவது ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு மூலப் பொருள் தேவை. அந்த மூலப் பொருள் உருவாக இன்னொரு பொருள் இருக்க வேண்டும், அந்த பொருள் தோன்ற இன்னொரு பொருள் வேண்டும். இப்படியாகதான் ஒரு பொருள் உருவாகிட இன்னொரு பொருள் தேவை என்ற சங்கிலி நீண்டு கொண்டே செல்லும் எனும்போது பெரு வெடிப்பை (Big Bang theory) உருவாக்கிய பொருள் எங்கிருந்து வந்தது, அந்தப் பொருளை உருவாக்க, யாரால் என்ன நடந்தது’ என்பது விளங்காமல் உள்ள நிலையில் விஞ்ஞானிகள் பரபிரும்மன் பிரபஞ்சத்தை தோற்றுவித்த நம்பிக்கையை ஆதரிக்கின்றனர். (குறிப்பு: https://www.bbc.com/future/article/20220105-what-existed-before-the-big-bang). இதனால்தான் ‘பெருவெடிப்பை உருவாக்கிய பொருள் எங்கிருந்து வந்தது’ என்பதை விளக்க முடியாமல் உள்ள விஞ்ஞானிகளினால் கண்ணுக்குத் தெரியாத நிலையில் உள்ள பரபிரும்மனின் செயல் உண்மை அற்றது என உறுதியாக கூற முடியவில்லை .
69) பிரபஞ்சம் நான்கு யுகங்களைக் கொண்டது. நான்காவது யுக முடிவில் அனைத்து யுகங்களும் பரபிரும்மனால் பிரளயத்தில் அழிக்கப்பட்டு மீண்டும் அனைத்தும் புதியதாக படைக்கப்படுகிறது. சில புராணங்களில் பரபிரும்மனை ‘அவன்’ என்றும், சிலவற்றில் ‘அவள்’ என்றும் கூறி உள்ளார்கள். ஆனால் பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் போன்றவர்கள் படைக்கப்பட்டதில் எந்த விதமான சர்ச்சையும் இல்லை.
70) குல தெய்வம் பற்றிய இந்த ஆய்வில் பிரபஞ்சப் படைப்பைப் குறித்து ஏன் விவாதிக்க வேண்டும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் படைப்பின் ரகசியங்களை படித்துப் புரிந்து கொள்ளாவிட்டால், மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு குல தெய்வம் உட்பட பல தெய்வங்கள் வெளிப்பட்டதின் அவசியமோ அல்லது பிரபஞ்சத்தில் தெய்வங்களின் பங்கு என்ன என்பதையோ புரிந்து கொள்ள முடியாது.
71) பெருங் கடலுடன் கூடிய நிலத்தைக் கொண்ட பிரபஞ்சத்தை பரபிரும்மன் உருவாக்கிய பிறகு, பிரபஞ்சம் மெல்ல மெல்ல விரிவடையத் துவங்கியது. கடல் நீர்; ஆறுகள்; மானிடர்களுக்கு தேவையான வெளிச்சம்; மிதக்கும், அசையும், அசையா பொருட்கள்; ஆண் மற்றும் பெண் ஆத்மாக்கள் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய நிலம் முழுமை அடைய ஆக சுமார் 13.699 பில்லியன் ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்பதாக கருதுகின்றார்கள்.
72) அதனால்தான் பரபிரும்மன் 13.699 பில்லியன் ஆண்டுகள் என்ற அந்த கால கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தனது தெய்வீக சக்திகளிலிருந்து வெளிப்படுத்திய பல்வேறு தெய்வங்களுக்கு, தனது உடலுக்குள் அமர்ந்து இருந்த தெய்வீக சில்பியான விஸ்வகர்மா மூலம் பல்வேறு வடிவங்களைக் கொடுத்து அவர்களை மெல்ல மெல்ல வெளிப்படுத்தி இருக்கலாம் என்பதாக பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

73) முதலாவதாக, பரபிரும்மனால் வெளிப்படுத்தப்பட்ட நீரும், நிலமும் மானிடர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அளவில் முழுமையாக வளர்ச்சி அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள் தேவைப்பட்டதினால், பிரபஞ்சம் வெளிப்பட்ட உடனேயே, குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் இருந்தவாறு மக்களை நல் வழிப்படுத்த வேண்டிய, பிரதான தெய்வங்களின் சக்திகளில் இருந்து தோன்ற இருந்த குல தெய்வங்கள் வெளி வரவில்லை. ஆகவே குல தெய்வங்கள் பிரபஞ்சம் வெளியான, கோடிக்கணக்கான ஆண்டுகள் பின்னரே பூமியில் தோற்றம் தந்தன.
74) உயிரினங்கள் வாழத் தகுதியான நிலமும் கடலும் தயாரான பிறகு தெய்வங்கள் படைக்கப்பட்டன. ஆனால் உடனேயே அந்த தெய்வங்களுடன் குல தெய்வங்களும் வெளிப்படாததின் இரண்டாவது காரணம், பல்லாயிரக்கணக்கான தெய்வங்களின் தோற்றத்தை உருவாக்க பரபிரும்மனுக்கு போதுமான நேரம் தேவையாக இருந்தது. மேலும் அனைத்து குல தெய்வங்களும், பிற தெய்வங்களும் முதல் மூன்று பிரதான தெய்வங்கள் மூலம் மட்டுமே வெளிவர இருந்ததினால் பரபிரும்மனுக்கு நிறைய கால அவகாசமும் தேவைப்பட்டது.
75) பரப்பிரும்மன் தன்னுள் இருந்து முதலில் பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரர் எனும் மூன்று முதன்மை தெய்வங்களை படைத்தார். அவர்களை தொடர்ந்து அவருடைய மறு பக்கத்திலிருந்து பார்வதி, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய மூவரும் வெளி வந்தனர். உடனடியாக அந்த மூன்று ஆண் மற்றும் பெண் தெய்வங்கள் சிவன்-பார்வதி, விஷ்ணு- மஹாலக்ஷ்மி மற்றும் பிரும்மா- சரஸ்வதி எனும் ஜோடிகளாக ஒன்றிணைந்தனர். தான் படைத்த பிரபஞ்சத்தை பாதுகாத்து வழி நடத்த அந்த மூவர் மூலமே பல்வேறு கட்டங்களில் பரபிரும்மன் ஆயிரக்கணக்கான தெய்வங்களை படைத்தார்.
76) அப்படியாக வெளியான தெய்வங்கள் தம்முள் இருந்து பல்வேறு துணை தெய்வங்கள், இணை தெய்வங்கள், தேவர்கள், நிலங்களை பாதுகாக்கும் தேவதைகள் மற்றும் பல்வேறு தன்மைகளில் ஆன தேவ கணங்களை வெளிப்படுத்தினார்கள்.
77) ஆனால் முதல் மூன்று தெய்வங்களை படைத்தது யார் என்பதில் சில முரண்பாடுகள் உள்ளன. அவை என்ன?

• சைவ மதத்தினரின் கூற்றுப்படி முதலில் சிவபெருமான் வெளிப்பட அவரிடம் இருந்தே பிற தெய்வங்கள் வெளியாயினர் (Ref: லிங்க புராணம் ,பகுதி -3)
• வைஷ்ணவ மதத்தினரின் கூற்றுப்படி முதலில் விஷ்ணு பகவான் வெளிப்பட அவரிடம் இருந்தே பிற தெய்வங்கள் வெளியாயினர் (Ref: யதுர் வேத நாராயண சூக்தம் மற்றும் நாராயண உபநிஷத்)
• மூன்றாவது கூற்றின்படி பரபிரும்மன் வெளிப்படுத்திய முட்டையில் இருந்து பிரும்மா வெளிப்பட அவரிடம் இருந்துதான் பிற தெய்வங்கள் தோன்றினார்கள்.
• நான்காம் கருத்து அதாவது சக்தியே பிரதானம் எனும் கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளவர்கள், முதலில் வெளி வந்தது சக்தி எனும் பெண் தெய்வமே என்றும் அவளுடைய மனதில் இருந்து பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமான் எனும் பெரும் துறவி வெளியானார்கள் என்கின்றார்கள் (Ref: ஸ்ரீமத் பாகவத புராணம் மற்றும் தந்திர சாஸ்திர புத்தகங்கள்).

78) எது எப்படியோ பரபிரும்மனின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று ஆண் தெய்வங்களும் மறு பக்கத்தில் இருந்து மூன்று பெண் தெய்வங்களும் வெளியானார்கள், அவர்கள் மூலமே குல தெய்வங்களும் வெளியானார்கள் என்ற உண்மையை யாரும் மறுக்கவில்லை.

79) இப்படியாக பரபிரும்மன் கீழ் கூறப்பட்டு உள்ளவாறு தெய்வங்களை படைத்தார்:

முதல் நிலை தெய்வங்கள் – பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரர் (சிவன்), பார்வதி, சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி போன்ற பிரதான தெய்வங்கள். விஷ்ணுவின் தெய்வீக சக்திகளிலிருந்து பிரம்மா வெளியானார் என்பதாக கூறப்படுகிறது. சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி கூட பார்வதியின் அவதாரங்கள் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.
இரண்டாவது நிலை தெய்வங்கள்: சிவன், விஷ்ணு மற்றும் பார்வதியின் பல அவதாரங்கள். மகாலட்சுமி, பிரம்மா மற்றும் சரஸ்வதி போன்ற மூன்று தெய்வங்களும் அவர்களது சக்தியில் இருந்து எந்த தெய்வங்களையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர்களில் மகாலட்சுமி மட்டுமே பல நேரங்களில் வெவ்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார், ஆனால் தனது சக்திகளிலிருந்து துணை தெய்வங்களை விடுவிக்கவில்லை. ஏனென்றால் அவரே பார்வதியின் தெய்வீக சக்திகளிலிருந்து வெளிப்பட்டவள் ஆவார். ஆகவே அவரிடம் இருந்து வெளி வந்த தெய்வங்கள் பார்வதியின் மூலம் வெளியானவர்கள் என்பதாகவே கருத வேண்டி உள்ளது.
மூன்றாம் நிலை தெய்வங்கள் : கிராம தெய்வங்கள், இரண்டாவது நிலை தெய்வங்களால் வெளிப்படுத்தப்பட்ட பல தெய்வங்கள். அவர்களில் சிலர் முதல் நிலை தெய்வங்களினால், தீய சக்திகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போரின் போது வெளிப்படுத்தப்பட்டவர்கள்.

நான்காம் நிலை தெய்வங்கள்: கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், நல்ல ஆவிகள் மற்றும் நல்ல பூத கணங்கள்
ஐந்தாம் நிலை தெய்வங்கள் : தந்திர வழிபாட்டிற்கு உதவ, சில சாதனாக்கள் செய்ய, சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு தேவையான ஆன்மீக அறிவை அதிகரிக்க வெளிப்பட்ட யோகினிகள் மற்றும் மோகினிகள்.

80) முதலில் வெளியான ஆறு பிரதான தெய்வங்களில் பல்வேறு நிலைகளில் ஆன தெய்வங்களை வெளிப்படுத்தும் சக்தி எதனால் சிவன், விஷ்ணு மற்றும் பார்வதி தேவிக்கு மட்டுமே வழங்கப்பட்டது?
81) மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே நிலையில் செயல்பட முடியாது. பிரபஞ்சத்தில் படைக்கும் தொழிலை ஏற்று உள்ள பிரம்மா, பிறப்பு-இறப்பு மற்றும் மறுபிறப்பு கொண்ட சுழற்சிகளுடன் கூடிய பல்வேறு வகைகளிலான உயிரினங்களையும் மனிதர்களையும் வெளிப்படுத்துகின்றார். அந்த தொழிலை தன்னால் தனியாக செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ளும் அவர் ஞானம் மற்றும் அறிவின் அதிபதியாக உள்ள சரஸ்வதியிடமிருந்து பெற்ற அறிவைக் கொண்டு அந்த தொழிலை செய்கின்றார். மாணவர்களை போன்ற தன்மையில் படைக்கப்பட்ட உயிரினங்களை, ஆசிரியரைப் போல இருக்கும் வகையிலான தெய்வங்கள் வழிகாட்டி நடத்த வேண்டும் என்பதினால், சரஸ்வதியின் துணையோடு மாணவர்களை போல உள்ள பல்வேறு ஜீவன்களை படைக்கும் பிரும்மாவிற்கு, ஆசிரியர்களை போன்ற தெய்வங்களை வெளியிடும் அதிகாரம் தரப்படவில்லை.
82) பரபிரும்மன் பிரபஞ்சத்தைப் படைத்து, பரந்த நிலத்தையும் கடலையும் தயார் நிலையில் வைத்தவுடன்,மானிடர்களை அதில் படைக்கவும், படைத்தவர்களை பாதுகாக்கவும், தீயவர்களை அழிக்கவும் சில தெய்வங்களை வெளிப்படுத்தினார். பிரும்மா படைப்பு தொழிலில் ஈடுபட்டு விட்டார். விஷ்ணுவின் முன் இருந்த பெரிய பணி, ஒரு ஆசிரியரைப் போல இருந்து பிரும்மா படைக்கும் மனித குலத்தை எவ்வாறு பாதுகாத்து வழி நடத்துவது என்பதுதான். படைக்கப்பட்டவர்களை நல்ல முறையில் வழி நடத்தினால் மட்டுமே அவர்கள் ஒழுக்கம் மற்றும் நேர்மையான வாழ்க்கைப் பாதையில் பயணிப்பார்கள். அப்போதுதான் பரந்த நிலத்தில் நீண்ட காலத்திற்கு அமைதியும் செழிப்பும் நிலவும். ஆனால் அந்த பணியை அவரால் தனியே செய்ய முடியாது என்பதினால், அவருக்கு உதவியாக இருக்க அவருக்கு மேலும் பல துணை தெய்வங்கள் தேவையாக இருந்தது. இதன் விளைவாகவே குல தெய்வங்கள் எனும் கருத்து தோன்றியது.
83) பிரம்மாவின் படைப்புகளில் அசுர சக்திகளைத் தவிர நல்ல மற்றும் தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் பலரும் பிரபஞ்சத்தில் கலவையாக இருந்தனர். ஒழுங்கீனமற்ற மாணவர்களை போன்று இருந்த தீயவர்களை திருத்த வேண்டும்; அதேபோல் அசுர சக்திகளைக் கொண்டு பிறரை துன்புறுத்தி வந்த அசுரர்களை- திருத்த முடியாத மாணவர்களை பல்கலைக் கழகத்தில் இருந்தே வெளியேற்றி விடுவதை போல- உலகில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டும்.
84) எனவே, ஒரு புறம் ஆசிரியரைப் போல செயல்பட்டுக் கொண்டு மக்களை வழி நடத்தவும் பாதுகாக்கவும் ஒரு தெய்வீகக் குழு தேவை; இன்னொரு பக்கம் தீயவர்களையும், தீமைகளையும் அடையாளம் கண்டு பிடித்து, அவர்களை தெய்வ நியதியின் கீழ் தண்டிக்க இன்னொரு குழு தேவை . அவர்களை அந்தந்த தண்டனைகளை எதிர்கொள்ள வைக்க வேண்டும். அந்த பணி பின்னர் 3வது, 4வது மற்றும் 5வது வரிசையில் உருவாக்க உள்ள தெய்வங்களின் பொறுப்பாக இருக்கும். அவர்களில் பலர் பின்னர் குல தெய்வங்களாக மாறுவார்கள்.
85) பிறந்தவர்கள் மரணத்தை அடையா விட்டால், மேலும், மேலும் பிறக்கும் உயிரினங்களோ அல்லது ஏற்கனவே உள்ள உயிரினங்களோ கூட வாழ இடம் இல்லாமல் போய் விடும். பரந்த பிரபஞ்சத்தில் சிவன் மட்டுமே தனியே இருந்தவாறு அழிக்கும் செயலைச் செய்ய முடியாது என்பதால், அவருக்கு மேலும் சில தெய்வங்களின் துணை தேவையாக இருந்தது. அதனால் அவர் தனது துணைவியார் பார்வதியின் உதவியுடன் மேலும் சில தெய்வங்களை படைக்க வேண்டி இருந்தது. அப்படி அவர்கள் படைத்த தெய்வங்களில் பல குல தெய்வங்களும் இருந்தார்கள்.
86) அழிவுச் செயல் இரண்டு வகையானது. முதலாவது படைத்தவர்களை மரணமடைய வைத்து விடுவது. அதை சிவபெருமான் படைத்த எம பெருமான் மூலம் செய்ய வைத்தார். இரண்டாவது பிறந்தவர்களது அறியாமையை அழிப்பது. அப்படி செய்வதின் மூலம் அவர்கள் ஞானமும் ஆன்மீக ஆற்றலும் பெற்று, பாப விமோசனம் பெறுவார்கள்.
87) அப்படிப்பட்ட செயல்களை செய்ய சிவன் மற்றும் பார்வதி தமது சக்திகளில் இருந்து பல தெய்வங்களை தோன்ற வைத்தார்கள் . அவர்களில் அசுரர்களை அழிக்கும் யுத்த தேவதைகளும் இருந்தார்கள். இப்படியான பல்வேறு தெய்வங்களை வெளிப்படுத்தியதில் மகிஷாசுரமர்த்தினி, லலிதாம்பிகை, மகா காளி, நவ துர்கா தேவியர்கள், தச மஹாவித்யா தேவியர்கள், மாரியம்மன் போன்றவர்கள் உண்டு. அந்த தெய்வங்களில் சிலர் பிற்காலத்தில் குல தெய்வங்களாக மாறினார்கள்.
88) அசுர (அசுர) சக்திகள் வெளிப்பட்டபோதெல்லாம், சிவ பெருமான் அந்த தீய சக்திகளை பிரபஞ்சத்திலிருந்து அழிக்க பல துணை தெய்வங்களை விடுவித்தார். இவ்வாறு அவர் வெளிப்படுத்திய பல தெய்வங்களில் முருகன், 64 பைரவர், பைரவி, வீரபத்ரர், சரபர், அஸ்வத்தாமன் போன்ற முக்கியமான தெய்வங்களும் அடங்குவர்.
89) சிவபெருமான் வெளிப்படுத்திய அனைத்து தெய்வங்களும் குல தெய்வங்களாக மட்டுமே மாறவில்லை; சிலர் குல தெய்வங்களாகவும் இருந்தார்கள், மக்களின் அறியாமையை விலக்கி ஞானம் தரும் தெய்வங்களாகவும் இருந்தார்கள். அவர்கள் பல்வேறு வெளிப்பாடுகளில் காணப்படும் முருகன், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்றவர்கள் ஆவார்கள். சிவபெருமான் படைத்த முக்கியமான ஒரு தெய்வம் வைத்தீஸ்வர ஸ்வாமி ஆகும். வைத்தீஸ்வரர் அவரை குல தெய்வமாக ஏற்றவர்களுக்கு மட்டும் அல்ல, எவருக்கு தமது குல தெய்வம் தெரியவில்லையோ, அவர்களுக்கும் குல தெய்வமாக விளங்குபவர் ஆவார்.
90) இப்படியாக தோன்றிய பல தெய்வங்கள்தான் ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் குல தெய்வங்கள் ஆனார்கள். முன்னர் குறிப்பிட்டது போல, பரந்த நிலத்தில் இருந்த மக்களை வழி நடத்தவும், பாதுகாக்கவும் பெரிய அளவிலான தெய்வ படை அவசியம் ஆனது மட்டும் அல்ல அவர்களை பல குழுக்களாகப் பிரித்து வைப்பதும், ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி நிலப் பகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆயிற்று. அப்படி செய்தால்தான் தெய்வங்களிடையே மோதல் ஏற்படாது.
91) இப்படியாக தெய்வ படைப்பு குறித்த பரந்த அடிப்படையிலான கொள்கையை பரபிரும்மன் உருவாக்கிய பின்னர், அடுத்து எழுந்த பெரிய கேள்வி என்ன என்றால், அந்த தெய்வங்களுக்கு கீழ் இருக்க உள்ள மானிடர்களை எப்படி படைப்பது?
92) பிரபஞ்சத்தை வெளிப்படுத்தி பிரும்மாவையும் வெளிப்படுத்திய உடனேயே பரபிரும்மன் பிரும்மாவின் மனதில் சில அம்சங்களை புரிய வைத்து இருந்தார். அவை என்னவென்றால் தான் படைத்த பிரபஞ்சத்தின் அளவு, அதன் தோற்றம்; அதில் பிறக்க வேண்டிய ஆன்மாக்களின் எண்ணிக்கை; பூமியில் தோன்ற உள்ளவற்றில் மானிடர்கள் எத்தனை மற்ற ஜீவராசிகள் எத்தனை இருக்கும்; ஆன்மாக்கள் எவ்வாறு மேலும் மேலும் ஆன்மாக்களை உருவாக்கும்; குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆன்மாக்கள் படைக்கப்பட்ட பிறகு அவை எவ்வாறு, யாரால் எந்தெந்த நிலையில் பாதுகாக்கப்படும்; யாரால், எப்படி அழிக்கப்படும் போன்ற அனைத்து அம்சங்களையும் பிரும்மாவின் மனதில் புதைத்து வைத்தார்.
93) பரபிரும்மனால் உருவாக்கப்பட்ட பரந்த நிலம் படிப்படியாக கீழ்கண்டவாறு விரிவடையும்:

• பரந்த நிலமும், கடலும் வெளியாகும்
• பிரதான மூல தெய்வங்கள் வெளியாவார்கள்
• பல இரண்டாம் நிலை, மூன்றாவது நிலை , நான்காவது நிலை மற்றும் ஐந்தாவது நிலை தெய்வங்கள் எப்போது தோன்ற வேண்டும் என நிர்ணயிக்கப்படும்
• பிரம்மா செயல்படுத்த துவங்குவார்
• பிரம்மா நான்கு நிலைகளில் சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் என பூமியின் பரிணாம வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடுவார்
• யுகவாரியான படைப்புகள் உருவாக்கப்படும்
• ஏழு மகரிஷிகளைப் பிரும்மா படைப்பார்
• அந்த ஏழு மகரிஷிகளுக்கு பிரும்மா முழுமையான செயல் திட்ட பயிற்சி அளிப்பார்
• பரபிரும்மன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக படைப்பை குறித்து ஒத்திகை பார்த்து, மகரிஷிகளுக்கு நான்கு போலி யுகங்களில் பயிற்சி அளிப்பார்
• மானிடர்கள் மற்றும் ஜீவராசிகள் தோன்றுவார்கள்
• பூமியில் தெய்வங்கள் தோன்றுவார்கள்
• குல தெய்வங்கள் தோன்றுவார்கள்

94) அனைத்து ஜீவராசிகளையும் ஒரே நேரத்தில் தோற்றுவிக்க முடியாது; அவற்றை படிப்படியாகவேதான் வெளிப்பட வைக்க முடியும் என்பதை பிரம்மா உணர்ந்தார். எனவே பிரபஞ்சத்தை சத்ய, திரேதா, துவாபர மற்றும் கலியுகம் எனப்படும் நான்கு காலங்களாக பிரித்து வைத்து, ஒவ்வொன்றிலும் எத்தனை ஜீவன்கள் இருக்க வேண்டும் என்பதை வரையுறுத்தி வைத்த பின்னர், தனக்கு கீழ் பணி புரியும் தெய்வங்கள் ஒருங்கிணைந்த முறையில் அவர்களை எப்படி படிப்படியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் விளக்கி வைத்தார்.
95) பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்த நிலம் சத்ய யுகத்தில் தொடங்கி படிப்படியாக விரிவாக்கப்பட வேண்டும் என்பதை பிரம்மா உணர்ந்தார். பூமிக்கு அனுப்பப்பட்ட ஆத்மாக்களில் பிறப்பை எடுக்காமல் அலைந்து திரியும் ஆத்மாக்களிலிருந்து வெவ்வேறு சமயங்களில் பிறப்பு எடுத்து மக்கள் தொகையை அதிகரிக்க உள்ள ஜீவன்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். பிறப்பு எடுத்த ஜீவன்களின் எண்ணிக்கை முதல் யுகத்தில் X அளவில் இருக்கலாம், அடுத்த யுகத்தில் 2 x அளவிலோ அல்லது 3 x அளவிலோ மாறலாம். அதற்கு அடுத்தடுத்த யுகங்களிலும் மக்கள் தொகை அவ்வாறே மாறலாம்; ஒவ்வொரு யுகத்திலும் பிறவி எடுத்தவர்களில் எத்தனை பேர் மரணத்தை சந்திப்பார்கள், எத்தனை பேர் அழிவார்கள் அல்லது அவர்களின் ஆயுட்காலம் முடிவடையும் போன்ற அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப நிலத்தின் தன்மைகளையும் பரப்பளவையும் உருவாக்கினார். அந்த நிலப் பரப்புக்களில் இருக்க உள்ள ஜீவன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாசார அளவில் தெய்வங்களும் தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்பதையும் உணர்ந்தார்.
96) கருட புராணத்தின்படி, துவக்கத்தில் பிரம்மா 84 லட்ச அளவிலான ஜீவன்களை மட்டுமே படைத்தார். இந்து மதத்தில் மிகவும் மேன்மையான நூலாக உள்ள கருட புராண உரையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், சத்ய யுகத்தில் ஒரு தேவ வருடத்திற்கு (கடவுள் வருடம்) பிரம்மா 84 லட்சம் ஆன்மாக்களைப் படைத்தார். ஒரு தேவ வருடம் என்பது பிரம்மாவின் கணக்கில் 306 மனித ஆண்டுகள் ஆகும். சத்ய யுகத்தின் ஆயுட்காலம் 1,728,000 மனித ஆண்டுகள் என்பதினால் அது 4800 தேவ ஆண்டுகளுக்கு சமம் ஆகின்றது. ஆகவே சத்ய யுகத்தில் ஒரு தேவ வருடத்திற்கு 84 லட்சம் என்ற விகிதத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஆன்மாக்களின் மொத்த எண்ணிக்கை 403.200 (4800 x 84) மில்லியனாக இருக்கலாம், இதில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் போன்ற அனைத்து படைப்புகளும் அடங்கும்.
97) கருட புராணத்தின்படி, பிரம்மாவால் படைக்கப்பட்ட 84 லட்ச உயிரினங்களில், 21 லட்சம் முட்டைகளிலிருந்தும், 21 லட்சம் மரம் மற்றும் செடி கொடிகளிலிருந்தும், 21 லட்சம் மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளிலிருந்தும், மீதமுள்ள 21 லட்சம் புழுக்கள் மற்றும் பூச்சிகளிலிருந்தும் வந்திருக்க வேண்டும். இது தெளிவுபடுத்துவது என்ன எனில் துவக்கத்தில் அவரால் வெளிப்படுத்தப்பட்ட ஆத்மாக்களின் எண்ணிக்கையில் 25% மட்டுமே மானிடர்களாக இருந்திருக்க வேண்டும். ஆகவே சத்திய யுகத்தில், பிரம்மாவால் படைக்கப்பட்ட 403.200 மில்லியன் ஆத்மாக்களில் 100 மில்லியன் ஆத்மாக்கள் மட்டுமே மனிதர்களாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று எண்ண வேண்டி உள்ளது. ஆனால் அதே சமயம் எவ்வளவு தெய்வங்கள் வெளியாயின என்பது குறித்து எந்த புராண நூல்களிலோ அல்லது நாட்டுப்புறக் கதைகளிலோ கூறப்படவில்லை.
98) வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மானிட ஆன்மாக்களை விடுவிக்கும் முன் குறிப்பிட்ட சில செயல் திட்டங்களுக்காக முதலில் ஏழு ரிஷிகளை பிரம்ம தேவர் மனித உருவில் படைத்தார். ஜைமினிய உபநிஷத் என்ற நூலின்படி (The Jaiminiya Upanishad Brahmana –जैमिनीय उपनिषद्-ब्राह्मण) அந்த ரிஷிகளின் பெயர்கள் அகஸ்தியர், அத்ரி, பரத்வாஜர், கௌதமர், ஜமதக்னி, வஷிஷ்ட மற்றும் விசுவாமித்திரர் என இருக்க பிரஹதாரண்யக உபநிஷத் (Brihadaranyaka Upanishad) என்ற நூலில் அகஸ்தியர் என்பதற்கு பதில் பிருகு முனிவரின் பெயர் காணப்படுகின்றது. அதை போலவே பிற பிரிவுகளை சேர்ந்த நூல்களில் ஏழு ரிஷிகளின் பெயர்கள் மாறுபட்டு காணப்படுகின்றன என்கின்றார்கள்.
99) உலகில் பிறந்திருக்கும் மானிடர்களை ஏழு பிரிவுகளாக அதாவது ஒவ்வொரு ரிஷியின் குலத்தையும் கொண்ட ஏழு பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வைக்கவே பிரும்மா ஏழு ரிஷிகளை படைத்தார். ஒரு குலம் என்பது ஒரு கோத்திரத்தை, அதாவது ஒரு ரிஷியை குறிக்கும். ஒவ்வொரு பரம்பரையில் வெளிப்படும் ஒவ்வொருவரும் ஒரே ரத்த இனத்தை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பது நியதி. ஆனால் இன்றும் சில ஜாதியினரில் அதிக அளவிலான எண்ணிக்கையில் கோத்திரங்கள் உள்ளன. இன்று உலகில் 2500 க்கும் அதிகமான கோத்திரங்கள் உள்ளன.
100) பரப்பிரும்மனின் உடலுக்குள் இருந்து பிரும்மா சில குறிப்பிட்ட தெய்வங்களை வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தாலும், முதலில் மேன்மையான ஞானம் கொண்ட ஏழு மகரிஷிகளை படைத்த பிரும்மா, அப்படி படைக்கப்பட்டிருந்த தெய்வங்களையும் ரிஷிகளையும் உடனடியாக பூமியில் செயல்படும் நிலையில் அனுப்பவில்லை. அதன் காரணம் முதலில் அவரால் படைக்கப்பட்ட நான்கு யுகங்களும் எப்படி செயல்பட வேண்டும், எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை நிலை நிறுத்த அவருக்கு அதிக அளவிலான காலம் தேவையாக இருந்தது.

        …….அடுத்த பகுதி 101ஆம் எண்ணில் இருந்து தொடர்கின்றது
…………கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம் கடைசி பாகத்தில் தனியே தரப்பட்டு உள்ளது